நியாயத்தோடு இணைந்த சட்டம் தேவை: யார் எந்த தவறு செய்தாலும் இந்த 8 பேருக்கும் தெரிந்துவிடும்

இன்னும் சில மணி நேரங்களில் ஆங்கில புத்தாண்டு 2018 பிறக்கப்போகிறது. 2017 நம்மிடையே நிறைய தாக்கங்களையும், பாதிப்புகளையும் விட்டுச் சென்றுள்ளது.
நியாயத்தோடு இணைந்த சட்டம் தேவை: யார் எந்த தவறு செய்தாலும் இந்த 8 பேருக்கும் தெரிந்துவிடும்

இன்னும் சில மணி நேரங்களில் ஆங்கில புத்தாண்டு 2018 பிறக்கப்போகிறது. 2017 நம்மிடையே நிறைய தாக்கங்களையும், பாதிப்புகளையும் விட்டுச் சென்றுள்ளது. இது இப்படித்தான் நடக்கும் என்ற கணக்குகளையெல்லாம் பொய்யாக்கிச் சென்றுள்ளது. தலைமைகளையும், தலைகளையும் உருட்டி விளையாடிச் சென்றுள்ளது. பெரும்பாலான நேரங்களில் நியாயங்களையும், நேர்மைகளையும் குழி தோண்டி புதைத்துச் சென்றுள்ளது.

ஒரு காலத்தில் ‘துரோகி, துரோகம்' போன்ற வார்த்தைகள் மிகவும் கேவலமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அவை பெருமைக்குறிய விஷயம். ‘துரோகம், துரோகிகள்' ஆகியவை ஆங்கில உடையணிந்து ‘ஸ்லீப்பர் செல்கள்' என்ற பெயரில் வலம் வருகின்றன. ‘ஸ்லீப்பர் செல்'கள் எங்களிடம் இருக்கிறது', என்பதை பெருமையாக சொல்வதை அறிமுகப்படுத்தியது 2017. 

வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பன் இன்று உயிரோடு இருந்தால் தான் ஒரு ‘ஸ்லீப்பர் செல்', என்று பெருமையோடு மார்தட்டிச் சொல்லியிருப்பான். கேவலங்களை வீரமாகவும், அசிங்கங்களை அணிகலனாகவும் மாற்றிய பெருமை 2017ம் ஆண்டையே சாரும்.

மக்களுக்காக எந்த நன்மையையும் செய்யாமல் ஊர் நியாயம் பேசும் சினிமாக்காரர்களின் ஆட்டத்தை அதிகப்படுத்தியது 2017. ஆளுகின்ற அரசுகள் மோசம் என்று மாலை நேர டிவிட்டர் அரசியல்வாதிகளை உருவாக்கியது 2017. தன் சொந்த பணிகளை முடித்துக் கொண்டு, தனக்கு எந்த முக்கிய பணிகளும் இல்லாத நேரங்களில் உசுப்பேற்றும் அரசியலை கையிலெடுக்கும் பகுதி நேர அரசியல்வாதிகளையும் உருவாக்கியது 2017. இருபது ரூபாய் நோட்டுக்கு பத்தாயிரம் ரூபாயை சில்லறையாக கொடுக்கும் அவலத்தையும் கொடுத்ததும் 2017.

இந்தப் பக்கம் இருந்தவர்கள் அந்தப் பக்கமும், எந்தப் பக்கத்தில் இருக்கிறோம் என்று தெரியாதவர்களை ஒரே பக்கமாகவும் ஒதுக்கியது 2017.

இந்துக் கோவில்களை இடிப்போம் என்றது ஒரு கூட்டம். இதை ஆதரித்தது மற்றொரு கூட்டம். அமைதியாக இருப்பதன் மூலம் தனது ஆதரவை மறைமுகமாக தெரிவித்தது மற்றொரு கூட்டம். ரயில் நிலையத்தில் இந்துக் கடவுள்களின் மேல் வர்ணத்தை பூசி அசிங்கப்படுத்தியது ஒரு கூட்டம். இப்படிப்பட்ட எத்தகைய அசிங்கங்களாக இருந்தாலும் சரி, அதை செய்வோம், அதனால் நமக்கு விளம்பரம் கிடைக்கும் என்று நினைக்க வைத்தது 2017.

எந்த ஒரு விஷயத்தை செய்தாலும், அது சட்டப்படியும், நியாயப்படியும் சரியாக இருக்க வேண்டும். இதில் தனிப்பட்ட நியாயங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதாவது சட்டமும், நியாயமும் ஒரே கோட்டில் செயல்பட வேண்டும். ஆனால் இன்று நிலை அப்படியில்லை. எந்த தவறை வேண்டுமானாலும் செய்யலாம். அதை சட்டப்படி கையாண்டால் போதும்', என்ற நிலையை பார்க்கிறோம். ‘தவறே நடக்கவில்லை என்று சொல்வதற்கும், அரசு தவறை நிரூபிக்க தவறிவிட்டது', என்று சொல்வதற்குமிடையே உள்ள வித்தியாசமே சட்டத்திற்கும், நியாயத்திற்குமிடையே உள்ள இடைவெளி. இந்த இடைவெளி மிகச் சிறியதாக இருந்தாலும்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சட்டம் ஒரு திசையிலும், நியாயம் மற்றொரு திசையிலும் பிரயாணிப்பதை பார்க்க முடிகிறது. 

இத்தகைய பிரயாணங்கள் தீர்ப்புகளை கேளிப்பொருளாக்கிவிடும். சட்டத்தில் ஓட்டை இருக்கலாம், ஆனால் நியாயத்திற்கு அது கிடையாது

இதை புரிந்துகொள்ளும் சிலர் நம்மிடையே இன்றும் இருக்கிறார்கள். யார் அவர்கள்? தெரிந்து கொள்ள மகாபாரதத்தில் சொல்லப்பட்ட விபுலர் சரித்திரத்தை படிப்போம்.

தேவசர்மா என்று ஒரு ரிஷி இருந்தார். அவருடைய மனைவி ருசி. மிக அழகானவள். அவள் மீது இந்திரனுக்கு ஒரு கண். அவளை எப்படியாவது அடையவேண்டும் என்று முடிவெடுத்தான். இது தேவசர்மாவிற்கும் தெரியும்.

ஒரு நாள் தேவசர்மா ஒரு யாகத்திற்காக வெளியூர் செல்லும் அவசியம் ஏற்பட்டது. தன்னுடைய சிஷ்யனாகிய விபுலனை அழைத்தார்.

‘விபுலா! என் மனைவி மீது இந்திரன் நாட்டம் கொண்டிருக்கிறான். நான் இங்கு இல்லாதபோது அவன் தவறான முயற்சியை செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அவன் மாயைகளை செய்பவன். ஆகையால், நீதான் என் மனைவியை, இந்திரனிடமிருந்து காப்பாற்ற வேண்டும்', என்று கூறிவிட்டு கிளம்பினார்.

குருவின் கட்டளையை ஏற்று காவலுக்கு அமர்ந்தான் விபுலன்.

‘இந்திரன் மாய வேலைகளில் ஈடுபடுவான். காற்று உருவத்தில் வீட்டிற்குள் நுழைந்தால் என்ன செய்வது', என்று யோசித்தான் விபுலன்.

யோக சக்தியின் மூலமாக தன்னுடைய உடலை வெளியே விட்டு, ருசியின் உடலில் நுழைந்தான் விபுலன். ஐம்புலனையும் அடக்கியவாறு காவல் பணியைத் தொடர்ந்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே இந்திரன் அங்கு வந்தான். ருசியிடம் நெருங்கினான். ருசியின் உடலில் தங்கியிருந்த விபுலன், அவளுடைய உணர்வுகளை கட்டுப்படுத்தினான். இந்திரனை எச்சரித்து அனுப்பினான். அவமானத்துடன் இந்திரன் அங்கிருந்து கிளம்பினான். இதன் பின்னர் தேவசர்மா ஆசிரமம் திரும்பினார். இந்திரன் வந்ததையும், தான் ருசியை காப்பாற்றியதையும், இந்திரனை எச்சரித்து அனுப்பியதையும் சொன்னான் விபுலன். தேவசர்மா மகிழ்ந்து போனார்.

குருவின் கட்டளையை நிறைவேற்றிய திருப்தி விபுலனுக்கு. ‘இனி சாதிக்க வேண்டியது ஏதுமில்லை. தான் தவப்பயனை அடைந்துவிட்டோம்', என்று நினைத்தான். அந்த நினைப்பிலேயே நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான் விபுலன்.

அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு சக்கரம் போல் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் திடீரென்று வேகமாகச் சுற்ற ஆரம்பிக்க, மற்றவன் தடுக்கி விழுந்தான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினர்.

‘நம் இருவரில் எவன் பொய் சொல்கிறானோ, அவனுக்கு விபுலனுக்கு என்ன கெட்ட கதி வருகிறதோ, அது வரட்டும்', என்று அவர்கள் இருவரும் கூறினார்கள்.

திடுக்கிட்டுப்போனான் விபுலன். அப்படியே யோசித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினான். எதிரில் ஆறு மனிதர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘நம்மில் எவன் மற்றவர்களை ஏமாற்ற நினைக்கிறானோ, அவன் விபுலன் அடையப்போகும் கதியை அடையட்டும்', என்று பேசிக்கொண்டிருந்தனர்.

ஆடிப்போனான் விபுலன். ‘என்ன தவறு செய்தேன்', என்று யோசிக்கத் தொடங்கினான். அப்போது ஒரு விஷயத்தை மனம் அவனுக்கு உணர்த்தியது. குருவின் மனைவியை காப்பாற்றினேன்', என்ற விஷயத்தை குருவிடம் தெரிவித்தோம், ஆனால், யோக சக்தியின் மூலம் அவளின் உடலில் புகுந்த விஷயத்தை குருவிடம் நான் தெரிவிக்கவில்லை. இந்த ஒரு பிழையைத் தவிர வேறு எந்த தவறையும் நான் செய்யவில்லை. இதற்கு பிராயச்சித்தம் தேட வேண்டும்', என்று தீர்மானித்தான் விபுலன். நேராக குருவிடம் சென்றான். நமஸ்கரித்தான்.

அப்போது குரு பேசினார்.

‘வழியில் முதலில் இருவரையும், பிறகு அறுவரையும் கண்டாயா? என் மனைவி ருசி தேவிக்கும், உனக்கும் மட்டுமே தெரிந்த விஷயத்தை அவர்கள் பேசினார்களா?' என்று கேட்டார் குரு.

அதிர்ந்து போனான் விபுலன். ‘ஆம் குருவே! அவர்கள் யார்? அவர்களுக்கு எப்படித் தெரியும்' என்று கேட்டான் விபுலன்.

‘விபுலா! சக்கரம் போல சுற்றிக் கொண்டிருந்த இருவர் இரவும், பகலும் ஆவார்கள். அதற்குப்பின் நீ சந்தித்த ஆறு மனிதர்கள், ஆறு பருவங்களை குறிக்கிறார்கள். நாம் செய்தது யாருக்கும் தெரியாது என்று ஒரு மனிதன் நினைக்கலாம், ஆனால் அவனுடைய செயலை இரவும், பகலும், ஆறு பருவங்களும் அறியும். நீ செய்த காரியம் எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு தவப்பயன் முழுவதும் கிடைத்ததாக நீ நினைத்த போது, உன்னுடைய செயல் தங்களுக்குத் தெரியுமென்பதை அவர்கள் நினைவூட்டினர். மனைவியை காப்பாற்ற வேறு வழியே இல்லை என்ற நிலையில்தான் நீ அவளின் உடலில் யோக சக்தியால் நுழைந்தாய். உன் மனத்தில் எந்தக் களங்கமும் இல்லை. என் கட்டளையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே அப்படிச் செய்தாய். ஆகையால் நீ எந்த தவறும் செய்யவில்லை. நடந்ததை முழுமையாக என்னிடம் சொல்லாமல் இருந்ததுதான் நீ செய்த தவறு. அதையும் இப்போது உணர்ந்துவிட்டாய். இனி உனக்கு ஒரு பாவமும் இல்லை', என்று சொன்னார் குரு.

கதையில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ‘நம்மைச் சுற்றி யாரும் இல்லை, நாம் செய்யும் காரியம் யாருக்கும் தெரியாது என்று நினைத்தால் நம்மைவிட முட்டாள் யாரும் இருக்க முடியாது. சட்டத்தின் கண்களை கட்டிவிட்டோம், நியாயத்தைப் பற்றி கவலையில்லை' என்பது போன்ற சித்தாந்தங்களை ‘தவறு' என்று காலம் உணர்த்தும். உப்பைத் தின்ற எல்லோரும் தண்ணீர் குடிக்கவில்லை', என்று கவலைப்பட வேண்டாம். இதை காலத்தின் கைகளில் விட்டுவிடுவோம்.

நான் மக்களை ஏமாற்றவில்லை, அரசைத் தான் ஏமாற்றுகிறேன். என் கணக்கு வழக்குகள் மிகச்சரியாக இருக்கிறது. எது வாங்கினாலும் அதற்கு கணக்கு வைத்திருக்கிறேன். என்னால் ஒரு ஓட்டை பத்தாயிரம் ரூபாய் கொடுத்தும் வாங்கவும் முடியும், அதை யாரும் நிரூபிக்க முடியாமல் செய்யவும் முடியும். ஆற்று மணலை திருட்டு மணல் என்று பெயர் மாற்றவும் முடியும், திருட்டு மணலை ஆற்று மணல் என்று பெயர் மாற்றவும் முடியும். விளைநிலங்களை பட்டினி போடவும் முடியும், அதை ப்ளாட்டுகளாக மாற்றவும் முடியும். மாமலைகளையும் சின்னஞ்சிறு ஜல்லிகளாக செதுக்கவும் முடியும், செதுக்கியதை சில்லறைகளாக மாற்றவும் முடியும். அரசுக்கு சுராபானத்தை சப்ளை செய்யவும் முடியும், அதில் சொந்த பானத்தை கலக்கவும் முடியும். எல்லாமே சட்டப்படி மிகச்சரி. நியாயப்படி சரியா? சரியோ தவறோ, அதை காலம் என்ற பெயரில் இருக்கும் அந்த ஆறு பேரும், இரண்டு பேரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் தவறவிடும் எல்லா தவறுகளையும் காலம் உணர்த்தும்.

2017 அரசியல் குழப்பங்களை விட்டுச் சென்றுள்ளது. இதை தீர்க்கும் பொறுப்பு நமக்கும், 2018ம் ஆண்டுக்கும் உள்ளது. நமக்கு பிடித்தமானவர்கள் செய்யும் தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுவதை முதலில் நிறுத்துவோம். ஸ்லீப்பர் செல்களாக மாறிப்போன நமது மனசாட்சிக்கு உயிர்கொடுப்போம்.

2018ம் ஆண்டு எல்லா வளங்களையும், அமைதியையும், நேர்மையையும், நியாயத்தோடு இணைந்த சட்டத்தையும், நமக்கு அளிக்கட்டும்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com