கல்வித்துறையின் 37 அறிவிப்புகள் முழு விவரம்!

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அமைச்சர் பொறுப்பில் அதிரடியான நல்ல அறிவிப்புகளை செய்வதுடன் மாற்றங்களை செய்து வருகிறார்.
கல்வித்துறையின் 37 அறிவிப்புகள் முழு விவரம்!

பள்ளிக் கல்வி, தொல்லியல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். அமைச்சர் பொறுப்பில் அதிரடியான நல்ல அறிவிப்புகளை செய்வதுடன் மாற்றங்களை செய்து வருகிறார். 

தமிழக அரசியல்வாதி. கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கோபிச்செட்டிப்பாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் 6 முறை கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றார். அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்திருந்த போது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார். 1996-ல் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சராகவும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார். தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தில் விவசாயத் துறை அமைச்சராகவும், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றி வ‌ந்தா‌ர் செ‌ங்கோ‌ட்டைய‌ன்.

தமிழக வருவா‌‌‌ய்‌த்துறை அமை‌ச்சராக இரு‌ந்த கே.ஏ.செங்கோட்டையனை அதிரடியாக  நீக்‌கியதோடு, அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருந்து‌ம் முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா 2012 ஜூலை 18 அன்று நீக்கினார். அதையெல்லாம் மீறி, கல்வி அமைச்சராக குறுகிய காலத்தில், அவரின் தற்போதைய சாதனைகள் போற்றுதலுக்குரியவை. அவரது சமீபத்திய 37 அறிவிப்புகள் இதோ... 
 
1. புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல்

இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன், தமிழ்நாட்டில் தொலைதுார கிராமப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் மிக அவசியமாகக் கருதப்படும் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் புதிய தொடக்க பள்ளிகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் முதலமைச்சர் ஆணைப்படி, 30 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்.
 
2. அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்கான 'புதுமைப்பள்ளி' விருது வழங்குதல்

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல், புதுமையான கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுதல், அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவு செய்தல், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் ஒருங்கிணைந்து பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைக் கண்டறிந்து 'புதுமைப்பள்ளி’ என்ற விருது வழங்கப்படும். ஒரு மாவட்டத்திற்கு ஒருதொடக்கப்பள்ளி, ஒருநடுநிலைப் பள்ளி, ஒரு உயர்நிலைப் பள்ளி, ஒரு மேல்நிலைப் பள்ளி என 4 பள்ளிகளுக்கு இவ்விருது வழங்கப்படும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூபாய் ஒரு இலட்சம் மற்றும் சான்றிதழ்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, ரூ. 192 கோடி செலவிடப்படும்.

 3. எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் அட்டைகள் வழங்குதல்

தொடக்கப் பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறையில் உள்ளது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் கேட்கப்பட்டு நவீன தொழில்நுட்ப உத்திகளுடன் கூடிய புதிய பரிமாணத்தில் செயல்வழிக்கற்றல் முறை மாற்றி அமைக்கப்படும். இதனடிப்படையில் செயல்பாடுகளுடன் கூடிய புதிய கற்றல் அட்டைகள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ.3182 கோடி செலவிடப்படும்.

4. கணினிவழிக் கற்றல் மையங்கள் அமைத்தல்

2017-18 ஆம் கல்வியாண்டில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் தலா 3 கணினிகள் கொண்ட கணினி வழிக் கற்றல் மையங்கள் நாற்பதாயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 6,71 கோடி செலவிடப்படும்.
 
5. நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் வழங்குதல்

மாணவியர் பயிலும் 5639 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்குநாப்கின் வழங்கும் இயந்திரம்மற்றும் எரியூட்டி இயந்திரம் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 2256 கோடி செலவிடப்படும். 

6. பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வழங்குதல்

மாணவர்கள் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், மொழித் திறன்களை வளப்படுத்திடவும் பள்ளிகளுக்கு நாளிதழ்கள் மற்றும் சிறுவர் இதழ்கள் வழங்கப்படும்.  தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, 31322 அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இத்திட்டத்திற்கு ரூ. 483 கோடி செலவிடப்படும்.

ஆசிரியர் நலன்
 

7. பள்ளிக் கல்வித் துறையில் 4084 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல்

பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து இவ்வரசு தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, நடப்புக் கல்வியாண்டில் 3336 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

8. கனவு ஆசிரியர் விருது

அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என ஒரு மாவட்டத்திற்கு ஆறு ஆசிரியர்களைத் தேர்வு செய்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் பாராட்டுச் சான்றுடன் ரூ.10,000 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ.1920 இலட்சம் செலவிடப்படும்.

9. தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றுதல்

பள்ளிக் கல்வித் துறையில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும் தற்காலிக பணியிடங்களாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் தற்காலிக பணியிடங்களுக்கு பணியிட தொடர் நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு முதற்கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, 17,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும்.

10. சுயநிதிப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பணியிடைப் பயிற்சிகளை போன்று சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, பணியிடைப்பயிற்சிகள் வழங்கப்படும்.

மாணவர் நலன்
 

11. கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் வழங்குதல்

1 முதல் 5ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் நோக்குடன் புதிய கற்றல் கற்பித்தல் முறையின் மூலம் எழுத்துக்களை அறிதல், வார்த்தைகளை உச்சரித்தல், பேசுதல், ஒலிப்பயிற்சி போன்ற திறன்களை குழந்தைகளிடையே மேம்படுத்தும் விதமாக, கற்றல் துணைக்கருவிகள் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 3925 கோடி செலவிடப்படும்.

12. திறனறித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல்

அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் திறனறி தேர்வுகளில் (Talent Test) கலந்து கொள்ளும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டினை அதிகரிக்கும் பொருட்டு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். 7219 நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 375 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவர். தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 2.93 கோடி செலவிடப்படும்.

13. தனித்திறன் மாணவர்களை நாடுகளுக்குக் கல்விப்பயணம் அனுப்புதல்

அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் தனித்திறமையோடு சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சார்ந்த துறைகளில் நிபுணத்துவத்துடன் விளங்கும் மேலை நாடுகளுக்கு கல்விப் பயணம் மேற்கொள்ள ஆண்டு தோறும் 100 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிமாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 3 கோடி செலவிடப்படும்.

14. தமிழக மாணவர் கலைத் திருவிழா அறிமுகப்படுத்துதல்

மாணவர்களின் கலை,இலக்கியத்திறன்களை வெளிக் கொணரவும், தனித்திறன்களை வளர்க்கவும், தமிழர்தம் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு மரபுகளைப் போற்றிடும் வகையிலும் கலை, இலக்கியம் நுண்கலை உள்ளிட்ட 150 வகைப் பிரிவுகளில் பள்ளி, ஒன்றிய, கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகள் கொண்ட ஒரு மாபெரும் மாணவர் கலைத்திருவிழா அறிமுகப்படுத்தப்படும்.  தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இத்திட்டத்திற்கு ரூ.4 கோடி செலவிடப்படும்.
 
15. கல்விக்கடன் முகாம்கள் நடத்துதல்

12ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியம் தோறும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கல்விக்கடன் முகாம்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி நடத்தப்படும்.

16. ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அமைத்தல்

வளர்ந்து வரும் கல்விச் சூழலில், தமிழக மாணவர்களை அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும், திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு ஏதுவாக பயிற்சி மையங்களை அமைக்க வேண்டியது அவசியமானது என்பதை கவனத்தில் கொண்டு கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயனடைகிற வகையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு பயிற்சிமையம் அமைக்கப்படும். அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இம்மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியினை எடுத்துக் கொள்ள உரிய அனைத்து வசதிகளும் செய்யப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ.20 கோடி செலவிடப்படும்.

17. மேற்படிப்பு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டிக் கருத்தரங்குகள் நடத்துதல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்களின் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டும் விதமாக அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் மேற்படிப்பு/ வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி மையங்கள் அமைக்கப்படும். மேலும், இதுகுறித்தான ஆலோசனை மற்றும் வழிகாட்டிக் கருத்தரங்குகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் நடத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 2 கோடி செலவிடப்படும்.

மின் ஆளுமை
 

18. கற்றல் மேலாண்மைத் தளம் ஏற்படுத்துதல்

பள்ளிக்கல்வித் துறைக்கென தனியாக கற்றல் கற்பித்தல் மேலாண்மைத் தளம் ஒன்று உருவாக்கப்படும். அதன் வாயிலாக காணொளி, கணினி வழித் தேர்வுகள், அலைபேசிச் செயலிகள் போன்றவை செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். வகுப்பறைச் சூழலுக்கு பெரிதும் உதவிடும் வகையில் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, ரூ.2கோடி செலவிடப்படும்.

 19. அரசுத்தேர்வுகள் இயக்க செயல்பாடுகளை கணினிமயமாக்குதல்

அரசுத்தேர்வுகள் துறையின் வாயிலாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளும், சிறப்புத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், தேர்வு நுழைவுச்சீட்டுகள் வழங்குதல், மதிப்பெண்கள் பதிவு செய்தல், தேர்வு முடிவுகளை குறுஞ்செய்திகள் வழியாக அனுப்புதல் என பல செயல்பாடுகளைச் சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக அரசு தேர்வுகள் துறை செயல்பாடுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 2 கோடி செலவிடப்படும்.

20. இணையவழியில் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு துவக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் வழங்குதல்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் துவக்கஅனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறும் முறைகள் இணையவழி மூலம் நடைமுறைப்படுத்துவதோடு அதன் நடைமுறைகள் எளிமையாக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ.10 இலட்சம் செலவிடப்படும்.

நூலகம்
 

21 பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்குதல்

அரசு பொது நூலகத் துறை நூலகங்களுக்கு பயனுள்ள மற்றும் தரமான நூல்கள் வாங்கிட ரூ. 25 கோடியும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு புதிய, துறை சார்ந்த மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப நூல்கள் வாங்கிட ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கப்படும். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, ரூ. 30 கோடி செலவிடப்படும்.

22 தலைநகரங்களில் புத்தகக் கண்காட்சி நடத்துதல்

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தலை நகரங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். இதன் வாயிலாக பொது மக்களிடம் வாசிக்கும் பழக்கம் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 3 கோடி செலவிடப்படும்.

23. தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் மாபெரும் நூலகம் அமைத்தல்

மதுரையில் உலகதமிழ்ச் சங்கவளாகத்தில் ஒரு இலட்சம் நூல்கள் அடங்கிய ஒரு மாபெரும் நூலகம் ஏற்படுத்தப்படும். இந்நூலகம் குழந்தைகளுக்கான தனிப்பிரிவு, போட்டித் தேர்வு பயிற்சி மையம் மற்றும் சுயநூல் வாசிப்பு பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, இந்நூலகம் ரூபாய் 6 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

24. எட்டு சிறப்பு நூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் அமைத்தல்

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தனித்தன்மைவாய்ந்த, பொருள்சார்ந்த நூலகங்கள் மற்றும் காட்சிக்கூடங்கள் அமைக்கப்படும். சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம் சிவகங்கை மாவட்டம் கீழடியிலும், தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் குறித்து தஞ்சாவூரிலும், நாட்டுப்புறக் கலைகள் சார்ந்து மதுரையிலும், தமிழ் மருத்துவம் சார்ந்து திருநெல்வேலியிலும், பழங்குடியினர் பண்பாடு சார்ந்து நீலகிரியிலும், கணிதம், அறிவியல் சார்ந்து திருச்சியிலும், வானியல், புதுமைக் கண்டுபிடிப்புகள் சார்ந்து கோயம்புத்தூரிலும், அச்சுக்கலை சார்ந்து சென்னையிலும் இவை அமைக்கப்படும். 

மேற்கண்ட சிறப்புநூலகங்கள் மற்றும் காட்சிக் கூடங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, ஒவ்வொன்றும் ஒரு கோடி செலவில் மொத்தம் ரூ. 8 கோடி செலவில் அமைக்கப்படும்.
 
25. போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்குதல்

பொது நூலகத் துறையின் கீழ் தற்போது கோயம்புத்தூர், கரூர், வேலூர், திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி, நாமக்கல் மற்றும் கடலுார் ஆகிய 8 மாவட்டமையநூலகங்களில் போட்டித்தேர்வுபயிற்சி மையங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டுவருகின்றன. இச்சேவையினை விரிவாக்கம் செய்து மேலும் பல மாணவர்கள் பயன்பெறும் வகையில் எஞ்சியுள்ள 24 மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 72 இலட்சம் செலவிடப்படும்.

26. முழுநேர கிளை நூலகங்களில் கணினி வசதி ஏற்படுத்துதல்

தமிழ்நாட்டிலுள்ள 314 முழுநேர கிளை நூலகங்களில் ஏற்கனவே 191 நூலகங்களில் கணினி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 123 முழுநேர கிளை நூலகங்களில் மின்னிதழ்  வசதிகளுடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 184 கோடி செலவிடப்படும்.

27 மின்நூலகம் அமைத்தல்

அரியநூல்கள், ஆவணங்கள், ஒலைச்சுவடிகள் ஆகியவற்றை மின்மயமாக்கி அனைத்து நூலகங்களுக்கும் பொதுவான அட்டவணையினை (Universal Catalogue) உள்ளடக்கிய ஒரு நவீன மின் நூலகம் (Digital Library) அமைக்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 2. கோடி செலவிடப்படும்.
 
28. அரிய வகை நூல்கள் மற்றும் ஆவணங்களை பொதுமக்களிடமிருந்து கொடையாக பெறும் திட்டம்

அரிய வகை நூல்கள், ஆவணங்கள், ஒலைச் சுவடிகள் ஆகியவற்றை பொது மக்கள் மற்றும் தனியார் அமைப்புகளிடமிருந்து பெற்று பாதுகாத்து பயன்படுத்த ஏதுவாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

29. தனியார் அமைப்புகள் நடத்தும் நூலகங்களுக்கு பராமரிப்பு நிதி

அரிய வகை நூல்களைப் பேணி பாதுகாக்கும் வகையில் தனியார் அமைப்புகள் நடத்தி வரும் நூலகங்களுக்கு பராமரிப்பு நிதி வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 25 இலட்சம் செலவிடப்படும். 

30. நவீன அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல்

சிறந்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களை உடனுக்குடன் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்படும். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இதைத் தவிர உலகின் மிகச்சிறந்த பிற மொழி இலக்கியங்களையும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடப்படும். தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 5 கோடி செலவிடப்படும்.

31. நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்துதல்

அனைத்து அரசுப் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், பொது அறிவினை வளர்க்கவும், எதிர்காலத்தில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து தகவல்களை பெறுவதற்கும் பள்ளிஅளவில் புத்தகக் கண்காட்சி நடத்துதல் அவசியமானதாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, இக்கண்காட்சிகள் புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் பள்ளிகளுக்கே செல்லும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சிகளாக ஏற்பாடு செய்யப்படும்.

நிர்வாகம்
 

32. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்துதல்

மாறிவரும் சமூகச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவகையில் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை உருவாக்குதல், கல்வி ஆராய்ச்சிகள் வாயிலாக கல்விச் சீரமைப்புகள் உள்ளடக்கிய பணியிடைப் பயிற்சிகளைவடிவமைத்தல், ஆசிரியர்கையேடுகள், மாணவர் பயிற்சி ஏடுகளைத் தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளத் தேவையான மனித வளங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மேம்படுத்துவது இன்றியமையாததாகிறது. இதற்கென மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு ஒரு இணை இயக்குநர், இரண்டு துணை இயக்குநர்கள், ஒரு கணக்கு அலுவலர் பணியிடங்கள் புதியதாகத் தோற்றுவிக்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, இத்திட்டம் ரூ. 60 இலட்சம் தொடர் செலவினம் என்ற அளவில் அனுமதிக்கப்படும்.
 
33. மெட்ரிகுலேசன் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டினைச் சீர்படுத்துவதற்காக இரண்டு புதிய மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் அமைத்தல்

மெட்ரிகுலேசன் பள்ளிகளின் நிர்வாக மேம்பாட்டினைச் சீர்படுத்துவதற்காக இரண்டு புதிய மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் கிருஷ்ணகிரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, இத்திட்டம் ரூ. 32.85 இலட்சம் தொடர் செலவினம் என்ற அளவில் அனுமதிக்கப்படும்.
 
34. பள்ளிக் கல்வித் துறையின் அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்குதல்

பள்ளிகளை அடிக்கடி ஆய்வு செய்வதற்கும் கல்வித் தரத்தை கண்காணிப்பதற்கும், நிர்வாகப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் பள்ளிக் கல்வித் துறையின் அலுவலர்களுக்கு மொத்தம் 34 புதிய வாகனங்கள் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 2.89 கோடி செலவிடப்படும். 

முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி
 

35. சமநிலைக் கல்வி திட்டம் செயல்படுத்துதல்

திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலுார், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மூன்றாம் வகுப்பிற்கு நிகரான சமநிலைக் கல்வித் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்படும். மேலும் விழுப்புரம், சேலம், ஈரோடு, மற்றும் தருமபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில் 5-ஆம் வகுப்பு அளவில் சமநிலைக் கல்வி அளிக்கப்படும்.  தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, இத்திட்டத்திற்கு ரூ. 13.94 கோடி செலவிடப்படும். 
 

உலகத் தமிழர் நலன்
 

36. உலகநாடுகளில் வாழும் தமிழ்மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தலுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுதல்

உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தொன்மை மிக்க இனமாக தமிழ்இனம் உள்ளது. புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் தமிழ் உணர்வினைப் போற்றி பாதுகாப்பதும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டியதும் தமிழகத்தின் கடமையாகும்.  அங்குள்ள தமிழ்மாணவர்கள் தமிழை நன்கு கற்றுக் கொள்வதற்கு உதவியாக தமிழ்ப் பாடப் புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புதல், சிறந்த தமிழ் ஆசிரியர்களை அனுப்பி அங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், இணையதளம் வாயிலாக அவர்களுக்கு தமிழ் கற்பித்தல் போன்ற பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், மியன்மார், மொரிசியஸ் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ்க் குழந்தைகள் நல்ல முறையில் தமிழ் கற்று கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இதைத் தவிர கர்நாடகம், கேரளம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் வாழும் தமிழ் மாணவர்களுக்கும் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

37. உலக நாடுகளில் தமிழ் நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொடையாக வழங்குதல்

உலகின் மூத்த மொழி தமிழ். இதன் தொன்மையும், சிறப்பும் உலகம் அறிந்தது. உலக இலக்கியச் செல்வத்தின் பெரும் பகுதி இம்மொழிக்குச் சொந்தமானது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான பயணத்திலும், தன் வனப்புக் குன்றாமல் வாழும் மொழி இது. தமிழில் உள்ள அரும்பெரும் இலக்கியங்கள், பல்வேறு துறை சார்ந்த நூல்கள் தமிழகம் மட்டும் அல்லாமல் உலகின் பல்வேறு நூலகங்களிலும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. கடல் கடந்து வாழும் தமிழருக்கு உயிர்நாடியாய் விளங்கும் தமிழ் நூலகங்களுக்கு நூல்களை வழங்குவது  உள்ளிட்ட உதவிகளை மேற்கொள்வதைக் காலம் கருதிய செயலாக இவ்வரசு கருதுகிறது.

இவ்வகையில் முதற்கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைப்படி, யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகத்திற்கும், மலேயாப் பல்கலைக்கழகத்திற்கும் பொதுமக்களிடமிருந்து ஒரு லட்சம் அரிய நூல்கள் கொடையாகப் பெற்று தாய் நிலத்து தமிழ்ச்சொந்தங்களின் சார்பில் வழங்கப்படும். என கே.ஏ. செங்கோட்டையன் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்  அறிவித்துள்ளார்.

- C.P சரவணன், வழக்கறிஞர் (தொடர்புக்கு 9840052475)

References:

பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை எண். 43 அறிவிப்புகள் 2O17 – 2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com