பொன்னான காலம்!

'எனக்கு ரொம்ப 'போர்' அடிக்கிறது' என்று கூறுபவர்கள் ஒன்று, வாசிப்பில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்,
Updated on
2 min read

'எனக்கு ரொம்ப 'போர்' அடிக்கிறது' என்று கூறுபவர்கள் ஒன்று, வாசிப்பில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும், அல்லது முயற்சி செய்யவும், கடுமையாக உழைக்கவும் தயாராக இல்லாதவர்களாக இருக்க வேண்டும். இப்படிப் பட்டவர்களுத்தான் 'போர்' அடிக்கும்.
உழைக்க வேண்டும், சாதிக்க வேண்டும், லட்சியத்தை எட்ட வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர் எப்போதும் ஏதாவது ஒரு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டே இருப்பர். படிப்பார்வம் உள்ளவர்களுக்கு 'போர்' அடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை! 
'போர்' அடிக்கிறது என்றால், எதிலும் மனம் ஈடுபாடு கொள்ளாமல், எந்த வேலையும் செய்ய விருப்பமில்லாமல் இருக்கும்போதுதான் இந்தச் சொல் வெளிப்படும். நம்மை ஏதாவது ஒரு பணியில் எப்போதும் ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும். 
'ஓடிக் கொண்டிருப்பது கடிகாரம் மட்டுமல்ல உன் வாழ்க்கையும்தான்' என்று நம் வாழ்வை துரிதப்படுத்தினார் சுவாமி விவேகானந்தர். மகாகவி பாரதியோ, 'கடிகாரம் ஓடும் முன் ஓடு' என்றார். 
வெற்றியாளர், சாதனையாளர் போன்றோரின் வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்த்தோமானால், அவர்கள் அனைவருமே கடின உழைப்பாளியாக, ஆர்வம் உள்ளவர்களாக, தொடர் முயற்சி உள்ளவர்களாக, ஒரு நொடிப் பொழுதைக்கூட வீணடிக்காதவர்களாகப் பலருக்கும் பயன் தரக்கூடிய பல நல்ல-சிறந்த செயல்களைச் செய்பவர்களாக இருந்திருக்கின்றனர். 
ஆனால், இன்றைக்கு இளைஞர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை செல்லிடப்பேசியிலும், கணினியிலும், வீண் அரட்டையிலும், கட்செவி அஞ்சலில் தேவையில்லாத காணொளிக் காட்சிகளை அனுப்புவதிலும், பகிர்வதிலும், முகநூலில் பிறர் மனத்தைப் புண்படுத்தக்கூடிய பட வடிவமைப்பிலும் ஈடுபட்டு, தங்கள் வாழ்நாளை வீணே கழிக்கின்றனர். 
இப்படிப்பட்டவர்கள் தங்களது நேரத்தை உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல், பிறருக்கும் பயன்படாமல், 'போர் அடிக்கிறது' என்ற கூறி வருகின்றனர். இந்தச் சொற்களை இப்போதெல்லாம் சிறுவர்கள்கூட கூறத்தொடங்கிவிட்டனர்! 
இவர்களுக்காகத்தான் 'காலம் பொன் போன்றது' என்று சொல்லி வைத்தனர் நம் முன்னோர். காலத்தை மதித்து, உழைத்தவர்களே உயர்ந்திருக்கின்றனர்; வெற்றி பெற்றிருக்கிறார்கள்; சாதித்திருக்கிறார்கள்.
போர் அடிக்கிறது என்று கூறுபவர்கள், நினைப்பவர்கள், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இது அறிவியல் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சி காணும் காலம். இன்றைக்கு இணையதளத்தைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லோருக்கும் ஓரளவு கணினி பயிற்சியும், இணையதளப் பயிற்சியும் இருக்கிறது. பெரியவர்களைவிட சிறுவர்களே இதையெல்லாம் விரைவாகக் கற்றுத் தேர்ந்து வருகின்றனர். 
இணையதளத்தில் ஏதாவது ஒரு சொல்லையோ இல்லை பாடலையோ, ஒரு தகவலையோ தட்டச்சு செய்தால் நூலகத்துக்குப் போகாமலேயே இருந்த இடத்திலேயே தகவல் கிடைக்கிறது. இப்படி நாம் தேடும் எந்தவொன்றையும் நமக்கு உடனே பயன்படும்படி பலர் தரவுகளைத் தொகுத்திருப்பதால்தான் நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே கதை, கட்டுரை, சிறுகதை, நாவல், ஆன்மிகம், ஜோதிடம், விளையாட்டு, உலகச் செய்திகள், திரைச் செய்திகள், பாடல்கள், தோத்திரங்கள் எனப் பலவற்றைப் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது; உடனுக்குடன் படியெடுக்கவும் முடிகிறது. 
அதிலும், 'பிளாக்' என்று ஆங்கிலத்தில் கூறப்படும் வலைப்பூ, தனிநபர் பதிவேற்றம் செய்வதற்குரியது. தனிநபரால் தொடங்கப்பட்ட இத்தகைய வலைப்பூக்களில்தான் ஆழமான, அற்புதமான, ஆழங்காற்பட்ட வரலாற்றுத் தகவல்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆன்மிகச் செய்திகள் பலவும் கொட்டிக் கிடக்கின்றன. இது முகநூல் அக்கப்போர் ரகம் அல்ல.
ஒரு வலைப்பூவில் ஆழமான கட்டுரைகள், அற்புதமான தகவல்கள், மிகச்சிறந்த ஆய்வுக் கட்டுரைகள், புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், மிகச்சிறந்த சொற்பொழிவுகள், வெளியே தெரியாத பல வரலாற்று உண்மைகள் என்று கொட்டிக் கிடந்ததைப் பார்த்துவிட்டு, இந்த வலைப்பூவுக்குச் சொந்தக்காரர் யார் என்று அவர் விவரக் குறிப்பைப் பார்த்து வியந்து போனேன். 
அவர் ஒரு பள்ளி மாணவி. பள்ளியில் படித்துக்கொண்டே, தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தை வீணாக்காமல், கணினியை நல்வழியில் பயன்படுத்தி, பலருக்கும் பயன்படக்கூடியவற்றை தனது வலைப்பூவில் பதிவேற்றம் செய்திருக்கிறார் என்றால் அவரை எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?
ஓர் ஆய்வுக்குத் தேவையான அனைத்தையும் நூலகம் செல்லாமலேயே, இருந்த இடத்திலிருந்தே கணினி மூலமாகப் பெறும் வாய்ப்பு இந்த வலைப்பூவில் இருக்கிறது. இணையத்தில் உங்களுக்கான பிரத்யேக வலைப்பூ தொடங்குவது மிகவும் எளிது.
இப்படித் தொடங்கும் தனி நபர் வலைப்பூவில் சமுதாயத்திற்குப் பயனுள்ள பலவகையான தகவல்களைத் தொகுத்துப் பதிவேற்றம் செய்யலாம்.
'போர் அடிக்கிறது' என்று கூறுபவர்கள் இப்படியாரு வலைப்பூவைத் தொடங்கி, அதில் படித்த, பிடித்த கதை, கவிதை, ஹைக்கூ, கட்டுரை, ஆன்மிகச் செய்திகள், திரைச்செய்திகள், விளையாட்டு, வரலாற்றுப் பதிவுகள், கல்வெட்டுச் செய்திகள் எனப் பலவற்றையும் பதிவேற்றம் செய்யலாம். மேலும், நேரம் கிடைக்கும்போது ('போர்' அடிக்கும்போது) நூலகம் சென்று அரிய பல நூல்கள் பற்றிய தகவல்களைத் தரலாம். இவை அடுத்து வரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவர்கள் நேரமும் 'போர்' அடிக்காமல் பயனுள்ளதாகக் கழியும்.
பிறகு உங்கள் குடும்பமும், உங்கள் நட்பு வட்டமும், சமூகமும் உங்களை வியந்து நோக்கும். அதுமட்டுமல்ல, வலைப்பூ பதிவின் மூலம் நீங்கள் தலைசிறந்த பதிப்பாளராகவும், எழுத்தாளராகவும் தன்னம்பிக்கையோடு வலம் வர முடியும். திறமைகளை வளர்த்துக் கொள்ள காலம் நேரம் ஏது? முதலில் ஆர்வம், அதையடுத்து இடைவிடாத முயற்சி, இறுதியாகக் கடின உழைப்பு. இந்த மூன்றும்தான் வெற்றிக்கான தாரக மந்திரம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com