சிந்துவெளிக்கு ஒளி தந்தவர்

டாக்டர் ஐராவதம் மகாதேவன் நேற்று (26.11.2018) மறைந்து விட்டார். அவருடைய வாழ்க்கையே எழுத்துதான்.  

டாக்டர் ஐராவதம் மகாதேவன் நேற்று (26.11.2018) மறைந்து விட்டார். அவருடைய வாழ்க்கையே எழுத்துதான்.  இந்திய ஆட்சிப்பணியில் இருந்தபோதும் கல்வெட்டு எழுத்துகளைப் பார்ப்பதிலும் படிப்பதிலும் தணியாத விருப்பம் கொண்டிருந்தார்.  தினமணி ஆசிரியராக இருந்த போதும் எழுத்தில் முத்திரை பதித்தார். The Indus Script: Texts Concordance and Tables' (1977)  என்றும் "Early Tamil Epigraphy from the earliest to the sixth century A.D'(2003) என்றும் அவர் எழுதியுள்ள நூல்கள் மொழி ஆராய்ச்சிக்கும் இலக்கிய கால ஆராய்ச்சிக்கும் புதிய வெளிச்சம் தரக்கூடிய எழுத்து ஆராய்ச்சிகள்தாம். 

இப்படி வாழ்க்கை முழுதும் தமிழ் பிராமி,  பிராமி, கல்வெட்டு, நாணயம், சிந்துவெளி முத்திரை என்று எழுத்தோடே வாழ்ந்து வரலாற்றுக்கு அவர் விளக்கம்  தேடிக்கொண்டிருந்தவர். திருச்சி மண்ணச்சநல்லூரில் பிறந்தவர். தமது பயணத்தில் சிந்துவெளிக்கும் ஒளி தந்திருக்கிறார். அவரது பணிகளைப் பாராட்டித் தமிழ்ப் பல்கலைக்கழகம் "டாக்டர்' பட்டம் வழங்கிப் பெருமை பெற்றது. இந்திய அரசு "பத்மஸ்ரீ' விருது வழங்கிச் சிறப்பித்தது. இந்திய அரசின் "பத்மஸ்ரீ' விருது பெற்று, எழுத்து ஆய்வு இவரால் தலை நிமிர்ந்தது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் "தொல்காப்பியர் விருது' வழங்கி இருக்கிறது.

மறைந்த கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலம். செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் மைசூரிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட நேரம். சென்னை காமராசர் கடற்கரை சாலையில் பாலாற்று மாளிகையில் செம்மொழி நிறுவனம் இருந்தது. அது மத்திய அரசு நிறுவனம். அதற்குப் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். மத்திய அரசின் கொள்கைப்படி பெயர்ப்பலகையில் இந்தி இடம் பெறவேண்டும்.  பல்வேறு வகையான  போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த நிறுவனம் அது. செம்மொழி நிறுவனப் பெயர்ப்பலகையில் இந்தி இடம் பெறுவதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற தயக்கம் கூடிக்கொண்டு போனது.

தொன்மையான தமிழ்மொழிக்குக் கிடைத்துள்ள செம்மொழி நிறுவனத்திற்குத் தொன்மையான எழுத்தில் பெயர்ப்பலகை வைக்கலாம் என்று பேராசிரியர் இராசவேலு உதவியுடன் தமிழ் பிராமியில் நிறுவனத்தின் பெயர் எழுதி, அதைச் சரிபார்ப்பதற்காக டாக்டர் ஐராவதம் வீட்டுக்குப் போய் அவரிடம் காட்டினேன். "தமிழ் பிராமியில் நிறுவனத்தின் பெயர் சரியாக இருக்கிறது' என்று சொன்னார். இருந்தாலும் சரியாக இருக்கிறது என்று  எழுதி அவர் கையொப்பம் போட்டுத்தரக் கேட்டேன். அவரும் மறுக்காமல் அந்தத் தாளின் ஓரத்தில் கையொப்பமிட்டுத் தந்தார். 

அடுத்தநாள் முதல்வர் அலுவலகம் சென்று தமிழ் பிராமியில் பெயர்ப்பலகை இப்படி இருக்கலாம் என்று முதல்வரிடம் தெரிவித்தபோதுபோது, "இதை முதலில் ஐராவதம் மகாதேவனிடம் காட்டிவிட்டு வா' என்றார். அதன்பிறகு அவர் கையொப்பத்தைக் காட்டிய பின்பே நியான் விளக்கொளியில் அந்தப் பெயர்ப் பலகை ஒளிரத் தொடங்கியது.

செம்மொழி மாநாட்டுக்கு இலச்சினை தயாரிக்கும் பணி. திருவள்ளுவரைச் சுற்றிலும் சிந்துவெளிக் குறியீடுகள் இடம்பெற்றதைப் பார்த்து முதலமைச்சரும் மகிழ்ச்சி அடைந்தார்.

அதன்பின் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் பெரும் பொறுப்பேற்று அஸ்கோ பர்ப்போலா போன்ற வெளிநாட்டு அறிஞர்களோடு ஐராவதம் மகாதேவன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கரூர் அருகே காணக்கிடைத்த புகலூர் குகைக் கல்வெட்டில் இடம்பெற்றிருந்த அரசர்களின் பெயர்களை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தினார். மலேசியத் தலைநகர்  கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். அசோகன் பிராமி பற்றியே ஆய்வாளர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த போது தமிழ் பிராமி எழுத்துகளுக்கான திரட்டு வெளியிட்டிருக்கிறார்.

ஜவாஹர்லால் நேரு உதவித் தொகையில் சிந்துவெளி எழுத்து பற்றிய ஆய்வினை மேற்கொண்டு , சிந்துவெளி எழுத்துகள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவை என்று அறிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் ஆற்றுக் கரையில் பேராசிரியர் எ. சுப்பராயலு ஆய்வில் கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  தமிழ் பிராமி எழுத்துகளுடன் கிடைத்த 170 பானை ஓடுகளில் இருந்த எழுத்துகளைப் படித்து அறிவித்தார். 

குகைக் கல்வெட்டுகளில் இருந்த சமணக் கல்வெட்டுகளை ஆய்வு செய்து அறிவித்திருக்கிறார். 

சங்க காலத் தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்கும் எழுத்திலக்கியம் உடையவர்களாக இருந்தார்கள் என்பதற்கும்  இலக்கியச் சான்றுகளுக்கு வரலாற்று ஆதாரங்களைக் காட்டியவர் ஐராவதம் மகாதேவன்தான். இலக்கியம் பாடியுள்ள தமிழர்களின் வெளிநாட்டு வணிகத் தொடர்புகளை நிறுவுவதற்கு  வெளிநாடுகளில் கிடைத்த பானை ஓடு
களில் உள்ள எழுத்துப் பொறிப்புகளைப் பயன்படுத்தினார். 

சித்தன்னவாசல் கல்வெட்டில் இருக்கும் நக்கன் எனும் சொல், ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான சொல் என்று இவர் எழுதியுள்ள சொல்லாராய்ச்சிக் கட்டுரை பாராட்டு பெற்றது.

பிள்ளையார்பட்டியில்   இருக்கும் குடைவரை கோயில் பல்லவர்களால் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை மாற்றி அது பல்லவர்களுக்கும் முற்பட்ட பாண்டியரால் உருவாக்கப்பட்டது என்பதை அங்கு கிடைத்திருக்கும் கல்வெட்டு கொண்டு நிறுவினார். அவர், அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊர், "எருக்காட்டூர்' என்பதையும் புறநானூற்றுப் புலவர் "எருக்காட்டூர் தாயங்கண்ணனார்' இவ்வூரைச் சேர்ந்தவரே என்றும் நிறுவினார். 

"மெய் எழுத்தும் எகர ஒகரமும்  புள்ளி பெறும்' என்று "தொல்காப்பியம்' கூறியிருந்தபோதும் பழங்காலத்தைச் சேர்ந்த சுவடிகளிலும் கல்வெட்டிலும் அப்படி புள்ளி இருப்பதில்லை என்பது பொதுவான கருத்து. ஆனால் பிள்ளையார்பட்டியில் உள்ள குடைவரைக் கல்வெட்டில் மெய் எழுத்துகளும் எ, ஒ ஆகிய குறில் எழுத்துகளும் புள்ளியுடன் உள்ளன என்று கண்டறிந்து சொன்னவர். அவருடைய பங்களிப்புகளில் குறிப்பிடத்தக்கது சிந்துவெளி ஆய்வு.

சர் ஜான் மார்ஷல் 1920-ஆம் ஆண்டு தொடங்கிவைத்த ஆய்வு இது.  அவரைத் தொடர்ந்து பலரும் ஆய்வைத் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார்கள். அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1960-இல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டார்கள். உலகின் தொன்மையான நாகரிகங்களுள் ஒன்று சிந்துவெளி நாகரிகம் என்பது அப்போது உலகுக்குத் தெரிய வந்தது. 1500 கி.மீ. நீளமும் 1100 கி.மீ. அகலமும் கொண்ட நிலப்பரப்பில் வெளிப்பட்ட நாகரிகம் கி.மு.3500 ஆண்டு முதல் கி.மு. 1400 ஆண்டுவரையிலான காலப் பகுதியைச் சேர்ந்தது என்பதும் தெரிய வந்தது.

சிந்துசம வெளியில் கிடைத்த முத்திரைகளை ஆராய்ந்து ஐராவதம் மகாதேவன் அவை திராவிட மொழியின் சொற்களுக்கான தொடக்க காலக் குறியீடுகள் என்று அறிவித்தார். மேலும் சிந்து சமவெளியின் நாகரிகத்துக்கும் திராவிடத் தொடர்புக்கும் ரிக் வேதத்தின் வழியாக ஆதாரம் இருப்பதையும் (ஈழ்ஹஸ்ண்க்ண்ஹய் டழ்ர்ர்ச் ர்ச் ற்ட்ங் ஐய்க்ன்ள் நஸ்ரீழ்ண்ல்ற் ஸ்ண்ஹ தண்ஞ் யங்க்ஹ)  வெளியிட்டுள்ளார். சங்க இலக்கியங்களில் "மாறன்', "வழுதி', "செழியன்', "பாண்டியன்' என வரும் பெயர்கள் சிந்துவெளி முத்திரைகளில் இடம் பெற்றுள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். 

புறநானூற்றுப் பாடல்களில் (2, 201) வரும் தொன்மக் கதைகளைக் கொண்டு சிந்துவெளிக் குறியீடுகளில் இடம்பெறும் காவடி போன்றவற்றுக்குப் "பொறை', "பொறையன்' என்று விளக்கம் தந்து சேரர் வரலாற்றோடு இணைக்கிறார். இனிவரும் ஆய்வாளர்களும்  பயன்பெற இப்படியெல்லாம் எழுத்துகளுக்கும் குறியீடுகளுக்கும்  தேடித் தேடி விளக்கம் தந்து டாக்டர் ஐராவதம் மகாதேவன் சிந்துவெளியில் ஒளியேற்றியிருக்கிறார்.

கட்டுரையாளர்: மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com