விவேகம் படத்தில் வரும் ‘மோர்ஸ் கோட்’ - வியக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணிகள்!

விவேகம் படத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த ‘மோர்ஸ் கோட்’ எனப்படும் ரகசிய தகவல் பரிமாற்று முறையின் சுவாரஸ்ய வரலாற்றுப் பின்னணிகள் மற்றும் பயன்படுத்தும் முறையை அறிவீர்களா?
விவேகம் படத்தில் வரும் ‘மோர்ஸ் கோட்’ - வியக்க வைக்கும் வரலாற்றுப் பின்னணிகள்!

விவேகம் படத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த ‘மோர்ஸ் கோட்’ எனப்படும் ரகசிய தகவல் பரிமாற்று முறையின் சுவாரஸ்ய வரலாற்றுப் பின்னணிகள் மற்றும் பயன்படுத்தும் முறையை அறிவீர்களா?

படத்தில் அஜித் தன் மனைவியான காஜலுடன் மோர்ஸ் கோடில் பேசுவதும், படத்தின் இறுதி காட்சியில் காஜல் தனது கண் அசைவின் மூலம் வில்லனின் இருப்பிடத்தை அஜித்திற்கு தெரியப்படுத்துவதையும் கண்டு, அதெப்படி கண் அசைவுகளில் பேச முடியும் என்று பலரும் யோசித்திருப்பீர்கள். சந்தேகமே வேண்டாம் உண்மையில் மோர்ஸ் கோட் என்றொரு தகவல் பரிமாற்று முறை ஒன்றுள்ளது. தற்செயலாக அமைந்த காட்சியா அல்லது திட்டமிடப்பட்டதா என்று தெரியவில்லை, மோர்ஸ் கோட் உருவானதற்கு முக்கிய காரணமும் மனைவி மேல் கணவன் வைத்திருந்த அன்புதான். 

இந்த மோர்ஸ் தந்திக்குறிப்புகளை முதன் முதலில் 1836-ல்  உருவாக்கியவர் சாமுவேல் பி.மோர்ஸ். தனது மனைவி இறந்த செய்தி தன்னை வந்து அடையாததால் இறுதியாக அவரது முகத்தைப் பார்க்கும் வாய்ப்புகூட இவருக்குக் கிடைக்காமல் போனது. அதனால், விரைவாகத் தகவல் பரிமாறிக் கொள்வதற்கான வழிமுறை ஒன்றைக் கண்டறிய மோர்ஸ் முடிவு செய்தார். 26 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 0-9 வரையிலான எண்களுக்கு நிகராக ‘புள்ளி’ மற்றும் ‘கோடு’ குறியீடுகளைப் பயன்படுத்தி தந்திக்குறிப்பு எழுத்துக்களை மோர்ஸ் உருவாக்கினார். 

ஒரு புதிய மொழியைக் கற்று கொள்வதற்கு முதலில் அந்த மொழியில் உள்ள எழுத்துகளை மனப்பாடம் செய்வது போல மோர்ஸ் கோடில் உள்ள புள்ளிகள் மற்றும் கோடுகளை மனதில் பதிய வைத்தால் போதும், நீங்களும் இந்த ரகசிய மொழியில் பேசலாம். சைகை மூலம், அதாவது தொடு உணர்ச்சி, கண்களை இமைப்பது மற்றும் ஒளி விளக்குகளின் வாயிலாகவும் நீங்கள் மற்றவருக்குத் தகவலை தெரிவிக்க முடியும்.

உதாரணத்திற்கு ‘A' என்ற ஆங்கில எழுத்துக்கு ‘. _’ என்பது மோர்ஸ் குறியீடு, அதே போல் ‘1’ என்ற எண்ணிற்கு ‘. _ _ _  _’ என்பது மோர்ஸ் குறியீடு. இந்தக் குறிகளை டிகோடிங் செய்து கூறப்பட்டுள்ள செய்தியை மற்றவர் புரிந்து கொள்ள முடியும். சைகையில் தகவலை பரிமாற வேண்டுமென்றால்; முதலில் கண்களில் கூற, புள்ளியின் இடத்தில் வேகமாகக் கண் இமைக்க வேண்டும், கோட்டிற்கு மெதுவாகக் கண்களை மூடித் திறக்க வேண்டும். அதே போல் மின் விளக்கின் வாயிலாகத் தகவலை கூற, புள்ளிகளுக்குப் பதிலாக உடனே விளக்கை அணைப்பதும், கோடுகளுக்குப் பதிலாக சற்று மெதுவாக விளக்கை எரியவிட்டு பின் அணைப்பதும் கூறவரும் செய்தியைத் தெரிவிக்கும். 

வியட்நாம் போரின் போது அமெரிக்காவின் போர் விமானப் படையை சேர்ந்த ஜேரேமியா டெண்டன் என்பவர் வட வியட்நாமில் போர் கைதியாக காற்றுகூட சரியாக நுழையாத அறையில் அடைத்து வைக்கப்பட்டார். போர் கைதிகளை நடத்துவதற்கென சர்வதேச அளவில் சில விதிமுறைகள் உள்ளது, ஆனால் வியட்நாமின் சிறையில் அமெரிக்க போர் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். போர்க் குற்றத்தில் இருந்து தப்பிக்க, உண்மையை மறைக்க முடிவு செய்த வியட்நாம் அரசு அமெரிக்க வீரர் டெண்டனை பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தது. கேட்கும் கேள்விகளுக்கு இந்தப் பதில்கள்தான் கூற வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் அவரை அனுப்பினர். அவர்கள் வற்புறுத்தியது போல் பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு  பதிலளித்த டெண்டன் அதே சமயத்தில் தனது கண்களை இமைத்து மோர்ஸ் கோடில் ‘T-O-R-T-U-R-E' என்ற தகவலை பதியச் செய்தார். இந்தக் காணொளி நேர்காணல் அமெரிக்காவில் உள்ள அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப் பட்டது. இந்த மோர்ஸ் கோடை புரிந்து கொண்ட அமெரிக்க அதிகாரிகள், கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சித்திரவதையிலிருந்து அமெரிக்க போர் கைதிகளை மீட்டனர்.

இன்றைய தொலைத்தொடர்பு வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இந்த மோர்ஸ் தந்தி குறிப்பின் கண்டுபிடிப்பு என்றே கூறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com