மரணத்தை அறிவிக்கும் அறிகுறிகள்

நேற்று மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அதன் மோக்ஷ தர்ம
மரணத்தை அறிவிக்கும் அறிகுறிகள்


நேற்று மஹாபாரதத்தின் சாந்தி பர்வத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அதன் மோக்ஷ தர்ம பர்வத்தில் 317ஆவது அத்யாயத்தில் மரணத்தை அறிவிக்கும் லக்ஷணங்களை ஜனக மன்னனுக்கு யாக்ஞவல்க்யர் கூறுவதாக வரும் பகுதி சிலிர்க்க வைக்கிறது.

எப்படி ஒரு கரு உருவான சில காலங்களுக்குள்ளே அதையறிந்து கொள்கிறோமோ, அதே போல இந்த ஜீவன் விடைபெறும் காலமும்
நமக்கு சில அறிகுறிகள் மூலமாக முன்கூட்டியே அறிவுறுத்தப்படுவது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். 

இனி அந்த உரையாடலுக்குச் செல்வோம்.

யாக்ஞவல்க்யர் ஜனக மன்னனிடம் கூறுகிறார்:

'மிதிலை மன்னா! ஞானிகள் மூலம் தீர்மானிக்கப்பட்ட அமங்கலமான அல்லது மரணத்தை அறிவிக்கும் அடையாளங்களை வர்ணிக்கிறேன். அவை சரீரம் விடுபடுவதற்கு ஒரு வருஷம் இருக்கும்போதே அவனுக்கு முன்னால் தோன்றுகின்றன. 

யார் ஒருபோதும் முன்பு கண்ட அருந்ததி அல்லது துருவ நக்ஷத்ரத்தைப் பார்ப்பதில்லையோ-

பூர்ண சந்திரனின் மண்டலம் அல்லது விளக்கின் ஒளி யாருக்கு வலது பக்கம் துண்டிக்கப்பட்டதாகக் காணப்பட்டதோ-

யார் மற்றவர்களின் கண்களில் தன்னுடைய நிழலைக் காண்பதில்லையோ-  அத்தகைய மக்கள் ஒரு வருஷம் வரை மட்டுமே உயிரோடு இருப்பார்கள்.

மனிதனின் சிறந்த காந்தியும் மிகவும் மங்கி விடுமானால், அதிக அறிவும் அறிவிழந்த நிலைக்கு மாறுமானால், இயல்பாகவே பெரும்மாறுதல் உண்டாகுமானால்-

எவனொருவன் கண்களுக்குக் கருப்பாக இருந்தாலும் மஞ்சள் போலத் தோன்றுமோ- எவனொருவன் தேவர்களை மதிக்க மாட்டானோ- எவனொருவன் பிராமணனோடு* விரோதம் செய்வானோ-  

அது அவனுடைய ஆறு மாதத்திற்குள் உண்டாகும் மரணத்தின் அறிவிப்பாகும்.

எந்த மனிதன் சூரிய - சந்திர மண்டலத்தை சிலந்தி வலையைப் போல துளையுள்ளதாகப் பார்க்கிறானோ- யார் ஆலயத்தில் அமர்ந்து அங்குள்ள நறுமணப் பொருட்களில் அழுகிய பிணத்தின் துர்கந்தத்தை அனுபவிக்கிறானோ- 

அவன் ஏழு இரவுகளில் மரணத்தை அடைகிறான்.

யாருடைய காதும், மூக்கும் வளைந்து விடுமோ- பற்கள் மற்றும் கண்களின் நிறம் கெட்டு விடுமோ - யாருக்கு நினைவற்ற நிலை உண்டாகுமோ - யாருடைய உடல் குளிர்ந்து விடுமோ - யாருடைய இடது கண்ணிலிருந்து தற்செயலாகக் கண்ணீர் கிளம்புமோ - தலையிலிருந்து புகை உண்டாகுமோ -

அவனுக்கு அக்கணமே மரணம் உண்டாகிறது.

மரணத்தை அறிவிக்கும் இந்த லக்ஷணங்களை உணர்ந்து மனதைக் கட்டுப்படுத்தும் சாதகன் இரவும் பகலும் பரமாத்மாவை தியானம்
செய்ய வேண்டும். மரணம் உண்டாகும் நேரத்தை எதிர்பார்க்க வேண்டும்.

அதற்கு முந்தைய 315வது அத்யாயத்தில் ஜனக மன்னனுக்கும், யாக்ஞவல்க்யருக்குமான உரையாடலே ஒரு கவிதையாய்த் தென்பட்டது

யாக்ஞவல்க்யர் கூறுகிறார்:

'மன்னா! அத்திப்பழத்தின் தொடர்பால் புழுக்கள் அத்தோடு பற்றப்படுவதில்லை. 

மீன் வேறு பொருள். நீர் வேறு பொருள். நீரின் ஸ்பரிஸத்தால் ஒரு போதும் எந்த மீனும் பற்றப் படுவதில்லை.

அக்னி வேறு பொருள். மண்பாண்டம் வேறு பொருள். இந்த இரண்டின் வித்தியாசத்தையும் நித்யமானதென்று கருது. 

தாமரை வேறு. நீர் வேறு. நீரின் ஸ்பரிஸத்தால் தாமரை பற்றப்படுவதில்லை. 

அதுபோல ப்ரகிர்தியும், புருஷனும் வெவ்வேறானவை. ஜீவனும், உடலும் வெவ்வேறானவை. சங்கமமற்றவை.

சாதாரண மனிதன் அவற்றின் சகவாசத்தையும், வாழ்விடங்களையும் ஒருபோதும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை.

- சுந்தர்ஜி ப்ரகாஷ்

* வியாஸர் இதை எழுதும்போது பிராம்மணர்கள் என்று மட்டும்தான் எழுதுகிறார். கலியுகத்தில் பிராமணக்குரிய தகுதி பிறப்பால் மட்டும் வருவதாய் நான் நினைக்கவில்லை. 'பிராம்மணன் என்று யாக்ஞவல்க்யர் குறிப்பது பிறப்பால் பிராம்மணர்களாய் இருப்பவர்களை அல்ல' இப்போதும் தன் தன்மையால் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவரும் பிராமணராகலாம் என்ற விதியை நான் வலியுறுத்தவே விரும்புகிறேன். பிறப்பால் அல்ல. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com