சென்னையின் வயது என்ன தெரியுமா? 

ஆரம்பத்தில் மதராஸபட்டிணம். தற்போது சென்னை என்று அழைக்கப்படும் நமது சென்னை
சென்னையின் வயது என்ன தெரியுமா? 

ஆரம்பத்தில் மதராஸபட்டிணம். தற்போது சென்னை என்று அழைக்கப்படும் நமது சென்னை மாநகருக்கு 378-வது பிறந்த நாள் வந்துள்ளது. இதையொட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை அமர்க்களமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் சென்னையில் ஆரம்பித்துவிட்டன. வரலாற்றுப் பெருமைகள் கொண்ட சென்னை நகரம், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமாகும். அப்படி உருவாகி 378 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட ஒரு விழா எடுப்பது சிறப்பு.

378-வது பிறந்த நாள் விழா

தற்போது சென்னை தோன்றி 378 ஆண்டுகள் கடந்த நிலையில், 'சென்னை வாரம்’ திருவிழாவினை வழக்கம் போல உற்சாகத்துடன் கொண்டாட உள்ளனர். இந்தத் திருவிழாவில் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகள்  நடைபெறும். இசை, கட்டிடக் கலை, திரைப்படம், சொற்பொழிவு, பாரம்பரிய இடங்கள், பசுமைச் சாலைகளைக் காண்பதற்கான நடைபயணங்கள், கண்காட்சிகள், உணவுத்திருவிழா என இன்னும் பல நிகழ்ச்சிகள் நடைபெறும். 

மரம் நடுவோம்! 

மரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சத்தமில்லாமல் சில மாற்றங்களை விதைத்துள்ளது. சென்னையின் பல பகுதிகளில், மக்கள் பங்கேற்புடன் சமூகப் பூங்காக்களை அமைப்பது நிழலின் முக்கியப் பணி. சென்னையின் பிறந்த தின விழாவினை ஒட்டி ஆண்டுதோறும் மரங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த நடைபயணம் மேற்கொள்வார்கள் நிழல் குழுமத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள். 'கடந்த டிசம்பர் மாதத்தில் வார்தா புயலால் பல்லாயிரக்கணக்கான மரங்களை வேரோடு இழந்தோம். எளிதில் உடைந்து விழும் மரங்களை நடுவதற்குப் பதிலாக உறுதியான மரங்களை நடவேண்டும். அதற்கான கால அவகாசம் அதிகமாகத் தேவைப்பட்டாலும் அதன் பலன் மிக அதிகம்' என்றார் நிழல் அமைப்பைச் சேர்ந்த உஷா ஸ்ரீதர். 

தி.நகரிலிருந்து புறப்படும் இந்த நடைபயணம் ஹாரிங்டன் ரோட், அண்ணா நகர், கோட்டூர்புர பூங்கா போன்ற இடங்களுக்கு செல்லும். காலை ஐந்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரையில் நடைபெறும். உங்கள் பெயரை முன் பதிவு செய்ய : nizhal.shade@gmail.com

பக்கிங்ஹாம் கால்வாய்

பக்கிங்ஹாம் கால்வாய் பற்றி டாக்டர் ஹேமசந்திர ராவ் ஐந்து வருடமாக ஆய்வு செய்து வருகிறார். இதன் வரலாறு 1780லிருந்து தொடங்குகிறது. 1886-ம் ஆண்டில் சென்னையில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தை எதிர்கொள்வதற்காக மக்களுக்கு வேலை கொடுத்து, கூலியும் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தின் பேரில் அந்தக் கால்வாயை மேலும் நீட்டிக்கத் திட்டமிட்டார்கள். எண்ணூரில் இருந்து அடையாறு வரை அது  தோண்டப்பட்டது அந்தப் பஞ்சக் காலத்தில்தான். பின்னர் அது விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டு நீர்வழி வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. கடலை ஒட்டியே கடலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் அந்தக் கால்வாய் வெட்டப்பட்டது.  

விசாகப்பட்டினத்தில் இருந்து விழுப்புரம் வரை வெட்டப்பட்ட இந்த 800 கிலோ மீட்டர் கால்வாய் வழியே நடந்த படகுப் போக்குவரத்தில் அரிசி, பருத்தி, மீன், கருவாடு என எல்லாப் பொருட்களும் அந்தப் படகுகளில் பயணப்பட்டன. உப்பு நீர் பாதையாக இருந்த இந்தக் கால்வாய், பின்னர் சாக்கடைகளைக் கலக்கும் பாதையாகவும் மாறிப் போனது. கூவத்துக்கு ஏற்பட்ட அதே கதிதான் இதற்கும் ஏற்பட்டது. 800 கிலோ மீட்டர் கால்வாயின் குறுக்கே சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. சில இடங்களில் இயற்கையான சேதாரங்களால் கால்வாய் மூடப்பட்டுக் கிடக்கிறது. இன்னும் இது போன்ற தகவல்களை அறிந்து கொள்ள ஆகஸ்ட் 24,  5 மணி வரை காத்திருக்க வேண்டும்.

நவாப் கதை கேளுங்கள்!

ஆற்காடு நவாப்பின் நினைவையொட்டி நடைபாதை பயணம் ஒவ்வொரு வருடமும் சென்னை வாரத்தில் நிகழும். இதை ஒருங்கிணைப்பவர் எஸ்.அன்வர். இவர் மீடியா கொம்பை எனும் நிறுவனத்தின் தலைவர். தமிழ் முஸ்லீம்களின் கலாச்சாரத்தை வலியுறுத்த சென்னை வாரம் நிகழ்ச்சியின் போது அவரது நடைபயணம் இருக்கும். மெட்ராஸ் தினத்தன்று காலை 6 மணிக்கு சேப்பாக்கத்தில் தொடங்கி, திருவல்லிக்கேணி வழியாகத் தொடரவிருக்கும் இந்த நடைபாதை பயணம், ஆற்காடு கட்டிடக் கலைக்குச் சான்றாக விளங்கும் வாலாஜா மசூதி போன்ற  நினைவிடங்கள் உள்ள வாலாஜா தெரு வழியாக சென்று, தற்போதைய ஆற்காடு நவாப் குடும்பத்தாரின் வசிப்பிடமான அமீர் மஹாலில் முடிவடையும். 

இதைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலை வலைத்தளத்தில் தேடிய போது கிடைத்த தகவல்கள் ஆச்சரியப்படுத்தின. சென்னையில் ஆதியில் குடியேறியவர்கள் ஆற்காடு நவாப்புகள்தான். மயிலாப்பூரில் பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி.13வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னை நகரில் முஸ்லீம்கள் குடியேறி விட்டனராம். மெட்ராஸ் முஸ்லீம்கள் மற்றும் மசூதிகள் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இயக்கியிருப்பவர் எஸ்.அன்வர். இந்த டாக்குமென்டரி குறித்து அன்வரும், ஆற்காடு நவாப்பும் கூறியது வெனிஸ் நகரத்து வியாபாரியான மார்க்கோபோலா, தனது சுற்றுலா கையேட்டில் அந்தக் காலத்து சென்னை நகர வாழ்க்கை குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதில், 13-வது நூற்றாண்டில் மயிலாப்பூர் பகுதியில் முஸ்லீம்கள் பெருமளவில் வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார். போர்ச்சுகீசியரான டுவார்ட் பார்போசா தனது நூலில் கூறுகையில், 16-வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூரில் உள்ள புனித தாமஸின் கல்லறையை (தற்போதைய சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம். 

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்தபோது நமது நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம், அப்போது மக்கள் மதரீதியாகப் பிரிந்து கிடக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் வசித்து வந்தனர். உதாரணத்திற்கு, முஸ்லீம் மன்னர்கள் இந்துக்களை உயர் அதிகாரிகளாக வைத்திருந்தனர். விஜய நகர மன்னர்கள், முஸ்லீம்களை உயர் பதவிகளில் வைத்திருந்தனர். இந்தியாவின் ஆத்மாவாக அப்போதே மதச்சார்பின்மை இருந்து வந்துள்ளது. அப்போது அனைத்து மதத்தினரும் சம உரிமைகளுடன், சம அந்தஸ்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். ஆற்காடு நவாப் வம்சத்தினர் ஏராளமான கோவில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் பெருமளவில் நிலங்களை, நிதியை தானமாக அளித்துள்ளதே நல்லிணக்கத்திற்கான சான்று. தமிழ் முஸ்லிம் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அன்வர் இந்நிகழ்வை ஐந்து வருடமாகத் தொடர்ந்து நடத்துகுறார். ஆகஸ்ட் 20 - 27 வரை நடைபெறும் இதில் பங்கேற்க கட்டணம் ரூ.300/- காலை உணவு அடையார் ஆனந்த பவனில் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 9444077171  

சாப்பிடுங்கள், நடங்கள், கண்டு பிடியுங்கள்

மெஹ்தா ப்ரொஸ் மித்தாய்வாலா கடையில் தொடங்கி சரவணா சாண்ட்விச் கடை வரை உணவு நடை எனும் நிகழ்வு நடைபெறும்.  சென்னையின் உணவுப் பிரியர்களுக்காக செயல்பட்டுவரும் ‘சென்னை ஃபுட் வாக்ஸ்’ (Chennai Food Walks). அதன் நிறுவனர் ஸ்ரீதர் வெங்கட்ராமன் சென்னை பிறந்த தின சிறப்பு கொண்டாட்டத்துக்கான ‘உணவு நடை’க்கு ஏற்பாடு செய்துள்ளார்.

சென்னையில் சவுகார்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், பெசண்ட்நகர், அடையார், திருவான்மியூர், தி.நகர் போன்ற இடங்களில் ‘உணவு நடை’ சென்றிருக்கிறார்கள் ‘சென்னை ஃபுட் வாக்ஸ்’ உறுப்பினர்கள். உணவுப் பிரியர்களைத் திருப்திப்படுத்தும் இந்தப் பக்கம் சென்னையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கடைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிறது. 'உணவகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வேலையை இணையதளங்கள் செய்கின்றன. பல அப்ளிகேஷன்களும் இதற்காக வந்துவிட்டன. ஆனால், இந்தத் தளங்களின் விமரிசனங்கள் நம்பத்தகுந்தவையா என்பது கேள்விக்குறிதான். அதனால், சென்னையில் சுவையான  உணவு கிடைக்கும் சாதாரண, பாரம்பரியமான உணவகங்களைப் பிரபலப்படுத்தவே முகநூலில் ‘சென்னை ஃபுட் வாக்ஸ்’ எனும் எங்கள் ஃபேஜ் செயல்படுகிறது. அத்துடன், எங்களுடைய பதிவுகளில் கூகுள் மேப்பில் அந்தந்தப் பகுதியில் இருக்கும் சிறப்பான உணவுக் கடைகளையும் அங்கே கிடைக்கும் ருசியான உணவுகளையும் தொடர்ந்து குறிப்பிட்டுவருகிறோம். இந்த முகநூல் பக்கத்தின் உறுப்பினர்கள் கடைகளை உணவுக் கடைகளை மிக எளிதாகக் கண்டடைய இந்த ‘மேப்’ உதவுகிறது. அதனால், நான் நேரில் செல்ல முடியாவிட்டாலும் ஒரு பகுதியில் ‘உணவு நடை’யை வெற்றிகரமாக ஒருங்கிணைக்க முடிகிறது' என்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர். இது குறுத்து மேலும் விவரங்கள் பெற : 9790957208

இயக்குனர் கே.பாலசந்தரின் கதா பாத்திரங்கள்

ஆகஸ்ட் 26 காலை 10 அளிவில் ரஷ்யன் கல்சுரல் செண்டரில் பாம்பே சாணக்யா ஒரு நிகழ்சியை ஏற்பாடு செய்துள்ளார். திரை மேதை கே.பாலசந்தரின் பார்வையில் மெட்ராஸ் என்பதே அதன் தலைப்பு. நான் பம்பாயில் பிறந்து வளர்ந்தவன். நாடக ஆசையில் சென்னைக்கு 1989-வருடம் குடியேறினேன். 2011 'மெட்ராஸ் டு சென்னை’ என்ற நாடகத்தை இயக்கினேன். சென்னையின் பல்வேறு மாற்றங்களை அது பதிவு செய்தது’ என்றார் சாணக்யா.

இயக்குனர் பாலசந்தருடன் பணி புரிந்த அனுபவம் அவருக்கு பெருமளவு கைகொடுக்கிறது என்றும் பகிர்ந்து கொண்டார். பாலசந்தர் திரைப்படங்களில் ஒன்று, 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' மற்றும் மே மாதத்தில் வரும் மெட்ராஸை சுத்திப் பார்க்க போறேன் என்ற பாடலும் மெட்ராஸ் பெயரில் பிரசித்தி பெற்றவை. இது போன்ற பல சுவையான சம்பவங்களின் தொகுப்பாக இந்நிகழ்ச்சி அமையும். அழைப்பின் பெயரில் நிகழவிருக்கும் இந்நிகழ்ச்சியைக் காண பாம்பே சாணக்யாவின் ரசிகர்கள் இன்னும் சில தினங்களே காத்திருக்க வேண்டும்.

இப்படி சென்னையின் மகத்துவத்தை பக்கம் பக்கமாகச் சொல்லிக் கொண்டே போகலாம். வாழ்தலை ரசனைமயமாக்கும் இது போன்ற பல நிகழ்ச்சிகள் சென்னை வாரம் முழுவதும் நடைபெற உள்ளது. வந்தாரை வாழ வைக்கும் சென்னையைப் போற்றுவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com