தொலைக்காட்சியை மூடுங்கள்; குடும்பத்துடன் கொண்டாடுங்கள்!

நம் மகிழ்ச்சியை திசை திருப்பும் தொலைக்காட்சி பெட்டியை ஒரு நாளைக்கு மூடி வையுங்கள். உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொலைக்காட்சியை மூடுங்கள்; குடும்பத்துடன் கொண்டாடுங்கள்!


ஒரு காடு. ஒரு காகம். தனது குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.

‘காகமே! ஹேப்பி தீபாவளி', என்று ஒரு குரல் கேட்டது.

தன் கூட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தது காகம். வெளியே நின்று கொண்டிருந்தது ஒரு கழுகு.

‘காகமே! உனக்கும் உன்னுடைய குஞ்சுகளுக்கும் தீபாவளி வாழ்த்துகள்', என்றது கழுகு.

பதிலேதும் பேசாமல் அமைதியாக நின்றது காகம்.

‘பயப்படாதே. இன்று தீபாவளி. ஆகையால் நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யமாட்டேன். நாம் எல்லாம் சேர்ந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம்', என்றது கழுகு.

காகத்திற்கும் குஞ்சுகளுக்கும் மகிழ்ச்சி. தீபாவளி வாழ்த்துகளை பறிமாறிக்கொண்டன.

சற்று நேரத்தில் ஒரு பூனை வந்தது. அதுவும் காகத்திற்கும் அதன் குஞ்சுகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தது.

மரத்தடியில் ஒரு சாது அமர்ந்திருந்தார். நடப்பவற்றையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

‘காகமே! எல்லோரும் தங்கள் பகைமையை மறந்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். நீயும் கொண்டாடு', என்றார் சாது.

யோசித்தது காகம்.

‘உனக்கு பயமாக இருந்தால் என்னுடன் வா. உங்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறேன்', என்று சொல்லி காகத்தையும், அதன் குஞ்சுகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

வழியில் கொக்குகள் மீன்களுடன் விளையாடிக்கொண்டிருந்தன. முயல்கள், புலியுடன் விளையாடிக்கொண்டிருந்தன. எலிகள் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்தன. நடப்பவற்றை பார்த்த காகத்தின் குஞ்சுகள் மகிழ்ச்சியடைந்தன. எல்லா விலங்குகளுடனும் சேர்ந்து விளையாடின.

சில மணி நேரத்திற்குப் பிறகு காகத்தை அதன் கூட்டில் விட்டார் சாது.

‘சாதுவே! மிக்க நன்றி. காட்டில் எல்லா இடங்களுக்கும் சென்றோம். பார்த்தோம். மகிழ்ந்தோம். மனத்துக்குள் ஆயிரம் வெறுப்புகள் இருந்தாலும், ஒவ்வொருவரும் பகைமையை மறந்து பண்டிகையை கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று மட்டுமில்லாமல் ஒவ்வொரு நாளும் இதை போலவே இருந்தால் கவலை என்பதே இருக்காது. மற்றவர்களைப் பார்த்தவுடன் பயந்து ஓடவேண்டிய அவசியம் இருக்காது', என்று சொன்னது குஞ்சு.

அமைதியாக சிரித்தார் சாது. மீண்டும் பேசியது குஞ்சு.

‘இவ்வளவு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் எங்களுக்கு அடிக்கடி தொந்தரவு தரும் கருநாகத்தை காணவில்லையே! அது தீபாவளியை கொண்டாடவில்லையா?' என்று கேட்டது குஞ்சு.

சாது பேசினார்.

‘நீ சொன்னது போல ஒவ்வொரு நாளும் இந்த நாளைப் போலவே இருந்தால் மகிழ்ச்சியும் அமைதியும் எல்லா இடங்களிலும் இருக்கும். போட்டி, பொறாமை நம்மை வட்டமிடாது.

மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் கருநாகத்தைப் பற்றி நீ ஏன் நினைக்கிறாய்? இல்லாதவர்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறாய்? கருநாகமும் இணைந்து கொண்டாடினால் நன்றாக இருக்கும் என்று நீ நினைக்கலாம், ஆனால் அது அப்படி நினைக்கவில்லையே! அதனால், இருக்கின்றவர்களோடு, இருக்கின்ற சூழலை கொண்டாடு. இந்த நாள், நல்ல நாள். அடுத்த வினாடி எந்த மாதிரியான ஆபத்து வரும் என்ற கவலை இன்று உங்களுக்கு இல்லை. இதே சூழல் நாளைக்கு உங்களுக்கு இருக்காது. அதுமட்டுமில்லாமல் இந்த கொண்டாட்டங்கள் இன்னும் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்துவிடும். அடுத்த தீபாவளிக்கு யார் எங்கிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. அதனால், மீதமிருக்கிற நேரத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். குறிப்பாக யார் வாழ்த்து சொல்லவில்லை என்று கணக்கெடுக்காதீர்கள். வாழ்த்துபவர்களுடனும், நலம்விரும்பிகளுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளுங்கள்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

வசதி இருப்பவன், இல்லாதவன், படித்தவன், படிக்காதவன், புத்திசாலி, முட்டாள், பெரிய மனிதன், சிறியவன் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் கொண்டாடும் நாள் தீபாவளி. நம் மீது அக்கறை செலுத்துபவர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நாள். கஞ்சியும், கேக்'கும் இனிக்கும், கொழுக்கட்டை கசக்கும் என்று சொல்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். தீபாவளி என்று சொன்னாலும் சரி, விடுமுறை நாள் என்று சொன்னாலும் சரி, கொண்டாடுங்கள். “இந்திய தொலைக்காட்சியில் முதன் முறையாக” என்று சொல்லி நம் மகிழ்ச்சியை திசை திருப்பும் தொலைக்காட்சி பெட்டியை ஒரு நாளைக்கு மூடி வையுங்கள். உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

- சாது ஸ்ரீராம் (saadhusriram@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com