நீங்கள் குடிக்கும் மது தரமானதா?

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்த குடி, தமிழ்குடி என்ற வாசகம் மட்டுமல்ல..
நீங்கள் குடிக்கும் மது தரமானதா?

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்த குடி, தமிழ்குடி என்ற வாசகம் மட்டுமல்ல.. சங்க இலக்கிய காலத்திலேயே

 “சிறியகட் பெறினே எமக்கீயும்,

 மன்னே பெரியகட் பெறினே

 யாம் பாடத் தாம்

 மகிழ்ந்துண்ணும் மன்னே’

என்று அவ்வை அதியமானை புகழ்ந்து பாடியுள்ளதாக புறநாநூற்றின் 235- ஆவது பாடல்  குறிப்பிடுகிறது.

நாகரிகம் வடித்தலில் தொடங்குகிறது (Civilization begins with distillation) என்றார் நோபல் எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னர். மனித இனம் வளர வளர மதுவும் வளர்ந்துள்ளது . மதுவைத் தவிர்த்து மனித வரலாற்றை அறிய முடியாது . அது ,மனித இனத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது .நெடுங்காலமாக கொண்டாட்டத்தின் அடையாளமாக மட்டுமே மது இருந்து வந்துள்ளது . காலப்போக்கில் மதுவின் பயன்பாடு விரிவடைந்து இன்று நம் சமூக அமைப்பையே மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் ஒன்றாக மாறிவிட்ட சூழல் நாம் வாழும் காலத்தின் அவலம் . மற்ற வரலாற்றைப் போலவே மதுவின் வரலாறும் சுவாரசியமானது தான் .

'நாகரீகமும் வடித்தலும் ஒன்றோடொன்று இணைந்தது ' என ஆதாம் ரோஜர் (Adam Rogers) தன் "Proof: The Science of Booze" நூலில் குறிப்பிட்டுள்ளார். காடு காடாக அலைந்த ஆதிமனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பலனாக நிலையாக வாழ ஆரம்பித்தான். அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊறவிட்டபோது அது புளித்தது தற்செயலாக நடந்த ஒன்று . அது தான் வெறித்தன்மையைக் கொடுத்த முதல் பானமான பீர் . முளைவிட்ட தானியத்தில் தண்ணீரை ஊற்றி ,சுடவைத்து புளிக்க வைத்த போது பீரின் சுவை இன்னும் கூடி வெறித்தன்மையும் அதிகமாகியது.

மது பானம் மட்டுமல்லாது, கஞ்சா, புகையிலை, அபின், ஹெராயின், கசகசா, பாக்கு போன்றவைகளில் இருந்தும் போதை பெறப்பட்டது. உயரமான  தென்னை, பனை, ஈச்சை போன்ற ஒற்றைத்தடி புல்வகை மரங்களில் இருந்து கள் வடிக்கும் முறையும் கண்டறியப்பட்டது மட்டுமல்ல, அதனை செய்வதற்கு என்று சமூகத்தில் சாணார், ஈழவர், நளவர் என சாதிகளையும் உருவாக்கியது, இந்தியாவில் குப்த மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த சாணக்கியர் மதுவை விற்பது அரசின் செயல்களில் ஒன்றாக அறிவித்தை அறிவோம்.

உழைக்கும் மக்களிடம் இருந்து விசுவாசத்தையும், உழைப்பையும் அரசு நிரந்தரமாக பெற வேண்டுமானால் கட்டுப்பாட்டோடு கூடிய மது பழக்கத்தை அரசே பொறுப்பேற்று செய்திட வேண்டும் என அதற்கான விதிமுறைகளை உருவாக்கியவர் சாணக்கியர் ஆவார். (அர்த்தசாஸ்திரம் 2.25 ஆம் அத்தியாயம் 17 முதல் 34 வரை ).மதுவினால் உடல் நலக்கேடு, சமூக கேடு, அரசியல் என பல கேடுகள் விளைவது       இருக்கட்டும். அது எந்த தரத்தில் உள்ளது?

மதுவின் சர்வதேச தரம்

சர்வதேச ஒயின் மற்றும் கொடி அமைப்பு( International Organisation of Vine and Wine) பாரீஸில் 29, நவம்பர்,1924 இல் நடந்த பேச்சுவார்த்தையில் உருவானது தான் சர்வதேச ஒயின் அலுவலகம் (International Wine Office (OIV). ஆனாலும் சட்டபூர்வமாக 3,டிசம்பர்,1927-இல் முழுமையானது. இந்தியா உட்பட 46 நாடுகள் இதில் உறுப்பினராக உள்ளன.

இந்த சர்வதேச அமைப்பு மது தயாரிக்கும் முறை மற்றும் பேக்கிங் பாதுகாப்பு என பல திட்டங்களை வகுத்துள்ளது. இந்த அமைப்பின் கடுமையான  சோதனைகளுக்குப் பின்தான் சர்வதேச சந்தைக்கு மது வருகிறது. உலகளாவிய மதுத்தரத்தின் பக்கத்தில்கூட நெருங்க முடியாது. தமிழகக் 'குடிமகன்கள்’ அதை நினைத்து ஏக்கப் பெருமூச்சு மட்டும் விட்டுக்கொள்ளலாம்.

அது கிடக்கட்டும், இந்திய மதுத்தரம் (Indian standard alcohol specifications) என்று ஒன்று உண்டு. மதுவை இப்படித்தான் தயாரிக்க வேண்டும்; இந்தந்த வஸ்துகள், இந்தந்த விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட வேண்டும்; குறிப்பிட்ட நாட்களுக்கு கொள்கலன்களில் அடைத்து வைத்து இருக்க வேண்டும் என்று எல்லாம் விதிமுறைகள் உண்டு.

மத்திய குறியீடுகள் துறை CMD-II/16:4449 dated 04.10.2010 வெளியிட்டுள்ள ஆல்கஹால் பானங்களுக்கு சான்றளிக்க ஆய்வுக்கான திட்டம் இந்திய தர நிர்ணயம் IS 4449:2005 (நான்காவது சீராய்வு) படி

1.0 ஆய்வுக்கூடம்: இந்திய தரத்திற்கு ஏற்ற சோதனைகளை செய்வதற்கேற்று ஆய்வுக்கூடமானது சரியான உபகரணக்களுடன், பணியாளர்களுடன் இருத்தல் வேண்டும்.

2.2 தர குறியீடு: ஒவ்வொரு ஆல்கஹால் பாட்டில்களிலும் தர குறியீடு குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

5.0 மதுபான ஆலைக்கு வரும் மூலப்பொருள்களும், சரியாக சோதனையிடப்பட்டு, அதற்கெனெ தனி பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்

விஸ்கியின் வகைகள்

மால்ட் க்ரைன் விஸ்கி

1. மால்ட் அல்லது க்ரைன் விஸ்கி மாவு, தானியங்கள் அல்லது அதன் கலவைகளை நொதிக்க வைத்து, வடித்து எடுக்க வேண்டும்.

2. கலவை மால்ட் விஸ்கி 2% ஊறவைத்த மால்ட்டுடன் தானியங்கள் சேர்த்து தயாரிக்க வேண்டும்

3.விஸ்கி IS 6613 –இல் க்ரேடு-I இல் நடுநிலையான ஸ்பிரிட்டிலிருந்து தயாரிக்க வேண்டும்

6.0 திட்ட கட்டமைப்பு : பகுப்பாய்வு, சோதனைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் படி நடத்தப்பட வேண்டும்,மதுபான ஆலை அனைத்து பதிவேடுகளையும் பராமரிக்க வேண்டும்.

6.1 கட்டுப்பாட்டு அலகு : இந்த திட்டத்தின் வசதிக்காக தயாரிக்கப்படும் ஒவ்வொரு மதுபான புட்டியும் ஒரே பட்டியலில்(Batch) இட வேண்டும்

7.0 மதுபானங்கள் IS 4449:2005 தர நிர்ணயப்படி மிக சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட வேண்டும்

இதுவே இந்திய மதுபான ஆய்வு, சோதனை தர நிர்ணயங்களாகும்.

பாட்டிலில் எவ்வளவு மட்டமான மதுவை அடைத்துக் கொடுத்தாலும் மூக்கைப் பிடித்துக்கொண்டு குடித்து விடுவான் என்று இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. இப்படி விதிமுறைகளை மீறுவது சமூக விரோதச் செயல் ஆகும்.

சில ஆலைகள் நொதித்தல், வடித்தல் செயல்முறைகள் இன்றி அப்படியே வேதிப்பொருள்களை அடைத்து வெளியிடுவதாக வரும் தகவல்கள் எல்லாம் அதிர்ச்சியானவை. மது தொழிற்சாலைகள் ஈட்டும் வருமானத்தினை மனதில் வைத்து உலகத்தரத்தை, இந்திய தரத்தை அளிக்க வேண்டியது கடமையாகும்.

C.P.சரவணன், வழக்கறிஞர்  9840052475

மின்னஞ்சல்: sharavanan.cp@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com