ஒட்டுப் போட்ட சாலைகளும், ஓட்டை விழுந்த தெருக்களும் தான் சிங்காரச் சென்னையா?

பாருங்கள் பிச்சைக்காரன் உடுத்தும் கிழிந்த துணி போல நம் ஊர் சாலைகளில் எத்தனை ஒட்டுக்கள் என்று! சென்னைக்குள் ஒட்டுப்போடாத குண்டு குழியில்லாத ஒரே ஒரு சாலையைக் கூட கண்ணில் கண்டு விட முடியாது
ஒட்டுப் போட்ட சாலைகளும், ஓட்டை விழுந்த தெருக்களும் தான் சிங்காரச் சென்னையா?

காட்டில் யானைகளைப் பிடிக்க பெரிய பெரிய பள்ளங்களைத் தோண்டி வைத்திருப்பார்கள். காடுகளுக்குச் சென்று அதைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதவர்கள் இப்போது சென்னைக்கு வந்தால் அந்தக் குழிகளை ஆசை தீரப் பார்க்கலாம். சென்னை நகர் முழுதும் இப்போது பல இடங்களில் இந்த யானைப் பள்ளங்களைக் காண முடிகிறது. கேட்டால் மழைநீர் வடிகால் அடைப்பு நீக்கும் வேலை என்கிறார்கள். கடந்த பல மாதங்களாக துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் கடந்த 2016 மழைக்காலத்தை ஒட்டி (மழை தான் பொய்த்து விட்டதே!) சென்னையில் ஆங்காங்கே மழை நீர், கழிவு நீர் வடிகால்களில் அடைப்பு நீக்கி செப்பனிடும் வேலை தொடங்கி இப்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டின் பெருமழை சேதத்துக்குப் பிறகு தான் இப்படி ஒரு வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்ற ஞானமே கார்ப்பரேஷன்காரர்களுக்கு வந்திருக்கிறது. அதுவும் எப்போது? சரியாக 2016 மழைக்கால ஆரம்பத்தை ஒட்டி! 

நல்ல வேளை அந்த ஆண்டு மழை பொய்த்தது. ஒரு வேளை 2015 போலவே பெருமழைக்காடாக சென்னை மாறி இருப்பின் அப்போது தூர் வாரப்படாத நிலையில் இருந்த ஏனைய மழைநீர் வடிகால்களைக் கட்டிக் கொண்டு சென்னை என்ன செய்திருக்குமோ தெரியவில்லை. இதோ நாட்கள் வெகு விரைவாக றெக்கை கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருக்கின்றன. இப்போது நடப்பு மே மாதம்... கூடிய விரைவில் இன்னும் 6 மாதங்களில் அடுத்த மழைக்காலம் துவங்கி விடும்.

இந்தமுறை 100 சதவிகித மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. நாம் இப்போதும் நமது தூர் வாரும் வேலைகளை மந்த கதியில் செய்து கொண்டுள்ளோம். 2015 ஆம் டிசம்பரில் வந்த பெருமழை சமயத்தில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதில் வெளியேறிய அசுரத் தனமான மழை நீர் வரத்து வடிந்து கடலை நாட வழி வகையின்றி சென்னை முழுதும் ஒரு இடம் பாக்கி இல்லாமல் நுங்கம் பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், கீழ்பாக்கம், தாம்பரம், வில்லிவாக்கம் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வீடுகள், கடைகள், மால்கள், மருத்துவமனைகள், வியாபார கேந்திரங்கள், பன்னாட்டு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் இண்டு, இடுக்குகள் விடாது புகுந்து புறப்பட்டு பெருநகரின் கழிவுகள் அனைத்தையும் கொடையாக வாரி வழங்கி விட்டு பல இடங்களில் ஒரு வாரத்துக்கும் மேலாகத் தேங்கி நின்றன.

இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப் பட்ட விசயங்கள் 3.

  • ஒன்று முறையான வடிகால் வசதிகள் இல்லாமை,
  • இரண்டு இருந்த வடிகால்களும் தூர் வாரப்படாத நிலையில் அதிகமான அடைப்புகளுடன் பயனற்ற நிலையில் இருந்தமை,
  • மூன்று சென்னையின் ஆறுகள் அனைத்தும் கடலோடு கலக்கும் முகத்துவாரப் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள்.

இவற்றில் முகத்துவார ஆக்கிரமிப்புகளை மழைச்சேதத்தின் போதே பெருமளவில் அகற்றிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். இப்போதைய நிலை என்னவோ தெரியாது. அகற்றப் பட்ட ஆக்கிரமிப்புகளை மீண்டும், மீண்டும் வலிய ஆக்ரமிப்பதை ஒரு பெருமைக்குரிய சாதனையாக நினைத்துக் கொண்டு செயல்படுபவர்கள் தான் நம்மில் அனேகம் பேர். இந்த விசயத்தில் நம் மக்களை நம்புவதற்கில்லை. முகத்துவாரப் பகுதிகளின் ஆக்ரமிப்புகள் இப்போதும் அகற்றப் பட்ட நிலையில் தான் இருக்கின்றனவா? என செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் தனியாக ஒரு கவர் ஸ்டோரி செய்யலாம்.

சரி அடுத்த மழைக்காலத்துக்குள், கார்ப்பரேஷன் காரர்கள் வடிகால்களை புனரமைத்து முடிப்பார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அதற்குப் பிறகும் பிரச்னை தீர்ந்து விடும் என நம்ப முடியாது. ஏனெனில் தற்போது வடிகால் தூர்வாரும் பணிகள் நடந்து வரும் பகுதிகளில் பெரும்பாலானவை கட்டுமானப் பணி முடிந்ததுமே அவற்றின் வலிமை உறுதியாகும் முன்பே போதிய அவகாசமின்றி உடனடியாக மக்கள் புழக்கத்துக்காக பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் பாதாள வடிகால்களை மூடப் போடப்பட்ட சிமெண்ட் மூடிகள் இப்போதே உடையத் தொடங்கி விட்டன. இது ஒரு பக்கம் என்றால் புறநகர்ச் சாலைகளின் நிலை பற்றிச் சொல்லவே தேவையில்லை. சென்னையிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் எப்போதும் சாலைப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் எதற்கு முன்பு எதைச் செய்து முடிப்பது எனும் திட்டமிடல் இல்லாத காரணத்தால் அரைத்த மாவை அரைப்பதைப் போல திரும்பத் திரும்ப செய்த வேலைகளையே செய்யும் துரதிர்ஷ்ட நிலையில் இருக்கிறது சென்னை கார்ப்பரேஷன்!

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் நான்கைந்து முறை புதிதாக சாலைகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் புதிதாகச் சாலைகள் போடப்பட்டதும் அவற்றின் புதுக்கருக்கு மறைவதற்குள்ளாகவே ஏதாவது சாக்கிட்டு சாலைகளையும் தெருக்களையும் தோண்ட ஆரம்பித்து விடுகிறார்கள். கேட்டால் சொல்வதற்காக டெலிபோன் கேபிள் பதிக்கிறோம், மின் வாரிய பராமரிப்பு வேலைகளுக்காகத் தோண்டுகிறோம், மழைநீர் வடிகால்களைத் தூர் வார தோண்டுகிறோம் இத்யாதி... இத்யாதி எனப் பல நிவாரணக் காரணங்களை தயாராக வைத்திருக்கிறார்கள். இதில் நஷ்டமாவது மக்களின் வரிப்பணம் என்ற பொறுப்புணர்வு யாருக்குமே இல்லை. ஏனெனில் அதிகாரத்தில் இருப்பதும் களத்தில் பொறுப்பின்றி வேலை செய்வதும் கூட நம் மக்களில் சிலரே என்பதால் இப்போது நாம் யாரைத்தான் குற்றவாளியாக்க முடியும்?
 
ஒரு இடத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்தால் பாதை திசை மாற்றப்பட வேண்டும். வேலை நடந்து கொண்டிருக்கையில் அந்தப் பாதையை புழங்கினால் பணிகள் நிறைவேறுவதில் மட்டுமா தாமதம்? அப்போது பணிகள் தரமாக நிறைவேறுதல் என்பதே சந்தேகத்துக்கிடமாகி விடாதா? மாற்றுப் பாதையை செப்பனிட்டு ஓரளவுக்கு மக்கள் பயன்பாட்டுக்கு தயார் செய்து தர வேண்டிய கடமை யாருடையது? இது சம்மந்தப் பட்ட பணிகளைச் செயல்படுத்தும் நிர்வாகிகளின் தவறு தானே? சில நேரங்களில் சகலத்துக்கும் மக்களை மட்டுமே குறை கூறிக் கொண்டு இருக்க முடியாது. இப்போது மாற்றுப் பாதைகள் இல்லாத நிலையில் பயன்பாட்டில் உள்ள பாதையும் மராமத்தில் இருந்தால் மக்கள் என்ன தான் செய்வார்கள். இம்மதிரியான நேரங்களில் அரசின் பராமரிப்புப் பணிகளும் தரமாக அமைய வாய்ப்பில்லாது போகும். பிறகு மீண்டும் மீண்டும் மீண்டும் சாலைகளையும், தெருக்களையும் தோண்டித் தோண்டித் தோண்டி ஒரு கட்டத்தில் நாமிருக்கும் கண்டத்திலிருந்து நேரெதிராக பூமியின் மறுபுறமிருக்கும் அடைந்து விடப் போகிறோமோ என்னவோ?! 

ஒருவழியாக வடிகால் தூர்வாறல் முடிந்ததும் மீண்டும் சாலைகளும், தெருக்களும் புனரமைக்கப் பட வேண்டும். இன்று வரை சென்னை சாலைகளைத் தொடர்ந்து உபயோகித்து வரும் இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளைக் கேட்டுப்பாருங்கள் சிங்காரச் சென்னையின் சாலை அழகைப் பற்றி!

கடந்த வாரம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்று திரும்ப வேண்டிய வேலை இருந்தது. திரும்பும் போது கால் டாக்ஸிகள் கிடைக்கவில்லை. விமான நிலைய நுழைவாயிலுக்கு வெளியிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ கிடைக்கவே வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். ஆட்டொ ஓட்டுனர் வழியெங்கும் ஒரே புலம்பல்...

“பாருங்க பிச்சைக்காரன் உடுத்தும் கிழிந்த துணி போல நம் ஊர் சாலைகளில் எத்தனை ஒட்டுக்கள் என்று! சென்னைக்குள் ஒட்டுப்போடாத குண்டு குழியில்லாத ஒரே ஒரு சாலையைக் கூட கண்ணில் கண்டு விட முடியாது. அப்படி எதுவும் இருந்தால் முன்பு அது ஜெயலலிதா பயணித்த சாலையாக இருக்கும். சாலைகள் இப்படி இருந்தால் ஆக்ஸிடண்டுகள் எப்படி குறையும்? இதில் அடிக்கடி பைக் ரேஸ், கார் ரேஸ் என்று வேறு கிளம்பி விடுகிறார்கள். போன வாரம் ஈ.சி.ஆரில் பிடிபட்ட லக்ஸூரி கார்களை எல்லாம் டி.வி செய்திகளில் பார்த்திருப்பீர்களே?! எல்லாமே பல லட்சம் விலை... சாதாரணமாக வண்டி ஓட்டவே லாயக்கில்லாத நம் ஊர் சாலைகள் மற்றும் தெருக்களில் சாகசம் செய்ய நினைக்கும் இளவட்டங்களை என்ன சொல்ல? ஒட்டுப் போட்ட சாலைகளும், ஓட்டை விழுந்த தெருக்களும் தான் சென்னையின் தலைவிதி போலும்! இதில் சிங்காரச் சென்னையாம்.. .சிங்காரச் சென்னை. ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளிருக்குமாம் ஈரும் பேனும் கதை தான் இந்த ஊரின் பகட்டு!" என்று ஒரு பாட்டம் புலம்பி முடித்தார். 

அவர் சொல்வதிலும் நியாயமில்லாமலில்லை... சொன்னபடி மழைநீர் வடிகால் தூர்வாரும் பராமரிப்புப் பணிகளுக்காக இப்போது ஓட்டை விழுந்த தெருக்களையும் கர்ண கடூரமான மேடு பள்ளங்களாக மாறி விட்ட சென்னை சாலைகளையும் மேம்படுத்த மீண்டும் ஒரு முறை சாலைகள் போடப்படலாம். ஆனால் அவை கிழிந்த துணிகள் போல ஒட்டுப் போடப்படாமல் இருக்குமா? என்பதே நம் முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி. தினமும் வீட்டிலிருந்து அலுவலகம் வந்து சேரும் வரை நாம் ஒழுங்காக சாலை விதிமுறைகளைப் பின்பற்றி நமது வாகனங்களை இயக்கினாலும் கூட எதிரில் வருபவர்கள் எப்படி வாகனம் ஓட்டுகிறார்களோ என்று கண்காணிப்பதில் தான் அதிகக் கவனம் செலுத்த வேண்டியதாகி விடுகிறது. ஒவ்வொருவரும் இந்த ஒட்டுப் போட்ட சாலைகளைக் கூட ராஜ பாட்டைகளாக நினைத்துக் கொண்டு சர், சர்ரென பறந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் இந்த ஒட்டுப் போட்ட சாலைகளும் ஓட்டை விழுந்த தெருக்களும் தான் என்றென்றும் நமது சிங்காரச் சென்னையா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com