இசைப் போராளி பாப் மார்லியை கொன்றது புற்றுநோயா? சிஐஏ ஏஜெண்டா? அமெரிக்க ஊடகங்களில் கசிந்த செய்தி உண்மையா?

பாப் மார்லியை கொன்றது புற்றுநோயா? சிஐஏ ஏஜெண்டா? அமெரிக்க ஊடகங்களில் கசிந்த செய்தி உண்மையா?
இசைப் போராளி பாப் மார்லியை கொன்றது புற்றுநோயா? சிஐஏ ஏஜெண்டா? அமெரிக்க ஊடகங்களில் கசிந்த செய்தி உண்மையா?

பாப் மார்லியை இசை ரசிகர்கள் ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் மறந்திருக்க மாட்டார்கள். அன்பெனும் உன்னத இசையை உலகம் முழுவதும் தான் வாழும் காலம்தோறும் பரப்பிய ஒரு இசைப் போராளி பாப் மார்லி என்ற ராபர்ட் நெஸ்டா மார்லி. 1981-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி பாப் மார்லி அமெரிக்காவின் மியாமி நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார். அப்போது அவருக்கு 36 வயதே நிரம்பியிருந்தது. புற்றுநோயால் அவர் இறந்தார் என்றே உலகத்துக்கு அறியப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் சிஐஏ ஏஜண்ட் ஒருவர் பாப் மார்லி இயற்கையாக மரணம் எய்தவில்லை என்று கூறியது அதிர்ச்சியளித்தது.

சிஐஏவின் 79 வயதான ஓய்வுபெற்ற அதிகாரி பில் ஆக்ஸ்லி என்பவர் மரணப்படுக்கையில் அளித்த தொடர் ஒப்புதல் வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பில் திங்களன்று மைனேவிலுள்ள மெர்சி எனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னும் சில வாரங்கள் மட்டுமே உயிருடன் இருப்பேன் என்று கூறியவர் சில அதிர்ச்சி தரத்தக்க சம்பவங்களை பகிர்ந்தார். அவர் கூறியதாக இணையதளங்களில் பரவிய செய்தி :

பில் ஆக்ஸ்லி 1974 மற்றும் 1985 ஆண்டுகளில் சிஐஏவில் பணியில் இருந்த சமயத்தில் அமெரிக்க அரசாங்கத்திற்காக 17 படுகொலைகளை செய்ததாக அவர் கூறினார். அதில் ஒன்று பாப் மார்லேவின் கொலை என்றார்.

29 ஆண்டுகளாக சிஐஏ உயர்மட்ட அதிகாரிகளுடன் பணியாற்றி உள்ளார் ஆக்ஸ்லி. அரசாங்க ஆணைப்படி சில கொலைகளை அண்டர் கவர் ஆபரேஷனாக அவர் செய்துள்ளார். ஆக்ஸ்லி துப்பாக்கி சுடும் வீரராக பயிற்சி பெற்றவர். மேலும் அரசியல் கொலைகளைச் செய்வதற்கு பலவித நூதன வழிமுறைகளையும் கடைபிடிப்பவர். உதாரணத்திற்கு விஷ ஊசி பயன்படுத்துவது, வெடி மருந்து, செயற்கையாக வரவழைக்கப்படும் ஹார்ட் அட்டாக் மற்றும் கேன்சர் போன்றவை அவற்றுள் அடங்கும். 

பாப் மார்லே மட்டுமே தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடையே தனித்தன்மை வாய்ந்தவர் என்று ஆக்ஸ்லி ஒப்புக் கொண்டார், ஏனெனில் மற்றவர்களைக் கொல்லும் போது அவர் குற்றவுணர்வுக்கு ஆளாகவில்லை, அவர்கள் கொலைக்காரர்கள் ஆனால் பாப் மார்லே உலகம் விரும்பும் நல்ல மனிதர். பரிசுத்தமான ஆத்மா. கலையுலகில் நிகரற்றவர். 

ஆனால் பாப் மார்லே CIA-வின் இலக்காக இருந்ததாலும், அவரின் துள்ளலான புரட்சி வரிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல்விடும்படியாக இருந்ததாலும் அவரை ஆபத்தான மனிதர்களின் பட்டியலில் இணைத்திருந்தார்கள். 

பாப் மார்லி இசையை புரட்சிக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுத்தி அதில் பெரும் வெற்றியும் பெற்றவர். 1976-ம் ஆண்டு அவரது இசை பலருக்கு அச்சுறுத்தலாக இருந்தது. ஒரு புதிய உலகத்திற்கான விழைவு அவரின் வாழ்வியல் அடிப்படையாகவே இருந்துவந்தது. பாப் மார்லி மிகவும் வெற்றிகரமான, மிக பிரபலமான, மிகவும் செல்வாக்குமிக்க ஒரு ஜமைக்கனாக உருவாகிவிட்டார்.

அவரது புரட்சிமிக்க கருத்துக்களால் கவரப்பட்டு இளைஞர்கள் அவர் பின்னே கொடி பிடிக்கத் தொடங்கிவிட்டனர். துப்பாக்கித் தோட்டாக்களை விட சக்திவாய்ந்த ஆயுதம் அவரிடம் இருந்தது. அதன் பெயர் இசை. தனது இசை நிகழ்ச்சிகள் மூலம் திரட்டப்பட்ட நிதியை அவர் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பதில் செலவழித்தார். அமெரிக்காவுக்கு எதிராக திரும்பிய அவரது கொள்கைகளின் மூலம் தனது சொந்த மரண உத்தரவுக்கு கையெழுத்திட்டார் மார்லி.

எதிர் கலாச்சாரம் நிகழ்த்துபவர்கள், கலகக்காரர்கள் என பட்டியல் இடப்பட்டவர்களை, களை அறுக்கும் உயர்மட்ட படுகொலைகளை தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அறுபது மற்றும் எழுபதுகளின் பிற்பகுதியில் அமெரிக்கா அவர்களை நூதன ஆபரேஷன்கள் மூலம் கொலை செய்தது. எண்பதுகளின் துவக்கம் பாப் மார்லியின் பிரச்னை அச்சுறுத்தலாக இருந்ததால் அவருக்கு எதிராகத் திரும்பியது சிஐஏ.

'ஆனால் அவரை கொல்வதற்கு முன்னால் நாங்கள் அவரை எச்சரிக்காமல் இல்லை. நாங்கள் கிங்ஸ்டனில் அவரது வீட்டுக்குச் சென்று அச்சுறுத்த சில சகாக்களை அனுப்பினோம், அப்போது அவரை சுட நேரிட்டது. இது போன்ற காரியங்களில் இனி ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுரையும் அவருக்கு வழங்கப்பட்டது. அவரது இடது கை மற்றும் மார்பில் பலத்த காயம்பட்டது. அதன்பின் சில நாட்கள் அவர் ஓய்வில் இருந்தார். 

ஜமைக்காவில் நிகழவிருந்த அவரது அடுத்த இசை நிகழ்ச்சிக்கான பயிற்சியில் இருந்தபோது அவரைச் சந்திக்க பத்திரிகையாளர் போல வேடமிட்டுச் சென்றேன். மார்லிக்குப் பரிசாக ஒரு ஜோடி காலணிகள் தந்தேன். அவரது ஷூவின் அளவு 10. அவர் அதை அணிவதற்கு முயற்சித்த போது, ​​சுறுக்கென்று ஏதோ குத்தியதைப் போலக் கத்தினார்.

அதுதான் அவரது மரணத்தின் முதல் வலி. அந்தக் காலணியில் வைக்கப்பட்டிருந்த ஆணியில் ரத்தக்கறை படிந்திருந்தது. புற்றுநோய் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை அந்த ஆணியில் படிந்திருக்கச் செய்தோம். அது அவரது தோலை துளைத்த்தால், அவை உடனடியாக அவரது ரத்தத்தில் கலந்துவிட்டது.  இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் அவர் எனது தொடர் கண்காணிப்பில் இருந்தார். அவரது வாழ்வின் கடைசிக் கட்டம் எங்கள் கண் முன்னே நடந்தது. புற்றுநோய் பாதிப்பால் பாரிஸ், லண்டன் மற்றும் அமெரிக்க மருத்துவமனைகளில் பாப் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தது உண்மையில் குணமாக்குவதற்குப் பதில் அவரை மரணப் படுகுழியினுள் தள்ளியது. 1981-ம் ஆண்டு மே மாதம் புற்றுநோயில் பாப் மார்லி இறந்தபோது அவருக்கு 36 வயதுதான் ஆகியிருந்தது.

நான் கடைசியாக பாப் மார்லியைப் பார்க்கும்போது அவர் உடல் எடை இழந்து மிகவும் சுருங்கிப் போய் மெலிந்தவராகக் காணப்பட்டார். புற்றுநோய் அத்தகைய கொடிய நோய் என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன்.
 
மியாமியில் அவர் இறந்த நாள் என் வாழ்க்கையில் மிகக் கடினமான தருணங்களில் ஒன்றாக இருந்தது, நீண்ட காலம் குற்றவுணர்வால் தவித்தேன் என்றார் பில் ஆக்ஸ்லி. ஆனால் எனக்கு வேறு வழி இருக்கவில்லை. அமெரிக்காவின் நலன் எதைவிடவும் எனக்கு முக்கியமாக இருந்தது' என்று கூறினார் அந்த முன்னாள் சிஐஏ அதிகாரி.

சிஐஏ ஏஜெண்ட் பில் ஆக்ஸ்லி கூறியதாக வெளியான இந்த விரிவான செய்தி அமெரிக்காவின் பல இணையதள ஊடகங்களில் வைரலாகியது. ஆனால் மற்ற ஊடகங்கள் இச்செய்தியை மறுத்து வெளியிட்டுள்ளது. பரபரப்புக்காக இது போன்ற பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகங்களை நம்ப வேண்டாம் எனவும், அவற்றின் நோக்கம் பொய்களை உண்மை போலத் திரித்துக் கூறுவதுதான் என்றும் வலியுறுத்தின அந்த ஊடகங்கள்.

சிஐஏ ஏஜெண்ட் பில் ஆக்ஸ்லி எனக் கூறி யாரோ வெளியிட்டுள்ள புகைப்படம் உண்மையில் ஒரு மாடலுக்குரியது. பொலிஷ் மைக்ரோ ஸ்டாக் ஃபோட்டோகிராபி எனும் நிறுவனத்தின் புகைப்பட மாடல் அவர். அவரது புகைப்படத்தை வெளியிட்டு தவறான செய்தியை பரப்புகின்றனர் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் விஷமிகள் பரப்பும் பொய்யான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் உண்மையைத் தெரிந்து கொள்ள நம்பத்தகுந்த பிரபலமான ஊடகங்களையும் செய்தித்தாள்களையும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்ற தகவலை வெளியிட்டுள்ளது ஆன்லைன் த்ரெட் அலெர்ட்ஸ் என்ற இணையதளம். 

ஆனால் உலகப் புகழ் பெற்றவர்களின் இறுதி நாட்களும், அவர்கள் மரணமும் மர்மமாகவும் சர்ச்சைக்குள்ளானதாகவும் இருப்பது உண்மைதான். ஓஷோ, டயானா, ஹோமி ஜகாங்கீர் பாபா, பாப் மார்லி, மைக்கேல் ஜாக்ஸன்... உள்ளிட்ட இவர்கள் விபத்துக்களால் இறந்தார்களா, விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்களா என்று யார் அறிவார்கள்? தமது நீங்கா புகழுக்கு அவர்கள் கொடுத்த விலை மரணம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com