கொல்கத்தா டாக்ஸி டிரைவரின் செயற்கரிய செயல்: டாக்ஸி ஓட்டி சம்பாதித்த பணத்தில் ஏழை மாணவர்களுக்காக ஒரு விடுதி, இரு பள்ளிகள்!

ஜலாலுதீன் தனது டாக்ஸியில் என்ன எழுதி வைத்திருக்கிறார் தெரியுமா? “இந்த டாக்ஸியின் வருமானம் முழுதும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படுகிறது. எனவே தயவு செய்து இந்த டாக்ஸியின் மீது யாரும் புகார் அ
கொல்கத்தா டாக்ஸி டிரைவரின் செயற்கரிய செயல்: டாக்ஸி ஓட்டி சம்பாதித்த பணத்தில் ஏழை மாணவர்களுக்காக ஒரு விடுதி, இரு பள்ளிகள்!

காஸி ஜலாலுதீனுக்கு வயது 65... ஆம் அரசு ஊழியராக இருந்திருந்தால் இந்நேரம் ரிடையர்மெண்ட் வாங்கி இருப்பார். ஆனால் விதி நன்றாகப் படித்துக் கொண்டிருந்த ஜலாலுதீனை இரண்டாம் வகுப்புக்கு மேல் படிக்க விடாமல் பள்ளிக்கூடங்களிலிருந்து வறுமையின் கோரப் பிடிகளுக்கு துரத்தி அனுப்பியது. ஜலால் இரண்டாம் வகுப்பிலிருந்து வெளியேறும் போது முதல் ராங்க் மாணவனாம்... அதைச் சொல்லும் போது அவர் முகத்திலும், குரலிலும் கல்வியின் மீதான தீராத தாகம் பொங்கி வழிகிறது. கொல்கத்தா சுந்தரவனத்த்திலிருக்கும் ஜெய் நகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்காக பரபரப்பாக டாக்ஸி ஓட்டிக் கொண்டிருந்தவர் அவர்களை பள்ளியில் இறக்கி விட்ட பின் கிடைத்த சின்னஞ்சிறூ ஓய்வில் பகிர்ந்து கொண்ட தகவல்கள்...

“என்னைப் போலவே ஏழ்மையைச் சமாளிக்க முடியாமல் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாதவர்கள் இந்த சுந்தரவனத்தில் அதிகமிருக்கிறார்கள். அவர்களுக்கு கல்விக்கு மட்டுமல்ல தங்கிப் படிக்க வீடுகளுக்கும் தான் பற்றாக்குறை. அம்மாதிரியான ஏழைக் குழந்தைகளை காணும் போதெல்லாம் எனக்குத் தோன்றும் நான் ஒரு பள்ளியை இவர்களுக்காகவே தொடங்கினால் என்ன? என்று; ஆனால் எண்ணம் தோன்றிய போது பள்ளி தொடங்க என்னிடம் பணம் இல்லை.

ஆரம்பத்தில் இந்த கொல்கத்தா சுந்தரவனத் தெருக்களிலும், சாலைகளிலும் நான் என் சிறு வயதில் பிச்சையெடுத்துத் திரிந்திருக்கிறேன். பசி வாட்டும் போது வேறெதுவும் செய்வதற்கு இல்லை. ஆனால் அந்த நிலை நீடிக்கக் கூடாது என நினைத்தேன். எனவே ரிக்ஸா ஓட்டப் பழகினேன். சில காலம் ரிக்ஸா டிரைவராகக் கழிந்தது. அதன் பின் தான் நான் டாக்ஸி டிரைவர் ஆனேன். ஓய்வு நேரங்களில் டிரைவிங் கற்றுக் கொள்ள ஆசைப்படுவோருக்கு கற்றுத் தரும் வேலையைச் செய்தேன்.

இப்படித்தான் 19980 ல் டாக்ஸி ஓட்டியதில் கிடைத்த பணத்தை வைத்து சொந்தமாகக் கொஞ்சம் நிலம் வாங்கினேன். அந்த நிலத்தில் என் நெடுநாள் கனவான பள்ளி ஆரம்பிக்கும் முயற்சியை செயல்படுத்தினேன். அந்தப் பள்ளிக்கான முழுச் செலவும் நான் டாக்ஸி ஓட்டுவதால் கிடைக்கும் தொகை, சில நல்ல உள்ளங்கள் தரும் டொனேஷன்கள், மூலமாக மட்டுமே நிறைவேற்றப்படுகிறது. ஏழைக் குழந்தைகளின் நலனுக்கான எனது பள்ளிகளுக்கு அரசு உதவி பெறத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன், ஆனால் அது இன்னும் கிடைத்தபாடில்லை. அதற்காக நான் ஆசைப்பட்டு தொடங்கிய பள்ளியின் இயக்கம் நின்று போய் விடுமா என்ன?

எனக்கு டாக்ஸி ஓட்டுவதில் தினசரி வருமானமாக 450 ரூபாய் கிடைக்கும். சாப்பாடு, டாக்ஸி மெயிண்டனன்ஸ் செலவுகள் தவிர்த்து சொல்கிறேன். இந்தத் தொகையை முழுக்க நான் பள்ளியின் செலவுகளுக்காகத் தான் பயன்படுத்துகிறேன். இதற்கு என் மனைவியும் மனப்பூர்வமாக ஒத்துழைப்புத் தருகிறார்.

அதனால் தான் என்னால் இரண்டாவதாகவும் ஒரு பள்ளியை தொடங்கி நடத்த முடிந்தது. அதோடு நகரத்தை விட்டு விலகி இருக்கும் புறநகர் சார்ந்த ஏழை மாணவர்களுக்கு இயற்கைச் சீற்றங்களின் போது இங்கே நகருக்குள் வருவதற்கான போக்குவரத்து வசதிகள் அடைபட்டு விடும். அம்மாதிரியான நேரங்களில் நான் என் மாணவர்களுக்காக டாக்ஸி ஓட்டுவேன். அது தவிர அனாதைக் குழந்தைகளுக்காக ஒரு விடுதியும் நடத்துகிறேன்”. என்றார்.

ஜலாலுதீனின் இரு பள்ளிகளும் கொல்கத்தாவிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுந்தரவனத்தின் ஜெய்நகர் பகுதியில் இயங்கி வருகின்றன. முதலில் தொடங்கிய பள்ளிக்கு சமீபத்தில் தான் ஜலாலுதீன் 10 ஆம் வகுப்பு போர்டு தேர்வுகள் எழுத அரசு அங்கீகாரம் பெற்றாராம். முதல் பள்ளிக்கான நிலம் ஜலாலுதீனின் தன் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கப் பட்டது. ஆனால் சில வருடங்களில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே இடத்தை விஸ்தரிக்க வேண்டியதானது. அப்போது ஜலாலுதீனுக்கு நல்ல மனம் கொண்ட பலர் உதவினர். கொடையாகக் கிடைத்த தொகை மற்றும் நிலத்தை வைத்து பள்ளியை பெரிதாக்கினார்.

இரண்டாவது பள்ளிக்கான நிலமும் கூட இப்படி சமூக அக்கறை கொண்ட நல்ல உள்ளங்களின் நன்கொடைகள் மற்றும் தனது டாக்ஸி வருமானம் மூலமாக கிடைத்த தொகை மூலம் வாங்கப் பட்டது. இன்று ஜலாலுதீனின் பள்ளியில் 25 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். அவர்களில் 21 பேர் பெண்கள். பள்ளிக்கான அத்தனை செலவுகளுக்கும் ஜலாலுதீனின் வருமானம் முழுமையாகச் செலவழிக்கப்படுகிறது. முதலில் ஆரம்பித்த பள்ளி வளாகத்திலேயே ஜலாலுதீனின் குடும்பம் தங்கிக் கொள்வதால் இப்பொதெல்லாம் ஜலாலுதீனுக்கு பள்ளி வேறு, வீடு வேறு என்பதே இல்லாமல் ஆகி விட்டது.

பள்ளிகளைப் பொறுத்தவரை ஜலாலுதீனின் எதிர்பார்ப்புகள்; 

  • அடுத்த கட்டமாக தனது பள்ளிகள் இரண்டுமே; செகண்டரி மற்றும் ஹையர் செகண்டரி பள்ளிகளாக வளர்ச்சி பெற வேண்டும்.
  • முற்றிலும் ஏழை மாணவர்களின் நலன் கருதி மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பள்ளிகளுக்கு எப்பாடு பட்டாவது அரசு உதவிகளைப் பெற வேண்டும்.

இது இரண்டு மட்டுமே ஜலாலுதீனின் எதிர்கால ஆசைகள். 

ஏழைப் பள்ளி மாணவர்களுக்காக இப்படி ஒரு செயற்கரும் செயலைச் செய்து வரும் ஜலாலுதீன் தனது டாக்ஸியில் என்ன எழுதி வைத்திருக்கிறார் தெரியுமா?
“இந்த டாக்ஸியின் வருமானம் முழுதும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படுகிறது. எனவே தயவு செய்து இந்த டாக்ஸியின் மீது யாரும் புகார் அளித்து விடாதீர்கள்” என்பதே அந்த வாசகம். இந்த வித்யாசமான வாசகத்தால் கவரப்பட்டும் பெரும்பாலோர் ஜலாலுதீன் காஸியின் பள்ளிகளுக்கும், விடுதிக்கும் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்க விசயம்.

Image courtsy: google.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com