ரஜினிகாந்தின் 'அண்ணாமலை' : வெள்ளி விழா  நாளில் வெளிவராத தகவல்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற படங்களில் ஒன்றான அண்ணாமலை வெளியாகி இன்றோடு 25 வருடங்கள் நிறைவு பெறுகிறது. அதனையொட்டி இந்த படம் பற்றிய சில சுவாரசியமான சம்பவங்களை... 
ரஜினிகாந்தின் 'அண்ணாமலை' : வெள்ளி விழா  நாளில் வெளிவராத தகவல்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற படங்களில் ஒன்றான அண்ணாமலை வெளியாகி இன்றோடு 25 வருடங்கள் நிறைவு பெறுகிறது. அதனையொட்டி இந்த படம் பற்றிய சில சுவாரசியமான சம்பவங்களை இப்பொழுது நினைவு கூறலாம்.  

ரஜினிகாந்தின் குருவான கே.பாலசந்தரின் 'கவிதாலயா' தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில், பாலசந்தரின் உதவி இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில், இந்த திரைப்படம் 1992-ஆம் ஆண்டு இதே நாளில் திரைக்கு வந்தது. ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு வித்திட்ட வெற்றித் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்த இந்தப் படமானது ஆரம்பமானதே ஒரு குழப்பதில்தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

என்னால் இந்தப் படத்தை இயக்க முடியாது..!

முதலில் பாலசந்தரின் மற்றொரு சீடரான இயக்குனர் வசந்த்தான் இந்த திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. படத்தின் பூஜையானது 11.03.1992 அன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு அதற்காக சில அறிவிப்பு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுவிட்டன. இந்நிலையில் வேறு சில காரணங்களால் தான் இந்தப் படத்தினை  இயக்க முடியாது என்று வசந்த், இயக்குனர் பாலசந்தரிடம் மார்ச் 8-ஆம் தேதி இரவு அன்று அறிவித்து விடுகிறார். இரண்டு நாட்களில் படப்பிடிப்பு என்று அறிவித்துவிட்ட நிலையில், என்ன செய்வது என்று பாலசந்தர் யோசனையில் ஆழ்கிறார்.

எனக்காக இந்தப்  படத்தை பண்ணித் தருவியா..?

நிலைமையை யோசித்த பாலசந்தர் விடிந்த உடனேயே மார்ச்-9 அன்று தனது மற்றொரு பிரதான சீடரான சுரேஷ் கிருஷ்ணாவுக்கு போன் செய்கிறார். அன்று காலைதான் மும்பையில் சல்மான் கானுடனான படம் ஒன்றின் ஷூட்டிங் முடிந்து சுரேஷ் கிருஷ்ணா சென்னை திரும்பியிருக்கிறார்.இருந்தாலும் தனது குரு அழைத்தவுடன், உடனே அவரை வந்து சந்திக்கிறார். வந்தவரிடம் இக்கட்டான சூழலை எடுத்து கூறிய பாலசந்தர் கேட்ட கேள்வி, 'எனக்காக இந்த படத்தை பண்ணித் தருவியா?'. படத்தின் கதை என்ன என்று தெரியாத  நிலையில், இன்னும் ஒரு நாளில் ஷூட்டிங் என்ற நிலையில், தனது மரியாதைக்குரிய குருவின் வார்த்தைகளை தட்ட முடியாத சுரேஷ் கிருஷ்ணா, அண்ணாமலையை இயக்க சம்மதிக்கிறார்.

போகப் போக பண்ணிக்கலாம்..!

உடனேயே படத்தின் கதாசிரியரான ஷண்முகசுந்தரத்தினை சந்திக்க விரைகிறார் சுரேஷ் கிருஷ்ணா. சிறுவயது நண்பர்களான ஒரு ஏழை பால்காரனுக்கும், பணக்காரன் ஒருவனுக்கும் இடையிலான நட்பில், பால்கார நண்பனது வீடு எவ்வாறு பிரச்சினையாக மாறுகிறது என்பதுதான் படத்தின் அடிப்படைக் கரு. அடிப்படையில் ஜிதேந்திரா, சத்ருகன் சிம்ஹா. கோவிந்தா மற்றும் பானுப்ரியா உள்ளிட்டோர் நடித்த  'குத்கர்ஸ்' என்ற ஹிந்தி படம்தான் அண்ணாமலையின் அடிப்படைக்கரு.அங்கே அதில் பணக்காரனாக நடித்திருந்த ஜிதேந்திராதான் கதாநாயகன். ஆனால் இங்கே ரஜினி ஏழை பால்காரனாக நடிப்பதால் அவர் கதாபாத்திரத்திற்கு  வலுவூட்ட நிறைய விஷயங்களை சேர்க்க வேண்டியிருந்தது. அது போன்ற முழுமையடையாத பாகங்களை குறித்து கேட்ட  பொழுது, கதாசிரியர் சண்முகசுந்தரம் கூறியதுதான்.. 'போக போக பண்ணிக்கலாம்..!'.   

ரஜினிக்கு முதல் தடவையாக படம் பண்ணும் 'கமல் டைரக்டர்'..!

சுரேஷ் கிருஷ்ணா அதற்கு முன்னதாக கமலை வைத்து சத்யா, இந்த்ருடு சந்த்ருடு (தெலுங்கு) ஆகிய படங்களை இயக்கியிருந்தார். ஆனால் முதன்முறையாக ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும். அதுவும் ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில். எனவே மார்ச் 9 அன்று மாலையே ரஜினியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். அவரிடம், 'நான் ரொம்ப நட்பு ரீதியிலான இயக்குனர். எனக்கு எந்த விதமான ஈகோவும் கிடையாது. பாலசந்தரிடம் வேலை செய்திருந்தாலும் நான் அவரை போல இல்லை.எனக்கு அடிப்படையில் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் பிடிக்கும். இந்த கதையில் அந்த விஷயங்கள் உள்ளதால் இயக்க ஒப்புக் கொண்டேன். ஆனாலும் ஒரு படத்தில் இயக்குநருக்கும் கதாநாயகனுக்கும் நல்ல புரிதல் இருந்தால்தான் திரைப்படம் எடுப்பது எளிதாக இருக்கும்' என்று வெளிப்படையாக கூறவும், சிரித்துக் கொண்டே எழுந்த ரஜினிகாந்த், 'அப்படித்தான் இந்த படத்தினை எடுக்கப் போகிறோம்' என்று சொல்லி கை கொடுத்தார். இவ்வாறு ஒரு வழியாக 11.03.1992 அன்று ஏ வி எம் படப்பிடிப்பு தளத்தில் பூஜையுடன் ஷூட்டிங்  துவங்கியது.   

அங்கேயே யோசித்து அப்படியே படமாக்கி..!

ஆரம்பத்தில் அடிப்படை காதாபாத்திரங்களுடன் மட்டுமே படம் துவங்கப்பட்டதால் ஒவ்வொரு நாளும் ரஜினிகாந்த், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் கதாசிரியர் ஷண்முகசுந்தரம் ஆகிய மூவரும் படப்பிடிப்பு தளத்தில் உட்கார்ந்து திரைக்கதை அமைப்பு மாற்றங்களையும், என்ன விதமான காட்சிகளை எடுக்கப் போகிறோம் என்பதையும் பேசுவார்கள். பின்னர் அந்த காட்சிகள் படமாக்கப்படும். அதே நேரத்தில் மாலை வேளைகளில் இசையமைப்பாளர் தேவாவுடன் இசைக் கோர்ப்பு பணிகளும் ஒருபுறம் நடைபெறும். படம் இவ்வாறு அசுர கதியில் வளர்ந்து வந்தது.

அண்ணாமலை போஸ்டரை நான் என் கண்ணுல பார்க்க கூடாது..!

பட உருவாக்கத்திற்கு முன்பே ரஜினிக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்குமிடையே பிரச்சினையான சூழல் உருவாகி இருந்தது. இதனால் குறிப்பாக படம் ரிலீசாகும் பொழுது, 'அண்ணாமலை பட போஸ்டரை நான் எங்கயும் என் கண்ணுல பார்க்க கூடாது' என்று ஜெயலலிதா தன்கட்சிக்காரர்களுக்கு வாய்மொழி உத்தரவு கொடுத்ததாகவும் தகவல்கள் பரவியது. இதனால் அப்பொழுது எல்லாம் பட விளம்பரத்திற்கு ஆதாரமான சுவர் போஸ்டர்களின் எண்ணிக்கையில் பாதிப்பு இருந்தது. அதையெல்லாம் சமாளித்து 27.06.1992  அன்று தமிழகமெங்கும் 'அண்ணாமலை' ரிலீசானது. 

பாலசந்தர் எழுதிய வசனம்..!

பட ரிலீஸின் பொழுதுதான் பிரச்னைக்குரிய ஒரு சூழல் இருந்தாலும், உருவாக்கத்தின் பொழுது எந்த அலைகளும் இல்லை என்பதால் மிக இயல்பாக எழுதப்பட்ட சில வசனங்கள் படம் வெளியான பிறகு வேறு அர்த்தம் பெற்றன. குறிப்பாக படத்தில் குஷ்பூவின் அறிமுக காட்சியில் வரும், 'உனக்கு அம்மானாலதான் ப்ராப்ளம் வரும்' என்ற வசனமும், எம்.எல்.ஏ ஆக வரும் வினுசக்கரவர்த்தி, ரஜினியின் பேச்சைக்கேட்டு திருந்தும் காட்சியின் வசனங்களும். குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் வினுசக்கரவர்த்தி காட்சிகளுக்கு ஷண்முக சுந்தரம் எழுதிய வசனங்கள் ரஜினிக்கு திருப்தி தராததால், குருநாதரிடம் எழுதித் தருமாறு கோரினார். படத்தில் இடம் அந்த வசனங்கள் பாலசந்தர் எழுதியவைதான்.

படத்தில் இடம் பெறாத கோர்ட் காட்சி..!

படத்தின் துவக்கத்தில் ரஜினிக்கும் சரத்பாபுவுக்கும் உள்ள நட்பை விளக்கும் விதமாக, சிறு வழக்கு ஒன்றில்  மாட்டிக் கொள்ளும் சரத்பாபுவுக்கு ஆதரவாக ரஜினி கோர்ட்டில் சாட்சி சொல்லும் காட்சி இடம்பெற்றது. பிறகு படத்தின் இறுதியில் நீளம் கருதி அந்த காட்சி வெட்டப்பட்டு விட்டது.

அண்ணாமலையில்தான் முதன்முறையாக..!

இப்பொழுதெல்லாம் ரஜினி படத்தில் சகஜமாகி விட்ட பல விஷயங்கள் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது அண்ணாமலையில்தான்..!

அந்த வகையில் முதன் முறையாக 'சூப்பர் ஸ்டார்' என்று டைட்டிலில் பின்னணி இசையுடன் போடப்பட்டது. இதற்கு முதலில் ரஜினி  ஒத்துக் கொள்ளவில்லை. பிறகு அவரை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தனர்.

அதேபோல முதன்முறையாக கதாநாயகனுக்கு என்று ஒரு அறிமுகப் பாடல் ஒலித்ததும் இந்த படத்தில்தான். பிரபுதேவா இந்த பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார் 

அதேபோன்று ஒரே பாடலில் கதாநாயகன் பணக்காரன் ஆவது போன்ற பாடல் இடம் பெற்றது அண்ணாமலையில்தான். முதலில் விரிவாக எடுக்கப்பட்ட காட்சிகள் படத்தின் விறுவிறுப்புக்கு தடையாக இருப்பதாக கருதியதால், அவற்றை எல்லாம் ஒரே பாடலில் மாற்றி பயன்படுத்தப்பட்டது.

கலக்கல் கலக்ஷன்..!

இந்த படமானது  வெளியான 25 மையங்களிலும் பிரமாதமான ஓப்பனிங்கை பெற்றது. வழக்கமாக ரஜினி படங்களுக்கு முதல் நான்கு வாரங்களுக்கு பிறகு வசூல் குறையத் துவங்கும். ஆனால் அண்ணாமலை வெற்றிகரமாக ஓடியது. 25 மையங்ககளிலும் படம் வெள்ளிவிழா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக நீங்கள் எந்த ஒரு ரஜினி ரசிகரை கேட்டாலும் அவர்களுக்கு பிடித்த படமாக 'பாட்ஷாவை' குறிப்பிடுவார்கள். ஆனால் அதற்கு ஒரு முன்னோடியாக அமைந்து, ரஜினிகாந்த் என்னும் நடிகரின் வசூல் திறனை முழுமையாக வெளிக்கொணர்ந்த ஒரு படமென்றால் அது அண்ணாமலைதான். இதனை அடிப்படையாக வைத்து, மீண்டும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான 'பாட்ஷா' ரஜினிகாந்தை தமிழ் திரையுலகின் பாட்ஷாவாக மாற்றியது என்றால் அது மிகையில்லை..!        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com