நம்மை உலுக்கிய இந்த கோடை வெயில்தான் உச்சமா - என்ன சொல்கிறது புள்ளி விவரம்?

சென்னை மக்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த கோடைக்காலத்தில் தொடர்ந்து 9 நாட்கள் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் வெப்பத்தில் வாடி வதங்கினர்.
நம்மை உலுக்கிய இந்த கோடை வெயில்தான் உச்சமா - என்ன சொல்கிறது புள்ளி விவரம்?


சென்னை: சென்னை மக்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த கோடைக்காலத்தில் தொடர்ந்து 9 நாட்கள் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் வெப்பத்தில் வாடி வதங்கினர்.

2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் இந்திய வரலாற்றில் அதிக வெப்பம் தாக்கிய ஏப்ரல் என்ற சாதனை விரைவில் பின்னுக்குத் தள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என் என்றால், சென்னையில் இந்த மே மாத கோடை வெயிலின் போது தொடர்ந்து 9 நாட்கள் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் வெப்பம் கொளுத்தியது. இது கடந்த ஆண்டு மே மாத வெயில் அளவுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம்.

அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம் (NOAA) வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் தற்போது மிக வேகமான வெப்பமயமாதல் எனும் விஷயத்தை கடந்து கொண்டிருக்கிறது. 

2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் மே மாதங்கள், கடந்த 20ம் நூற்றாண்டு மே மாதங்களைக் காட்டிலும் மிக வெப்பமான மாதங்களாக பதிவாகியுள்ளது. அப்படியானால், 2017ம் ஆண்டு மே மாதம் இந்த வெப்ப அளவுகளை விட நிச்சயம் அதிகரிக்கும் என்பதும், இதற்கு ஒரு அறிகுறியாக 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதமே அதிக வெப்பமான மாதம் என்ற பெருமையை சேர்த்துக் கொண்டிருப்பதையும் கூறலாம்.

இந்தியாவில் கடந்த 50 ஆண்டு காலமாக முறியடிக்கப்படாத வெப்ப அளவாக இருந்ததை, இதே மா மாதத்தில்தான் தார் பாலைவனப் பகுதி முறியடித்திருந்தது. அதாவது ராஜஸ்தான் மாநிலம்  பலோடியில் 2016ம் ஆண்டு மே 19ம் தேதி 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதுதான் இந்தியாவில் பதிவான அதிகப்படியான வெப்பமாகும். இதற்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் 1956ம் ஆண்டு 50.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்ததே சாதனையாக இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு பலோடி பகுதியை வெப்பம் தாக்கவில்லை. அதிகபட்ச வெப்பநிலையே 43 டிகிரி செல்சியஸ்தான். ஆனால், தார் பாலைவனப் பகுதி வழக்கம் போலவே இந்த ஆண்டும் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.

இந்தியாவில் மிக அதிகமான வெப்பம் பதிவாகும் தார் பாலைவனப் பகுதியைத் தொடர்ந்து தெலங்கானாவின் நல்கொண்டா பகுதியைத்தான் சொல்ல வேண்டும். இங்கு அதிகபட்சமாக 46.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவானது. 12 நாட்களுக்கும் மேலாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் வெப்பம் நீடித்தது.

வெப்பம் அதிகமாகக் காணப்படும் நகரங்களை எடுத்துக் கொண்டால், மகாராஷ்டிராவின் அகோலா, ஒடிசாவின் பலன்கிர், நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெப்பம் தாக்கியது.

நம்மைக் கடந்து கொண்டிருக்கும் சமீபத்திய கோடை தான் நிச்சயம் உச்சபட்சமாக இருக்கும் என்று நாம் நினைத்தாலும், புள்ளி விவரங்கள் இல்லை என்றே சொல்கிறது. ஆனால், உச்சபட்ச வெப்பநிலையை விட, இப்போதைய வெயில் நம்மை அதிகமாக தாக்குவதற்குக் காரணம், பூமிப் பகுதியில் காணப்படும் வெப்பம்தான் என்று கருதப்படுகிறது.

அதாவது தரைப் பகுதியும் அதிக வெப்பமாகக் காணப்படுவதால் இந்த கோடை நம்மை அதிகமாக தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதுவரை பதிவான அதிகபட்ச வெப்ப நிலையும், 2017ம் ஆண்டில் பதிவான வெப்பமும்.

இடம்உச்சபட்சம்2017 மே
சென்னை45 (மே 2003)43 டிகிரி
பெங்களூர்39 (ஏப்ரல் 2016)36 டிகிரி
ஹைதராபாத்45.5 (ஜூன் 1966)42 டிகிரி
தில்லி48.4 (மே 1998)44 டிகிரி
மும்பை42.2 (ஏப்ரல் 1952)35 டிகிரி
கொல்கத்தா43.9 (ஜூன் 1924)39 டிகிரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com