தீபாவளி... செம ஜாலி!

பண்டிகைகள் எப்போதுமே குதூகலமானவை. எல்லாமே கொண்டாட்டம் நிறைந்தவை
தீபாவளி... செம ஜாலி!

பண்டிகைகள் எப்போதுமே குதூகலமானவை. எல்லாமே கொண்டாட்டம் நிறைந்தவை. யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே... என்பது போல், வருவதற்கு முன்னும் சரி, வந்த பிறகும் கூட சரி... அதன் சந்தோஷங்களும் நினைவுகளும் விரிந்து பரந்து நம்முள் வியாபித்திருக்கும். அப்பேர்ப்பட்ட பண்டிகைகளில் முதன்மையானது... தீபாவளித் திருநாள்!

‘ஹூம்... அந்தக் காலம் மாதிரி வருமா?’ என்று அலுப்பும் சலிப்புமாகப் புலம்புவதற்கு இங்கே அநேக விஷயங்கள் இருக்கின்றன. பஸ்சில் துவங்கி மணிபர்ஸில் இருந்து எடுக்கிற கிரெடிட் கார்டு வரை, மழையில் ஆரம்பித்து அடித்துத் துவைத்துக் காயப்போடுகிற வெயில் வரை பலதைச் சொல்லி, புலம்பித் தீர்த்துவிடுகிறோம். இதில் தீபாவளி மட்டும் விதிவிலக்கா என்ன? சொல்லப்போனால்... தீபாவளி கொண்டாட்டங்களின் மாற்றங்களில்தான் ஏகத்துக்கும் வலிகள்!

தீபாவளி வருவதற்கு முன்பே அதாவது ஒருமாதம், ஒன்றரை மாதத்துக்கு முன்பே, ‘உள்ளேன் ஐயா’ என்று தீபாவளிப் பேச்சுகள் ஆஜராகிவிடும். ‘மாப்ளே... போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் தீபாவளியை அசத்திடணும்டா’ என்று கடந்த தீபாவளியைக் கொண்டாடிய விதத்தை பிளாஷ்பேக் ஓட்டுவார்கள் இளைஞர்கள்.

அவர்களின் முன்னே முதல் சவாலாக இருப்பது பட்டாசுகள்தான். ‘மச்சான்... இந்த வருஷம் நம்ம தெருதான் அதிக பட்டாசு வெடிச்சதா இருக்கணும். வெடிச்சுச் சிதறின குப்பையைப் பாத்து, அக்கம்பக்கத் தெருக்காரப் பயபுள்ளைக எல்லாம் மிரண்டுபோயிடணும்’ என்று குப்பை சபதம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் குப்பை சபதம் என்று இதைப் புறந்தள்ளிவிடமுடியாது. பட்டாசு என்பது... வீரதீர, மான அவமான கௌரவப் பிரச்னை!

அம்மா, நாலு தெரு தள்ளி ஒருவீட்டில், பண்டு போட்டிருப்பாள். அங்கிருந்து பட்டாசு வரும். அப்பாவின் நண்பர், ஒரு பேப்பரில் சுற்றி, ‘இந்தாடா கண்ணு. ஜம்முன்னு வெடிச்சு தீபாவளியைக் கொண்டாடு’ என்று பட்டாசுகளைத் தருவார். முன்னதாக, துப்பாக்கியும் கேப்புமாகத் திரிவார்கள் குட்டிப்பையன்கள். ‘டொப்புடொப்பு’ எனும் சத்தம், எங்கு பார்த்தாலும் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் இப்போது, கம்ப்யூட்டரையும் செல்போனையும் ஆன் செய்து, கலர்கலராய், விதம்விதமான சத்தங்களுடன் ‘சும்மாங்காச்சுக்கும்’ வெடிப்பதில் லயிக்கிறார்கள் இன்றைய இளந்தாரிப் பசங்க!

யானை வெடி, லட்சுமி வெடி, சரவெடி, ஒத்தைவெடி, குருவி வெடி, புஸ்வாணம், பாம்பு மாத்திரை என்று காலை, மாலை, இரவு என்று வெடிப்பதற்கு வசதியாக ஏகப்பட்ட வெரைட்டி வெடிகள் இருக்கும். அதிகாலைப் பொழுதில், சரவெடியைப் போடுவதுதான், ஊருக்கான திருப்பள்ளியெழுச்சி. எல்லோரும் எழுந்து விடுவார்கள். அக்டோபரில் ஆரம்பிக்கிற வெடி கொஞ்சமாக ஆரம்பித்து, தீபாவளி சமயத்தில் விஸ்வரூபமெடுத்து, கார்த்திகை தீபத் திருவிழா வரைக்கும் எல்லை பரப்பி இருக்கும்!

தீபாவளிக் கொண்டாட்டத்தின் முக்கியமான பாகம்... துணிமணிகள்தான்! இத்தனைக்கும் கட்டம் போட்ட சட்டை, கோடு போட்ட சட்டை, பூப்போட்ட சட்டை, ப்ளெய்ன் சட்டை... அவ்வளவுதான். அப்பாவும் அம்மாவும் கிளம்பி டவுனுக்குப் போய்விட்டு வந்தால், அவர்கள் வரும் வரை தூக்கம் வராது. குட்டிப் போட்ட பூனையாகச் சுற்றிச் சுற்றி வருவார்கள்.

அடுத்து டெய்லர் கடை. கடை முழுக்க, கடையின் ஷோகேஸ் முழுக்க, கொடி முழுக்க சட்டையும் பேட்டையுமாய் இருக்கும். ‘என்ன இந்த தடவை லேட்டு. ஊருக்கெல்லாம் போகலைதானே. முதநாள் தந்தா போதும்தானே’ என்று டெய்லர் மாமா, துணியைக் கேட்டு வாங்கி, அளந்து, அளவெடுத்து வைத்துக் கொள்வார். பிறகு அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் வரும்போதெல்லாம் கண்கள், ஏக்கமும் காதலுமாய் கடையைத் துழாவும். ‘நம்ம டிரஸ் தைச்சாச்சா’ என்று நோட்டமிடும். டெய்லர் மாமா இல்லையென்றால், ‘அண்ணே... நம்ம டிரஸ் தைச்சாச்சாண்ணே’ என்று உதவியாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும், தீபாவளிக்கு முதல்நாள்... நள்ளிரவில் கடையிலேயே உட்கார்ந்து, கையோடு வாங்கிச் சென்று விடிந்ததும் ஆடைக்கு மஞ்சள் குங்குமமிட்டு, உடுத்திக் கொள்வதும் செம கிக்கான விஷயங்கள்!

ஆனால் இன்றைக்கு துணிக்கடை இருக்கிறது. ரெடிமேடு உலகமாகிவிட்டது. ஷோரூமில், டிரெஸ்ஸிங் அறை இருக்கிறது. அங்கே ஆடையை உடுத்திப் பார்த்துத்தான் வாங்குகிறோம். எப்படியும் நாம் போட்டுப் பார்த்தது போலவே, குறைந்தது நூறுபேராவது போட்டுப் பார்த்திருப்பார்கள். தீபாவளி டிரஸ் த்ரில்லே இன்றைக்கு இல்லாமல் போய்விட்டது.

அதேபோல், தீபாவளி பட்சணங்கள். ஒருமாதத்துக்கு முன்னதாகவே அம்மா தயார் செய்யத் துவங்கிவிடுவாள். வீட்டு உள் அறையில் ஒருபக்கம் புத்தாடைகளின் நறுமணம், இன்னொரு பக்கம் பட்டாசுகளின் கந்தக வாசம், சமையலறையில் பட்சணங்களின் மணம்... என வீடே மணத்துக் கிடக்கும். முறுக்கு, தேன்குழல், ஓமப்பொடி, அதிரசம், ரவா லாடு, மைசூர்பாகு என அம்மாவின் அன்பெல்லாம் பட்சணமாக உருப்பெற்று தூக்குவாளியில் நிறைந்திருக்கும். அம்மா வெளியே போயிருக்கும் வேளையில், அப்பாவுடனோ அக்காவுடனோ கூட்டு வைத்துக் கொண்டு, தீபாவளி வருவதற்கு முன்பாகவே, ரெண்டு லாடும் நாலு முறுக்கும் லவட்டித் தின்பதெல்லாம்... உலக மகா வெற்றி. சந்தோஷம். ஆனால் இன்றைக்கு முக்கால்வாசி வீடுகளில், கடைப் பலகாரங்கள்தான். கடையில் இருந்து டப்பாடப்பாவாய் கிலோகிலோவாய் வாங்கி வைத்தாலும் சாப்பிடுவதற்கு இந்தக் கால பசங்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. இவர்களுக்கு குர்குரேவும் லேஸூமே போதுமானதாக இருக்கிறது. ஹூம்... என்னத்தச் சொல்ல!

நிறைவாக... தீபாவளி லேகியம் சாப்பிடுகிறார்களோ இல்லையோ... தீபாவளி ரிலீஸ் படத்தை, தீபாவளியன்று பார்த்தால்தான் பண்டிகையும் கொண்டாட்டமும் முழுமை பெறும்.

இப்போது செல்போன் வந்துவிட்டது. அதில் நெட் கனெக்ஷன் வந்துவிட்டது. அதைக் கொண்டு ஆப்ஸ்... டௌன்லோடு செய்துகொள்ளலாம். அதிலேயே புதுப்பட டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம். டிக்கெட் முடிந்துவிட்டதா... நோ ப்ராப்ளம் என்று தோள் குலுக்கி, டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்கிறார்கள் இளைஞர்கள்.

ஆனால் அன்றைக்கு விஷயமே வேறு. தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வருகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள, முதலில் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே பேப்பர் பார்க்கவேண்டும். எந்தந்த தியேட்டரில் என்னென்ன படங்கள் வருவதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ‘இன்று முதல் ரிசர்வ் செய்யப்படுகிறது’ என்று அறிவிப்பை, அதிகாலையில் பார்த்த அடுத்த அரைமணி நேரத்தில், தியேட்டர் வாசலில் நிற்பார்கள்.

அங்கே மிக நீண்ட க்யூவில், நமக்கு அண்ணன்களெல்லாம் நின்று கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட, நாலுமணி நேரம் காத்திருந்து, கவுன்டருக்குள் கைவிடும் போது, ‘தீபாவளிக்கு அடுத்த நாள்தான் டிக்கெட் இருக்கு. அதுவும் நைட் ஷோவுக்கு’ என்பார்கள். வேறு வழியில்லாமல், குலசாமியை கோபித்துக் கொண்டு, டிக்கெட் வாங்கிய அரைகுறை சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்து, தீபாவளியன்று சுமாரான படத்தை சூப்பராக நண்பர்களுடன் பார்த்துவிட்டு, மறுநாள்... மாலையில் இருந்தே அப்பாவிடம் ‘நைட் ஷோவுக்குதாம்பா கமல் படத்துக்கு டிக்கெட் கிடைச்சிச்சு’ என்று சொல்லி, பர்மிஷன் வாங்குவதற்குள் அடுத்த தீபாவளியே வந்தாலும் வந்துவிடும்.

  ஆக... தீபாவளி எப்போதுமே செம ஜாலி!

- வி.ராம்ஜி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com