வாத்தியார் சுஜாதா!

இன்று (27.02.2017) 'வாத்தியார்' சுஜாதாவின் நினைவு தினம்..! - ஒரு எளிய வாசகனாக சுஜாதாவைப் பற்றிய மனப் பதிவுகள்.
வாத்தியார் சுஜாதா!

இன்று (27.02.2017) 'வாத்தியார்' சுஜாதாவின் நினைவு தினம்..! - ஒரு எளிய வாசகனாக சுஜாதாவைப் பற்றிய மனப் பதிவுகள்.

அவரைப் பற்றி பொதுவாக என்ன கூற முயன்றாலும் அனைத்துமே நிறைய வாசகர்கள் பகிர்வது / எழுதுவதை ஒத்த ‘கூறியது கூறலாக’ அமைய மட்டுமே வாய்ப்புகள் அதிகம்.இருந்தாலும் நம்முடைய அனுபவங்கள் நமக்கு பிரத்யேகமானவை அல்லவா?

மறைந்த எனது தந்தை வெங்கட்ராமன் அவர்கள் எனக்களித்த பெரும் வரம் ‘வாசிப்பு’ பழக்கம். சிறுவர்மலர், அம்புலிமாமா, பூந்தளிர், க்ரைம் நாவல்கள் எனத் தொடங்கிய பயணத்தின் முதல் வேகத்தடை வாத்தியார் சுஜாதாவிடம்தான் நிகழ்ந்தது.

மிகச் சரியாக எந்த புத்தகம் என அறுதியிட்டு கூற இயலாவிட்டாலும் 'கணேஷ்-வசந்த்' காம்பினேஷனாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம். நான் கூறுவது எனது உயர்நிலைப் பள்ளிப் பருவத்தின் ஆரம்ப கட்டங்களில்..! பின் எதிர்பாராத விதமாக அவரது அபுனைவுகளின் மீதும் அப்போதே ஆர்வம் திரும்பியது. குறிப்பாக இரண்டு புத்தகங்கள் நினைவில் இப்போதும் தளும்புகிறது. அவை 'அடுத்த நூற்றாண்டு' மற்றும் 'தலைமைச் செயலகம்' இரண்டும்.

'அடுத்த நூற்றாண்டு’ முழுமையாக கம்ப்யூட்டர் அடிப்படைகள் பற்றியது. 'தலைமைச் செயலகம்' நிறைய அறிவியல் கட்டுரைகள் நிரம்பியது என ஞாபகம். இவற்றை எட்டாவது / ஒன்பதாவது வகுப்பு மாணவனாக இருந்த போது வாசித்தேன். அந்த வயதில் அத்தனை சுவாரஸ்யமாகவும், ஆழ்ந்தும் படிக்க வைக்க அவரால்தான் முடிந்தது. என் வாசிப்பின் வீச்சை சரியாக உணர்த்துவதென்றால், இப்போது கணிப்பொறி பயன்பாட்டியல் (MCA) என்பது எனது கல்வித்தகுதி. ஆனால் அப்போதே கம்ப்யூட்டரின் மிக ஆதார அடிப்படைகளான பைனரி சிஸ்டம், மெமரி, ராம், ரோம்,சி.பி.யூ,ஹெக்சா டெசிமல் பேஸ்டு ஆல்ஃபா ந்யூமரிக் ஸ்டோரேஜ் என கொள்ளை விஷயங்களின் அடிப்படை அறிமுகம் வாத்தியாரால் வாய்த்தது. ஆனால் இதில் நகைமுரண் என்னவெனில் முதன் முதலில எனக்கு மேனிலை இரண்டாம் ஆண்டில்தான் கணிப்பொறி பற்றிய பாடம் அறிமுகம் ஆனது என்பதும், பின்னர் பி.எஸ்சி பிஸிக்ஸ் படிக்கும் போதுதான் தஞ்சாவூர் கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு கம்ப்யூட்டரை தொட்டுப் பார்த்து மவுஸ் வைத்து பெயிண்ட்டில் வட்டம் போட்டு பழகியதும்தான்..! :-(

இப்படித் தொடங்கிய வாசிப்பு பயணமானது பின்னர் ஊர் நூலகங்களில் கிடைக்கும் அவரது அனைத்து வகை புத்தகங்களையும் தேடித் தேடிப் ரசித்துப் பிடித்துப் படிக்க வைத்தது. அவரது 'நிலா நிழல்' போன்ற ஒரு ஸ்போர்ட்ஸ் நாவல் இதுவரை தமிழில் வந்ததில்லை என்பேன். என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற புதினங்களைப் படிக்க படிக்க பரவசம் ஏற்பட்டது.

வாத்தியாரை பற்றி பேசும்பொழுது விகடனையும் மறக்கவே முடியாது. ‘இரண்டாவது காதல் கதை’, 'அனாமிகா' உள்ளிட்ட தொடர்கதைகள் விகடனில் வெளிவந்தது. அன்று முதல் இன்று வரை என் மனத்துக்கு நெருக்கமான கட்டுரைத் தொடர் 'கற்றதும் பெற்றதும்'  இரண்டு பாகங்கள் வெளிவந்த அந்த காலகட்டம் உண்மையில் சுஜாதா வாசகர்கள் அனைவருக்கும் அது ஒரு பொற்காலமாகவே இருந்தது.கொஞ்ச காலத்திற்குப் பிறகுதான் அவரது 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்' வாசிக்க வாய்த்தது என்றாலும் க.பெ அளித்த பிரமிப்பும், நீட்சியாக  எழுந்த  தேடல் உணர்வும் அற்புதமானது. நா.முத்துக்குமார், மனுஷ்யபுத்திரன், புவியரசு, கலாப்ரியா என பலரை அறிமுகம் செய்தது அந்த பத்திகள்தான். பல்துறை சார்ந்த வாசிப்பை ஆங்கிலத்தில் கூட செய்ய வேண்டும் என்ற ஆசையும் உருவானது அப்பொழுதுதான்.இந்த பத்தியில் அடிக்கடி கூறப்படும் " ஸ்ரீரங்கத்து தேவதைகள்" நூலை வாசிக்க ஆசைப்பட்டு அப்பொழுது தேடி கிடைக்காமல் அடைந்த வருத்தம் எல்லாம் தனிக்கதை.

ஒரு எழுத்தாளனுக்கு வாசகனுக்குமான உறவு அந்தரங்கமானது. நமக்கான எழுத்தாளர்களை கண்டடைவது அரிது. அவர் பொதுவாக அனைவருக்கும் எழுதியது நமக்கே நமக்காக எழுதப்பட்டது போல் இருக்கும். வாத்யார் எழுதிய சில கதைகளைப் படித்த பின் அவரை நேரில் சந்தித்து அது குறித்து பேச வேண்டும் என்று நினைப்பேன். அதன் பின் அடுத்தடுத்த வேலைகள் வாழ்க்கை சூழல்கள் அதை எண்ண அளவில் மட்டுமே நிறுத்தி வைத்துவிட்டன. ஆனால் எழுத்தின் மூலம் அவருடைய ஆன்மாவை ஓரளவு கண்டடைய முடிந்ததில் ஒரு வாசகனாக மகிழ்ச்சியடைகிறேன்.

வாத்யார் இருதயக் கோளாறுக்காக மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகு, விகடனில் வெளியான அவரது பேட்டியில் அதற்கான புகைப்படம் பார்த்தவுடன் மனதை ஏனோ ரொம்பவே துணுக்குறச் செய்தது. அவர் நலமடைந்து விட்டார் என்று அறிந்த பின்னர் தான் மனம் சமாதானம் அடைந்தது. மீண்டும் அவர் எழுத்துக்களுடன் பயணித்துக் கொண்டிருந்த காலத்தில், திடீரென்று ஒரு நாள் இரவு டி.வி செய்திகளில் உடல்நலக் குறைவால் வாத்தியார் காலமான செய்தி வந்தது. ஏதோ மிக நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த செய்தி கேட்டது போல மனம் நிம்மதியிழத்து தவித்தது.

பின்னர் பிழைப்புக்காக சென்னை வந்த பின்புதான் வாசிக்கத் தவறிய / கிடைக்காத அவரது நூல்கள் எல்லாம் கன்னிமாரா நூலகம் வாயிலாகவும், தாம்பரம் சானட்டோரியத்தில் உள்ள ஒரு தனியார் நூலகத்திலும் கிடைத்தன.பின்னர் உயிர்மை வாயிலாக சிறுகதைகள் / குறுநாவல்கள் / கட்டுரைத் தொகுப்புகள் என வாத்யாரின் மொத்த படைப்புக்களையும் படிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது.

ரொம்பவே தேய்வழக்காக இருந்தாலும் மீண்டும் சொல்வதென்றால் ஒரு இடைவேளைக்குப் பிறகு தமிழ் உரைநடையில் அவர் அளவுக்கு மாற்றத்தை கொண்டு வந்தவர் இல்லை என்று உறுதியாகச் சொல்வேன். இதை உயிர்மையின் விழா ஒன்றில் எழுத்தாளர் சாரு நிவேதிதா பேசியே கேட்டிருக்கிறேன். என் அறிவுக்கு எட்டிய வகையில் பத்தி எழுத்துக்களில் இன்று வரை அவர்தான் "undisputed king". இலக்கிய அடையாளம், அங்கீகாரம் எல்லாம் அர்த்தமற்ற ஒன்று.

இறுதியாக 2009-ல் இருந்து சென்னை வாசியாகி, நிறைய இலக்கியக் கூட்டங்களில், புத்தக கண்காட்சிகளில் பங்கு பெற்று ஆதர்சமான படைப்பாளிகளை சந்தித்துள்ளேன்.பின்னர் வாசகசாலை என்னும் இலக்கிய அமைப்பின் உறுப்பினராக ஆகி நிகழ்வுகளுக்காக அப்படியான நிறைய படைப்பாளிகளுடன் பழகவுமே வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இன்றுவரை பார்க்க முடியாமல் போனதற்காக வருந்துவது வாத்தியார் சுஜாதாவை தான். அதிலும் குறிப்பாக பேஸ்புக்கில் இலக்கியம் தொடர்பாக பலவகையான கோமாளித்தனங்கள் அரங்கேறும் போதெல்லாம் ‘ச்சே..இவர் இல்லாம போயிட்டாரே?’ என நினைப்பதும் அவர் ஒருவரை மட்டுமே..!

வாசிப்பு என்னும் பழக்கத்தை அறிமுகம் செய்ததற்காக என் தந்தைக்கும், தன் நிகரற்ற எழுத்தின் மூலமும், அதன்வழி அறிமுகப்படுத்திய விஷயங்களுக்காகவும் வாத்தியார் சுஜாதாவுக்கும் என்றைக்குமான தீராத நன்றிக்கடன் பட்டுள்ளேன் ..! மிஸ் யூ வாத்யாரே..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com