மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

இந்த உலகில் பெண்கள் எதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறதோ அதே விதமான போராட்டங்கள் அத்தனையையும் திருநங்கைகளும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
மகளிர் தினம் பெண்களுக்கு மட்டுமல்ல, திருநங்கைகளுக்கும் உரித்தானதே ஒப்புக் கொள்கிறீர்களா?

மார்ச் 8 சர்வ தேச மகளிர் தினம். 

மகளிர் தினத்துக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் அமைப்புகள், குடியிருப்பு வளாகங்களின் மகளிர் அமைப்புகள், மகளிர் சங்கங்கள் எங்கெங்கு காணினும் மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கான முஸ்தீபுகள் பெண்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க கேளிக்கை நிகழ்ச்சிகளை மட்டுமே சிலர் திட்டமிடலாம், சிலர் கொஞ்சம் தீவிரமாக யோசித்து உலக அளவில் வெற்றி பெற்ற பெண்களின் போராட்ட வாழ்வையும், அவர்களது வெற்றி வரலாறுகளையும் நினைவு கூரும் விதமாக விழா நடத்த திட்டமிடலாம். சிலர் தங்களுக்குப் பிடித்த பெண் ஆளுமைகளை வரவழைத்து அவர்களது தலைமையில் சர்வ தேச மகளிர் தினத்தைக் கொண்டாடத் திட்டமிடலாம்.

எப்படியாயினும் இந்த மகளிர் நாள் என்பது எல்லாப் பெண்களுக்குமானது என்பதை அனைத்துப் பெண்களும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பது வரை சந்தோசமே. ஏனெனில் ஐ.நா வரையறையின் படி மார்ச் 8 உழைக்கும் மகளிருக்கான நாள்! 

இந்த நாட்டில் உழைக்காத மகளிர் என எவருமில்லை. இல்லத்தரசியானாலும், உத்யோகத்தில் இருக்கும் பெண் ஆனாலும் அனைவருமே இந்த சமூக அமைப்பில் அவரவர் குடும்பத்துக்கான பங்களிப்பை எந்த வித பாரபட்சமும் இன்றி வாரி வழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லாம் சரியே, ஆனால் இந்த உலகில் ஆண்கள், பெண்கள் எனும் இரு பாலினம் மட்டுமே இல்லை. திருநங்கைகள், திருநம்பிகள் எனும் மூன்றாம் பாலினமும் உண்டு. அவர்களைப் பற்றிய நமது பார்வைகள் என்ன? குறிப்பாக ஆணாக அவதரித்து பெண்மைக்காக அடையாளங்களுடனும், உணர்வுகளுடனும் வாழும் திருநங்கைகளைப் பற்றிய நமது பார்வை என்ன? முழுக்க, முழுக்க தங்களைப் பெண்களாகவே பாவித்துக் கொள்ளும் அந்த திருநங்கை சமூகம் இந்த மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பற்றி என்ன நினைக்கிறது? என்பதும் கவனிக்கத் தக்க விசயமே!

பெண் தன்மையுடன் வாழ்வதற்கான அவர்களது நீண்ட நெடிய போராட்டங்கள், மகளிர் தினம் அவர்களுக்கும் சொந்தமானது தானே என்ற கேள்வியை ஓசையுடன் எழுப்பி நிதானிக்கிறது.

இதோ அதை அவர்கள் சார்பாக பூ விற்கும் வர்ணம், சமூகப் போராளி சங்கரி, உலகம் அறிந்த பரதக் கலைஞர் நர்த்தகி நட்ராஜ் எனும் மூன்று திருநங்கைகளின் கருத்துக்கள் மூலமாகத் தெரிந்து கொள்வோம்.

சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பித்து விட்டது. உச்சி முதல் உள்ளங்கால் வரை சூடு பரவி தலை வழியே நீராவி வெளியேறி தலைக்கு மேல் அலையடிக்கிறதோ எனும்படியான தகிக்கும் வெக்கை நாள். சாலைகளில் விரையும் வாகனங்கள் புழுதி கிளப்பிக் கொண்டு மறைந்தன. அத்தனை வெய்யிலிலும் சென்னை, விருகம்பாக்கத்தில் ஒரு சந்தில் இருந்த அந்த சின்னஞ் சிறு பூக்கடையோரம் பெண்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. கூட்டத்தை நகர்த்தி விட்டு உள்ளே எட்டிப் பார்த்தால் ‘பன்’ கொண்டை போட்டு அதில் வட்டமாகப் பூச்சுற்றிய ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இருந்தார். தோற்றத்தில் ஆண்மை கலந்த பெண்மை. குரல் இன்னும் அழுத்தமாக நான் ஆணாகப் பிறந்த பெண் என்றது. அத்தனை வெயிலிலும் பளிச்சிடும் அலங்காரத்துடன் இருந்த வர்ணம் சாலையில் செல்வோரை எல்லாம் பாரபட்சமின்றி தன்னிடம் பூ வாங்கிச் செல்லும் படி அன்போடு அழைத்துக் கொண்டிருந்தார்.

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள் திருநங்கைகள் எனில் அவர்களுக்கும் தானே உண்டு மகளிர் தினக் கொண்டாட்ட உரிமைகள்.

அதைக் குறித்து வர்ணத்திடம் கேட்ட போது;

”முதலில் பெண்களே எங்களை அசூயையாகப் பார்க்கும் நிலை மாறட்டும். அதற்கு அப்புறம் தான் எங்களுக்கு மகளிர் தினமெல்லாம்...” என்றார்.

”பிறப்பில் ஆணாக இருந்தாலும், நான் எனது 10 வயதில் பெண்ணாக உணரத் தொடங்கியதும், முதலில் என் அம்மாவிடம் தான் அதைப் பற்றிச் சொன்னேன். அம்மா, என்னை அரவணைக்கவில்லை, மாறாக பயந்து போனார். இதைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாதே. என்று என்னை அடக்கினார். ஒரு கட்டத்தில் எனது பெண் உணர்வுகளை மறைக்க இயலாத நிலையில் சொந்தக்
குடும்பத்தினரால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன்.

அம்மாவிடம் எனக்கு கோபம் இருந்தாலும் எனது வருத்தம் எல்லாம் இந்த சமூக அமைப்பின் மீது தான் அதிகம் இருக்கிறது. ஏனெனில் இன்றைக்கும் அதிகம் படித்து, பொருளாதார பலத்துடன் இருக்கிற திருநங்கைகளில் சிலர் மட்டுமே சமூக அங்கீகாரம் பெற்று சுய கெளரவத்துடன் இங்கு வாழ முடிகிறது. என்னைப் போன்ற சாமானிய திருநங்கைகள் நிலை மிகவும் மோசம். நாங்கள் தினமும் யாருக்காவது பயந்து கொண்டே தான் வாழ்கிறோம்.”

”அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது, எங்களுடன் சேர்ந்து அமர்ந்து பயணிக்க யாருக்கும் விருப்பமிருப்பதில்லை. மக்கள் இப்போதும் திருநங்கைகளைக் கண்டால் ஏதோ நரகலைப் பார்த்த மாதிரி முகம் சுளித்து விலகிப் போகிறார்கள். நாங்களும் பெண்கள் தான் என்பதை எங்களுக்குள் நாங்களே உரக்கச் சொல்லிக் கொள்கிறோமே தவிர பெண்கள் எப்போதும் அவர்களில் ஒருவராக எங்களை ஏற்பதே இல்லை.” 

இந்த பாரபட்சம் விருகம்பாக்கம் குறுக்குச் சந்தில் பூ விற்கும் வர்ணத்துக்கு மட்டும் இல்லை. படித்து விட்டு சமூக ஆர்வலராக இருக்கும் திருநங்கை சங்கரிக்கும் இதே நிலை தான்.

சங்கரியும் தான் ஒரு திருநங்கை என்பதால் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டவரே. திருநங்கையாக உணர ஆரம்பித்த ஆரம்ப நாட்களில், பயமும், அதீத கூச்சமும் நெட்டித் தள்ள மிகவும் அப்பாவியாக இருந்த சங்கரி தனது பள்ளி நாட்களில் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளானவர். இந்த சமூகத்தில் ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாக இருந்தாலும், அது பிறப்பில் அடைந்த மாற்றத்துக்கு அதை எப்படி பலியிட முடியும்? அரவணைத்துக் காக்க வேண்டிய குடும்பம் வெளியேற்றியதால் தன்னந்தனியாக தான் அடைந்த அவமானங்களே சங்கரியை பிற திருநங்கைகளுக்காகப் போராடும் சமூகப் போராளியாக மாற்றி இருக்கிறது. இன்று சங்கரி பல திருநங்கைகளுக்கு முன் மாதிரியாக இருந்து அவர்களை வழி நடத்தும் பொறுப்பில் இருக்கிறார். அவர் மகளிர் தினம் பற்றி என்ன சொல்கிறார் எனில்;

”நீங்கள் ஒரு பெண்ணாகவோ, திருநங்கையோ யாராக வேண்டுமானலும் இருக்கலாம், ஆனால் சாலையில் இறங்கி நடக்கையில் பெண் எனும் ஒரே காரணத்தால், எப்போது யாரால் தாக்கப் படுவோம், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுவோம், மானபங்கப் படுத்தப்படுவோம் என்ற பயத்துடனே வாழும் நிர்பந்தம் இருக்கும் வரை  மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கெல்லாம் என்ன அர்த்தம் இருந்து விட முடியும்?” என்று காட்டமாக கேள்வி எழுப்புகிறார். அவர் கேட்பதிலும் நியாயம் உண்டு.

திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் முனைப்புகளில் சங்கரி போன்ற சமூக ஆர்வலர்களுக்கு இப்போதும் கிடைப்பது ஏமாற்றங்களே; திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதில் அரசு எப்போதும் பாரபட்சம் காட்டியே வருகிறது. அதைப் பற்றி சங்கரியின் கருத்து;

“உத்யோக விசயத்தில் இங்கே பெண்களுக்கே இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருநங்கைகளின் வேலை வாய்ப்புகளைப் பற்றிப் பேசி என்ன பயன்? நாங்கள் எங்களது உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அது யாருடைய காதுகளையும் சென்றடையவில்லை என்பது தான் மிகப் பெரும் துயரம்.”

வர்ணம், சங்கரி மட்டுமல்ல இந்தியத் திருநங்கைகளில் முதன் முதல் செய்தி தொகுப்பாளர் எனும் பெருமையைப் பெற்ற பத்மினி பிரகாஷின் கஷ்டம்; திருநங்கைகளின் பிரச்சினைகளை முற்றிலும் வேறோரு பரிமாணத்துக்கு இட்டுச் செல்கிறது. ஒரு செய்தித் தொலைக்காட்சியின் தொகுப்பாளராகத் தேர்வான பின், தனது ஆடைகளைத் தைக்க தகுந்த டெயிலர்களை பத்மினி தேடிய போது; அவருக்குக் கிடைத்தது ஏமாற்றம். திருநங்கை எனும் ஒரே காரணத்துக்காக அவர் அணுகிய ஒரு டெயிலர் பத்மினியின் பிளவுஸ்களை தைத்துக் கொடுக்க மறுத்திருக்கிறார். 

“ஒரு திருநங்கையாக எனக்கிருக்கும் மனப்பிர்ச்சினைகளைத் தாண்டி எந்த நொடியிலும் இந்த சமூகம் எங்களுக்கு அள்ளி வழங்கத் தாயாராக இருக்கும் எதிர்பாராத அவமானங்கள், புறக்கணிப்புகள், பாரபட்சங்களை ஒவ்வொரு நொடியிலும் எதிர்பார்த்துக் கொண்டு அதனோடு போராடிக் கொண்டே வாழ்வதென்பது மிகப் பெரும் சவால். அதைத்தான் ஒவ்வொரு திருநங்கையும் தனது வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தச் சூழலில் மகளிர் தினம் பற்றி என்ன சொல்ல?” என்று முடிக்கிறார் பத்மினி.

கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுதல், குடும்பத்துடன் சேர்ந்து வாழும் உரிமைகள் மறுக்கப் படுதல், சமூகப் புறக்கணிப்பு, பொது வெளி பாரபட்சங்கள், பால் பேத ஏற்றத்தாழ்வுகள், சக மனிதர்களின் அசூயையான முகச் சுளிப்புகள் இவை அனைத்தையும் கடந்து வந்து இந்த சமூகத்தில் தங்களுக்கான வெற்றியையும், வாழ்தலுக்கான உரிமையையும் நிலை நாட்டிய திருநங்கைகள் நம்மிடையே பலர் உள்ளனர். அவர்களின் நர்த்தகி நட்ராஜ் குறிப்பிடத் தக்கவர். அவர் மகளிர் தினம் பற்றியும், அதில் திருநங்கைகள் நிலைப்பாடு குறித்தும் என்ன சொல்கிறார் எனில்;

மகளிர் தினத்தில் அனைத்து மகளிருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் ஒரு பெண்ணாகப் பெருமை கொள்கிறேன். சர்வ தேச மகளிர் தினம் என்பது இந்த உலகில் தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பெண்களின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த உலகில் பெண்கள் எதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறதோ அதே விதமான போராட்டங்கள் அனைத்தையும் திருநங்கைகளும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த மகளிர் தின நன்நாளில் பெண்களோடு சேர்ந்து திருநங்கைகளும் ஒன்றிணைந்து நமது உரிமைகளை மீட்டெடுக்கப் போராடுவோம் என உறுதி ஏற்போம். என்றார்.

இறுதியாக  நர்த்தகி நட்ராஜ் திருநங்கைகள் பிரச்சினைகளாகப் பகிர்ந்து கொண்ட ஒரு விசயம் நம்மை யோசனையில் ஆழ்த்துகிறது. 

“திருநங்கைகள் என்பதால் எங்களது காதலிக்கும் உரிமை பறி போக வேண்டுமா? அல்லது திருநங்கைகளுக்கு காதல் உணர்வு வராதா? திருநங்கை எனும் ஒரெ காரணத்திற்காக எங்களது காதல் உதாசீனத்துக்கு உள்ளாக்கப்படுகையில் அதை திருநங்கைகளுக்கு இழைக்கப்படும் அநீதியென இந்த சமூகம் ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்?”

நர்த்தகி கேட்கும் கேள்வியினூடே,  கி.ராஜநாராயணின் ‘கோமதி’ சிறுகதையில் வரும் கோமதி எனும் திருநங்கையின் அழுகையும், விசும்பலும் இப்போதும் காதில் ஒலிக்கிறது. கோமதி நாயகம் எனும் கோமதிக்கு தனது எஜமானன் மீது காதல். அவனுக்காக கோமதி தன்னை அலங்கரித்துக் கொள்கிறாள், அவனுக்காகவே மிகுந்த சுவையுடன் பதார்த்தங்களை சமைக்கிறாள். அவனது கவனத்தை ஈர்க்கவே அவள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்கிறாள். ஆனால் கதையின் இறுதியில் காதலை வெளிப்படுத்தி அது உதாசீனத்துக்கு உள்ளாகும் போது காரணமற்ற ஆத்திரத்திலும், இயலாமையிலும் கோமதி உடைந்து அழும் போது ‘ எல்லாம் தானொரு திருநங்கை என்பதற்காக மட்டும் தானே!?’ எனும் பரிதாப உணர்வு மிதமிஞ்சி வாசிப்பவர்கள் மனதை முள்ளாகத் தைக்கிறது.

எப்போதுமே திருநங்கைகளின் உணர்வுகளை எழுத்தில் வடிக்கவோ, திரையில் படைக்கவோ எளிதாகத் தான் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் காதல் உணர்வுகள் இருக்கும் பட்சத்தில் அதைக் கிள்ளி எறியவோ, உதாசீனப் படுத்தி, அவமானப் படுத்தவோ இந்தச் சமூகம் எள்ளளவும் தயங்குவதே இல்லை. இந்தப் பிரச்சினைகளில் இருந்தெல்லாம் அவர்களுக்கு விடுதலையும், நியாயமும் கிடைக்க வேண்டுமெனில் அதற்கு இந்த சமூகத்தின் கண்ணோட்டம் மாற வேண்டுமே! மாறுமா?

முதலில் இந்த சமுதாயத்தில் பெண்களின் நிலை மாறட்டும். பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் அனைவரும் பாதுகாப்பும் உறுதிப் படுத்தப்படட்டும். அதன் பின்னல்லவா இப்படியான கொண்டாட்டங்களில் அர்த்தமிருக்க முடியும்!

Article concept courtsy: Roshne B, New indian express.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com