விவசாயிகள் பிரச்னை தீர்க்கும் தொடர் போராட்டத்தில் இன்று என் தாயை இழந்தேன், இனி அவரது ஆத்ம சாந்திக்கேனும் கண் திறந்திடுமா அரசு எந்திரம்?!

விரக்தியுடன் இறந்த என் அம்மாவுடன் சொந்த ஓர் திரும்பிக் கொண்டிருக்கும் திருச்செல்வமாகிய இப்படியோர் அவலமான சந்தர்பத்தில் இந்த அரசு எந்திரத்தை மீண்டும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்... என் தாயாரின்
விவசாயிகள் பிரச்னை தீர்க்கும் தொடர் போராட்டத்தில் இன்று என் தாயை இழந்தேன், இனி அவரது ஆத்ம சாந்திக்கேனும் கண் திறந்திடுமா அரசு எந்திரம்?!

விவசாயிகள் பிரச்னையில் இன்றைய உடனடித்தேவை, தண்ணீர் இருந்து விவசாயம் செய்பவர்களது நிகர லாபத்தை அதிகரிப்பது (நல்ல தரம், அதிக விளைச்சல், உரிய விலை) மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள கடித்தன்மையை இலகுவாக்குவது என்பது தான். இதுதான் விரக்தியில், வாழ்க்கையைப் பற்றிய பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் தரும். நதி நீர் இணைப்பு, விளை பொருள்கள் சேமிப்பு கிடங்குகள், எளிமைப்படுத்தப்பட்ட வங்கிக்கடன்கள் மற்றும் சிறந்த பயிர்காப்பீடு போன்ற முக்கிய திட்டங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படுவதற்கு மேற்கண்ட காரணிகளே வழிவகுக்கும்.
 
எங்கள் பிரச்னையை ஊடகத்திற்கு கொண்டுவருவதற்கான நிர்பந்தம்...
 
மேற்கண்ட விஷயங்களைச் சாத்தியப்படுத்துவதற்கான எனது தொடர் போராட்டத்தில் எனது இந்த பதினாறு ஆண்டுகால முழுநேர பயணத்திற்கு முதுகெலும்பாக இருந்தவர் எனது தாயார் திருமதி கல்யாணி ராமு. கணிப்பொறி வல்லுநர்கள் நிறைய சம்பாதித்து சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், குடும்பத்தின் பொருளாதார சுமையைத் தாங்கி, மனம் தளராமல் ‘என் மகன், நாட்டின் மிக முக்கிய பிரச்சனையை தீர்க்கப் போராடிக்கொண்டு இருக்கின்றான். அவன் தன் முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவான்’ என்கிற மன உறுதியோடு ஊராரின், உறவினரின் விமர்சனங்களையும், ஏளனங்களையும் உதறித்தள்ளிவிட்டு என்னை ஊக்குவித்தவர். இந்த கடும் பயணத்தில் உடல் நலன் பாதிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடி காரணமாக சரிவர மருத்துவம் செய்து கொள்ளாமல், என் மகன் வெற்றி பெறட்டும். பிறகு நன்றாக பார்த்துக்கொள்ளலாம் என்கிற தியாக வாழ்க்கை வாழ்ந்தவர். இன்று வெற்றி பெற்றுவிடுவான், நாளை வெற்றிபெற்றுவிடுவான் என்ற நம்பிக்கையையே மருந்தாக கொண்டு நாட்களை கடத்தி வந்தார். ஆனால் பதினாறு ஆண்டு காலக் காத்திருப்பு என்பது அவர் வரையில் இன்று எல்லை கடந்த காத்திருப்பாக ஆகி விட்டது. கடந்த 20 நாட்களாக மிகுந்த உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பல நல்ல உள்ளங்களின் பிரார்த்தனையும் மீறி, நேற்று இரவு சுமார் பத்து மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். நேற்று வரையிலும் எனது முயற்சிகளின் மீது எள்ளளவும் நம்பிக்கை குறையாது என் திட்டங்கள் வெற்றி பெறும் என்று காத்திருந்த ஜீவன் இன்று இல்லை. நானும் எனது குழுவும் கண்டறிந்த நவீன விவசாயக் கொள்கைகளை அரசு அங்கீகாரத்துடன் செயல்படுத்திட நினைத்துச் செலவிட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலான கடின உழைப்பின் பயனாக இன்று நான் என் அம்மாவை இழந்தது தான் நான் கண்ட பலன்!

என் திட்டங்கள் ஒவ்வொரு முறையும் சாத்தியமாவதற்கான கடைசி எல்லை வரை சென்று, இன்று சாத்தியப்பட்டு விடும், நாளை சாத்தியப்பட்டு விடும் என்ற ஆழந்த நம்பிக்கையை அளித்து பின் கிடப்பில் போடப்பட்ட மோசமான அனுபவங்கள் பல உண்டு.

ஆனால், அத்தனை இழப்பின் பின்னும் எனது வெற்றியின் மீது நம்பிக்கை வைத்து என்னை ஊக்குவிக்க என் அம்மா இருக்கிறார் என்ற நம்பிக்கையே என்னை மேலும், மேலும் இத்துறையில் இதுநாள் வரையிலும் ஊக்குவித்துக் கொண்டே இருந்தது. இன்று, நான் எனது அம்மாவை மட்டுமே இழக்கவில்லை, எனக்கான ஒரு நம்பிக்கையான காத்திருப்பையும் தொலைத்து விட்டேன். அவரது ஆன்மா சாந்தி அடைவதற்கு இறைவனைப் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.
 
2001-ஆம் ஆண்டு தமிழக அரசிடம் இந்த திட்டத்தை சமர்ப்பித்தோம். சமர்ப்பித்த இரண்டு நாட்களில் தலைமைச்செயலாக கதவுகள் திறந்தன. அந்த அளவு சிறப்பாக ஆரம்பித்த எங்கள் பயணம் 16 ஆண்டுகளை நெருங்கிய நிலையில் இன்றும் கூட அதன் துவக்க நிலையிலே தான் இருக்கிறது. இது வரையிலும், அதில் எந்த முன்னேற்றமோ அல்லது அரசின் முன்னெடுப்புகளோ இல்லை. ஒரு திட்டம் எத்தனை நல்ல திட்டமாக இருந்தாலும் சரி, அதைச் செயல்படுத்தும் முறையில் இந்த நாடு கடைபிடிக்கும் மந்தப்போக்கைக்  கண்டு என்னைப் போன்ற தன்னலம் கருதா தொழில்நுட்ப வல்லுநர்களின் மனம் படுகாயமுற்றிருக்கிறது. ஆனாலும், இவ்விஷயத்தில் எனக்கு இருந்த பொறுமை எனது குழுவில் இருக்கும் நண்பர்களைப் பல முறை ஆச்சர்யப்பட  வைத்திருக்கிறது..
 
எனது இந்த பொறுமைக்கான பலம், என் தாயார்! அவர் நலமாக இருப்பார். எங்கள் வெற்றியை கண்டு  பெருமிதம் கொள்வார். மன நிறைவு அடைவார் என்கிற நம்பிக்கை. ஆனால், அந்த நம்பிக்கை இன்று தகர்ந்துவிட்டது.
 
ஒரு மகனாக என் தாய்க்கு இனி நான் செய்யக்கூடியது ஒன்றே ஒன்று தான். விரைந்து செயல்பட்டு அவர் செய்த தியாகத்திற்கு தகுந்த பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் ,
 
அதற்கான முதற்கட்ட முயற்சி தான் இந்த பிரஸ் மீட்.   
 
நான், இந்த அரசாங்கத்திடம், குறிப்பாக... மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் முன் வைக்கும் கோரிக்கைகள் இவைதான்:
 
இளைஞர்களே வாருங்கள்... நாட்டை முன்னேற்றுங்கள்! என்று கோரிக்கை வைக்கின்றீர்கள், அதனால் ஈர்க்கப்பட்டு, நாட்டிற்கு சேவை செய்ய வரும் எங்களை போன்றோரின் உழைப்பை, திறமையைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் இந்த நாடு இருக்கிறதா? என்றால், இல்லை என்பதுதான் உண்மை. தற்போதைய அமைப்பை சீர் செய்யாமல் இளைஞர்களை நாட்டிற்குப் பணிபுரிய அழைக்காதீர்கள். என் தாய்க்கு, எங்கள் குடும்பத்திற்கு நேர்ந்த இந்த அநீதி, அவலம் வேறு எவர்க்கும் ஏற்படக்கூடாது.
 
இந்தியாவின் இன்றைய முக்கியப்பிரச்னைகளில் முக்கியமானது விவசாயம். அதற்கு தீர்வை உருவாக்கி, செயல்படுத்தி, முப்பதுக்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகளிடம் மதிப்பீடு வாங்கி மாநில, மத்திய அரசிடம் திட்டத்தை சமர்ப்பித்தும் அரசு மவுனம் காப்பது, விவசாயப்பிரச்னைக்கு பேச்சளவில் காண்பிக்கப்படும் வேகம், செயல் அளவில் இல்லையோ!  என  ஐயங்கொள்ளச் செய்கிறது.  
 
எங்களது இந்த கருத்திற்கு  முரண்பட்டு, விவாதிக்க விரும்புவோர் எங்கள் கிராமத்திற்கு வாருங்கள்! விவசாயிகளுடனும், கிராம மக்களுடனும் காத்திருக்கின்றோம். 

எங்கள் முகவரி:

ஆலம்பட்டு கிராமம், 
கல்லல் ஒன்றியம், 
காரைக்குடி தாலுகா, 
சிவகங்கை மாவட்டம், 
தமிழ் நாடு.

 
தாயாருடன் ஊருக்கு செல்கின்றேன். தாயாருக்கு இறுதி மரியாதை செய்வதற்காக விவசாய சங்கத் தலைவர்கள், விவசாயிகள் தமிழகமெங்கும் இருந்து வர உள்ளனர். அதனால் இரண்டுநாட்கள் என் தாயாருடன் இருக்கும் வாய்ப்பு, அவர் உயிரிழந்த பின் எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு நாட்களில் இந்திய  விவசாயிகளின் பிரச்னைக்கான தீர்வு வலுப்பெற்று விவசாயிகளுக்கு பலன் தரும் சூழ்நிலை உருவாகும் நம்பிக்கையில் மதுரையில் இருந்து கிளம்புகின்றோம்.
 
நாங்கள் உருவாக்கியுள்ள தீர்வு செயல்படும் விதம்...

விவசாயப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு, கிராம அளவில் விவசாயத்தொழிலை வெற்றிகரமாக செய்து முடிக்கத் தேவைப்படும் கட்டமைப்பை, வசதிகளை, சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதில் தான் உள்ளது. நாங்கள் முன்வைக்கும் இந்தத் திட்டப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் செயல்படும். இதில், இணைய வசதியோடு ஒரு கணினி, அதை இயக்க ஒரு பட்டதாரி, மற்றும் பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட குழு இருக்கும்.
 
விவசாயிகள் இவர்களின் துணையோடு;
 

  • வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள் 
  • தான் பயிரிட விரும்பும் பயிர் எத்தனை ஏக்கர்களில் ஏற்கனவே பயிரிடபட்டிருக்கிறது என்கிற விபரம், 
  • தனது குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான பரிந்துரைகள், சிறப்பான நீர் மேலாண்மை, சிறப்பாக செயல்படக்கூடிய நோய் மற்றும் பூச்சி தடுப்பு பரிந்துரைகள்; போன்ற முக்கிய தவல்களைப் பெறலாம்.

 
மேலும்;
 

  • விதை, உரம் போன்ற இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும், தான் தேர்வு செய்த பொருளை அதற்கான பணத்தை மையத்தில் செலுத்தி குறிப்பிட்ட நாளில் சொந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வசதி.
  • தனது ஊரில், வேலையாட்கள் மற்றும் எந்திரங்கள் கிடைக்காத பட்சத்தில் அருகில் இருக்கும் இடங்களில் இருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதி. 
  • முக்கியமாக, அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களை அறிதல், நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தல் போன்ற முக்கிய செயல் மேலாண்மைத் தேவைகளை செய்துகொள்ள  முடியும்.
  • விவசாயிகளின் தகவல்களைச் சரியாக ஒருங்கிணைப்பது மூலம் சிறு குறு விவசாயிகளது குறைந்த அளவிலான தேவைகளையும் (தரமான இடுபொருள்களை கிராம அளவில் பெற்றுக்கொள்ளும் வசதி  மற்றும்  விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்கும் வாய்ப்பு) வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய முடியும். குறு சிறு விவசாயிகளுக்கான மிகச்சிறந்த தீர்வாக இது அமையும்.
  • இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல், மன உளைச்சல் குறையும், நிகர லாபம் அதிகரிக்கும், சமூக, பொருளாதார வாழ்க்கைத்தரம் முன்னேறும். தேவையில்லாமல் நகர்புறத்துக்கு இடம்பெயரத் தேவையில்லை. 
  • அன்றைய தினத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் நிலப்பரப்பு, தட்ப வெட்பம் போன்ற புள்ளி விபரங்கள் உடனுக்குடன் இணையத்தகவல்களாக பதிவு செய்யப்படுவதால் அரசாங்கத்தை பொறுத்தவரை நாட்டின் உணவுத்தரம், பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு போன்ற மிக முக்கியமான விஷயங்களைச் சிறப்பாக நிர்வகிக்கலாம், பயிர்க்கடன் மற்றும் காப்பீட்டில் ஏற்படும் நஷ்டங்களைக் குறைக்கலாம். பயிர்க்கடன்களை, காப்பீடுகளை விரிவாக்கம் செய்து சிறு குறு விவசாயிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கலாம். கிராமப் பொருளாதார மேம்பாடு மூலமாக நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை அதிகரிக்கலாம். தரமான இடுபொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எளிதில் தங்கள் பொருள்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கலாம்.

இத்தனை அனுகூலங்களுடன் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கும் சஞ்சீவினி மூலிகை போன்றதொரு திட்டத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நானும், எனது குழுவினரும் ஒவ்வொரு அரசாங்கப் பிரதிநிதியிடமும், விவசாயிகள்பால் அக்கறை கொண்டவர்களாகத் தங்களை மக்கள் தலைவர்களிடமும் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருக்கிறோம். பாரதப் பிரதமர் முதல் அண்டைமாநில முதல்வர், தமிழக முதல்வர்கள்!!! விவசாயிகள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் ரஜினி, கமல், விஜய் வரை நாங்கள் அணுகாத நபர்கள் இல்லை. ஆனாலும் எங்களது மேன்மையான திட்டத்திற்கு மட்டும் இன்று வரை ஒரு விடிவு காலம் பிறக்கவில்லை. 

மிகுந்த மன உளைச்சலுடனும், இந்த உலகில் நேர்மைக்கும், தன்னலம் கருதா கடின உழைப்புக்கும் கிடைக்கக் கூடிய பலன் என்றென்றும் நிராசையும் ஏமாற்றமும் மட்டும் தானா? என்ற விரக்தியுடனும் இறந்த என் அம்மாவுடன் சொந்த ஓர் திரும்பிக் கொண்டிருக்கும் திருச்செல்வமாகிய நான் இப்படியோர் அவலமான சந்தர்பத்தில் இந்த அரசு எந்திரத்தை மீண்டும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்... என் தாயாரின் ஆன்ம சாந்தி இந்நாட்டு விவசாயிகளின் பிரச்னைக்கு முற்றாகத் தீர்வு காண்பதில் மட்டுமே இருக்கிறது.

தயவு செய்து உங்களது அருட்கடாட்ஷங்களை எங்களது திட்டங்களை நோக்கியும் ஒருமுறை திருப்புங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com