சிவாஜி என்ன செய்தார்?

மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில், சத்ரபதி சிவாஜி மிகவும் புகழ் பெற்றவர்.
சிவாஜி என்ன செய்தார்?

மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில், சத்ரபதி சிவாஜி மிகவும் புகழ் பெற்றவர். இளம் வயது முதலே, போர் முறைகளில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். அவர், மராட்டியப் பேரரசை விரிவு படுத்த உதவியது, போரில் அவர் கையாண்ட கொரில்லா உத்திகள் தான் என்றால் அது மிகையில்லை.  

சிவாஜி, சமர்த்த ராமதாசரை, தன் குருவாக ஏற்றிருந்தார். சிவாஜிக்கு, ஒரு நாள் கூட தன்னுடைய குருவான சமர்த்த ராமதாசரைப் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை. அன்றைய தினம் சிவாஜியின் மனம் ஏனோ பரபரத்துக் கொண்டிருந்தது. அவர் காலையில்  தன்னுடைய குருவைக் காண வனத்திற்குச் சென்றார். அவர் கிருஷ்ணா நதிக் கரையில் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரைச் சுற்றி வன விலங்குகள் சாதுவாக நின்று கொண்டிருந்தன.

மிருகங்களைப் பார்த்த சிவாஜிக்கு அவரை நெருங்க மிகவும் தயக்கமாகத்தான் இருந்தது. சிறு வயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவர், சிவாஜி. அவரின் வருகையை அறிந்தால், வன விலங்குகள் ஓடி ஒளிந்து கொள்ளும். ஆனால் அன்றைய தினம், விலங்குகள், ஓடி ஒளியாமல், குருவின் தியானத்திற்கும் பங்கம் விளைவிக்காமல் இருந்தது அரசனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவரின் தியானம் கலையும் வரை காத்திருந்து, அவர் அழைத்த பிறகு அருகில் சென்று நமஸ்கரித்துக் கொண்டார். தான் கொண்டு வந்திருந்த பண்டங்களை குருவுக்கு அர்ப்பணித்தார். 

'குருவே, தங்களின் முன்னால், பகைமைப் பாராட்டும் விலங்குகள் கூட சண்டையிட்டுக்  கொள்ளாமல் ஒற்றுமையுடன் இருக்கின்றதுவே. அதற்கு என்ன காரணம்?' என்று கேட்டார்.

'அரசே, நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன் கேள்' என்று சொல்லி, அன்பின் வலிமையை விளக்கும்  கதை ஒன்றை கூறலானார்.   

சமர்த்த ராமதாசர், சிவ குடும்பத்தில் நிலவும் அன்பின் வல்லமையை விளக்கும் சுவாரஸ்யமான அம்சம் ஒன்றை விளக்கினார். கதையைக்கூறத் தொடங்கினார். 

கையிலம்பதியில் ஒரு நாள், பூத கணங்கள், சிவபெருமானின் முன்னிலையில் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தன. அவைகளின் தயக்கத்தைக்  கண்ட முக்கண்ணனார், யாது வேண்டும் எனக் கேட்டார். 

'எங்களுக்கு வெகு நாட்களாகவே ஒரு சந்தேகம் உண்டு. அதைப் பற்றி தான் உங்களிடம் கேட்கலாமா என்று யோசனை செய்கிறோம்' என்றன. 

'சந்தேகத்தை மனதிலேயே வைத்துக்கொள்ளக்கூடாது. என்ன கேட்க வேண்டுமோ அதைக் கேளுங்கள். எனக்கு என்ன தெரியுமோ அதை நானும் சொல்கிறேன்'  என்றார்.

'தங்களின் வாகனமோ நந்தி தேவர். ஆனால் தாங்கள், தங்களின் தேகத்தில் சரி பாதி இடமளித்து இருக்கும் உமையவளின் வாகனமோ சிம்ஹம் ஆகும். இவை இரண்டும் எந்நாளும் சண்டை போட்டுக் கொள்வதே இல்லை. தாங்கள் உடல் முழுவதிலும் அரவங்களை ஆபரணமாக அணிந்து இருப்பவர். தங்களின் புத்திரரான முருகக் கடவுளோ அரவத்திடம் பகைமை பாராட்டும் மயிலினை வாகனமாகக் கொண்டுள்ளார். அவைகளும் சிநேக பாவத்துடன் தான் இருக்கின்றன. அது மட்டுமல்ல, அக்னிப் பிழம்பான தங்களின் மூன்றாவது நேத்திரத்தின் மேல் புறத்தில்  கங்கா தேவியானவர் குடி கொண்டிருக்கிறார். அந்தத் தேவி ஒரு பொழுதும் அக்னியை தன்னுடைய பிரவாகத்தினால் அழித்ததில்லை. ஒன்றுக்கொன்று எதிர்மாறான குணங்களைக் கொண்டிருந்தாலும், எப்பொழுதும் கைலாயத்தில், சண்டையே  இருப்பதில்லை. அன்பான, சுமுகமான சூழலே காணப்படுகிறது. அதன் ரகசியத்தை எங்களுக்கும் கூறுவீர்களா?' என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தன.

மௌனமாகச் சிரித்தார், சர்வேஸ்வரன்.

'இதில் ரகசியம் அதுவுமே இல்லை. கூறுகிறேன் கேளுங்கள். அன்பை மிஞ்சிய அமுது வேறெதுவும் இல்லை. எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் பகைமைப் பாராட்டக் கூடாது. எந்த வித பகைமையையும் அன்பால் சுலபமாக மாற்றி விடலாம்.இதைப் புரிந்து கொண்டு எல்லோரும் செயல்பட வேண்டும் என்பதற்காகவே இந்த மாதிரி ஒரு கூட்டமைப்பு உண்டாக்கப் பட்டிருக்கிறது. இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? சந்தேகம் இல்லையே?' என்று விளக்கம் கொடுத்தார். சிவகணங்கள் திருப்தி அடைந்து, வந்த வழியே சென்றன. 

அரசே புரிந்ததா? அன்பால் எதையும் ஆட்கொள்ள முடியும். உயிர்களிடத்தில் அன்பு காட்டு. எல்லா உயிர்களும் ஆண்டவனின் குழந்தைகள்.  அன்பே சிவம். 

சமர்த்த ராமதாசர் தன்னுடைய சீடனான சிவாஜிக்கு, அன்பின் வலிமையை விளக்கினார்.

'குருவே, எனக்கு நல்லதொரு உண்மையைப் புரிய வைத்தீர்கள்.  இனிமேல் எந்தவிதமான விலங்கினையும் நான் வேட்டையாட மாட்டேன். இது உறுதி' என்று கூறி குருவினைப் பணிந்தார், சிவாஜி.

சத்ரபதி சிவாஜிக்குள் ஒரு தெளிவு பிறந்தது. மன மாற்றத்துடன் சதாராவுக்குத் திரும்பினார். அன்று முதல் வேட்டையாடும் பழக்கத்தையே அடியோடு விட்டு விட்டார்.

இது மராட்டிய மன்னனுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. எல்லோருமே எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்பதை அழகாக விளக்குகிறது இக்கதை.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com