விவசாயம், வறட்சி, போராட்டம்: அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்!

தமிழகம் கடந்த 2016ம் ஆண்டு இதே காலத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக அல்லாடி வந்த நிலையில், தற்போது வறட்சி நிவாரண நிதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
விவசாயம், வறட்சி, போராட்டம்: அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்!

சென்னை: ஒரு ஆண்டில் 183 நாட்கள் எவர் ஒருவர் விவசாயத்தில் ஈடுபடுகிறாரோ அவரே விவசாயி. ஆனால் இன்றோ தற்கொலை செய்து கொள்பவர்களாக அல்லவா விவசாயி அடையாளம் காணப்படுகிறான்.

3 முதல் 6 மாத காலம் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் பகுதி நேர விவசாயி. இவர்களுக்கு அடுத்து விவசாயத் தொழிலாளிகள் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முதலில் கூறியவர்கள் தான் விவசாயிகள். ஆனால், இப்போது வேளாண்மை செய்பவர்கள் விவசாயிகள் என்ற நிலை மாறி, தற்கொலை செய்பவர்களும் தங்கள் அடிப்படை உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபடுபவர்களும்தான் விவசாயிகள் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு வேறு யாருமல்ல.. எந்த அரசும் அல்ல... நாம் தான் முழு முதற் காரணம்.

தமிழக மக்கள் கடந்த 2016ம் ஆண்டு இதே காலத்தில் வெள்ள நிவாரண நிதிக்காக அலைந்த நிலையில், தற்போது வறட்சி நிவாரண நிதி அறிவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில், விவசாயிகளின் குரல் எடுபடாத நிலையில், இந்திய தலைநகரில் தங்களது போராட்டக் களத்தை அமைத்துக் கொண்டனர். எங்கு சென்றாலும், போராடுவது தமிழர்கள் என்பதால் அங்கும் அதே பராமுகம்.

தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவும் நிலையில், விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; அனைத்து நதிகளை நீர்வழிப் பயணத் திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும்; விவசாய விளை பொருள்களுக்கு லாபகர விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 14 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய சங்க விவசாயிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அவர்களுக்குத் தானே தெரியும் ஒரு விவசாயியின் பிரச்னை.

வறட்சி, விவசாயம், விவசாயக் கடன் என இதுபற்றி அறிய வேண்டிய விஷயம் ஏராளம். போர் அடிக்கும் விஷயமாக சிலர் நினைத்தாலும், இதுதான் நமது உயிர்நாடிப் பிரச்னை என்பதை அறிந்து, அதன் முக்கிய சாராம்சத்தைப் பார்க்கலாம்.

140 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு 2016ம் ஆண்டு குறைந்த பருவ மழை. அதாவது 1876ம் ஆண்டுக்குப் பிறகு 2016ல் குறைவான மழை பதிவாகியுள்ளது.  தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை 20 சதவீதம் குறைவு.

தமிழகத்தில் 11 அணைகள் மூற்றிலும் வறண்டு விட்டன.  மேட்டூர் அணையில் தற்போது 7 டிஎம்சி தண்ணீர் உள்ளது. நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்ட நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. 14 ஆயிரம் ஏரிகள் வற்றிப் போய் தூர்வராப்படாமல் உள்ளன.

இந்தியாவில் 2015ல் 12,602 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், மகாராஷ்டிராவில் 4,291 பேர். தமிழகத்தில் 606 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,453 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் - டிசம்பர் மாதத்தில் மட்டும் 120 விவசாயிகள் மரணம்.

 

வறட்சியால் உழவு மாடுகள் அடிமாடுகளாக விற்கப்படும் அவலம். கால்நடைகளுக்கு தீவனம் அளிக்க முடியாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

1947ல் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்தின் பங்கு 51.9 சதவீதம். ஆனால், 2013ம் ஆண்டில் விவசாயத்தின் பங்கு 13.7 சதவீதம் ஆக சரிவு.  தமிழகம் போல மற்ற மாநிலங்களிலும் கடும் வறட்சி.

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள்

கால்நடைகளைப் பாதுகாக்க 300 இடங்களில் உலர் தீவ விற்பனை மையம். விவசாயக் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. மானிய விலையில் வைக்கோல் சோளத் தட்டு விற்பனை. 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிவாரணம்.
 

நீர் நிலைகளை சீரமைக்க குடிமராமத்துத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 30 மாவட்டங்களில் ரூ.100 கோடியில் நீர்வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை.

வறட்சி நிவாரணமாக தமிழகத்துக்கு ரூ.2,096 கோடி வழங்க மத்திய ஆய்வுக் குழு பரிந்துரை. தமிழக வறட்சியை ஆய்வு செய்த தேசிய செயற்குழு துணைக் கமிட்டி ரூ.1,748 கோடி வழங்க பரிந்துரைத்தது. இவ்விரண்டையும் பரிசீலித்த மத்திய அரசு, தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.1,748 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு ரூ.39,565 கோடி நிவாரணத் தொகை கேட்ட நிலையில் இத்தொகையில் 4.41 சதவீதம் மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுவும் தேசிய பேரிடர் நிதியத்தில் இந்த அளவு பணம் கூட இல்லை என்று கூறியிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

தலைநகரில் கண்ணீர்ப் போராட்டம்

நாடு முழுவதும் நிகழும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க தேசிய - தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லியில் தொடர்ந்து 2 வாரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

தில்லி ஜந்தர் மந்தரில், மொட்டை அடித்தும், மண்டை ஓடுகளை கையில் ஏந்தியும், அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டும், பல நூதன முறைகளில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு  கூறுகையில் பிரதமரை சந்திக்கும் வரை தில்லியில் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்றும் அதுவரை அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்திருந்தார்.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை தலைமையில் தில்லியில் போராடி வரும் விவசாயிகள் குழு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துப் பேசினர். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ரிசர்வ் வங்கியிடம் பேசிய பிறகு அறிவிப்பதாக அருண் ஜேட்லி விவசாயிகளுக்கு உறுதி அளித்திருந்தார்.

தமிழக விவசாயிகள் பிரச்னையில் தலையிட்டுத் தீர்வு காண உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.

தமிழக திரைப்படக் குழுவினர், தில்லி சென்று விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இன்று உத்தரப்பிரதேச விவசாயிகள் சங்கத்தினர் நேரில் வந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com