சென்னையில் நல்ல கருவாட்டுக் கடைகளே இல்லையா?

இந்த கட்டுரையைப் படித்து யாரேனும் கருவாட்டுக் குழம்பு வைக்க முயன்றால் இதில் சொல்லப் பட்டதைப் போலவே அதை உண்ணவும் முயற்சி செய்யுங்கள். 
சென்னையில் நல்ல கருவாட்டுக் கடைகளே இல்லையா?

சென்னையைப் பொறுத்தவரை ஒரு நல்ல கருவாட்டுக் கடையைக் கண்டடைவதும், மனிதருள் மாணிக்கத்தை தேடுவதும் ஒன்றே! அத்தனை அலைச்சலான வேலை என்பதோடு மட்டுமல்ல கடைசி வரை நமது இலக்கு நம் கண்ணில் தட்டுப்படவும் செய்யாது. அஃதே! சில நேரங்களில் வாகனங்களில் விரைந்து கொண்டிருக்கும் போது தூத்துக்குடி கருவாடு மொத்த வியாபாரக் கடை என்றோ அல்லது கருவாடு மொத்த வியாபாரம் என்றோ சாலையோரங்களில் விளம்பர பதாகைகளோ, அங்காடிப் அறிவிப்புப் பலகைகளோ கண்ணில் சிக்கும். உண்மையில் அந்த நேரங்கள் தான் ஆகச் சிறந்த தர்ம சங்கட காலங்கள். விரையும் வாகனத்தில் இருந்து நம்மால் சட்டென இறங்கிப் போய் வாங்கவும் முடியாது. அப்புறம் வாங்கிக் கொள்ளலாம் என்று சில நாட்கள் கழித்துப் போகையில் அந்த இடங்களில் கடைகளே இல்லாமலும் போகும்.

இத்தனை ஏன் கோயம்பேடு காய்கறிச் சந்தையின் உள்ளேயே கருவாட்டுக் கடைகளுக்கும் முன்பெல்லாம் கொஞ்சம் இடமிருந்தது. இப்போதென்னவோ அதற்கும் தடா போட்டு விட்டார்களாம். வசிக்கும் இடங்களில் உள்ள சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கும் என்று தேடினால்... அய்யோ... மேடம் இங்கே நான் வெஜ் சாப்பிடாத கஸ்டமர்ஸ் வராம போயிடுவாங்களே, அதனால விற்கறது இல்லை. உங்களுக்கு வேணும்னா அட்வான்ஸா சொல்லுங்க, ஸ்பெஷலா கொஞ்சம் வாங்கிட்டு வந்து தருகிறோம்” என்கிறார்கள். கருவாட்டுப் பிரியையான என்னைப் பொறுத்தவரை அவர்களைப் பார்க்கும் பொழுது அட அஞ்ஞானங்களா! என்றிருக்கும். ஏனெனில் கருவாடு வாங்குவதில் இருக்கும் சிறப்பே; நம்மைச் சுற்றிலும் கடல் போல பலவிதமான கருவாட்டு வகைகள் கூடை கூடையாகப் பரந்து விரிந்து கிடக்க நாசி கமகமக்க அந்த மணத்தை ஆசை தீர அனுபவித்து அதில் நமக்குத் தேவையானதை, பிடித்தமானதை தேர்வு செய்ய வேண்டும். அப்படி வாங்கிச் சென்று சமைத்தால் தான் கருவாடு ருசிக்கும். இது கூடத் தெரியாமல் இப்படிச் சொல்கிறார்களே என்றிருக்கும். நான் நினைப்பதை அவர்களிடம் சொல்லவா முடியும்! அக்கறையோடு சொல்லும் அவர்களைப் பார்த்து புன்னகையோடு நகர வேண்டியது தான். அம்மாதிரி நேரங்களில் தான் பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டில்; பாட்டி கையில் உருட்டிப் போடப் போட ஆவல் பொங்க உண்ட தேன் நெத்திலிக் கருவாட்டுச் சோறு ஞாபகம் வந்து தொலையும்.

ச்சே...என்ன ஒரு அருமையான நாட்கள் அவை! மீண்டும் வராதா.. என்று ஏக்கம் கொள்ள வைப்பவை. பேசாமல் கிராமத்திலேயே இருந்திருக்கலாம்... தோன்றினால் கையில் காசில்லாத நேரங்களிலும் கூட கடனுக்குத் தஞ்சாவூர் நாயக்கர் கடையில் நெத்திலிக் கருவாடும், நெய் மீன் கருவாடும் எப்போதும் வாடாது, வசங்காது கிடைக்கும். கிராமத்துப் பண்டமாற்று முறையில் தோட்டத்தில் விளையும் காய்கறிகளைக் கொடுத்து விட்டு கருவாட்டைப் பண்டமாற்றம் செய்து கொள்வார் பாட்டி. எங்களுக்கெல்லாம் அந்நாட்களில் பாட்டி தேன் நெத்திலி குழம்பு வைக்கும் முறையை வேடிக்கை பார்ப்பதே அலாதியான ஆனந்தமாக இருக்கும்.

முதலில் நியூஸ் பேப்பரில் பொட்டலம் கட்டி வாங்கி வரும் தேன் நெத்திலிக் கருவாடுகளை அப்படியே பொட்டலத்தைப் பிரித்து கருவாட்டு மண்டைகளையும், உள்ளிருக்கும் காய்ந்த நார் போன்ற குடல் பகுதியையும் நுனி விரல்களால் கிள்ளிப் போட்டு சுத்தம் செய்வார். பிறகு சுத்தமானதை எடுத்து கற்சட்டியில் கொட்டி ஒரு சொம்புத் தண்ணீர் விட்டு ஊற வைப்பார். கால்மணி நேரம் ஊறியதும் அந்தத் தண்ணீரை வடித்து விட்டு மேலும் ஒரு சொம்பு நல்ல தண்ணீர் விட்டு கைகளால் அலசுவார். ஒரு பக்கம் கருவாட்டின் எடைக்கு ஏற்ப சின்ன வெங்காயம் உறிக்கப் பட்டு தயாராக இருக்கும். கால் கிலோ கருவாட்டுக்கு 20 சின்ன வெங்காயம். பொடியாக நறுக்கிய குட்டிப் பச்சை மிளகாய் ஒரு பத்து. உறித்த பூண்டு 5 பல், மஞ்சள்தூள் கொஞ்சம் என்று முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்வார். அதென்னவோ பாட்டி வைக்கும் கருவாட்டுக் குழம்பில் புளி சேர்த்ததே இல்லை புளிக்குப் பதிலாக நாட்டுத் தக்காளி தான் சேர்ப்பார். ஆக தக்காளியின் புளிப்புக்கு ஏற்ப கால்கிலோவோ அல்லது அதற்கும் குறைவாகவோ எடுத்து வைத்துக் கொள்வார். சரி இப்படிச் சொன்னால் புதிதாக குழம்பு வைக்க விரும்புபவர்களுக்கு சற்றுக் குழம்பி விடுவார்கள். வழக்கமான முறையில் இனி பாட்டி வைத்த நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு ரெஸிப்பியைப் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

கருவாடு: கால் கிலோ
சின்ன வெங்காயம்: 100 கிராம்
பச்சை மிளகாய்: 10
இஞ்சி: ஒரு சின்னத் துண்டு
பூண்டு: 5 பல்
தக்காளி: கால் கிலோ
மஞ்சள் தூள்: சிறிதளவு
கறிவேப்பிலை: ஒரு ஆர்க்
நல்லெண்ணெய்: 100 கிராம்
உப்பு: சிறிதளவு

செய்முறை:

முதலில் வாணலியில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். கலவை பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் இரண்டையும் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு சாறு இறங்கி வெங்காயக் கலவையுடன் நன்கு கலக்குமாறு கிளறி விட்டு மஞ்சள் தூளும், ஒரு சிட்டிகை உப்பும் சேர்க்கவும். தக்காளியில் இருக்கும் சாறு ஒரு கொதி வந்ததும் அலசி சுத்தமாக்கிய கருவாட்டைப் போட்டு நன்கு கிளறி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வாணலிக்கு மூடியிட்டு அடுப்பை சிம்மில் வைத்து குழம்பைக் கொதிக்க விடவும். குழம்பு வற்றத் தொடங்கியதும் ஒரு முறை மூடியை நீக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மேலாக மீதமிருக்கும் நல்லெண்ணெய் சேர்த்து வாணலியை மூடவும். இரண்டே நிமிடங்கள் போதும் தயாராகி விட்ட நெத்திலிக் கருவாட்டு வாசம் நாசியை நெருடத் தொடங்கி விடும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு பொடியாக நறுக்கி வைத்த கறிவேப்பிலை தூவி இறக்கி விடலாம்.

செய்முறை எல்லாம் சரி தான். ஆனால் இந்த ரெஸிப்பிக்கு மட்டும் உண்ணும் முறையையும் சேர்த்து கொடுத்தால் தான் சமைத்து உண்பவர்களுக்கு நிஜமாகவே உண்ட திருப்தி கிடைக்கக் கூடும்.

தேன் நெத்திலிக் கருவாட்டுக் குழம்பை உண்ணும் முறை:

எங்கள் பள்ளி நாட்களில் பாட்டி வீட்டில் பெரிய பானையில் வடித்த சோறு தான் உண்பது வழக்கம். இப்போதைப் போல அன்று பாட்டிக்கு குக்கர்கள் பழக்கமில்லை. ஆகவே அப்போது தான் வடித்து இறக்கிய சுடு சோற்றை கொஞ்சம் அதிகமாகவே ஒரு பெரிய வாயகன்ற சில்வர் கும்பாவில் கொட்டி, அதில் அப்படியே சுடச் சுட இந்தக் கருவாட்டுக் குழம்பை ஊற்றி பாத்திரத்தை ஊறுகாய் பானையைக் குளுக்குவதைப் போல குளுக்கி அலுமினியத் தட்டுப் போட்டு ஓரிரு நிமிடங்களுக்கு மூடி வைத்து விடுவார். அதற்குள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் நாங்கள் கைகால்களை அலம்பிக் கொண்டு திண்ணையில் ஆஜராகியிருக்க வேண்டும். அப்புறம் பாட்டி சோற்றுக் கும்பாவைத் தூக்கிக் கொண்டு வந்து நடுவில் உட்கார்ந்து கொள்வார். ஒவ்வொருவராக கையை நீட்டுவோம். உள்ளங்கை சுடச் சுடச் கார, சாரமான தேவாமிர்தம் போன்ற கருவாட்டுக் குழம்பு வாசம் ஆளை மயக்கி மீண்டும், மீண்டுமென கைகளைப் பாட்டியை நோக்கி நீளச் செய்யும். பாட்டி சோற்றை உருட்டிப் போட்டுக்கொண்டே அவருக்குத் தெரிந்த நாட்டுப்புறக் கதைகளை வேறு சொல்வார். அந்த நாட்கள் எல்லாம் இந்தச் சென்னையில் கருவாட்டுக் கடை தேடும் இந்த கொடூர நாட்களில் ஞாபகத்திற்கு வந்து கண் கலங்க வைத்தாலும் அவையெல்லாம் நினைவின் சொர்கம் என்றால் அது மெய்!

இந்த கட்டுரையைப் படித்து யாரேனும் கருவாட்டுக் குழம்பு வைக்க முயன்றால் இதில் சொல்லப் பட்டதைப் போலவே அதை உண்ணவும் முயற்சி செய்யுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com