இந்த வருடம் மாம்பழ சீசன் ஏமாற்றிவிட்டதா?

ஒவ்வொரு கோடை காலத்திலும் ஆறுதலாக இருக்கும் ஒருசில விஷயங்களுள் முக்கியமானது மாம்பழம்.
இந்த வருடம் மாம்பழ சீசன் ஏமாற்றிவிட்டதா?

ஒவ்வொரு கோடை காலத்திலும் ஆறுதலாக இருக்கும் ஒருசில விஷயங்களுள் முக்கியமானது மாம்பழம். முக்கனிகளில் முக்கியமான இந்த மாங்கனி இந்த வருடம் சுவையில் சிறக்கவில்லை என்பது வருத்தமான உண்மை. இதற்கு என்ன காரணம் என்ற ஆராய்ந்து பார்த்ததில் மேலும் வருத்தமே மிஞ்சியது. 

இந்த வருடம் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்தே மாம்பழங்கள் சந்தையில் பரவலாக கிடைக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் அவை பார்க்க மட்டுமே அழகாக இருந்தது, ஆனால் வடிவத்தில் சிறியதாக இருந்தது. மேலும் அந்த மாம்பழங்களின் சுவை மிகவும் சுமார்தான். இனிக்காத மாம்பழங்கள் ஒருபுறம் எரிச்சலூட்ட, செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் லேசான கசப்புத்தன்மையுடன் இருந்ததால் மாம்பழ ரசிகர்கள் கடுப்பானார்கள். தோட்டக்கலை நிபுணர்கள் இது குறுத்து கூறுகையில் கடந்த வருடம் மழை சரிவர இல்லாததாலும், பூமியின் நீர்வளம் குறைந்து வறட்சியாக இருந்ததாலும் மாம்பழ சாகுபடியில் ஏகப்பட்ட குளறுபடிகள் எனவும் இதனால் தான் சுவை குன்றிய பழங்கள் விளைந்துவிட்டது என்றும் கூறினார்கள். மாம்பழங்கள் சுவை, வடிவம் மற்றும் செறிவிலும் குன்றிவிட்டது வருத்தம்தான் என்றும் வருந்தினர். 

மாம்பழங்களில் இனிப்பு குறைவாக இருப்பதால் விலையும் சற்று குறைவுதான் அதனால் இந்த வருடம் அதன் விற்பனை சரிந்துவிட்டது என மாம்பழ வியாபாரிகள் வயிறு எரிகிறார்கள். உண்மையில் பழங்களின் தேவை அதிகம் உள்ளது, பழங்களும் சந்தையில் கிடைக்கின்றன, ஆனால் அவற்றின் ருசியில் ஏற்பட்டுள்ள பிரச்னையால் நாங்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை என்கிறார்கள் கோயம்பேட்டைச் சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர். அல்போன்சா மற்றும் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் கடந்த வருடம் கிலோவுக்கு 80 லிருந்து 90 ரூபாய் வரையிலும் விற்பனை இருந்துவந்தது. ஆனால் இந்த வருடம் அது 70 ரூபாய்க்கு விற்கிறோம். இரண்டாம் தர பழங்களை கிலோ 40 லிருந்து 50 ரூபாய்க்கு தருகிறோம். இமாம் பசந்த் பொருத்தவரையில் போன வருடம் ஒரு கிலோ மாம்பழத்தை 130 ரூபாய்க்கு விற்றோம் இந்த வருடம் அது 90 ரூபாயாகக் குறைந்துவிட்டது என்னத்தைச் சொல்ல? என்று ஆதங்கப்படுகிறார் அவர்.

எங்களிடம் மாம்பழங்களை வாங்கும் சில்லறை வியாபாரிகள் மாம்பழங்களின் தரம் மற்றும் சுவை பற்றி அதிகமாக குறை கூற ஆரம்பித்துவிட்டார்கள் என்கிறார்கள் குத்தகை வியாபாரிகள். செந்தூரம், மல்கோவா, கிளி மூக்கு உள்ளிட்ட பல வகைப்பட்ட பழங்கள் இந்த வருடம் புளிப்பாகவும், அளவில் சிறியவையாகவும், இனிப்பு இல்லாமல் துவர்ப்பாக இருப்பதாகவும் அதிக புகார்கள் அவர்களிடம் வந்த வண்ணம் உள்ளன. எனவே வேறு வழியின்றி விற்றே ஆக வேண்டிய நிலையில் விலையைக் குறைத்து தர வேண்டியுள்ளது என்றார்கள்.

மாம்பழ ஏற்றுமதியாளர்களுக்கும் இதே பிரச்னைதான். தரம் மட்டுமே மாம்பழ விற்பனையைப் பொருத்தவரையில் உண்மையான முதலீடு. ஏற்றுமதிக்கு அனுப்பப்படும் ஒரு அல்போன்ஸாவின் எடை 250 கிலோகிராம் இருக்க வேண்டும். அதே போல் பங்கனப்பள்ளி நிச்சயம் 400 கிலோகிராம் இருக்க வேண்டும். அப்போதுதான் அது ஏற்றுமதிக்கான தரத்துடன் இருக்கும். இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் பழங்கள் இந்த எடைப் பிரச்னையால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிறார்கள். பங்கனப்பள்ளியாவது ஓரளவுக்கு பரவாயில்லை கேரளாவிலிருந்து வந்த அல்போன்ஸா இந்த வருடம் முற்றிலும் ஏமாற்றிவிட்டது என்றும் பதிவு செய்தார்கள்.

இந்த வருடம் வறட்சியால் மாம்பழங்களின் தரம் குறைந்துவிட்டது. மாம்பழங்கள் பெரும்பான்மையாக சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கர்னாடகத்தில் விளைகின்றன. மாம்பழ சாகுபடிக்கு அதிகமான அளவில் நீர்ப்பாசனம் தேவைப்படும். மாமரங்கள் பூப்பூத்து, மாம்பிஞ்சு வெளிவந்தும் அது வளர்ந்து முற்றிய காயாகி, அதன் பின் நன்கு கனிந்து மாம்பழமாகும் வரையிலும் ஒவ்வொரு காலகட்டமும் முக்கியமானது. மாமரங்களை பராமரிப்பதில் அதிக கவனம் தேவை. இந்த சமயங்களில் மாமரங்களுக்குப் போதிய தண்ணீர் கிடைக்கவேண்டும். அம்மரங்களைச் சுற்றி எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும். அத்தகைய நல்ல பராமரிப்பில்தான் சத்தான சுவையான மாம்பழங்கள் கிடைக்கும். ஆனால் சமீப காலங்களில் தண்ணீர் பிரச்னை தவிர அதிகப்படியான உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளின் பயன்பாடுகள், மண்ணின் அமிலத்தன்மை போன்றவற்றால் மாம்பழங்களின் தரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் தோட்டக்கலை நிபுணர்கள்.

மண்ணில் உள்ள அமிலத்தன்மையால் மாம்பழங்களில் இயற்கையாகவே சுவை குன்றிவிடுகிறது என்கிறார்கள் மாம்பழங்களை பயிர் செய்யும் விவசாயிகள். கடந்த நாற்பது ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டதில்லையாம். மாம்பூக்களாக இருக்கும் போது நீர் பற்றாக்குறை, காற்றில், ஈரப்பதம் இல்லாமல் போவது போன்ற பிரச்னைகளால் அவை உதிர்ந்துவிடுகின்றன. எஞ்சியவற்றிலிருந்து கிடைக்கும் பழங்களிலும் சாரம் மற்றும் சுவை இல்லை என்று வருத்தத்துடன் பதிவு செய்தார்கள் மாம்பழ விவசாயிகள்.

இந்தக் கொடுமையான வெயில் காலத்தில், பசியாற இனிப்பான ஒரு மாம்பழம் கூட கிடைக்காதவர்களாகிவிட்டோமே என்று நினைத்தபோது தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் ஓடியது, அசல் மாம்பழம் போல எங்கள் குளிர்பானம் இருக்கும் என்றார்கள். அசலே இங்கு அசலாக இல்லாத போது, நகல்கள் என்னவாக இருக்க முடியும் என  வருத்தம் மட்டுமே பட முடிந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com