ஸ்ரீநி வெட்ஸ் மஹி: வருமான வரித்துறையின் அதிரடி சோதனை வரலாறு காணாததா?

தமிழகம் மற்றும் புதுவையில் வருமான வரித்துறையினர் நேற்று தொடங்கிய அதிரடி சோதனை வரலாறு காணாததாக மாறியுள்ளது.
ஸ்ரீநி வெட்ஸ் மஹி: வருமான வரித்துறையின் அதிரடி சோதனை வரலாறு காணாததா?


சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வருமான வரித்துறையினர் நேற்று தொடங்கிய அதிரடி சோதனை வரலாறு காணாததாக மாறியுள்ளது.

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை அதிகாலை முதல் சோதனையை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 200 இடங்களில் அதிரடியாக நடைபெற்ற இந்தச் சோதனைகளில் வருமான வரித் துறையைச் சேர்ந்த 1800 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

இந்தச் சோதனைகள் பற்றிய தகவல்கள் கசியாமல் இருக்க 200க்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களை அதிகாரிகள் பயன்படுத்தினர். சோதனைக்குச் செல்ல முன்பதிவு செய்த வாகனங்களில் 'ஸ்ரீநி வெட்ஸ் மஹி' என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. எந்த இடத்துக்கு கார்கள் விரைகின்றன என்ற சந்தேகத்தை எழுப்பாமல், திருமண நிகழ்ச்சிக்காக பதிவு செய்யப்பட்ட கார்கள் என்ற மாயையை ஏற்படுத்தவே வருமான வரித்துறை அதிகாரிகள் இதனை செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை தொடங்கிய சோதனை ஓரிரு இடங்களில் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. பெரும்பாலான இடங்களில் 2வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்கிறது.

சென்னையில் ஜெயா தொலைக்காட்சி, 'நமது எம்ஜிஆர்' பத்திரிகை அலுவலகங்கள், தினகரன், இளவரசியின் மகன் விவேக் வீடு, சசிகலா ஆதரவு வழக்குரைஞர் செந்தில் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள் என 12 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

போலி நிறுவனங்களை நடத்தியது, அதில் கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை முதலீடு செய்தது, வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களால் இந்த அதிரடி சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித் துறை அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அதிரடி சோதனை எப்படி வரலாறு காணாத சோதனையாக மாறியது என்று கேட்டால், அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் சசிகலா என்ற ஒரே ஒரு நபரை மையமாக வைத்துத்தான் இவ்வளவு பெரிய சோதனை நடைபெற்றுள்ளது. 

அதாவது, சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடத்தும் நிறுவனங்கள், அந்த நிறுவனங்களின் முக்கியப் பதவியில் இருப்போர், அவர்களது உதவியாளர்கள் என ஒரே ஒரு மையப்புள்ளியில் இருந்துதான் சோதனை தொடங்கியது. இப்படி ஒரே ஒருவருக்குத் தொடர்புடைய சுமார் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றிருப்பது வரலாறு காணாததாகவே கருதப்படுகிறது.

இளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாகியுமான விவேக்
இளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாகியுமான விவேக்

எனினும், இவ்வளவு பெரிய சோதனையை, வருமான வரித்துறை அதிகாரிகள், மிகவும் ரகசியமாக திட்டமிட்டிருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது. கார்களை வாடகைக்கு எடுத்தது முதல், 1,800 அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டது வரை ஒரு சின்ன விஷயம் கூட கசியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை நடைபெற்ற இடங்களின் பட்டியல்
1. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா தொலைக்காட்சி அலுவலகம்
2. நமது எம்ஜிஆர் அலுவலகம் 
3. போயஸ்கார்டனில் உள்ள ஜெயா தொலைக்காட்சியின் பழைய அலுவலகம்
4. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள இளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் நிர்வாகியுமான விவேக் வீடு
5. வேளச்சேரியிலுள்ள அவரது 'ஜாஸ் சினிமாஸ்' நிறுவனம் 
6. கிண்டியிலுள்ள ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் அலுவலகம்
7. தியாகராய நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீடு
8. கே.கே. நகரிலுள்ள டிடிவி தினகரனின் உதவியாளர் ஜனா (எ) ஜனார்த்தனன் வீடு
9. சென்னை திருவான்மியூரில் உள்ள திவாகரன் வீடு
10. சௌகார்பேட்டையிலுள்ள சுரானா கார்ப்பரேஷன் நிறுவனம்
11. ஜெயா தொலைக்காட்சியின் பொது மேலாளர் வீடு 
12. சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன் வீடு.
13. தஞ்சாவூரில் அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீடு
14. மன்னார்குடி மன்னை நகரில் உள்ள திவாகரன் வீடு
15. மன்னார்குடியில் உள்ள தினகரன் வீடு
16. நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்
17. தஞ்சாவூரில் சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீடு
18. பெங்களூரிலுள்ள கர்நாடக மாநில அதிமுக தலைமை அலுவலகம்
19. கர்நாடக மாநில அதிமுக செயலர் புகழேந்தி வீடு
20. கர்நாடக மாநில அதிமுக செயலர் புகழேந்தியின் அலுவலகம்
21. சென்னையை அடுத்த படப்பையை சிறுமாத்தூர் பகுதியில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை
22. புதுச்சேரி அருகே ஆரோவில்லில் உள்ள தினகரன் பண்ணை வீடு 
23. தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரி
24. தஞ்சாவூரில் வழக்குரைஞர் வேலுகார்த்திகேயன் வீடு
25. மன்னார்குடியில் திவாகரனின் நண்பர் வடுவூர் அக்ரி ராஜேந்திரன் வீடு
26. நாமக்கல்லில் சசிகலாவின் வழக்குரைஞர் செந்திலின் கூடு
27. திருச்சியில் சசிகலாவின் உறவினர் களியபெருமாளின் வீடு உட்பட பல இடங்களில் சோதனை நடைபெற்றது.
 

சசிகலாவின் கணவர் நடராஜன் வீடு
சசிகலாவின் கணவர் நடராஜன் வீடு

எதற்காக சோதனை?
சசிகலா பெயரில் செயல்பட்ட, போலி நிறுவனங்கள் எனக் கண்டறியப்பட்ட, பேன்சி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ ஏர் பிரைவேட் லிமிடெட், சுக்ரா கிளப் பிரைவேட் லிமிடெட், இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூடிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதில் ஜெயா தொலைக்காட்சிக்குத் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மோசடி தொடர்பாக கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையிலும் வரி ஏய்ப்புத் தொடர்பாகவும் சோதனைகள் நடத்தப்படுவதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், எதன் அடிப்படையில் சோதனை என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.

187 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை தொடங்கியது. ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமையான இன்றும் 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com