விவேகமான விமரிசகர்கள் யார்? ஒரு அலசல்!

சமீபத்தில் வெளியான சில படங்கள் வசூலில் அபார சாதனைகளைப் படைத்திருந்தாலும்
விவேகமான விமரிசகர்கள் யார்? ஒரு அலசல்!

சமீபத்தில் வெளியான சில படங்கள் வசூலில் அபார சாதனைகளைப் படைத்திருந்தாலும், உள்ளடகத்தில் என்னவாக இருந்தது என்பது சர்ச்சைக்குரிய ஒரு விஷயம்தான். வெளிநாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவதும், உச்ச நட்சத்திரங்களை நடிக்கச் செய்வதும் மட்டுமே ஒரு படத்துக்குப் போதுமா என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ் சினிமா பல மாற்றங்களையும், வளர்ச்சிகளையும், சிக்கல்களையும் பார்த்துவிட்டது. சமீப காலமாக விமரிசனம் எனும் கூரான கத்தி அதைப் பதம் பார்க்கத் தொடங்கியிருப்பதையும் எதிர்கொண்டே வருகிறது.

அன்றைய தினத்தில் வெளியாகும் படத்துக்கு, அதைப் பார்த்து முடிந்த சூட்டோடு சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் காலகட்டம் இது. ஒரு திரைப்படத்தை மிகுந்த சிரமத்துடன் படக்குழுவினர் எடுத்திருந்தாலும் முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தவில்லையென்றால் அது எத்தகைய படமாக இருந்தாலும் கடுமையான விமரிசனங்களையும் வசைகளையும் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் எதிர்கொள்கின்றனர். இது படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களை நேரடியாகத் தாக்கும் விதமாக அமைந்திருப்பதால், அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். 

திரைப்பட ரசிகர்கள், ஆர்வலர்கள் மற்றும் விமரிசகர்கள் என்று மூன்று வகையில் சினிமா பார்ப்பவர்களை பிரிக்கலாம். இதில் முதல் இரண்டு வகையினரைப் பற்றி பிரச்னை இல்லை. ஆனால் ஒரு படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக கிழித்து எழுதும் அளவுக்கு விமரிசகர் என்று தம்மை நினைத்துக் கொள்பவர்களுக்கு சினிமா பற்றிய புரிதல் உள்ளதா என்றால் மிகச் சிலரைத் தவிர ஏனையோருக்கு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஒரு திரைப்படத்தைப் பற்றி, அதில் நடித்தவர்களைப் பற்றி, என சில பல தகவல்களையும் அத்திரைப்படம் குறித்து மேம்போக்கான அபிப்பிராயத்தையும் கூறுவதை திரைப்பட ஆய்வு எனலாம். ஒரு திரைப்படம் பற்றிய அழுத்தமான பார்வையை வைப்பது தான் திறனாய்வு. Film Review, Film Appreciation, Film Criticism என்பது எல்லாமே வெவ்வேறு. நுட்பமாக திரைப்படத்தைப் பார்த்து படைப்பாளியுடனும் தானும் பங்கேற்று அத்திரைப்படத்தை மதீப்பீடு செய்வது appreciation. திரைப்பட ரிவ்யூ செய்பவருக்கு கலை அல்லது தொழில்நுட்பம் தெரிந்திருக்காது. திறனாய்வு செய்பவருக்கு இது இருக்கும். திரைத்துறை சார்ந்த நுட்பமான அறிவும், தன்னுடைய பார்வையும் சேர்த்தே தான் ஒரு திரைப்படத்தை பார்க்கிறான். இந்த இரண்டு பிரிவுக்குள் தான் திரை விமரிசகர்கள் இருக்கிறார்கள். ஒரு படத்தைப் பார்ப்பது மட்டும் திரை விமரிசகராகத் தகுதியான விஷயமில்லை. அதற்காக விமரிசகர்களுக்குத் தொழில்நுட்ப விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. பல திரைப்படங்களைப் பார்ப்பதாலும் ஒருவர் விமரிசகராகிவிட முடியாது. சரி, விவேகமான விமரிசகர்கள் யார்?

சினிமா மீது தீராக் காதலும், அதன் மீதான அக்கறையும் கொண்டவர்களே திரைப்பட விமரிசனம் எழுதத் தலைப்படுகிறார்கள். ஒரு படத்தின் சரி தவறுகளை நடுநிலையுடனும் சீர் தூக்கிப் பார்ப்பதுதான் ஒரு நல்ல விமரிசனமாக இருக்க முடியும். பொத்தாம் பொதுவாகவோ, பாரபட்சமாகவோ, சுய விருப்பு வெறுப்புக்கு உட்பட்டோ இருக்குமெனில் அது விமரிசனமாகாது. காழ்ப்புணர்வுடன் எழுதப்பட்ட கண்டனக் கடிதமாகவே அதைக் கருதவேண்டும். அதுதான் சமூக வலைத்தளங்களில் செம்மையாக வாரம்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. குடும்பத்துடன் ஆயிரம் ரூபாய் செலவழித்துப் படம் பார்த்த நபருக்கு அப்படம் திருப்தியளிக்கவில்லை எனில் அக்கோபம் சமூக வலைத்தளங்களில் விமரிசனம் என்ற பெயரில் எழுதப்படும் வார்த்தைக் குவியல்களாகிவிடுகின்றது. 

மார்க்குகள், நட்சத்திர ரேட்டிங் போன்றவையும் கூட ஒரு படத்தின் விமரிசனமாகாது. ஒரு முழு நீளத் திரைப்படத்தை இரண்டு நட்சத்திர அடைப்புக்குறிக்குள் உள்ளடக்குவது எந்த வகையில் நியாயம்? இதை யார் தொடங்கினார்கள் என்று தெரியவில்லை. IMDBயில் தொடங்கி ஆன்லைனில் உள்ள பல தளங்களில் இந்த நட்சத்திர விமரிசனங்களும் அதிக கவனம் பெறுகின்றன. பத்துக்கு இரண்டு நட்சத்திரமே கிடைக்கப்பெற்ற பல படங்கள் சிலருக்குப் பிடித்திருக்கலாம். எட்டு அல்லது ஒன்பது நட்சத்திரங்கள் வாங்கிய படம் பிடிக்காமல் போகலாம். ஒரு திரைப்படத்தில் நாம் எதிர்ப்பார்ப்பது என்ன? ஒரு கதை நாயகன் அல்லது நாயகி, சூழல் அல்லது பிறரால் (வில்லன்) அவர்களுக்கு ஏற்படும் பிரச்னை, அதைச் சுற்றி நிகழும் சம்பவம், நாயகன் அதை எப்படி சமாளித்து வெற்றி கொள்கிறான் என்பதே ஒரு கதையின் அடிப்படையாக இருந்து வருகிறது. இதில் கருத்து சேர்த்து (கோலிவுட்டில் இதனை மெசேஜ் என்பார்கள்) சொல்லும் போது கமர்ஷியல் வகைப் படமாகிறது. திரைப்படம் எதார்த்தம் சார்ந்து. உளவியல் சார்ந்த விஷயங்களைப் பற்றி பேசும் போது கலைப் படமாகிறது.  சிலருக்கு கமர்ஷியல் படம் தான் பிடிக்கும். சிலருக்கு கலைப்படங்கள் பிடிக்கும். எனவே திரைப்படம் பார்வையாளர்களுக்கானது. அவரவர் விருப்பம், ரசனையைச் சார்ந்தது. ஒருவரைக் கவர்ந்த படம் அவர் நண்பர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அவர்கள் கொண்டாடிய ஒரு படத்தை இவர் ரசிக்க முடியாமல் போகலாம். எனவே என் தராசு சரி உங்களுடைய தராசுகள் சரியில்லை என்று யாரும் கூற முடியாது அல்லவா?  நல்ல திரைப்படங்களை வரவேற்று, அல்லாதவற்றைப் புறக்கணிப்பதே ரசிகர்கள் செய்ய வேண்டியது. எழுதிப் புலம்புவதெல்லாம் விமரிசனங்கள் ஆகாது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திரைப்பட உருவாக்கம் என்பது ஒரு மாபெரும் கூட்டணி. நம் பார்வைக்கே படாத கலைஞர்கள் பலரின் பங்களிப்பும் சேர்த்துதான் சினிமா. லைட்மேனில் தொடங்கி, எடிட்டிங் டேபிளில் படத்தொகுப்பு செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை முகம் தெரியாத பலரின் உழைப்பு தான் சினிமா. கோலிவுட் என்பது கனவுத் தொழிற்சாலை அல்ல. ரத்தமும் சதையுமான மனிதர்கள் பலரின் பங்களிப்பு ஒன்றிணைந்து வெளிப்படும் ஓரிடம். அப்படிப்பட்ட உழைப்பு பல சமயம் வெறும் வியாபார நோக்கிலும், சமூக அக்கறையின்றி சிதையும் போதும் தான் சாமானியர்களும் அறச்சீற்றம் கொள்கிறார்கள். கலாச்சார அதிர்வு ஏற்படுத்தும் படங்கள், துளியும் சுவாரஸ்யம் இல்லாமல் போரடிக்கும் படங்கள், அதீதமான வன்முறை உள்ள படங்கள், ஜாதி இன வெறியை உருவாக்கும் திரைப்படங்கள், பெரிய எதிர்ப்பார்ப்பை தோற்றுவித்து அதற்கு முற்றிலும் எதிராக அமைந்துவிடும் படங்கள் போன்றவையே பெருமளவு எதிர்வினைக்கு உள்ளாகின்றன. எனவே ஒரு திரைப்பட உருவாக்கத்தின் கேப்டனாக விளங்கும் இயக்குனர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இரண்டரை மணி நேரம் ஒரு பார்வையாளரை சுவாரஸ்யத்துடன் தக்க வைத்துக் கொள்ள திரைமொழியில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகச் செய்துவிட்டால் போதும். உலக சினிமாவைப் பார்க்கும் தலைமுறையினர் உருவாகிவிட்டார்கள். எனவே நம் மண் சார்ந்த விஷயங்களுடன் உள்ளூர் சினிமாவை சிறப்பாக எடுக்க முயற்சி செய்ய வேண்டும். 

இப்பொதெல்லாம் ஒரு க்ளிக்கில் படத்தை தரவிறக்கம் செய்து பார்க்கமுடிகிறது. இது அந்தத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வாழ்க்கையையும் சிதைக்கும் செயலாகும். சினிமாவை அத்தனை எளிதாக அழிக்க முடியாது. திருட்டு டிவிடி திருட்டு ஆன்லைன் பதிவிறக்கங்களால் படத் தயாரிப்பாளர்களுக்கு பலவிதமான சிக்கல்களும் தொந்தரவுகளும் ஏற்பட்டாலும் திரையரங்கில் மக்களோடு மக்களாக நல்ல சினிமாவைக் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இந்த சைபர் மனநோயாளிகளைப் புறம் தள்ளிவிட்டு ஆக்கபூர்வமான விஷயங்களின் திரைத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும். ஏன் பல படங்கள் கவனம் பெறாமல் போகின்றன, ஏன் சினிமாவை இந்தளவுக்கு வலைத்தளங்களில் தாக்குகின்றனர் என்று சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். பணம் மட்டுமே புழங்கும் ஒரு துறையல்ல திரைத்துறை. பல மனங்களைச் சென்றடையும் ஊடகம் இது என்ற கவனம் படத் தயாரிப்பாளர்களுக்கு இருக்க வேண்டும்.

சில படங்களின் தலைப்பைப் கேட்கும்போதே படம் பார்க்கும் எண்ணம் போய்விடும் அளவுக்கு உள்ளன. இன்னும் சில படங்கள் பழைய படங்களின் தலைப்பை காப்பியடித்து புதிதாக களம் இறங்குகின்றன. புதிய தலைப்பு வைக்கும் அளவுக்குக் கூட கிரியேட்டிவிட்டி இல்லையா என்ற சந்தேகம் ஏற்படுவது நியாயம்தானே? ஆனால் இது கிரியேட்டிவிட்டி பஞ்சம் அல்ல ஒரு வியாபார யுக்திதான். பழைய தலைப்பில் இருக்கும் ஈர்ப்பினால் ரசிகர்கள் கவரப்படுவார்கள். அப்படத் தயாரிப்பாளர்களுக்கு தலைப்பே ஒரு விளம்பரமாகிவிடும். எக்கச்சக்கமான எதிர்ப்பார்ப்புடன் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை அப்படக்குழுவினர் பெரும்பாலும் ஏமாற்றம் அடையவே செய்கின்றனர். இன்னும் சில திரைப்படங்கள் அதிக பட்ஜெட்டில் தயாராகி கதை, திரைக்கதை போன்ற அடிப்படை விஷயங்களில் கோட்டை விடுகின்றன. 

சினிமாவில் மாற்றம் விரும்புபவர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் அவர்கள் வெறுக்கும் படங்களைப் புறக்கணித்துவிடுவதுதான் அதற்கான முதல்படி. முதல் நாள் முதல் ஷோவை முண்டியடித்துப் பார்த்துவிட்டு படம் குப்பை, பணம் நஷ்டம், நேர விரயம் என்று ஏன் எழுதவேண்டும்? ஒரு சமூகமே மனநோய்க்கு உள்ளாகிக் கொண்டிருப்பதன் அடையாளம் தான் இத்தகைய காழ்ப்புணர்வுடன் எழுதப்படும் விமரிசனங்கள். அதற்காக நல்ல படங்களை நாங்கள் கொண்டாடவில்லையா என்று கேட்பவர்களுக்கான பதில், ஒரு படத்தை தலையில் தூக்கி கொண்டாடவும் வேண்டாம், தரையில் தூக்கிப் போடவும் வேண்டாம். அதைப் பற்றி என்ன விமரிசனமோ அதைச் சரியான வார்த்தைகளில் சரியான நோக்கத்தில் பதிவு செய்தால் போதும். 

ஒரு திரைப்படத்தை எப்படி பார்ப்பது, அதை எப்படி உள்வாங்குவது என்று தெரிந்தவர்களால்தான் அதைப் பற்றிச் சரியாக எழுதவும் முடியும்.  திரைப்படம் குறித்து ஆரோக்கியமான விவாதங்கள் இங்கு போதிய அளவில் இல்லை. திரைப்படக் குழுவினர் படம் எடுப்பதுடன் தங்கள் வேலை முடிந்தது என்று கடையைக் கட்டிவிடுவார்கள். ஆனால் சமூகத்தில் அதன் தாக்கம் பற்றிய கவலை ஒருபோதும் அவர்களுக்கு இருப்பதில்லை. ஆனால் விமரிசனங்களை எதிர்கொள்வதில் மட்டும் சிக்கல்கள் அவர்களுக்கு எப்போதும் இருக்கும்.  

ஒரு திரைப்படத்தை கலைநயத்துடன் எடுத்தாலும் சரி கமர்ஷியலாக எடுத்தாலும் சரி அது பார்வையாளர்களை வந்து அடைந்தபின் படைப்பாளி அதிலிருந்து விடுபட்டுவிட வேண்டும். முந்தைய படத்தில் கோட்டை விட்டிருந்த தவறுகளை சரி செய்யும் விதமாக அவர்கள் அடுத்த படம் இருக்க வேண்டும். அவ்வகையில் விமரிசன அம்புகளிலிருந்து தப்பிக்க அடுத்த கட்ட வேலைகளில் அவர்கள் கவனம் செலுத்துவது நல்லது.  நல்லதொரு விமரிசனம் நல்லதொரு படைப்பூக்கத்துக்கு வித்தாக அமைந்தால் அது தன் நோக்கத்தில் வெற்றியடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com