ஜெயலலிதாவின் ஜீவகாருண்யம்!

விலங்குகள், வளர்ப்புப் பிராணிகள் மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொள்ளைப் பிரியம் உண்டு. ஒரே சமயம் போயஸ் தோட்ட இல்லத்தில் மொத்தம் 14 நாய்களை அவர் வளர்த்து வந்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஜீவகாருண்யம்!

விலங்குகள், வளர்ப்புப் பிராணிகள் மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொள்ளைப் பிரியம் உண்டு.
ஒரே சமயம் போயஸ் தோட்ட இல்லத்தில் மொத்தம் 14 நாய்களை அவர் வளர்த்து வந்துள்ளார். நாய்களை எப்போதும் அவர் செல்லமாக குட்டி என்றே அழைப்பாராம். அவர் வெளியூர் செல்லும்போது கால்நடை மருத்துவரை அழைத்து, "நான் இத்தனை நாள்கள் வெளியூர் போகிறேன். என் செல்லக் குட்டிகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று பாதுகாத்துவிட்டுத்தான் அவர் வெளியூர் போவது வழக்கம்.
கால்நடை மருத்துவத் துறையில், சென்னை சைதாப்பேட்டை பகுதியில் பணியாற்றியவர் டாக்டர் பலராமன். இவர் 1988 -ஆம் ஆண்டிலிருந்து 2011 -ஆம் ஆண்டு வரை சுமார் 23 ஆண்டுகள், போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்புப் பிராணிகளான நாய்களுக்கு மருத்துவம் பார்த்து, அவற்றைப் பராமரித்தவர்.
ஜெயலலிதாவின் ஜீவகாருண்யத்தையும், பிராணிகள் மீதான அன்பையும் விவரிக்கும் அவர், தனக்கும், தன் குடும்பத்துக்கும் பல்வேறு உதவிகளை ஜெயலலிதா செய்துள்ளார் என்று நன்றியுடன் நினைவு கூருகிறார்.
ஜெயலலிதாவின் வளர்ப்புப் பிராணிகளைப் பேணியது குறித்த பலராமனின் அனுபவங்கள்:
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் ஒரு சமயத்தில் உமா என்ற நாட்டு இனத்தைச் சேர்ந்த நாய் இருந்தது. அந்த நாய் ஒரே நேரத்தில் 14 குட்டிகளை ஈன்றது. அனைத்து நாய்க்குட்டிகளும் அதே வீட்டில் தான் வளர்க்கப்பட்டன.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தான் வளர்க்கும் நாய்களைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புவார். எனவே, ஞாயிற்றுக்கிழமை அத்தனை நாய்களையும் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தி வீட்டின் மாடிக்கும் அனுப்புவோம். அங்கு அவற்றுக்கு பிஸ்கெட், சாக்லெட் உள்ளிட்டவற்றைக் கொடுத்து, மனிதர்களோடு பேசுவது போல அவற்றோடும் பேசி நேரம் செலவிடுவார் ஜெயலலிதா.
அதில் ஏதாவது ஒரு நாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, முடி கொட்டுகிறது என்றாலோ என்னை அழைத்து விவரம் தெரிவித்து, உடனே கவனிக்கச் சொல்லுவார்.
பிரதமர் சந்திப்பை தவிர்த்தார்: ஹைதராபாத்திலுள்ள பண்ணை வீட்டுக்குச் செல்லும்போது எல்லாம் தனக்கு பிடித்தமான ஏதாவது நாயை உடன் அழைத்துச் செல்ல விரும்புவார். அவர் விமானத்தில் செல்வார், நாங்கள் நாயை அழைத்துக் கொண்டு ரயிலில் செல்வோம். அங்கு தங்கியிருக்கும் நாள்கள் வரை தினமும் காலை, மாலை வேளைகளில் அதனோடு விளையாடவும், நேரம் செலவழிக்கவும் செய்வார். மனிதர்களிடம் கனிவு காட்டுவதுபோலவே பிராணிகளிடத்திலும் அன்பாகவும் பழகுவார்.
முதல்வராக இருந்த சமயத்தில் ஒருமுறை ஜெயலலிதா ஹைதராபாத்துக்குச் சென்றார். அங்கிருந்து தில்லிக்குச் சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்திப்பதாகத் திட்டம். அதற்காக பிரதமரிடம் அனுமதியும் பெறப்பட்டது. இந்நிலையில் அந்த முறை ஹைதராபாத்துக்குச் செல்லும்போது ஜூலி என்ற பொமேரியன் நாயை அழைத்து வர பணியாளர்களிடம் சொல்லியிருந்தார். அந்த நேரம் நான் உடன் செல்லவில்லை.
ஜூலி சற்று வயதான நாய் என்பதாலும், கோடைக்காலம் என்பதாலும் ரயிலில் கொண்டு செல்லும்போது, அதிக வெப்பத்தின் காரணமாக ஹைதராபாத் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டது. ஹைதராபாத் சென்று ஊழியர்கள் இதனைத் தெரிவித்ததும், மிகவும் கவலைக்குள்ளாகி பிரதமரின் சந்திப்பை ரத்து செய்துவிட்டு உடனே சென்னை திரும்பினார். அவரோடு விமானத்திலேயே இறந்த நாயின் உடலும் கொண்டு வரப்பட்டு, போயஸ் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரு கட்டத்தில் நாய்கள் அனைத்தும் வயதாகி ஒவ்வொன்றாக இறக்க ஆரம்பித்தது. அதன் பின்பு ஜெயலலிதாவிடம் புதிய நாய்க்குட்டிகள் வாங்குவோமா என்று கேட்டதற்கு, "வேண்டாம்' என்று மறுத்துவிட்டார். 2011 -ஆம் ஆண்டுக்குப் பின்பு போயஸ் தோட்டத்தில் நாய்கள் எதுவும் இல்லை.
குருவாயூருக்கு யானை அன்பளிப்பு: கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கோயிலுக்கு யானையை அன்பளிப்பாக வழங்குவதாக ஜெயலலிதா வாக்களித்த பின்னர், அதற்கான யானையைத் தேர்வு செய்தவற்காக நான் கேரளத்துக்கு அனுப்பப்பட்டேன். ஒரு வாரம் தங்கியிருந்து 10 யானைகளைத் தேர்வு செய்து புகைப்படம் எடுத்து வந்து கொடுத்தேன். அதிலிருந்து கிருஷ்ணா என்ற 16 வயது யானையைத் தேர்வு செய்து அன்பளிப்பாக அளித்தார் என்றார் அவர்.
மிகப்பெரிய அறுவைச் சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கும் டாக்டர் பலராமன், கடந்த செப்டம்பர் 22 -ஆம் தேதி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் குணமாக வேண்டும் என்று 2 முறை மொட்டை போட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com