நெருங்கும் முதல்வர் பதவி... தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு! நடுவில் சசிகலா!

வழக்கின் போக்க்கைப் பொறுத்து பதவியிழக்க நேர்ந்தால் அப்போது என்ன செய்வார் சசிகலா? ஜெ வழியில் மீண்டும் ஒரு மேல் முறையீடு! மீண்டும் ஒரு இடைத்தேர்தல் என்று சிந்துபாத் கதை போல இந்த வழக்கு முடிவேயின்றி...
நெருங்கும் முதல்வர் பதவி... தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு! நடுவில் சசிகலா!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 27, 2014 அன்று சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் குற்றத்தில் ஈடுபட்டமைக்காக ஜெ வுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி அபராதத் தொகையும் விதிக்கப்பட்டது, ஜெ வுடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு, 10 கோடு ரூபாய்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. 

மைக்கேல் டி. குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜெ தரப்பு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெ மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் முறையாக நிரூபிக்கவில்லை எனக் கூறி ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். 

ஜூன் 23 2015 ஆம் நாள், நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத்  தாக்கல் செய்தது. 2015 ஜூலை மாதம் உச்சநீதிமன்றம், கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதில் அளிக்கக் கூறி ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் நால்வருக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி பல வாரங்கள் அல்ல பல மாதங்கள் கடந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட முதன்மைக் குற்றவாளி சமீபத்தில் காலமானார். ஆனாலும் முதன்மைக் குற்றவாளி இறந்து விட்டதால் வழக்கு கைவிடப் படாது, தொடர்ந்து நடைபெறும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.  அதனடிப்படையில் வழக்கின் போக்கு என்னவாகப் போகிறது? என்பதே அறியப்படாத நிலையில் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது ஜெ மறைந்த உடனே அவசர அவசரமாக சசிகலா பட்டம் கட்டிக் கொள்வது அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கும், மந்திரிகளுக்கும், முதற்கட்ட இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும், மன்னார் குடி வகையறாவினருக்கும் மட்டுமே லாபகரமானதாக இருக்குமே தவிர இந்திய அரசியல் சாசனத்தைப் பொறுத்தவரை இது அவமதிப்பான செயலாக ஆகாதா? குற்றத்திலிருந்து விடுவிக்கப்படாத ஒரு நபர் தான் சார்ந்த கட்சித் தலைமையை வேண்டுமானால் ஏற்கலாம்! ஆனால் தமிழக முதல்வரானால்?

வழக்கின் போக்க்கைப் பொறுத்து பதவியிழக்க நேர்ந்தால் அப்போது என்ன செய்வார் சசிகலா? ஜெ வழியில் மீண்டும் ஒரு மேல் முறையீடு! மீண்டும் ஒரு இடைத்தேர்தல் என்று சிந்துபாத் கதை போல இந்த வழக்கு முடிவேயின்றி நீடித்துக் கொண்டே செல்லுமா? அப்போது தமிழக மக்களின் கதி என்ன?

ஜெ பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றது முதலே தமிழ்நாட்டு அரசாங்கத்தில் இயங்காத் தன்மை தான். சிறை சென்று மீண்டதன் பின் அவசர, அவசரமாக அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அயல்நாட்டு முதலீடுகளை ஈர்க்க பறக்கும் குதிரை மாநாடு, ஃபோர்ட் தொழிற்சாலை ஒப்பந்தம் என்றெல்லாம் ஜெ சில நல்ல திட்டங்களை முன்னெடுத்திருந்தாலும், உடல் நலக் கோளாறு காரணமாக செப்டம்பர் 22 இரவில் அப்பல்லோவில் அனுமதிக்கப் பட்டது முதல், அவரது மரணம் வரை ஜெ சார்பாக தமிழக அரசை நடத்தியது யார்? என்ற கேள்விக்கு மக்கள் மனதை சமரசப் படுத்தக் கூடிய விதமான பொருத்தமான பதிலென்ற ஒன்று எப்போதும் கிடைக்கப் போவதே இல்லை. இந்தச் சூழலில் சசிகலா முதல்வராக வேண்டும் என்பது அதிமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுதலாக மட்டுமே எடுத்துக் கொள்ளப் படுகிறதே தவிர இந்த வேண்டுகோளுக்கு மக்களிடையே வெற்றி கிட்டுமா எனத் தெரியவில்லை.

ஏனெனில் மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். ஜெ இன்று மறைந்து விட்டார். அதனால் அவர் மீது வைக்கப் பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்துமே மாண்டு விட்டதாக அர்த்தமில்லை. அவை இன்னும் உயிருடன் தான் இருக்கின்றன. அவருடன் சேர்த்து குற்றம் சாட்டப் பட்ட சசிகலா நடையில், உடையில், பேசும் முறையில் ஜெ வை நகலெடுக்கலாம். வழக்குகளைச் சந்திப்பதிலும் ஜெ வை நகலெடுத்து வருடங்களை இழுத்தடிப்பாரானால் சசிகலா முதல்வரான பின்னும் தமிழக அரசின் பணம் சொத்துக் குவிப்பு வழக்குகளை நடத்துவதற்கும், இடைத்தேர்தல்கள் நடத்துவதற்குமே முக்கால் வீசம் பயன்படும் என நம்பலாம்.

இது தவிர எம்.நடராஜன், 2014 ஆம் வருடம், சொத்துகுவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தனியார் ஆங்கிலச் செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறி இருந்தார்.

1991 ஆம் வருடம் முதல் முறை ஜெ தமிழக முதல்வர் ஆன போது ‘தான் கை காட்டிய நபர்களுக்குத் தான் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை அளித்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி பார்த்தால் ஜெ வை குற்றம் செய்யத் தூண்டியவர்களாக இருந்தவர்கள் மன்னார்குடி வகையறாக்கள் தானே தவிர ஜெ தனியாக குற்றங்களைச் செய்தவரில்லை என நடராஜனே முன்வந்து சொல்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியது தான். அப்படியானால் ஜெ வை குற்றம் செய்யத் தூண்டிய ஒருவர் தான் ஜெ இல்லாத வெற்றிடத்தை நிரப்பி தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆகப் போகிறாரா? 

மக்களாட்சி, மக்களாட்சி என்கிறார்களே! எது மக்களாட்சி? மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா என்பதை ஒரு பொருட்டாகவே மதிக்காத ஒரு நபர் மக்களை ஆள்வதா? வோட்டுக்கு காசு கொடுத்தும், இலவசங்களை வாரி இறைத்தும் மக்களது மூளையை மழுங்கடித்து தேர்தல்களில், இடைத்தேர்தல்களில் பெறப்படும் வெற்றிகள் நிஜமான வெற்றிகள் தானா? இந்நிலையில் சாத்தூரில் போட்டியிட்டாலும் சரி, ஆர்.கே.நகரில் போட்டியிட்டாலும் சரி, ராமநாதபுரத்தில் போட்டியிட்டாலும் சரி மக்களைப் பொருத்தவரை அது இன்னொரு திருமங்கலம் இடைத்தேர்தல் போலவோ, இன்னொரு ஆர்.கே.நகர் போலவோ இலவசங்களும், ஓட்டுக்கு காசும் கிடைக்கச் செய்யும் ஒரு வழியாகவே கருதப்படும். சொல்லப் போனால் இது மோசமான மன்னராட்சியின் சாயல் கொண்ட அரசு முறை. மன்னராட்சி கூட  அல்ல இது சர்வாதிகார ஆட்சி முறையின் சாயல் என்று நீங்கள் நினைத்தாலும் அதிலும் நிஜமில்லாமல் இல்லை.

ஆக மொத்தத்தில் நடப்பதற்கெல்லாம் அந்த சர்வேஸ்வரனே சாட்சி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com