குழந்தைகளை தொடாதீர்கள்! அவர்கள் விளையாட்டு பொம்மைகளல்ல!

வாழ்க்கையில் மறக்க முடியாத பருவம் குழந்தை பருவம் தான். ஆனால் மாறி வரும்
குழந்தைகளை தொடாதீர்கள்! அவர்கள் விளையாட்டு பொம்மைகளல்ல!

வாழ்க்கையில் மறக்க முடியாத பருவம் குழந்தை பருவம் தான். ஆனால் மாறி வரும் சமூக சூழ்நிலைகளில் ஏற்கனவே குழந்தை பருவத்தை வெகுவாக இழந்து கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியருக்கு ஆபத்து எந்த திசையிலிருந்து வரும் என்றே சொல்வதற்கில்லை. பெற்றோர்கள் கூடுதல் அக்கறையுடன் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். குழந்தைகளைப் பாதுகாப்பது நம் கடமை. நம்மை நம்பி இந்த உலகத்துக்குள் வந்துவிட்ட அந்த சின்ன சின்ன கடவுளர்களுக்கு நம்மை விட்டால் வேறு யார் உள்ளார்கள்? உணவு தேடுதலுக்காக வேலைக்குச் செல்வது எல்லாம் சரிதான். ஆனால் குழந்தைகளை உயிர் போலப் பாதுகாக்க ஏற்பாடுகளைச் செய்துச் சென்றால் தான் நாம் நிம்மதியாக வேலையைச் செய்ய முடியும்.

உங்கள் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டிய விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். Good touch, bad touch என்ற பால பாடத்தை அவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். நல்ல தொடுதலுக்கும், கெட்ட தொடுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லித் தர வேண்டும். பள்ளியிலோ அல்லது மற்ற வெளியிடங்களிலோ யாரும் அவர்களை தொட வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்த வேண்டும்.

பெண் குழந்தைகளை குறிப்பிட்ட வயதுக்கு மேல் பிற ஆண்கள் மடியில் அமர அனுமதிக்கக்கூடாது. உங்கள் குழந்தைகளை பிறர் தேவையின்றி தொடவும், கொஞ்சவும் அனுமதிக்க வேண்டாம். குழந்தைகளை ரசிப்பதும் இறைவனை தரிசிப்பதும் ஒன்று தான் என்ற கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள் நாம் என்றாலும், மாறி வரும் காலகட்டத்தில் நமக்கு நெருங்கிய பழக்கமுள்ளவர்களைத் தவிர்த்து வேறு யாரிடமும் குழந்தைகளை தர வேண்டாம்.

சிறுவர், சிறுமியர்கள் விளையாடப் போகும்போது அவர்கள் மீது கவனம் இருக்க வேண்டும்.  கூடுமானவரையில் வீட்டு அருகே அல்லது பள்ளியில் மட்டும் விளையாடச் சொல்லுங்கள். வெகு தூரம் பயணம் செய்தோ, தொலைவில் இருக்கும் நண்பர்கள் வீட்டுக்கோ தனியாக அனுப்ப வேண்டாம். 

பெரியவர்களுக்கான விளம்பரம் பார்த்து இது என்ன அது என்ன என்று கேள்வி கேட்டால் பொறுமையாக பதில் சொல்லுங்கள். எதிர்பாலின கவர்ச்சி மற்றும் பிறப்புறுப்பு பற்றிய கேள்விகளுக்கு நேர்மறையான, எளிமையான பதில்களைச் சொல்லிவிடுவது நல்லது. 

குழந்தைகள் உள்ளுணர்வு மிக்கவர்கள். அவர்களுக்கு ஒவ்வாத எந்தச் செயலையும் நீங்கள் அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்களுக்கு ஒத்து வராதவர்களுடன் இருக்கச் சொல்லி கட்டாயபடுத்த வேண்டாம். அவர்கள் பேசுவதை காது கொடுத்து முதலில் கேளுங்கள். 

துள்ளி விளையாடும் குழந்தைகள் திடீரென்று மந்தமாகவோ, சோர்வாகவோ இருந்தால் என்ன ஏதென்று விசாரித்துவிடுங்கள். உண்மைக் காரணத்தை உங்களால் தான் கண்டு பிடிக்க முடியும். குழந்தையை யாராவது அச்சுறுத்தியோ கட்டாயப்படுத்தியோ இருந்தார்கள் எனில் அவர்கள் எதைப் பார்த்தாலும் பயந்து பேச துணியவே மாட்டார்கள். இதை நீ சொன்னா உன் அம்மாவை கொன்னுடுவேன், இல்லை உன்னை சாகடிச்சிடுவேன் போன்ற அச்சுறுத்தல்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும். குழந்தைகளை ப்ளாக் மெயில் செய்பவர்கள் அதை தொடர்ந்து செய்வார்கள். வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் பிரச்னைகள் இருக்கும் போது அவர்களின் செயல்பாடு மாற்றங்கள் மூலமாகவே இதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். மெள்ள அவர்களிடம் பேசி உண்மையை தெரிந்து கொள்ள பொறுமையும் பக்குவமும் தேவை. 

பெண் குழந்தைகளைப் பொருத்தவரை பாலின வேறுபாடு மற்றும் பாலியல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை முறைகளை கட்டாயம் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்.  இரண்டு அல்லது மூன்று வயதுக்கு மேல் ஆன குழந்தைகளுக்கு மெமரி உருவாகத் தொடங்கிவிடும். நினைவுகளின் முதல் படியில் இருக்கும் அவர்கள் மனத்தில் வக்கிரத்தை எந்தவகையிலும் பெரியவர்கள் பழக்கிவிடக் கூடாது. குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பில் பெற்றோர்கள் கலவியில் ஈடுபடுவதோ, அவர்களின் முன்னிலையில் உடை மாற்றுவதோ கூடாது. வீட்டில் தானே இருக்கிறோம் என்று அரைகுறை ஆடைகளுடன் இருத்தல் கூடாது. 

சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை தானே சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். 

உங்கள் குழந்தை, இன்னொருவரை பற்றி ஒருமுறை குற்றச்சாட்டு கூறினாலே, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கவனியுங்கள்.

சற்று வளர்ந்த குழந்தைகள் தனிமையில் இருக்கும் போது தேவையற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது இணையதளங்களில்  உலவுவதை தவிர்க்கச் சொல்லிவிட வேண்டும்.

குழந்தைகள் தொடர்பான உதவி எண் 1098, பெண்களின் பாதுகாப்பு அழைப்புக்கான இலவச அழைப்பு எண் 1091 மற்றும் காவல் உதவி எண் 100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com