ஆவணப்பட வரலாற்றின் தொடர்ச்சி! ‘பராக்கா’  ஒரு காட்சிப் பயணம்!

உலகம் தன் இயல்பிலிருந்து மாறிக்கொண்டேயிருக்கிறது. நேற்றைய சமூகம் இன்றைக்கு
ஆவணப்பட வரலாற்றின் தொடர்ச்சி! ‘பராக்கா’  ஒரு காட்சிப் பயணம்!

உலகம் தன் இயல்பிலிருந்து மாறிக்கொண்டேயிருக்கிறது. நேற்றைய சமூகம் இன்றைக்கு வேறாகியிருக்கிறது. மனித நாகரிகமும், வாழ்க்கை முறையும் பல நூற்றாண்டுகள் கடந்து வேறு வடிவத்தை அடைந்துள்ளது.

பயணிக்கும் நேரமும், தூரமும் சுருங்கிவிட்டன. பிரபஞ்சத்தின் நீள அகலங்கள் குறுகிவிட்டன. பூமிப் பரப்பின் ஒவ்வொரு அங்குலமும் ஊசிமுனைகளால் துளையிடப்படும் அளவிற்கு விஞ்ஞானத்தின் அசுர வேகம் தொடர்ந்து துளைத்துக்கொண்டே இருக்கிறது. நேற்றைய சௌந்தர்யத்தைப் பார்க்க முடியாதபடி அடுத்த தலைமுறை வேறொரு திசையை நோக்கி ஓடிப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

வனப்பிரதேசங்கள் தன் நிறங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன. காடுகள் பெரும்பாலும் களவாடப்படுகின்றன. மலைகள் குடைந்து குடைந்து மண் முகடுகளாக்கப்படுகின்றன. நதிகளின் துளைகள் அடைக்கப்படுகின்றன. இயற்கைக்கு எதிரான போர் தொடங்கப்பட்டுவிட்டதால் தறிகெட்டுச் சுற்றிக் கொண்டிருக்கிறது தட்பவெப்ப நிலை. வெப்பச்சலனத்தாலும், மிதமிஞ்சிய அனல் காற்றாலும் உலகம் உருமாறிவிட்டது. அடுத்த தலைமுறை பள்ளிப் பாடப்புத்தகங்களில் மட்டுமே அறிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு வனம் தன் இருப்பிடத்தை இழந்துகொண்டிருக்கிறது.

இந்த மாற்றங்களைக் கண்டும் காணாததுமாகப் போய்க்கொண்டிருக்கிற அவல நிலை நீடித்துக் கொண்டேயிருக்கிறது. இயற்கையின் இருப்பிடத்திலிருந்தும், காடுகளிலிருந்தும், பழங்குடியின மக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். ஜெட் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் அதன் ஆக்ரோசமான கைகளால் பிரபஞ்சத்தை பிளந்துப் பார்த்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம். பூமி வெப்பமாதல், ஓசோன் மண்டல ஓட்டை, சுனாமியின் கோரத்தாண்டவங்கள், அதிர்வடையும் பூமி, தேய்ந்துபோய்க் கொண்டிருக்கும் பூமத்தியரேகைகள், அணுப்பிளவு, அணுஉலை என துண்டாடப்படும் மனதை பதற வைக்கும் எல்லையற்றக் கொடுமைகள் மறுபக்கம். இந்த அவலங்களோடும், அல்லல்களோடும் அழகான உலகத்தைப் படம்பிடித்துக்காட்ட, இயற்கைக்கு எதிரான போர்களிலிருந்து மீட்டெடுக்க, எச்சரிக்கையூட்ட பராக்காவின் 96 நிமிடங்கள் போதுமா எனத் தோன்றவில்லை. 

பராக்கா….

இந்த ஒற்றை வார்த்தையின் முழு அர்த்தத்தையும் சொல்வதற்கான சாத்தியப்பட்டச் சொல்லாடல்களை அறிய முற்பட்டபோது, அதன் அர்த்தங்கள் மேலும் விரிந்து நீண்ட நெடிய சொற்றொடர்களாக வந்து சேர்ந்தன. வாழ்க்கையின் ரசங்கள், வார்த்தைகளுக்குள் அடங்காத உலகம் என அதன் மையப்பொருள் நோக்கிய புரிதலுக்குப் பிரயோகிக்கப்படும் தகவமைவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

ஆறு கண்டங்கள் 24 நாடுகள் என உலகம் முழுவதும் சுற்றிச் சுழன்று எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். 96 நிமிடங்கள் என்றாலும் கடந்த தொலைவுகளும் எல்லைகளும் பிரமிக்க வைப்பது. உலகத்தைச் சுற்றி வந்த உணர்வை ஏற்படுத்தும் படம் என்றும் சொல்லலாம்.

ஆனால் வெறும் பயண அனுபவப் பகிர்வோ, காட்சியியல் தொடர்பான பதிவோ அன்றி மனதின் தேடல்நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். வசனங்கள் இல்லாமல் படத்தோடு உணர்வு கொப்பளிக்க இழையோடும் இசையின் பங்கும் அலாதியானது.

பராக்காவின் உள்ளடக்கம் வரையறுக்கப்படாத, ஒற்றை வரியில் கதை சொல்லிச் செல்லும் போக்கற்றது. கதாபாத்திரங்கள் அற்றது. வசனங்களோ, பின்புலக்குரலோ  ஏதுமில்லை.

உறைபனி, மலைமுகடு, இருண்ட உலகம், அடர்ந்த காடு, நெருக்கடி நகரம், வனப்பிரதேசம், பிரமிடுகள், அடுக்கு மாடிக்கட்டடங்கள், எரியும் தணல், இலைமறைவு பசுமை வனம், ஆதிவாசிகள் நடனம். ஆப்பிரிக்கக் குடில்கள், தேவாலய மெழுகுவர்த்திகள், நேபாள தேசம், இமயமலை அடிவாரம், வாரணாசி, காசி பிண எரியூட்டல், குப்பை மேடுகள், விமானத் தளங்கள், சாலையோரமாய் வீழ்ந்துகிடக்கும் தாயும் குழந்தையும், மக்கா எனத் தொடங்கி சகல நிகழ்வுகளையும் பதிவு செய்யும் ’பராக்கா’வின் பயணம் முடிவற்றது.

இந்தியாவின் சில பிரதேசங்களையும், குறிப்பாக கொல்கத்தா, சென்னை மற்றும் வாரணாசி (காசி) போன்ற இங்களின் அவலங்களையும், ஆன்மீக வாழ்வியலையும் மிகச் சரியாகப் பதிவு செய்திருப்பது கவனம் கொள்ளத்தக்கது.

பராக்கா என்ற ஜப்பானிய சொல்லுக்கு ’வாழ்க்கையின் ரசங்கள்  என்று அர்த்தம். கலாச்சாரத்தையும், வாழ்க்கையையும், நாகரிகங்களையும், இயற்கையையும், போருக்குப் பின்னான மனித மண்டை ஓடுகளையும், நவீன வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளையும், நீண்ட நெடிய தொலைதூர நாடுகளின் தேவாலயங்களையும், மெக்கா போன்ற புனிதத் தளங்களையும், சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் இன்னபிற சூழ்நிலைக் கூறுகளையும் தெள்ளத்தெளிவாக நிதானமான போக்கில் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

பூமியின் சுழற்சியில் அதன் நேர்கோட்டுப் பாதையில் உள்ள இயற்பியல் விதிமுறைகளோடு இந்த ஆவணப்படத்தை மெல்ல மெல்ல அதன் இருப்பிடத்திற்கு இட்டுச் செல்ல முனைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.   

பூமியின் சுழற்சியைப் புரிந்து கொள்ள ஏற்படும் மனநிலை எப்படியோ அதுபோல படத்தின் தொடக்கம் மிக மெதுவாக ஆரம்பிக்கிறது. அண்டார்டிகா பிரதேசத்தின் குரங்குகளின் குளிர்வாழ்க்கையை நாம் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பார்ப்பதுண்டு. ஆனால், அதன் வாழ்நிலை அமைதி நாம் கண் அயராமல் பார்க்கும் லயம் பனிப்பிரதேச சூழ்நிலையை உணர்த்துகிறது. மெல்ல மெல்ல காட்சிகள் கட்டவிழ்க்கப்பட்டு வெவ்வேறு வாழ்நிலை சூழ்நிலையை மையமிட்டு நகர்கிறது கேமரா. எந்த தொந்தரவுமின்றி கேமராவின் வழியே தரிசிக்கும் வகையில் அந்தப் பிரதேசத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார்கள் இதன் இயக்குநர்கள் ரான் ப்ரிக்கே மற்றும் மார்க் மாகிட்ஸன். மிக்கேலின் பின்னணி இசையின் ரீங்காரம், மேலும் எண்ண வலுவாக்கும் போக்கு படத்தின் வெற்றி.

ஆரம்பக் காட்சிகளில் கேமராவின் நகர்வு புலப்படாத வகையில் நூலிழை அளவாய் மெல்ல மெல்ல அடுத்தக் காட்சிக்கு நம்மை அழைத்துப்போகிறது. பசுமைப் போர்த்திய பூமியின் பிரதேசங்களை அது கடக்கையில் நாம் இழந்து கொண்டிருக்கும் இயற்கை நிலைப்பாடுகளின் கவலைக்கூறுகள் தென்படுகின்றன. ‘உலகம் இவ்வளவு அழகானதா?’ என்று ஆச்சரியப்படும் வகையில் புளகாங்கிதம் அடைய வைக்கிறது.

வனப்பின் இழப்பை மனிதன் புரிந்து கொள்ளவில்லை என்பதை மையப்படுத்திப் போகிறது. தொடர்ந்து உயிரினமும் இயற்கையும் என மாறி மாறி போய்க் கொண்டிருக்கும்போது மனித வாழ்வில் உடன் வராமல் எங்கேயோ தங்கிவிட்ட இன்னொரு இனம் அடையாளம் காட்டப்படுகிறது. நாகரிக ஜோடனைக்குள் அடைப்பட்டதைக் காண்பித்த மறுகணமே பழங்குடியினரின் குடிசைக்குள் நுழைகிறது காட்சி. அவர்களின் கள்ளங்கபடமற்ற முகமும், கறுமை சரீரமும் கடவுள், மதம், மார்க்கம் என எந்தக் கோட்பாடுகளுக்கும் அடைப்படாமல் இயற்கையை கடவுளாய், ஜீவனாய்ப் போற்றும் உள்ள வேட்கையின் களிநடனம் காண முடிகிறது.

நிறைந்த வாழ்வை, மதம் என்ற போர்வைக்குள் முடங்கிக் கிடக்கும் போக்கை அதன் தத்ரூபத்தை காணும்போது தபோவன மனிதனை அசலாய்க் காண முடிகிறது. சடைமுடியுடன் தனது மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொண்ட மனிதனின் அவசரமற்ற வாழ்வை நேரடியாகக் தரிசிக்க முடிகிறது.

அதிகாலையில் தொடங்கி அந்தி வரை என ஒரு நெடுந்தூரக் காட்சி நம்மை மௌனம் கொள்ளச் செய்கிறது. பௌத்தம், இந்து, கிறித்துவம், இஸ்லாம் என உலக மதங்களின் புண்ணியத் தளங்களைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். அங்கே நிறைவேறும் வேண்டுதல்களும் விண்ணப்பங்களும் இன்றைய சூழ்நிலையின் துயர நிகழ்விற்கான கோரிக்கைகளாய் வினாக்களாய் விடைகளாய் சொல்லப்படுகிறது. ஜனத்திரள் நிறைந்த மக்கா, மதினா காட்சிகளில் உலகச் சுழற்சியை ஒரு நிமிடம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

புத்த மதத்தின் தத்துவார்த்த வாழ்வை அவர்களின் இன்முகத் தோற்றத்தை நெருங்கி உணரும்படியான கட்டமைப்பு சிறப்பு. காசியில் பிணம் எரிக்கப்படும் காட்சியில் தொடங்கி வேறொரு வாழ்க்கைத் தொடக்கம் வரை மெய்சிலிர்க்கக் காண முடிகிறது.

கருவாடு போன்ற உடலை முங்கில் குச்சிகளில் தள்ளிவிடும்போது இன்னொரு பிணம் வந்து தள்ளிக்கொண்டு போகிறது. மிதக்கும் நீர்நிலைகொண்ட நீண்ட நதியின் போக்கில் மெல்ல நகர்கிறது கேமரா.

மண்டை ஓடுகள், மனித எலும்புகள் லட்சக்கணக்கான கை கால்கள் என அடுக்கி வைக்கப்பட்ட மனிதத் துண்டுகள் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களை துப்பாக்கியின் துணையோடு காவல் காத்துக்கொண்டிருப்பதை பதிவு செய்து வெளியே வந்தபின் போரின் உக்கிரமுகத்தை காறித் உமிழத் தோன்றுகிறது. அணுகுண்டுகளின் உக்கிரப்பசிக்கு ஆளான ஏராளமான ஜப்பானிய உயிர்களை நினைவு கொள்ளச் செய்துவிட்டது.

கட்டுக்கடங்காத வன்ம நிலைப்பாட்டை தகர்த்தெறிய எந்தத் தத்துவம் பயன்படுமோ என்ற கேள்வியும் எழுகிறது. லட்சக்கணக்கான காலணிகள் குவிக்கப்பட்டிருக்கிறது. அது இழந்தவைகளா பெற்றவைகளா என எண்ணும்படியான யோசனை வந்து போகிறது.

பராக்கா படத்திற்காக இயக்குநர் மற்றும் குழுவினரின் மெனக்கெடல்களைப் பாராட்டியாக வேண்டும். ஒட்டு மொத்த வாழ்க்கையின் ரஸங்களையும் பதிவு செய்ய அவர்கள் எடுத்துக் கொண்ட சிரமங்கள் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் நன்கு புரியும். வசனமோ கதாபாத்திரங்களோ இல்லாமல் வாழ்க்கையை ஒரு கதாபாத்திரமாக வைத்து உலகின் பரிமாணங்களை உள்ளடங்கி எடுக்கத் துணிந்த இயக்குநர் ஏற்கெனவே இதுபோன்ற ஒரு வாழ்வியல் படத்தில் பணி புரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் பின்னணி இசைச் சேர்ப்பில் அந்தந்தக் காட்சிக்கு ஏற்றவாறு அந்தக் காட்சியை மெருகூட்டும் வகையில் அதே பாணியில் ஒவ்வொரு கலாச்சார நிகழ்விற்கும் ஏற்றவாறு இசையின் அமைப்பும் சேர்ப்பும் சரியாய் இருப்பதால் இசை ஒரு நெருடலாகவோ, இடைஞ்சலாகவோ அல்லாமல் காட்சியுடன் ஒத்துப்போகும் விதம் உசிதமானது.

நகர வாழ்க்கையின் நெரிசல்களைக் காண்பிக்கும்போது அவசரகதியின் இன்னல்களை உணரத்தக்க வகையில் படமாக்கப்பட்டுள்ளன. ரயில்களில், பேருந்துகளில், சாலைகளில் என மனிதமுகங்கள் கூட்டம் கூட்டமாக கொத்துக் கொத்தாக நகர்வதை கிராஃபிக்ஸ் முறையில் ஒரு சதுரக் கட்டத்திற்குள் அடைத்து முன்னேறுவதுபோல் காண்பிக்கப்படுகிறது.

பயணம் நிறைந்த தொடர்ச்சியை நகர்த்தி நகர்த்தி தேவைகள் தீராதபடி சுழன்று சுழன்று நெரிசல்கள் மேலும் அதிகமாகி அது புள்ளிகளாகி ஜனத்திரளாக ஒன்றன் பின் ஒன்றாகக் காண்பித்த விதம் அருமை. அடுக்குமாடிக் கட்டிட மனிதர்களை அவர்களின் உயரத்திற்கு அழைத்துப்போய் அங்கே காய வைக்கப்பட்டிருக்கும் துணிமணிகள் குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், எட்டிப் பார்க்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின்  வழியே சின்னஞ்சிறுசுகள், நகரத்தின் நெடிய கட்டடங்கள். நீண்ட சாலைகள், பள்ளங்கள், பாதையோர கடைகள் என நகர வாழ்க்கையின் நிதர்சனங்களைக் கண்முன் நிறுத்துகிறார்.

எங்கோ பறந்து செல்லும் விமானமும் அதில் பயணம் செய்யும் மனிதர்களின் முகபாவமும் வாழ்க்கையின் தேடுதல்களை விரிவு செய்கிறது. அதே சமயம், சாலையோரம் கட்டி முடிக்கப்படாத பாலங்களில் அதிகாலை வாகன இரைச்சல்களுக்கு மத்தியில் ஆழ்ந்து உறங்கும் மனிதனின் தூக்கம் நம்மை ஏதோ செய்கிறது.

அகன்ற சாலையோரத்தில் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முனையும்போது ஜீவனற்ற அவளுடைய முலைக்காம்புகளின் நீட்சியும், பசிக்கு அழும் குழந்தையின் அழுகுரலும் திக்கற்ற வாழ்க்கையைக் கண்டும் காணாமலும் போகும் சாலையோர மனிதர்களின் போக்கையும் ஒரே கோணத்தில் பதிவு செய்கிறார் இயக்குநர்.

தீராத பசி, நோய், வறுமை என சுமார் பத்து நிமிடங்கள் வரை உலகத்தின் உக்கிர வறுமையை அழுக்கடைந்த மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை அவர்களின் சொல்ல முடியாத விம்மல்களை எந்த மொழியில் சொன்னாலும் புரிதல் என்பது ஒன்றே. அன்றாடம் நாம் பயன்படுத்தப்படும் கால் செருப்பு முதல் கண்ணாடி வரை உலகத்தின் பயன்பாட்டு நுகர்வுக் கலாச்சாரத்தை அடையாளப்படுதும் வகையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மனித எந்திரங்களையும் அந்த விரல்கள் வழியே சீசாக்களில் அடைக்கப்படும் சின்னச் சின்ன வாழ்க்கையையும் உற்பத்தி என்ற பெயரில் உறிஞ்சப்படும் உழைப்பையும், இடைவிடாத இயக்கத்தையும் வேறு எந்த திரைப்படத்திலும் காண முடியாது. தொடர்ச்சியான வேலைப் பளுவை தொழிலாளர்களின் கைகளில் திணிக்கும் தொழில் வளர்ச்சிக்கான மனித முதலைகள் கொஞ்சமல்ல. ஒரு நிமிடத்தில் எத்தனை கம்ப்யூட்டர் இதயம் (ஹார்ட் டிஸ்க்) பொருத்தப்படுவதும, ஊசிமுனை கோர்க்க எந்திரத்தையும், இணைக்க கைகளையும் பயன்படுத்தி கோடிக்கணக்கான உற்பத்தியைப் படம்பிடித்துக் காண்பிக்கிறார் இயக்குநர்.

கோழிக்குஞ்சு பொரிப்பது கூட இப்போது இயந்திரமயமாகிவிட்டது. அதன் அலகு சூடு வைக்கப்பட்டு அதன் இறகு பரிசோதிக்கப்பட்டு மஞ்சள் மஞ்சளாய் கோழிக் குஞ்சுகள் பொரிக்கப்படுகிறது. உயிர்ப்பும் உற்பத்தியானதாய் அறிய முடிகிறது. 

மனிதக் கழிவுகள் மாதிரி நுகர்வுக் கலாச்சாரம் பெருகும் இந்தத் தருணத்தில் மலைபோலக் குவிக்கப்பட்ட குப்பை மேடுகளில் கைகளால் துழாவி தேடும் பெண்களும், குழந்தைகளும் கோணிப்பைகளில் மெல்லிய கம்பிகளைப் பொறுக்கிச் செல்லும் காட்சியில், நகரத்தின் தெருமனிதர்களை மனநெருடலோடு அணுகியிருக்கிறார் இயக்குநர். உத்திரவாதமற்ற அவர்களின் வாழ்நிலையை இன்னொரு சமயத்தில் அவல நிலையையும் தாண்டி நம்மை கண்கலங்க வைக்கிறது காட்சியின் போக்கு.

படத்தின் எந்த ஒரு காட்சியும் நம்மை சந்தோஷப்படுத்தும்படியோ குதூகலப்படுத்தும்படியோ நிச்சயம் இருக்காது. நிதர்சனங்களை உள்ளது உள்ளவாறு வாழ்க்கையின் ரஸமாய்க் காட்டியிரப்பது நிஜம். இநத் சமுக கட்டமைப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும்படியாகவும் நாம் காணாத அல்லது கண்டும் காணாத வாழ்நிலை மனிதர்களையும், சூழ்நிலைகளையும் பகிரங்கமாக தெளிவுடன் காட்சிப்படுத்தியிருப்பது இயக்குநரின் சாமார்த்தியம் என்றே சொல்லலாம்.

புகழாரம் சூட்டப்படவோ, முன்னிலை முனைப்போ அன்றி வாழ்க்கைக் கூறுகளைத் தோலுரித்துக் காட்ட இயக்குனரின்  கடைசி வியர்வைத்துளி ஒன்றுகூட வீணாகாமல் படத்தின் இறுதிக் காட்சி வரை வாழ்க்கை வாழ்க்கை வாழ்க்கையே….

தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா ஆண்டில் (1957) நிமாய் கோஷ் இந்த வரிகளை குறிப்பிட்டார். பேசும் படங்களில் நமது கண்களில் படும் உருவங்கள்த்ன் முதன்மையானவை. சப்தம் இரண்டாவது ஸ்தானதைத்தான் வகிக்க வேண்டும். பேசும் படத்திற்கும் பேச்சுப்படத்திற்கும் வித்தியாசமுண்டு. அனேகமாக நமது படங்களில் பல இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவை. 

நாடு, மொழி, இனம், மதம் என கோடு கிழிக்கப்பட்ட சமுகக் கட்டமைப்பைத் தகர்த்து மனித வாழ்க்கையின் கூறு எதுவோ அதனை உண்மைநிலை என்ற நோக்கில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

இங்கே புரிந்து கொள்ளப்படுதலே தேவையாயிருக்கிறது. வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல ஒருகோடி வார்த்தைகளும் போதாத அமைவில் இப்படம் பார்ப்பவர்கள் இதனை ஒருபோதும் ஒதுக்கிவிட முடியாது என்பது திண்ணம்.

- பா.ராமமூர்த்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com