கோபம்! ஆத்திரம்! மன அழுத்தம்!

தற்போது சமூகத்தில் பள்ளி செல்லும் குழந்தையிடமிருந்து, நாட்டை ஆளும் அதிகாரிகள்
கோபம்! ஆத்திரம்! மன அழுத்தம்!

தற்போது சமூகத்தில் பள்ளி செல்லும் குழந்தையிடமிருந்து, நாட்டை ஆளும் அதிகாரிகள் வரை பரவலாக பேசப்படும் ஒரே வார்த்தை மன அழுத்தம்.

மனம் என்பது கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்களை நிகழ்த்தவல்லது, ஆனால் சிற்சில காரணங்களால் நமக்கு நாமே மன அழுத்தம், பாதிப்பு ஆகியவைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். மன அழுத்தத்தின் காரணம், அதற்கானதீர்வு – இவற்றை இக்கட்டுரையின் மூலம் அறிந்துகொள்வோம்.

மக்கள் இன்று பலவிதங்களிலும் மன அழுத்தத்திற்கும் பதட்டத்திற்கும் ஆளாகிறார்கள். பழங்காலத்தில் அறியாமை என்ற பெயரில் அழைத்ததை இன்று அழுத்தம், பதட்டம் என்ற புதிய பெயர்களில் அழைக்கிறோம். மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நிர்வகிப்பதைப் பற்றி நிறையப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நீங்கள் நிர்வகிக்க வேண்டும்? உங்கள் சொத்துக்களை நீங்கள் நிர்வகிக்க வேண்டும், உங்கள் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும், உங்கள் தொழிலை நீங்கள் நிர்வகிக்க வேண்டும் என்பதெல்லாம் எனக்குப் புரிகிறது. ஆனால் எதற்காக உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க விரும்புகிறீர்கள்? மன அழுத்தம் நீங்கள் செய்யும் செயலால் நேர்வதல்ல. உங்களையே சரியாக நிர்வகிக்கும் திறமை உங்களுக்கு இல்லாததால் நேர்வது. உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள், சக்திநிலை இவற்றை எப்படி வைத்துக் கொள்ளவேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளும் திறன் இல்லாததால் தான் மன அழுத்தமும் பதட்டமும் வருகின்றன. உங்களை நலவாழ்வில் தக்க வைத்துக் கொள்ளும் திறனோ, மன அழுத்தத்திற்குக் காரணமான சக்திநிலைகளை நிர்வகிக்கும் திறனோ உங்களிடம் இல்லை.

இதற்கு தீர்வு என்ன? தியானம் என்பது இதற்கான நிவாரணம் மட்டுமல்ல; உங்களுக்குள் மனஅழுத்தம் போன்ற விஷயங்களே இல்லாத பரிமாணத்திற்குள் உங்களை எடுத்துச் செல்லும் மகத்தான வாய்ப்பு. நான் ஏற்கனவே சொன்னதைப் போல இந்த மனஅழுத்தம் என்பது முன்காலத்தில் அறியாமை என்று அழைக்கப்பட்டது. ஒருவர் தனக்குள் தெளிவாய் இருக்கும்போது மனஅழுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தியானம் என்பது ஒரு செயலல்ல; இது ஒரு தன்மை. உங்கள் உடலையும் மனதையும் உணர்ச்சிகளையும் சக்தியையும் ஒரு குறிப்பிட்ட நிலையில் பக்குவப்படுத்தும் போது தியானம் தானாகவே நிகழ்கிறது. இது எப்படியென்றால், நீங்கள் மண்ணைப் பக்குவப்படுத்தி தேவையான நீரையும் உரத்தையும் அளித்து சரியான விதையை விதைத்தால், விதை வளர்ந்து மலர்களையும் பழங்களையும் வழங்கும். நீங்கள் ஆசைப்பட்டதால் மரத்தில் மலர்களும், பழங்களும் வரவில்லை. அவைவருவதற்குத் தேவையான சூழலை உருவாக்கியதால் மட்டுமே வருகின்றன. அதேபோல உடல், மனம், உணர்ச்சிகள், சக்திநிலை இவற்றைக் கொண்ட ‘நீங்கள்’ என்ற தன்மையின் நான்கு பரிமாணங்களுக்கும் தேவைப்படும் சூழலை உங்களுக்குள் உருவாக்கினால் தியானம் என்பது இயல்பாகவே உங்களுக்குள் மலரும். இது ஒரு குறிப்பிட்ட தன்மை, உங்களுக்குள்ளேயே நீங்கள் அனுபவிக்கக் கூடிய நறுமணம் அது. தியானம் நீங்கள் செய்யும் செயல் அல்ல.

ஒருமைநிலை என்பது உருவாக்கக் கூடிய ஒன்றல்ல. ஒன்றுபட்டு இல்லாத நிலையை, ஒத்திசைவு இல்லாத நிலையை நாம் தான் உருவாக்கியிருக்கிறோம். ஏனென்றால் நமது உடல் இயக்க அமைப்புகளை எப்படிக் கையாள்வது என்பது நமக்குத் தெரியவில்லை. ஒருவர் தனக்குள் தெளிவாய் இருக்கும்போது மனஅழுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நமது உடலும், உணர்வுகளும், சக்திகளும் எப்படி நடைபெறுகின்றன என்பது நமக்குப் புரியவில்லை. கண்களை மூடிக் கொண்டு அவற்றைக் கையாள நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். யோகா என்பது மிகுந்த விழிப்புணர்வோடும், புரிதலோடும் கையாளும் ஒரு முறை. எனவே ஒருமைநிலை என்பதும், ஒத்திசைவாய் இருப்பது என்பதும் நாம் உருவாக்க வேண்டும் என்பதில்லை. வாழ்க்கை என்பதே ஒத்திசைவாய்தான் இருக்கிறது. உயிர்த்தன்மை என்பதே அப்படிப்பட்டதுதான். பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்துமே அப்படித்தான் இருக்கிறது. நீங்களோ அல்லது நானோ பிரபஞ்சத்திலிருந்து தனியாக வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. என்னுடைய உள்மூச்சு, தாவரங்களுக்கு வெளிமூச்சு. தாவரங்களின் வெளிமூச்சே என்னுடைய உள்மூச்சு. இப்படி அனைத்துமே மிகச்சரியான ஒத்திசைவுடன் இருக்கின்றன. மனிதனின் மனமும், உணர்ச்சிகளும் மட்டும்தான் ஒத்திசைவாய் இல்லாததற்கான காரணங்களாய் இருக்கின்றன. ஏனென்றால் அவன் இவற்றோடு இணக்கமாய் இல்லை. எனவே யோகா என்பதே எல்லாவற்றோடும் இணக்கமாய், ஒத்திசைவாய் இருக்கும் நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த ஒத்திசைவான சூழ்நிலைக்கு யோகா காரணமல்ல. உயிர்த்தன்மையே அப்படித்தான் இருக்கிறது. படைப்பே அப்படித்தான் இருக்கிறது. அவற்றோடு ஒத்திசைவாய் இருக்கும்போது நீங்களும் அப்படித்தான் இணக்கமாய் இருக்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் நீங்கள் இணக்கமாய் இல்லை என்றே பொருள். இணக்கமாய் இருப்பதையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் நாம் தேடிக் கண்டுபிடிக்கவோ, உருவாக்கவோ தேவையில்லை. இவையெல்லாம் நமக்குள் இயல்பாகவே இருக்கும் தன்மைகள். ஆனால் இவற்றை இயல்பற்ற நிலைகளாக நாம் உருவாக்கிவிட்டோம். யோகா என்பது நாம் இயல்பான தன்மைக்கு திரும்பி வருவதற்கான ஒரு கருவி, அவ்வளவுதான்.

இப்போது அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக விளங்கும் இரண்டு வார்த்தைகள் stress Management. நிர்வாகம் பற்றி பேசும் எல்லா இடங்களிலும், மன அழுத்தத்தை எப்படிக் கையாள்வது என்பது பற்றி சொல்லித் தர, மனவியல் நிபுணர்கள் தலையெடுத்துவிட்டார்கள். வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வசதிகளைப் பெருக்கிக் கொள்வது, செத்த கிளிக்குத் தங்கக் கூண்டு செய்து கொடுப்பது போல! உங்கள் தொழிலை, குடும்பத்தை, செல்வத்தையெல்லாம் நிர்வகிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள விரும்புவதில் அர்த்தம் இருக்கிறது. மன அழுத்தம் என்பது விட்டுத் தொலைக்க வேண்டிய விஷயம் அல்லவா? அதைக் கூடவே வைத்துக் கொண்டு நிர்வகிப்பது எப்படி என்று எதற்காகக் கற்றுக் கொள்ள வேண்டும்?

வளர்ச்சி… பணம்… நவீன வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது தவிர்க்கவே முடியாதது என்றாகிவிட்டது. காரணம், வளர்ச்சி என்றாலே அதிக செல்வம் என்று நினைத்துவிட்டதால் வந்த குழப்பம் இது. வாழ்வின் மற்ற பல முக்கிய அம்சங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பணமே மனிதனை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆபத்து இது. நிர்வாகம் என்றாலே, அதைப் பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தும் அவலத்தால் வந்த நிலை இது. யார் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? ஒரு வாகனத்தை ஓட்டுவது எப்படி என்று முதலில் உங்களுக்குத் தெரிந்திருந்தால்தானே, அதை நீங்கள் அடுத்தவருக்குச் சொல்லித் தர முடியும்?

நன்றி : ஈஷா மையம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com