காஞ்சனா

பலூன் தாத்தா என்று அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி தாத்தாதான் நடிகை காஞ்சனாவை
காஞ்சனா

பலூன் தாத்தா என்று அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி தாத்தாதான் நடிகை காஞ்சனாவை முதன்முதலில் எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். அவரது பச்சை வண்ண தடித்த பெல்ட்டில் சிறிய சைசில் எப்போதுமிருக்கும் பர்ஸ் ஒன்றில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன், நாகேஷ், முத்துராமன் என்று பெரிய நட்சத்திர நடிகர் பட்டாளம் அணிவகுக்க, அவர்களை தொடர்ந்து நடிகைகள் பத்மினி, சரோஜாதேவி, சாவித்திரி, காஞ்சனா என்று கறுப்பு வெள்ளையில் புகைப்படங்கள் நிரம்பி கிடக்கும். அப்போதெல்லாம் அவர்கள் எல்லோரையும் நான் அறிந்திருக்கவில்லை. நடிகர்களை தெரிந்த அளவுக்கு அவர் பர்சில் குடியிருந்த நடிகைகளை நான் தெரிந்து வைத்திருக்கவில்லை. நான் வளர்ந்த காலத்தில் மீனா, ரம்பா, சிம்ரன் போன்ற நடிகைகளே திரைச் சுருளை ஆக்கிரமித்திருந்தார்கள்.

தெருவிற்கொரு தொலைக்காட்சி மட்டுமே சாத்தியம் என்றிருந்த காலக்கட்டமது. இதனால் காஞ்சனாவையும், ஏனைய பழம்பெரும் நடிகைகளையும் கிருஷ்ணமூர்த்தி தாத்தாவின் புகைப்படங்களில் மட்டுமே என்னால் தரிசிக்க முடிந்தது. அவரது இளம் பிராயத்தில் ரசித்து மகிழ்ந்த எண்ணற்ற திரை நினைவுகளை எங்கள் தெரு பிள்ளைகளிடம் பகிர்ந்துகொள்ளும்போது காஞ்சனாவின் பெயரை உச்சரிக்காமல் இருக்க மாட்டார். இதனாலேயே காஞ்சனா எனும் பெயர் என்னுள் ஆழப் பதிந்துவிட்டது. ஆண்டுகள் பல ஓட, எனது பதினாறாவது வயதில் வீட்டிக்குள் ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி அடியெடுத்து வைத்தது. அதில் நான் பார்த்த முதல் படம் அண்ணாமலை.

கிட்டதிட்ட அந்த வயதில்தான் ‘மறைந்திருந்து பார்க்கும் மயக்கம் என்ன?’ என்று ஆடிய பத்மினியும்,  ‘லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ்’ என்று பாடிய சரோஜாதேவியும், ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ’ என்று பரவசம் கூட்டிய மஞ்சுளாவையும் எல்லாவற்றையும்விட ‘கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம், கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்’ என்று கொஞ்சிய காஞ்சனாவையும் என்னால் பார்த்து ரசிக்க முடிந்தது. அதேவேளையில், எனது வளர் இளம் பருவத்தில் திரையை அலங்கரித்த நடிகைகளுக்கும், அவர்களுக்கும் மிகப்பெரிய இடைவேளை இருப்பதையும் மெல்ல உணரத் துவங்கினேன். குறிப்பாக, சாவித்திரியிடமும், பத்மினியிடமும், காஞ்சனாவிடமும் இயல்பாக வெளிப்பட்ட பாவனைகளும், அசாத்தியமான அழகும், அக்காலத்தில் நடிகைகளுக்கு அவசியப்பட்ட பரதம் மற்றும் நடிப்பில் அவர்கள் தொட்டிருந்த மேதமையையும் இக்காலத்து நடிகைகளால் ஒருபோதும் நெருங்க முடியாது என்று உணரவும் ரொம்பவே சிலிர்ப்பாகவும் அவர்களின் மீதான மரியாதையும் பெருகியது.

‘சபாஷ், சரியானப் போட்டி’ என்று ஒருவர் கர்ஜிக்க, பரதத்தில் வெல்லும் முனைப்புடன் கால் சலங்கை சலசலக்க போட்டிப் போட்டுக் கொண்டு ஆடும் பாடல் காட்சிகள் இப்போது சாத்தியமில்லை என்பதாலேயே கால அடுக்குகளில் சிறைப்பட்டிருந்த அவைகளை தேடிப்பார்ப்பதில் பெரு மகிழ்வுக் கொண்டிருந்தேன். என் விருப்பத்திற்குரிய காஞ்சனாவிடம் ஒருவித பரிதவிப்பும், நாணமும், தாவிப் படரும் விழிகளும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. காஞ்சனா என்னால் என்றுமே மறக்க முடியாத நடிகையானார். ஆனால் அவ்வப்போது தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அவரது பாடல் காட்சிகளைத் தாண்டி தற்சமயத்தில் அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார் என்கிற விஷயங்கள் முற்றிலும் புதிராகவே இருந்தன. அதிலும் காஞ்சனா எல்லா பாடல்களிலும் இளைமையாகவேதான் இருப்பார். இதை வைத்து, அவர் விரைவாகவே திரைத் துறையிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென்று மட்டும் யூகித்திருந்தேன்.{pagination-pagination}


சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் பேச தெரிந்த நிழல்கள் நூலை தற்செயலாக வாசித்துக் கொண்டிருந்தபோது, அதில் காஞ்சனா தற்போது ஆந்திராவில் கோவிலொன்றில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார் என்று அவர் எழுதியிருந்ததை வாசித்தபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நிச்சயமாக இப்படி இருக்கக்கூடாது என்றே மனம் மன்றாடியது. உடனே புத்தகத்தை கீழே வைத்துவிட்டு இணையத்தில் காஞ்சனா குறித்த தகவல்களை திரட்ட முயன்றேன். சொற்பமான எண்ணிக்கையில் சில கட்டுரைகள் கிடைத்தன. அதில் காஞ்சனா தற்போது நலமாகவே இருப்பதும், ஆந்திராவில் சிறிய அபார்ட்மென்ட் ஒன்றில் குடியிருப்பதும், அவர் துப்புரவு பணியாளராக பணியாற்றுகிறார் என்று குமுதம் முன்பு தவறாக எழுதியிருந்த செய்தியின் அடிப்படையிலேயே எஸ்.ராமகிருஷ்ணன் அப்படி எழுதிவிட்டார் என்று அறிந்துக்கொண்ட பிறகுதான் மனம் இயல்பானது. அதோடு அவர் திரையுலகில் சேர்த்து சம்பாதித்த சொத்துகளை அவரது அப்பாவே ஏமாற்றிவிட்டதையும், இதனால் மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளாகி சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டதையும் அறிந்துக்கொண்டேன்.

நிச்சயம் நான் அறிந்து வைத்திருந்த காஞ்சனாவிற்கு இப்படியொரு வாழ்க்கை வாய்த்திருக்கிறது என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அதோடு இணையத்தில் காணக் கிடைத்த அவரது முதிய வயது புகைப்படங்களும் மனதை சங்கடப்படுத்தின. கலைஞர்களுக்கு என்றுமே வயதாகக்கூடாது (அ) நமக்கு மிகவும் பிடித்த கலைஞர்களுக்கு. நன்கு அலங்கரிக்கப்பட்ட அரங்குகளில் ஹன்சிகா மோத்வானிக்கும், அமலா பால்களுக்கும் சிறந்த நடிகை என விருது வழங்கும்போது, மிகுந்த கூச்சத்தோடு நெளிந்தபடி மேடையேற்றப்படும் பழம்பெரும் கலைஞர்கள் அது நாள்வரையிலும் எங்கிருந்தார்கள் என்று நாம் சிந்திப்பதில்லை. சமீபத்தில் திரைத் துரையைச் சார்ந்த ஒருவருடன் உரையாடும்போது ‘சினிமாக்காரங்களான நாமளும் விளிம்புநிலை மனிதர்கள்தானே’ என்றேன். அதற்கு அந்த அண்ணன் ‘நாம விளிம்பு நிலை மனிதர்கள் இல்லை, உதிரிகள்’ என்றார். நம் சமூகத்தில் கலைஞர்கள் எந்நாளும் உதிரிகள்தான். அதிலும் பெண் கலைஞர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 

அடுத்தமுறை கிருஷ்ணமூர்த்தி தாத்தாவை பார்க்கும்போது நிச்சயமாக காஞ்சனாவை நான் அறிந்ததைப் பகிர்ந்துக்கொள்ளவோ, காஞ்சனா அம்மாவின் நிகழ்கால புகைப்படத்தை காண்பிக்கவோ மாட்டேன், ஏனெனில் அவர் காண்பித்த அவரின் உறங்கும் நினைவுகளில் அத்தனை பிரகாசமாக ஒளிர்ந்துக்கொண்டிருந்த முகம் இந்தக் காஞ்சனாவுடையதல்ல. 

- ராம் முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com