பணத் தட்டுப்பாட்டால் பொங்கல் கொண்டாட்டம் பாதிக்கும்? அச்சத்தில் பொதுமக்கள்

பணத் தட்டுப்பாடு காரணமாக தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் பாதிக்குமோ என தமிழக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பணத் தட்டுப்பாடு காரணமாக தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் பாதிக்குமோ என தமிழக மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதில் மத்திய-மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
பெருமதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்த நாள் முதல் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தவும், வங்கி கணக்கிலிருந்து எடுக்கவும், செல்லாத பணத்தை மாற்றவும் அவ்வப்போது பல்வேறு விதிமுறைகள் மத்திய அரசாலும், ரிசர்வ் வங்கியாலும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பணத்தை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்து தற்போது அதனை வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த முடியுமென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் பழைய ரூபாய் நோட்டுகளை ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்த முடியுமென தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வாடிக்கையாளர்கள் மிகக் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நவம்பர் 8-ம் தேதிக்கு பிறகு பெரும்பாலான ஏடிஎம்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. சில ஏடிஎம்களில் மட்டுமே அவ்வப்போது பணம் நிரப்பப்படுகிறது. ஆனால் அனைவராலும் பணத்தை எடுக்க முடியவில்லை. அதற்குள் பணம் காலியாகி விடுகிறது. பலர் ஏடிஎம்களில் கால்கடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து விட்டு பணம் காலியானவுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
அன்றாடச் செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தொழில்துறையினரை பொருத்தவரையில் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளனர். அத்தியாவசிய செலவுகளுக்கு பணமில்லாமல் தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள், ஊழியர்கள், சம்பளதாரர்கள் தங்களுடைய சம்பள பணத்தை வங்கியிலிருந்து எடுக்க பணிக்கு விடுப்பு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அப்போதும் அவர்களால் பணம் எடுக்க முடிவதில்லை. வங்கிகளுக்கு போதிய பணம் ரிசர்வ் வங்கியால் வழங்கப்படவில்லை.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பணம் எடுப்பதற்கான உச்சவரம்பான ரூ.24 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கு பதிலாக வாடிக்கையாளர்களை பொறுத்து ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என்ற அளவுக்கு வங்கிகளால் பணம் வழங்கப்படுகிறது. நடப்புக் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு பணம் சரிவர வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் வரும் 2017- ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய சிக்கலை தமிழக மக்கள் சந்திக்க உள்ளனர். ஏனெனில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் ஜனவரி 14-ஆம் தேதி வருகிறது. பொங்கலையொட்டி வீடுகளுக்கு வர்ணம் பூசுதல், புத்தாடைகள், பூஜை பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவர்.
சம்பளதாரர்களுக்கு சம்பளத்துடன், பொங்கல் போனஸும் வழங்கப்படும். அந்த பணத்தை எடுத்து தான் புத்தாடை உள்ளிட்டவற்றை மக்கள் வாங்குவார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் தங்களுடைய சம்பளம், போனஸ் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க மிகக் கடுமையான சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். பணமில்லாமல் புத்தாடைகளை விற்பனை செய்யும் அனைத்துக் கடைகளிலும் ஸ்வைப்பிங் இயந்திரம் இருக்குமென கூறிவிட முடியாது. அதேபோல அனைத்து தரப்பு மக்களிடமும் கடன் மற்றும் பற்று அட்டைகளும் இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ரொக்கம் இருந்தால்தான் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்க முடியும். பணத் தட்டுப்பாடு குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது அது இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் வரையிலும் நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு தேவையான புத்தாடை, மண் பானை, கரும்பு, மஞ்சள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு சம்பளம் மற்றும் போனஸ் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முடியாத சிக்கலுக்கு உள்ளாவர் என்றே தோன்றுகிறது. அதே போல புத்தாடை, மண் பானை, கரும்பு, மஞ்சள், காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரிடத்திலும் பணமில்லா பரிவர்த்தனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்குமா என்பதும் கேள்விக்குறி தான்.
இந்நிலையில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் இப்போதிருந்தே உருவாகத் துவங்கியுள்ளது. இதில் மிகக் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகப் போவது தொழிலாளர்களாகத் தான் இருப்பார்கள்.
வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுக்கு ஈடாக புதிய நோட்டுகள் வங்கிகளுக்கு விநியோகம் செய்யப்பட மாட்டாது என்பதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். அதனால் வங்கிகளில் பணம் போதிய அளவுக்கு கிடைக்காது. இப்பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகை கொண்டாடத் தேவையான பணம் மக்களுக்கு சிரமமின்றி கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.
* புத்தாடை, மண் பானை, கரும்பு,மஞ்சள், காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரிடத்திலும் பணமில்லா பரிவர்த்தனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்குமா  என்பதும் கேள்விக்குறி தான். **

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com