அந்நிய தேசத்தில் இந்திய மனைவிகளின் நிலை என்ன?

இந்தியப் பெண்களை மனைவிகளாக்கி அயல்நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் இந்திய ஆண்களே தயவு செய்து அவர்களைக் கொலை மட்டும் செய்யாதீர்கள்.
அந்நிய தேசத்தில் இந்திய மனைவிகளின் நிலை என்ன?

அமெரிக்காவில் இந்தியப் பெண் சசிகலா மற்றும் அவரது 7 வயது மகனின் கொடூரக் கொலைக்கு காரணகர்த்தாவாக சசிகலாவின் பெற்றோர் சொந்த மருமகனைச் சந்தேகிக்கிறார்கள். இந்தக் கொலைக்கு நிறவெறி காரணமில்லை என முற்றிலுமாக நிரூபணமாகவில்லை எனினும் சசிகலாவின் பெற்றோரது சந்தேகத்தையும் புறம் தள்ள முடியாது என்பதற்குச் சாட்சிகளும் இருக்கின்றன. அவர்கள் தங்களது மகளுடனான தொலைபேசி உரையாடல்களின் போது, மருமகனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால், கணவர் தன்னையும், தனது மகனையும் சரியாகக் கவனிக்காமல் புறக்கணிப்பதாக சசிகலா அவரது பெற்றோர்களிடம் தெரிவித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

அப்படியெனில் சசிகலா மற்றும் அவரது மகனது கொலைக்கு காரணமாகக் கருதப்படும் உறவுச் சிக்கல், கே. பாலசந்தர் இயக்கிய சிவசங்கரியின் 47 நாட்கள், கெளதம் மேனனின்  ‘வேட்டையாடுவிளையாடு’, மனோபாலா இயக்க, ராதிகா நடித்த ‘சிறகுகள்’ உள்ளிட்ட திரைப்படங்களை நினைவுபடுத்துகிறது. அதாவது இந்தியப் பெண்களுக்கு குறிப்பாக இந்திய மனைவிகளுக்கு அமெரிக்காவில் போதிய பாதுகாப்பில்லையோ என்று தான் எண்ண வேண்டியதாக இருக்கிறது.

மேற்கண்ட திரைப்படங்களில் இந்திய மனைவிகள், அவர்களது கணவர்களால் ஏமாற்றப்பட்டு, படும் அவஸ்தைகளை ஓரளவுக்கு தெளிவாகவே விவரித்திருப்பார்கள்.

‘47 நாட்கள்’ திரைப்படத்தில் வரும் வைஷாலியின்(ஜெயப்ரதா) கணவன் குமாருக்கு( சிரஞ்சீவி) முன்பே ஃப்ரான்ஸில் முதல் திருமணம் நடந்து ஃப்ரெஞ்சு மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருப்பான். பிறகும் அவனுக்கொரு இந்திய மனைவி தேவைப்படுகிறாள்... அவன் இந்தியா வந்து வைஷாலியைத் திருமணம் செய்து ஃபிரான்ஸுக்கு அழைத்துச் சென்று முதல் மனைவியிடம் இவளைத் தனது சகோதரி என்றும், வைஷாலியிடம் ஃப்ரெஞ்சுக்காரியைத் தனது தோழி என்றும் கூறி இரட்டை வேஷத்தில் குடித்தனம் செய்து கொண்டிருப்பான். ஒரு நாள் உண்மை தெரிந்ததும் அளவற்ற சித்திரவதைகளுக்குப் பின் கருவில் உருவான குழந்தையை அழியக் கொடுத்து விட்டு ஹிஸ்டீரியா நோயாளியாக வைஷாலி தாயகம் திரும்புவதோடு கதை முடியும். 

‘வேட்டையாடு, விளையாடு’ திரைப்படத்தில் மென்பொருள் வல்லுனரான அபராஜிதாவுக்கும் (ஜோதிகா) அதே கதி தான். என்ன படிக்காத வைஷாலி கருவிலேயே குழந்தையை இழந்து தாயகம் திரும்புவாள். படித்த அபராஜிதா (ஜோதிகா) இன்னொரு பெண்ணுடனான தொடர்பில் தன்னை டைவர்ஸ் கெட்டு சித்திரவதை செய்யும் கணவனிடம் இருந்து விலகி கைக்குழந்தையோடு அம்மா வீட்டுக்கு திரும்புவதாகக் கதை செல்லும்.

ராதிகாவின் ‘சிறகுகள்’ திரைக்கதை சற்று வித்யாசமானது, இதில் ராதிகா ஏமாற்றும் கணவனைப் புறக்கணித்து தன் இரு பெண் குழந்தைகளோடு அமெரிக்காவில் சிறு தொழில் அதிபராக நிமிர்ந்து நிற்பதாக கதை சொல்கிறது. ஆயினும் படத்தில் வள்ளியாக வரும் ராதிகாவும் அமெரிக்காவில் கணவனால் ஏமாற்றப்படும் இந்தியப் பெண் எனும் வகையில் வைஷாலி மற்றும் அபராஜிதாவோடு ஒத்துப் போகிறார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு தமனா நடித்து வெளிவந்த  திரைப்படமான  ‘ஆனந்த தாண்டவம்’ கூட இதே விதமானதொரு பிரச்சினையைத் தான் அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்தத் திரைப்படம் எழுத்தாளர் சுஜாதவின் ‘பிரிவோம் சந்திப்போம்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. அதிலும் நாயகி மதுமிதா தனது அமெரிக்க கணவனால் உளவியல் ரீதியாகச் சித்திரவதை செய்யப்பட்டு கடைசியில் விபத்தில் இறந்து விடுவாள்.

ஆக மொத்தத்தில் மேற்கண்ட திரைப்படங்களை அவை மக்களை ஈர்ப்பதற்கான வெறும் கற்பனைகள் என்று ஒதுக்கி விட முடியாது. அவை பேசும் பிரச்சினைகளின் அடிப்படையில் பார்த்தால் அமெரிக்காவில் செட்டில் ஆகி இந்தியப் பெண்களை மனைவிகளாக்கி அழைத்துச் செல்லும் இந்திய ஆண்கள், தங்களது மனைவிகளை எவ்விதம் மதிக்கிறார்கள்? என்பது கவலைக்குரிய விசயமாகி விடுகிறது.

இந்த ஆண்கள் தங்களது இந்திய மனைவிகளிடம் எதிர்பார்ப்பது தான் என்ன? சொந்த மண்ணிலேயே இன்னமும் சுதந்திரச் சிறகை தன்னிச்சையாக விரித்துப் பறக்க இயலாமல் எண்ணற்ற சங்கடங்களிலும், சம்பிரதாயங்களிலும் சிக்கி உழன்று கொண்டிருக்கும் இந்தியப் பெண்கள் இயல்பில் மிக்க மன உறுதி கொண்டவர்கள். 

ஆண்டாண்டு காலங்களாக ஆண்களின் சர்வாதிகாரப் போக்கிற்கு தங்களை ஒப்புக் கொடுத்த பின்னும் தமக்கான சுய மரியாதைகளை தங்களது குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும், குடும்ப கெளரவத்திற்காகவும் புறக்கணித்து, புறக்கணித்தே உயிர் வாழத் தெரிந்த சாமர்த்தியசாலிகள். அதற்காக அவர்களை முதுகெலும்பில்லாத கோழைகள் என்று கணித்து விடத் தேவையில்லை. அப்படிக் கணித்தால் நாம் நமது மூதாதையர்களின் பல தலைமுறைக்காலங்களைப் பழித்தவர்களாகி விடுவோம். நம்மால் சில பாகுபாடுகளைக் களைய முடியவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த சமுதாய அமைப்பையுமே குறை கூறி ஒதுக்கித் தள்ளி விடவும் முடியாது. ஆனால் செய்வதற்கு ஒன்றுள்ளது.

இந்தியப் பெண்களை மனைவிகளாக்கி அயல்நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் இந்திய ஆண்களே தயவு செய்து அவர்களைக் கொலை மட்டும் செய்யாதீர்கள். ஏனெனில் அது அந்நிய மண்ணிலும் கூட இந்தியக் குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து தங்களது மகள்களை உங்களை நம்பி மணம் முடித்து அனுப்பும் இந்தியப் பெற்றோருக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய துரோகம். பிடிக்கவில்லை என்றால் பரஸ்பரம் உறவில் இருந்து விலகிக் கொள்ளலாம். அதைத் தவிர மற்ற எதுவும் கொடும் பாவச் செயலே!

Discy: Images used only for model purpose

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com