கொல்லாமை எனும் மலர்!

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பை உண்பவன்
கொல்லாமை எனும் மலர்!

'தன்னூன்பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
 
எங்ஙனம் ஆளும் அருள்.

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பை உண்பவன் பிற உயிர்களிடத்தில் எவ்வாறு அருள் உடையவனாக இருக்க முடியும்?

ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு உங்கள் உடல் பாகத்தை கீறுங்கள் அதே கத்தியை ஒரு மாட்டின் உடல் பாகத்தில் கீறுங்கள். ஒரு கோழியின் உடல் பாகத்தை கீறுங்கள். உங்களுக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ, அதே உணர்வு தான் ஆடு, மாடு, கோழிபோன்ற அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும். இங்கு உடல் உருவம்தான் வேறே தவிர, உணர்வு ஒன்றுதான். இது மனிதனின் அடிப்படை புரிதல்.

ஒரு குழந்தையின் தந்தை இறந்த போது, அந்த பிணத்தின் அருகில் அவரது மூன்று வயது குழந்தை ஏதும்அறியாமல்விளையாடுகிறது. 

எல்லா உயிர்க்கும் இது பொருந்தும். இதுவே அறியாமை. இதை நாம்சாதகமாக எடுத்துக்கொண்டு ஒரு உயிரைக் கொன்று, அதை மற்ற  கிருமிகள் தின்பதற்க்கு முன்னர், அதனோடு போட்டி போட்டு, அந்த பிணத்திற்க்குள் கையை விட்டு அதன் சதைகளைப் பிய்த்து எடுத்து  சமைத்து உண்ண வேண்டுமா ?

நமக்கு வேறு உணவு வகைகள் இல்லையா ?

தாவரங்களும் உயிரனங்கள் தானே என்று வாதிடுபவர்களும் உண்டு.

பெரும்பாலான தாவர உணவு வகைகள் பழங்கள், நமக்கு கொடுக்கப்பட்டு அதனோடு, அதன் விதைகளைப் பரப்பும் பணியும் கொடுக்கப்படுகிறது. நம் இயற்கை உடலமைப்பும், பற்கள் அமைப்பு, ஜீரண அமைப்பு எவையும் புலால் உண்ணும் மிருகங்களின் அமைப்போடு ஒத்து போவதில்லை

அசைவ உணவு, உங்கள் ஆன்மிக சக்தியையும், ஆன்மிக மன வியாபகத்தையும் மிகவும் பாதிக்கும் என அறிஞர்கள் கூறுவர். நாம் சாப்பிடும் உணவு நம் எண்ணங்களை, நம் மனநலனை மிகவும் பாதிக்கும் தன்மையுள்ளது. உணவை தயாரிக்கும் போதும், உணவைப் பரிமாறும் போதும், நல்ல தூய எண்ணங்களுடன் செய்ய வேண்டும். உணவு தூய்மையாக இருக்க வேண்டும். அதை  தயாரிக்கும் போதும் பரிமாறும் போதும் உடல் தூய்மையும் உள்ள தூய்மையும் இருக்க வேண்டும். அவ்வாறு அல்லாத உணவு   குற்றமுடையது. தோஷமுள்ளது.

உணவில் ஐந்து வகையான தோஷங்கள் உள்ளது. அது பதார்த்த   தோஷம்,   பரிசாரக தோஷம், பாத்திர பரிகல தோஷம், உணவு பரிமாறுபவர் தோஷம்,  சம பந்தி தோஷம் போன்றவையாகும்.

பதார்த்த தோஷம் என்பது உண்ணத்தகாத உணவுகளை உண்ணுவதால் வருவது. புலால் உணவு, தீய வழியில் தேடியசம்பாத்தியத்தில் வரும் உணவு இதில் சேரும்.

பரிசாரக தோஷம் என்பது உணவு சமைப்பவர் நல்லொழுக்கம்உள்ளவராகவும், நற் சிந்தை உள்ளவராகவும், திருப்திகரமான மனம் உடையவராகவும், இறை பக்தி உள்ளவராகவும், யாருக்காக சமைக்கிறாரோ அவர்களிடம் அன்பும், அக்கறையும் உள்ளவராகவும்இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல் மனதாலும், உடலாலும் சுத்தமில்லாமல் இருப்பதும், அங்கலாய்த்த மன நிலையுடன்இருப்பதும், உணவுக்கு பரிசாரக தோஷத்தை உண்டாக்கும். விலைக்கு வாங்கிய உணவு இவ்வாறு பரிசாரக தோஷம் உள்ளது.

பாத்திர பரிகல தோஷம் என்பது உணவு சமைக்கும் பாத்திரங்களும், பரிமாறும் பாத்திரங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். இந்தப் பாத்திரங்களின் சுத்தமின்மையாலும், மாமிசங்களின் சமையலுக்கு பாவித்த பாத்திரங்களைப் பாவிக்கும்போதும் அது உணவுக்கு பாத்திர பரிகல தோஷத்தை உண்டாக்குகின்றது.

உணவு பரிமாறுபவர் நல்ல மனதுடன் நல்ல உணர்வுடன் உணவு பரிமாற வேண்டும். பரிமாறுபவரின் மன உடல் அசுத்தங்களினாலும் தோஷம்  உண்டாகின்றது.

சம பந்தி தோஷம் என்பது உடன் இருந்து உண்பவர்கள் உடல்சுத்தமாகவும், நல்ல மனதுடனும், நல்ல உணர்வுகளுடனும் உணவு உண்ண வேண்டும்.

அவ்வாறில்லாமல் ஆசூசையுடன் அல்லது அங்கலாய்ப்புடன இருந்தாலும், அழுக்காக இருந்தாலும், ஆன்மிக உணர்வுகள் அல்லது பழக்கங்கள் அற்றவராக இருந்தாலும் வருவது சம்பந்தி தோஷம்.

என்ன இது? இந்தக் காலத்தில் இந்த மாதிரி  தோஷங்களா என்று கேட்பவர்கள் உள்ளார்கள்.

நாம் ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, இவையெல்லாம்இயற்கையாகவே உள்ளது. இவற்றின் மன, குண தாக்குதல்கள்நம்மைப் பாடாய்ப்படுத்தும். ஆகவேஇதை உணர்ந்து கடைப்பிடித்து மேன்மை அடைவது அவரவர் விருப்பம்.

கொல்லாமை, புலால் மறுத்தல் என்று பல அதிகாரங்கள் திருவள்ளுவர் சொல்வதன் மூலம் அவர் இந்த கருத்தை எவ்வளவு ஆழமாக கூறுகிறார் என்பதுதெளிவு அதேபோல் திருமந்திரத்திலும் திருமூலரும் இதை பல செய்யுள்களில் வலியுறுத்துகிறார்.

கொல்லாமை (திருமந்திரம் - முதல் தந்திரம்):

‘பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்

மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்

நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்

உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே’

ஒப்பற்ற ஞானகுருவாக விளங்கும் சிவபெருமானுடைய பூஜைக்கு உகந்த பல மலர்களுள் முதன்மையானது கொல்லாமை எனும் மலர்என்று குறிக்கிறார் திருமூலர்.

பூஜையினை ஏற்க எழுந்தருளும் பரமன் தன் திருமுன்பு இடப்படும் மலர்களுள் 'கொல்லாமை' எனும் மலரை மிகவும் ஆவலுடன்தேடுகிறான். அது இல்லாது போயின் பூஜையினை ஏற்காதுவிலகிச் செல்கிறான்.

புலால் மறுத்தல் (திருமந்திரம் - முதல் தந்திரம்):

‘பொல்லாப் புலாலை நுகரும் புலையரை

எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்

செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்

மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே!!’

பிற உயிர்களின் பரிதாபக் கதறலில் இருந்து தோன்றும் மாமிசத்தை 'பொல்லாப் புலால்' என்று குறிக்கிறார் திருமூலர்.

'தன் பொருட்டு பிராணிகள் துடிதுடித்து உயிர் இழப்பதைப் பற்றி சிறிதும் வருத்தம் இன்றி புலால் உட்கொள்வோரை நரகத்தில் யம தூதுவர்கள் சிறிதும் இரக்கம் காட்டாது நெருப்பில் புரட்டி எடுப்பர்' என்று ஐயம் திரிபற அறம் உணர்த்துகிறார் திருமூலர்.

கொல்லாமை (திருமந்திரம் - முதல் தந்திரம்):

‘கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை

வல்லடிக்காரர் வலிக்கயிற்றால் கட்டிச்

செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை

நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே’ 

கொல் -குத்து,வெட்டு என்று பிற உயிர்களின் துன்பத்தைக் கருத்தில் கொள்ளாது இருப்போரை 'மாக்கள்' என்று கடுமையாய்ச் சாடுகிறார் திருமூலர்.

இச்செயல் புரிபவர்கள் மிகக் கடுமையான முறையில் நரகத்தில்இடப்படுவர் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் (பரிபூரண சிவ ஞானம் கைவரப் பெற்ற) திருமூலர்.

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார் பன்றியின் இறைச்சியை சமைத்து சிவபெருமானுக்கு படைத்தார் என்று பெரியபுராணம் கூறும்.

சைவ உணவு எது, அசைவ உணவு எது, அதன் தன்மைகள் என்ன என்று பகுத்தறியும் பக்குவ சூழலில் கண்ணப்ப நாயனார் பிறந்து வளரவில்லை.

நமக்குத் தெரியாமல் நாமே எத்தனையோ குற்றங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இதற்காகக்தான் பல சித்தர்களும் ஞானிகளும் பொது வாழ்வை விட்டு அகன்று தனிமையில் காடு மலைகளில்குற்றமில்லாத வாழ்வை ரசித்தும் அர்ப்பணித்தும் வாழ்ந்தனர், வாழ்கின்றனர். கண்ணப்ப நாயனாரின் அன்பு எப்படிப்பட்டதுஎன்பதையே மையக் கருத்தாக பெரியபுராணம்எடுத்துக்கூறுகிறது. அதுவே, நமக்கு புராணங்கள் காட்டும் பாடம். புலால் மறுத்தலையும், உயிர்களைக் கொல்லாமையும் இந்து சமயம் வலியுறுத்தி நிற்கிறது. 

ஆன்மஞானத்தை அடைய புலால் மறுத்தல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com