ஒவ்வொரு இதயத்திலும் அன்பு என்னும்  தீபம் ஏற்றுங்கள்!

ஓர் எண்ணெய் விளக்கு எரிய வேண்டும் எனில்,  திரியை எண்ணெயில் இடவேண்டும்,
ஒவ்வொரு இதயத்திலும் அன்பு என்னும்  தீபம் ஏற்றுங்கள்!

ஓர் எண்ணெய் விளக்கு எரிய வேண்டும் எனில்,  திரியை எண்ணெயில் இடவேண்டும், ஆனால்  எண்ணெய்க்கு சற்று வெளிப்புறமாக  இருக்க வேண்டும். எண்ணெய்க்குள் திரி முங்கி விட்டால் அதனால் ஒளியைத் தர முடியாது. வாழ்க்கை என்பது விளக்கின் திரியைப் போன்றது. இவ்வுலகிலேயே நீங்கள் வாழ வேண்டும்; ஆயினும் அதனால் தொடப்படாமல் இருக்க வேண்டும். வாழ்வின் பொருளுலகில் மூழ்கி விட்டால் உங்களால் ஆனந்தம்  மற்றும் ஞானத்தை அடைய முடியாது. உலகில் இருந்தபடி, உலக வாழ்க்கை அம்சங்களில் மூழ்கி விடாமல் இருந்தால் ஆனந்தம் மற்றும் ஞான ஒளியாகத் திகழலாம்.

தீபாவளி ஞான ஒளி பிறக்கும் கொண்டாட்டம். அது தீமை அழிந்து நன்மையின்  வெற்றியையும், இருள் அகன்று ஒளி ஏற்படுவதையும், அறியாமையின் மீது  அறிவின் வெற்றியையும் கொண்டாடுகிறது. இந்த நாளில் வீடுகளை அலங்கரிப்பது மட்டுமின்றி, வாழ்க்கை பற்றிய இந்த ஆழமான உண்மையை வெளிப்படுத்தவும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஒவ்வொரு இதயத்திலும் அன்பு, அறிவொளி என்னும் விளக்கை ஏற்றி ஒவ்வொரு முகத்திலும் புன்னகையை எடுத்து வாருங்கள்.

ஒவ்வொரு மனிதருக்கும் சில நல்ல குணங்கள் உள்ளன. நீங்கள் ஏற்றும் ஒவ்வொரு விளக்கும் இதை அடையாளப்படுத்துகிறது. சிலருக்கு பொறுமை, சிலருக்கு அன்பு, சிலருக்கு வலிமை, சிலருக்கு தயாளம், வேறு சிலருக்கு அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் திறமை இருக்கும். உங்கள் உள்ளுறைந்திருக்கும் பண்புகள் விளக்கைப் போன்றவை. ஒரேயொரு விளக்கை மட்டும் ஏற்றுவதுடன் திருப்தியடைந்து விடாதீர்கள். அறியாமை என்னும் இருளை அகற்ற ஆயிரம் ஆயிரம்  விளக்குகளை ஏற்றுங்கள். உங்களுக்குள் ஞான விளக்கேற்றி மெய்யறிவினை அடைந்து உங்கள் இருப்பின் அனைத்து அம்சங்களையும் அடையுங்கள். அவற்றின் விழிப்படைந்த ஒளியே தீபாவளி ஆகும்.

மற்றொரு ஆழமான அடையாளம் பட்டாசுகளாகும். வாழ்க்கையில் அநேகமுறைகள் நீங்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் உணர்ச்சிகள், விரக்தியில் கோபங்கள் ஆகியவற்றை வெடித்துத்தள்ள காத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகள் ஆசைகள், வெறுப்புக்கள், துவேஷங்கள் ஆகியவற்றை அடக்கி வைக்கும்போது அவை வெடிக்கும் நிலையை அடைகின்றன. பழங்கால மக்கள் வெடிகள் வெடிப்பதன் மூலம் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் உணர்ச்சிகளை வெளியேற்றுவது என்னும் மனோதத்துவ பயிற்சியைக் கையாண்டிருக்கின்றனர். வெளியே வெடிக்கும் வெடியைப் பார்க்கும் போது அதே போன்றொதொரு உணர்ச்சியை உங்களுக்குள் உணருகின்றீர்கள். பட்டாசுகள் வெடிக்கும் போது அதிக அளவு ஒளி தோன்றுகிறது. உணர்ச்சிகள் வெளியேறும்போது அமைதி தோன்றுகிறது.

அடக்கி வைக்கப்பட்டிருக்கும் உணர்ச்சிகள் வெளியேறும் வரையில் உங்களுக்குள் மலரும் புதுமையை உணர முடியாது. தீபாவளி என்பது நிகழ் தருணம், கடந்த கால வருத்தங்களையும், வருங்காலத்தைப் பற்றிய கவலைகளையும் விட்டு விட்டு நிகழ் தருணத்தில் வாழுங்கள். பரிசுகள் அளிப்பதும், இனிப்புக்கள் வழங்குவதும்  கடந்த கால கசப்பை வெளியேற்றி வருங்காலத்தில் நட்பினை புதுப்பித்துக் கொள்வதைக் காட்டும் ஓர் அடையாளத்தைக் குறிப்பிடுகின்றன. எந்தக்  கொண்டாட்டமும் சேவா எனும் உணர்வின்றி முழுமை அடைவதில்லை.

தெய்வத்திடமிருந்து நாம் அடைவதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கொடுப்பதில்தான் நாம் பெறுகிறோம். அதுவே உண்மையான கொண்டாட்டம். கொண்டாட்டம் என்பது அனைத்து வேறுபாடுகளையும் தவிர்த்து ஆத்மாவின் மகிமையில் திளைத்திருப்பதேயாகும். சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு வரும் அறிவொளி பெறவேண்டும். ஆனந்தமும் ஞானமும் பரவ வேண்டும். அது அனைவரும் ஒன்றிணைந்து மெய்யறிவுடன் கொண்டாடும் போதுதான் நிகழும்.

ஆண்டு முழுவதும் நடந்த அனைத்து சண்டைகள், எதிர்மறைகள் ஆகியவற்றை மறந்து விட்டுக் கொண்டாடுவதே தீபாவளி. நீங்கள் பெற்ற மெய்யறிவுக்கு தீபமேற்றி புதிய ஆரம்பத்தை வரவேற்பதாகும். மெய்யறிவு மலரும்போது அது கொண்டாட்டத்துக்கு வழி வகுக்கிறது. பெரும்பாலும் கொண்டாட்டங்களில் நீங்கள் கவனத்தை அல்லது விழிப்புணர்வை இழந்து விடக்கூடும்.

கொண்டாட்டங்களுக்கிடையே  விழிப்புணர்வினை பராமரித்துக் கொள்ள பழங்கால முனிவர் கள் பூஜைகள்  மற்றும் புனிதத்துவத்தை எடுத்து வந்திருக்கின்றனர். அக்காரணத்தினால் தீபாவளி பூஜை செய்யும் காலமும் ஆகிறது. ஆன்மிக அம்சங்கள் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு ஆழத்தை ஏற்படுத்துகின்றன. எந்தக் கொண்டாட்டமும் ஆன்மிகத்துடன் இணைந்திருக்க வேண்டும்; ஏனெனில் ஆன்மிகமற்ற கொண்டாட்டத்தில் ஆழம் இருக்காது.

மெய்யறிவிலில்லாதவனுக்குத் தீபாவளி ஆண்டுக்கொரு முறைதான் வருகிறது. ஆனால் மெய்யறிவாளனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் தீபாவளியே !

இந்த தீபாவளியை மெய்யறிவுடன் கொண்டாடுங்கள். சமுதாயத்திற்கு உழைக்க ஒரு சங்கல்பம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இதயங்களில் அன்பெனும் விளக்கேற்றுங்கள். உங்கள் இல்லங்களில் மிகுதியான வளம் எனும் விளக்கேற்றுங்கள். பிறருக்கு உதவும் கருணையெனும் விளக்கேற்றுங்கள். அறியாமை எனும் இருளகற்ற அறிவு எனும் விளக்கேற்றுங்கள். இறைமை நமக்கு  வழங்கிய  மிகுதிகள் அனைத்திற்கும் நன்றியெனும் விளக்கேற்றுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com