நாமெல்லாம் பாரதியின் வாரிசுகளே!

நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான். சில பேர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சில பேர் அதை உணராமலும் இருக்கலாம்

நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான். சில பேர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சில பேர் அதை உணராமலும் இருக்கலாம். ஆனால், பாரதியிலிருந்துதான் நம்முடைய சிந்தனை, நம்முடைய கலாசாரம், நம்முடைய வாழ்க்கை முறை இதெல்லாம் சரியான அர்த்தத்தில் நவீனம் பெற ஆரம்பித்தன. பாரதி, மகாகவி மட்டுமல்ல, மகா புருஷர்; மகத்தான சமூக சிந்தனாவாதி; சமூக விஞ்ஞானி; இந்த உலகத்தைப் புனருத்தாரணம் செய்ய வந்த சிற்பி. 
எங்களுடைய நண்பர்கள் சபையில் நாங்கள் அடிக்கடி ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு, பாரதியாரை நீ எப்படி பரிச்சயம் கொண்டாய்? முதலிலே உனக்கு என்ன பாடல் தெரியும்?' இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்லுகிற பொழுது, எப்படி பாரதி வேரிலேயிருந்து இந்தப் புதிய தலைமுறை பரிணமித்து வந்திருக்கிறது என்கிற சமூக உண்மையை அறிந்து கொள்கிற ஞானம் பெற முடியும். 
இந்த கேள்வியை என்னைக் கேட்டபோது, எனக்கு பதிலே தெரியவில்லை. அறிவறிந்த பருவத்திலிருந்து, நந்தன் கதையிலே காலில் நகம் முளைத்த நாள் முதலாய்' என்று சொல்வான், அது மாதிரி, ஓடி விளையாடு பாப்பா' என்ற பாடலைக் கேட்கின்ற பருவத்திலேயிருந்து, அவரது பகவத் கீதை' உரையைப் பயில்கிற பக்குவம் வரை பாரதி நம்முடைய அறிவில், சிந்தையில், ஊனில், உயிரில், உடலில் கலந்து கலந்து நம்மைக் காலந்தோறும் உயிர்ப்பித்துக் கொடுப்பதனை உணர்கிற பலரில் நான் ஒருவன். 
நம்மையெல்லாம் - காலம் கடந்து வாழ்கிற, நாடு கடந்து வாழ்கிற பிரபஞ்சம் முழுவதும் பரவிக் கிடக்கிற தமிழர்களையெல்லாம் - ஒன்றிணைக்கிற ஒரு மாபெரும் சக்தி மகாகவி பாரதி என்பதனை அவரது எழுத்துகள் சொல்லும். சைபீரியப் பாலைவனத்திலிருந்து பிஜித் தீவிலே கரும்புத் தோட்டத்திலே கண்ணீர் வடித்து அழுகின்ற பெண்கள்வரை, அவரது உலகப் பார்வை வியாபித்திருந்தது. தமிழர்காள்! மகாகவி பாரதியின் பார்வை படாத இந்தப் பிரபஞ்சத்தை நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது.
பாரதியைப் பற்றி நிறைய செய்திகள் உண்டு. அவரது காலம் ரொம்பக் குறுகியது. 39 ஆண்டுதான். நாற்பது வயது கூட ஆகவில்லை. அவரைப் படிக்கிற பொழுது - சிலரைப் படிக்கிறபோதுதான் நமது உள்ளத்திலேயிருந்து அந்த சொற்கள் வருகின்றன என்று தோன்றும். எல்லாரும் கவிதை எழுதுகிறார்கள். நன்றாக எழுதுகிறார்கள். பாரதியாரை விடக் கூட நன்றாகக் கவிதை எழுதுபவர்கள் இருப்பதாக நினைப்பவர்களும் நிரூபிப்பவர்களும்கூட உண்டு. ஆனால், அவரை மாதிரி காலத்தைப் பிணைக்கிற ஒரு மகத்தான சக்தியாய் யார் இருக்கிறார்கள்? கவிஞன் என்றால் சோம்பித்திரிபவர்கள்; சுருண்டு கிடப்பவர்கள்; குனிந்து நடப்பவர்கள்; நிமிர்ந்து நிற்க முடியாதவர்கள்; அழுக்குப் பிடித்தவர்கள் என்றெல்லாம் இக்காலத்தில் பல கோலங்கள் காட்டுகின்றபொழுது, பாரதி, சற்றுக் குனிந்து நடக்கிறவனைப் பார்த்தால் அடே நிமிர்ந்து நட!' என்பார்.
வளைந்து கிடக்கிற மனிதனைப் பார்க்கப் பொறாத மனம். பன்றிப் போத்தை சிங்க ஏறாக்குதல் வேண்டும்' என்கிற மனம். அது மொழி கடந்த மனம். அதனால்தான் அவருக்கு அச்சம் வருகிறது. தான் தமிழன், தான் தமிழன் என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சிறப்பெல்லாம் தமிழுக்கு வந்து சேருதல் வேண்டும். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே'. இந்தச் சொல்லுக்குப் பழுதில்லை. இங்கே தமிழிலே என்ன சொற்கள் வந்து கலந்த போதிலும் இந்த சமுத்திரம் எல்லாவற்றையும் இழுத்து ஈர்த்து தனக்குள்ளே வயப்படுத்திக் கொள்ளும்.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்' என்றால், எல்லாக் கலாசாரமும் வந்து இங்கு கலக்கட்டும், அந்தச் சவாலை இந்த மொழி ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லுகிற தெம்பு இருந்தது. மெல்லத் தமிழ் இனி சாகும்' என்று அந்தப் பேதை உரைத்தான் என்றான். அது பேதையர் சொல். இங்கு கூறத் தகாதவர்கள் கூறுகின்ற சொல். கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்'. 
என்ன விபரீதம்! ஆன்றோர்களும், சான்றோர்களும், புலவர்களும், கற்றோர்களும் இன்று மெத்தத்தான் கவலைப்படுகிறார்கள் தமிழ் செத்துப் போகுமென்று. அது சாகாத மொழி! என்றுமுள தென்றமிழ்'. என்றும்' என்றால் மூன்று காலம். இது இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்று சொல்லத் தகுந்த சொரூபம் உடையது.
எனவே, நான் கற்றதெல்லாம் நான் சிந்தித்ததெல்லாம் நான் பெற்றதெல்லாம் பாரதியிடமிருந்துதான். ஒரு வாரிசை இந்த விஷயத்தில் உரியவனே உருவாக்குவதில்லை. அவனுடைய சொற்கள். அவன் வாழ்ந்த வாழ்க்கை. நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்று'. அதனால்தான் பாரதியைப் பற்றி செய்தி பரவுதல் வேண்டும். அது தமிழனைப் பற்றிய செய்தி. தமிழனைப் பற்றிய செய்தி என்றால் அது இந்தியாவின் சிறப்பான சிந்தனையின் சாரம் என்று அர்த்தம்.
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு 
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பினள் 
என்று சொல்வது இந்த தேசத்தை மட்டுமல்ல; இந்த மொழியை. ஆகவே, இந்த மொழியின்பால் அக்கறை கொண்ட அன்பர்கள் வேறு நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் வேற்று மொழியிலே வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். வேறு துறைகளிலே வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். இதெல்லாம் பாரதியார் கண்ட கனவு. அவர் கனவுகள் எல்லாம் பலித்திருக்கின்றன. அவர் கண்ட கனவு பலித்த யுகத்தில் நாம் வாழ்கிறோம். அன்று பாழ்பட்டு நின்றது பாரதம். தாழ்வுற்று, வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரதத்தில் அவர் கனவு கண்டார். இன்றைய பாரதம் உலகுக்கெல்லாம் ஞானதானம் செய்கின்ற நாடாக உயர்ந்திருக்கிறது. பாரதியின் கனவுகள் எல்லாம் பலித்ததன் விளைவு நாம்.
நல்ல சந்ததியினர் பித்ருக்களை மறக்காமல் இருப்பார்கள் என்பது மட்டுமல்ல, பிதுர்க்கடனையும் தவறாமல் நிறைவேற்றுவார்கள். திருலோக சீதாராம் என்ற நண்பர், பாரதி புத்திரர். நாம் எல்லாம் பாரதியின் புத்திரர்கள். பாரதியாருக்கு ஆண் வாரிசு கிடையாது. அது திருலோக சீதாராமுக்கு ரொம்ப வருத்தம் தந்தது. பாரதியார் இறந்த தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடனை நிறைவேற்றி வந்தார்.
நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ இருக்கிறதை நம்புங்கள். கடவுள் இல்லை என்று யோசிப்பவர்களுக்குத்தானே நம்பலாமா கூடாதா என்பது. இருக்கிற எல்லாவற்றிலும் எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம்' என்று எழுத்தாளர்களுக்கெல்லாம் மந்திரம் போல் சொல்லைக் கற்றுத் தந்தவன் மகாகவி பாரதி. எனவே அவன் புகழைப் பாடுவதற்கு நேரம் கிடையாது; காலம் கிடையாது; நாள் கிடையாது.
நமது சுவாசம் பாரதி. நாமெல்லாம் பாரதியின் வாரிசுகள். நான் எப்போதுமே பாரதியின் வாரிசு என்று நானாகவே எண்ணிக் கொண்டிக்கிறேன். எப்படி திருலோக சீதாராம் பிதுர்க்கடன் நிறைவேற்றி தன்னை வாரிசு என்று நினைத்துக் கொண்டாரோ அதுபோல்.
பாரதியார் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவோம். அவர் என்ன சொன்னார்? தெளிவாகத் தெரிந்து கொள். அப்புறம் இன்னொருவருக்கு தெளிவு ஏற்படுத்துவதற்காக சொல்லு. தெளிவுறவே அறிந்திடுதல். தெளிவு பெற மொழிந்திடுதல்'. சொல்லுவதில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தெளிவு ஏற்பட வேண்டும். புரியாத விஷயங்களெல்லாம் எனக்கு சம்பந்தமல்லாததென்று இந்தக் காலத்திலும் நான் ஒதுக்கிவிடுவேன். அது ரொம்பப் பெரிய விஷயமாக இருக்கலாம். கணக்கு எனக்கு இன்று வரை தெரியாது. ஆனால், இந்தக் கணக்கு இல்லாமல் உலகத்தில் எந்தக் காரியமும் இல்லை என்றறிகிறபோது நான் எதற்குமே லாயக்கற்றவன் என்கிற தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது. 
பள்ளிக்கூடத்தில் கணக்கு சொல்லிக் கொடுக்கும்போது, மைதானம் எவ்வளவு நீளம், எவ்வளவு அகலம் என்று சொல்லிக் கொடுத்தால் இது ஏண்டா நமக்கு' என்று தோன்றும். நான் எங்கே மைதானத்தை அளக்கப் போகிறேன். நிறுத்தவும், அளக்கவும் விற்கவும் வாங்கவும் கணக்கு வேண்டும். நான் ஏன் கணக்கு படிக்க வேண்டும்? ஒரு கணக்கனுக்கு இவையெல்லாம் வேண்டும். ஒரு விஞ்ஞானிக்கு இதெல்லாம் வேண்டும். அப்புறம் எனக்குத் தோன்றியது. அடடே, பாரதியாரும் நம்ம கேசுதான். அவருக்கும் கணக்கு பிடிக்காதாம். கணக்கு பிணக்கு ஆமணக்கு' என்று எழுதி வைப்பாராம். இப்படி பாரதியாரோடு ஒரு ஒற்றுமை கண்டேன்.
அதற்கு மேலே என்னவென்றால் நம்மை மாதிரியே, வெளியே சொல்ல வெட்கம். இளம் வயதில், அரும்பு மீசை கூட முளைக்காத பருவத்தில் ஒன்பது வயதுப் பொண்ணு மேலே காதல். 
பாரதியார் சொல்கிறார்: 
ஒன்பதாய பிராயத்த ளென் விழிக்
கோதுகாதை சகுந்தலை யொத்தனள் 
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்' 
என்செய் கேன் ? பழி யென்மிசை யுண்டுகொல்? 
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல் 
அதனை யாவர் பிழைத்திட வல்லரே? 
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில் 
முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே? 
என்று பிள்ளைப் பிராயத்தில் நான் படிக்கிறேன். படித்துக் கொண்டே போனால் நம்மை எங்கெங்கோ கொண்டு போகிறது. உலகத்தை எல்லாம் காட்டித் தருகிறது ஒரு சிறு புத்தகம். கிறிஸ்துவர்க்கு எப்படி பைபிளோ, இஸ்ஸாமியருக்கு எப்படி குரானோ, மார்க்சிஸ்ட்டுகளுக்கு எப்படி தாஸ் காபிடலோ அது போல் தமிழர்களாகிய நம் அனைவருக்கும் கையில் இருக்க வேண்டிய புத்தகம் பாரதியாருடையது.
அதிலே திருக்குறள் இருக்கிறது. அதில் கம்பர் இருக்கிறார். வள்ளுவர் இருக்கிறார். இவர்களைப் பற்றி எல்லாம் பாரதியார் சொல்லவில்லை என்றால் எனக்கு அவர்கள் மீது மரியாதை வந்திருக்காது. இப்படி தானறிந்த, தன்னை உயர்த்திய அனைத்தையும் தன் பிள்ளைகளுக்கு எப்படிப் பெற்றோர் சொல்வார்களோ அது மாதிரி தமிழ்ச் சந்ததியினருக்கு பாரதியார் தந்து போயிருக்கிறார். தமிழ் பேசுகிற, தமிழிலே சிந்திக்கிற அத்தனை பேருமே பாரதியின் வாரிசுகள்தான்!

(வ.உ.சி. நூலகம் வெளியிட்ட மகாகவி பாரதியார் கவிதைகள்' நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் உரை)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com