அரசியல்வாதிகளும் நடிகர்களும் என்ன சொல்லுகிறார்கள்? என்பதைத் தாண்டிச் செல்ல ஊடகங்கள் ஏன் விரும்பவில்லை?

இன்றைய பொழுதை ஓட்டவும் பரபரப்பை ஏற்படுத்தவும் ஏதாவது சிக்கினால் போதும் என்கிற மனநிலையை மட்டுமே தமிழக ஊடகங்களிடம் காணமுடிகிறது எனும் வருந்தத்தக்க உண்மையே இறுதியாக மனதில் நிலைபெறுகிறது.
அரசியல்வாதிகளும் நடிகர்களும் என்ன சொல்லுகிறார்கள்? என்பதைத் தாண்டிச் செல்ல ஊடகங்கள் ஏன் விரும்பவில்லை?

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற சிறப்பைப் பெற்ற ஊடகம் தற்போது கடுமையான விமர்சனத்தை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய நிலையில் உள்ளன.

முறைப்படுத்தப்பட்ட அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்களுடன் இன்னும் முறைப்படுத்தப்படாத இணைய ஊடகங்களும் சமூக ஊடகங்களும் நாளுக்கு நாள் பல்கிப் பெருகி வருகின்றன.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது ஓர் ஆரோக்கியமான சூழலாகத் தோன்றினாலும் ஆழ ஆய்ந்து பார்த்தால் ஏமாற்றமே ஏற்படுகிறது. இத்தகைய ஊடக எழுச்சியால் விழிப்புணர்வு அதிகரிப்பதற்குப் பதில் குழப்பங்களே கூடுகின்றன. ஊடகத்தின் உயிர்மூச்சான நம்பகத்தன்மை என்கிற சொல்லே காணாமல் போய்விடும் நிலை உருவாகி வருகிறது.

நிகழ்வுகள் மட்டுமன்றி அவற்றின் விளைவுகளையும் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையை ஊடகங்கள் சரிவர நிறைவேற்றத் தவறும்போது ஜனநாயகக் கட்டமைப்பு தடுமாறத் தொடங்குகிறது. அத்தகைய நிலைதான் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது.

தனிமனிதத் துதி, அரசியல்வாதிகளிடம் அணுக்கம் அல்லது அச்சம், ஜாதி, மத உணர்வுகளின் தாக்கம், வியாபார நோக்கம் போன்ற எத்தனையோ காரணிகள் ஊடகங்களில் புகுந்து ஜனநாயகத்தின் நான்காவது தூணைச் சீரழித்து வருகின்றன. இவை எல்லா ஊடகங்களிலும் வியாபித்துள்ளன. இதன் காரணமாக ஊடகங்கள் இன்று கடமையை மறந்து, அடையாளத்தை இழந்து தடுமாறி நிற்கின்றன.

அறிவித்தல், தெரிவித்தல், தெளிவித்தல் என்ற கூறுகளின் மூலம் சமுதாயத்தைச் சரியான பாதையில் கொண்டுசெல்ல உதவவேண்டிய ஊடகங்கள் அதற்கு நேர்மாறாகச் செயல்படுகின்றன.

காவிரி, இலங்கைத் தமிழர், மீனவர்கள், மின் பற்றாக்குறை, குடிநீர்ப் பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்சம், ஊழல், சமூக அவலங்கள் போன்ற எத்தனையோ பிரச்னைகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், எப்போது? எப்போதெல்லாம் அரசியல்வாதிகள் அப்பிரச்னைகளைக் கையில் எடுக்கிறார்களோ அப்போது மட்டும். அத்துடன் ஊடகங்களின் கடமை தீர்ந்து விடுகிறது.

அரசியல்வாதிகளும் நடிகர்களும் என்ன சொல்லுகிறார்கள் என்பதைத் தாண்டிச் செல்ல எவரும் முயல்வதுமில்லை, விரும்புவதும் இல்லை. ஒரு பிரச்னை பற்றி ஓர்அரசியல்வாதி பேசுகிறார் என்றால் அதனை அவர் ஏன் பேசுகிறார்? எதற்காக இப்போது பேசுகிறார்? இந்த விஷயத்தில் அவர் இதுவரை என்ன செய்துள்ளார்? அவர் கூறும் விஷயத்தின் உண்மையான நிலை என்ன? இப்பிரச்னைக்குத் தீர்வாக அவர் எதனை முன்வைக்கிறார்? அது சாத்தியமான தீர்வுதானா? இதனைச் செயல்படுத்த வேண்டியவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பது போன்ற தொடர் கேள்விகளுக்கு விடை காண ஊடகங்கள் முயல்வதாகத் தெரியவில்லை.

எந்தப் பிரச்னைக்குள்ளும் ஆழமாகச் சென்று ஆய்வுசெய்யும் வழக்கத்தைத் தமிழக ஊடகங்கள் மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ஒருசில ஊடகங்கள் புலனாய்வு என்கிற பெயரில் வெளியிடும் அரைவேக்காட்டுத்தனமான தகவல்கள் அதைவிடக் கொடுமையானவையாக இருக்கின்றன.

"இருளில் தமிழகம்', "மின் கொள்முதலில் முறைகேடு', "நிலக்கரி இறக்குமதியில் ஊழல்', "மின் சாதனங்கள் வாங்கியதில் ஊழல்', "கனிமவள ஊழல்', "கிரானைட் ஊழல்', "முட்டை கொள்முதலில் ஊழல்', "டெண்டர் விடுவதில் ஊழல்', "பொதுத்துறை நிறுவனங்களை விற்க முயற்சி' என அவ்வப்போது அரசியல்வாதிகள் விடும் அறிக்கைகளை வெளியிடும் ஊடகங்கள் அதற்கு அடுத்தகட்டமாக, அந்த முறைகேடுகளுக்கான ஆதாரங்களைக் கண்டறியவோ அல்லது வெளியிடவோ ஏன் முயற்சிக்கவில்லை?

இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டது யார்? ஆதாயமடைந்தது யார்? எவ்வளவு காலமாக இது நடக்கிறது? இவற்றின் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் ஏன் வெளியாகவில்லை? அதுபற்றி வாய்திறக்க அதிகாரிகள் மறுப்பதன் பின்னணி என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு யார் விடை காண்பது? புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் எங்கே போனார்கள்?

நெல் விளைவிக்கும் காவிரி டெல்டா விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஆண்டு முழுவதும் தண்ணீருக்காக ஏங்கும் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி எவ்வளவு தூரம் சிந்தித்திருக்கிறார்கள்?

நெல் கொள்முதல் விலையைப் பற்றியும் கரும்புக்கான ஆதரவுத் தொகையையும் பற்றிய அரசியல்வாதிகளின் பேச்சுகளையும் அறிக்கைகளையும் வெளியிடும் ஊடகங்கள் சேலத்தில் உரிய விலை கிடைக்காததால் விரக்தியடைந்து வியர்வை சிந்தி விளைவித்த தக்காளியை வீதியில் கொட்டிவிட்டு வேதனையோடு வீடு திரும்பும் விவசாயிகளின் கண்ணீருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

உழுது, பயிரிட்டு, பராமரித்து, விளையும்வரை காத்திருந்து அறுவடை செய்த வெங்காயத்தை கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நிலை குறித்து ஊடகங்களில் எத்தனை முறை விவாதங்கள் நடைபெற்று இருக்கின்றன?

விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கென எத்தனையோ திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. அவற்றின் நிலை என்ன? அத்தனை திட்டங்கள் இருந்தும் விவசாயிகளுக்கு ஏன் இந்த வேதனை?

விவசாய விளைபொருட்களுக்கு உலகெங்கிலும் தேவை இருக்கிறது. இங்கே தெருவில் கொட்டும் பொருட்களைத் தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அதற்கு என்ன செய்யவேண்டும்? எப்படிச் செய்யவேண்டும்?

இது பற்றிய விழிப்புணர்வையும் பயிற்சியையும் இளைஞர்களுக்கு அளித்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் குறைக்க முடியும், விவசாயிகளின் வாழ்வையும் வளம்பெறச் செய்ய முடியும் அல்லவா?

ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இதற்கான வழிமுறைகள் பற்றி ஏன் சிந்திப்பதில்லை? அவர்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டியது ஊடகங்களின் கடமையல்லவா?

சாலை மேம்பாடு என்ற பெயரில் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியின் மூலம் தரமான சாலைகள் அமைக்கப்படுகின்றனவா? அவற்றின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டியவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்கிறார்களா அப்படிச் செய்தால் போட்ட சில மாதங்களிலேயே சாலைகள் பழுதடைவது ஏன்?

இதையெல்லாம் உரிய சமயத்தில் கண்காணித்துக் குரல் கொடுக்க வேண்டியது ஊடகங்கள்தானே? தவறு செய்தவர்களுக்கே மீண்டும் நிதி ஒதுக்கீடு, மீண்டும் புதிய சாலை அல்லது செப்பனிடும் பணி, லஞ்சம், கமிஷன், லாபம் என அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என அனைவர் காட்டிலும் மழை. இது ஊடகங்களின் உறக்கத்தால் ஏற்படும் விளைவன்றி வேறென்ன?

சொட்டுநீர்ப் பாசனத்திற்கு 100 சதவீத மானியத்தை அறிவித்த அரசு அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தியதா? இதனால் பயனடைந்தவர்கள் யார்? எத்தனை ஹெக்டேர் நிலம் சொட்டுநீர்ப் பாசன முறைக்கு உண்மையிலேயே வந்துள்ளது? இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய கடமை யாருக்கு உள்ளது?

சூரிய மின் உற்பத்திக்கு அளிக்கப்படும் மானியம் எத்தனை பயனாளிகளைச் சென்றடைந்திருக்கிறது? எத்தனை இல்லங்கள் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றிருக்கின்றன?

இதன் காரணமாக எத்தனை மெகாவாட் மின் உற்பத்தி அதிகரித்திருக்கிறது அல்லது பயன்பாடு குறைந்திருக்கிறது? வீடுகளில் சூரிய மின்சக்தித் தகடுகளைப் பொருத்துவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன? அவற்றுக்குக் காரணம் என்ன? அவற்றுக்கான தீர்வு என்ன?

கடந்த ஆண்டு சென்னை மழை மற்றும் பெருவெள்ளத்தின்போது அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டதா? வழங்கப்படவில்லை எனில் எப்போது வழங்கப்படும்? இதற்கென ஒதுக்கப்பட்ட தொகை என்ன ஆனது? இதைப் பற்றிப் பேசவேண்டிய ஊடகங்கள் எங்கே போயின?

லாபத்தில் இயங்கி வந்த சேலம் உருக்காலை திடீரென நட்டத்தில் இயங்கத் தொடங்கியதற்குக் காரணம் என்ன? புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கவனத்துக்கு இந்த செய்தி எப்படி வராமல் போனது?

ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா? அவற்றுக்காக ஒதுக்கப்படும் தொகை முறையாகச் செலவு செய்யப்படுகிறதா? திட்டங்களின் பலன் பயனாளிகளுக்குக் கிடைக்கிறதா? இவற்றையெல்லாம் யார் கண்காணிப்பார்கள்?

தமிழக மீனவர்களின் பிரச்னைகளைப் பற்றியோ ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் பற்றியோ பேசும் அரசியல்வாதிகளும் அவற்றைச் செய்திகளாக்கும் ஊடகங்களும் எவ்வளவு உணர்வுபூர்வமாகச் செயல்படுகிறார்கள் எவ்வளவு அறிவுபூர்வமாகச் செயல்படுகிறார்கள்?

பாலியல் குற்றங்கள் தொடர்பாகவும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவும் செய்திகளை வெளியிடும் முன்னர் எத்தனை ஊடகங்கள் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கின்றன? வெளியிடும் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி எத்தனை ஊடகங்கள் கவலைப்படுகின்றன?
பரபரப்புக்காக மட்டுமே செய்திகளை வெளியிடுவதை விட்டு ஆக்கபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்திக்கவும் செயல்படவும் தமிழக ஊடகங்கள் எப்போது முன்வரப்போகின்றன?

தமிழக ஊடகங்களில் திணிக்கப்படும், திரிக்கப்படும் செய்திகளைப் பற்றி எழுதப் புகுந்தால் அதிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினமாகிவிடும். இவற்றை
யெல்லாம் பற்றிச் சிந்திக்கும்போது நம் மனதில் எழும் கேள்வி - பத்திரிகை தர்மம் என்கிற ஒன்று இருந்ததே அது தற்போது தமிழகத்தில் எங்கே முடங்கிக் கிடக்கிறது, அது எப்போது வெளியே தலைகாட்டப்போகிறது?

தமிழ்நாட்டு ஊடகங்களைப் பற்றி இப்படி எத்தனையோ கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கலாம். அதற்கு முடிவேதும் இருக்கப்போவதில்லை. இன்றைய பொழுதை ஓட்டவும் பரபரப்பை ஏற்படுத்தவும் ஏதாவது சிக்கினால் போதும் என்கிற மனநிலையை மட்டுமே தமிழக ஊடகங்களிடம் காணமுடிகிறது எனும் வருந்தத்தக்க உண்மையே இறுதியாக மனதில் நிலைபெறுகிறது.

தமிழக ஊடகங்களின் தற்போதைய நிலையை விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்யும் மனசாட்சி உள்ள எவராலும் இதனை மறுக்க இயலாது.

உண்மையான பிரச்னைகளில் கவனத்தைச் செலுத்தாமல் உறங்கிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் எப்போது விழித்தெழப்போகின்றன? உறங்கும் ஊடகங்கள் இனியும் விழிக்காவிட்டால் எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற அச்சம் எழுகிறது.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com