உங்கள் பேரக் குழந்தைகளின் தலைமுறை எப்படி இருக்கும்?

உங்களுக்கு முன்னால் இரண்டு பாதைகள் உள்ளன. நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
உங்கள் பேரக் குழந்தைகளின் தலைமுறை எப்படி இருக்கும்?

உங்களுக்கு முன்னால் இரண்டு பாதைகள் உள்ளன. நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? சரியோ தவறோ, இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய முடிவுகளைத் தாங்களாகவே எடுக்கிறார்கள்.

முன்பு ஒரு காலகட்டம் இருந்தது. அப்போது பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ அதுவே குழந்தைகளுக்கு வேதவாக்கு. அவர்கள் என்ன படிக்க வேண்டும், என்ன உடை அணிய வேண்டும், எப்படி வாழ வேண்டும், யாரைத் திருமணம் செய்ய வேண்டும், எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பெரியோர்களின் கைகளில் ஒப்படைத்து, சிவனே என்று சொன்ன சொல் கேட்டு ஓரளவு சந்தோஷமாகவே வாழ்ந்து வந்த தலைமுறை அது.

ஒரு வீட்டில் நான்கு முதல் எட்டு குழந்தைகள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து என பெற்றோர்களின் பொறுப்பு அளப்பரியது. ஆனால் பெரும்பான்மையான பெற்றோர்கள் கடமை தவறாமல் தங்கள் குழந்தைகளை வளர்த்தனர்.

அடுத்த தலைமுறையில், என் பெற்றோர்கள் தான் என்னை ஒடுக்கி வளர்த்தார்கள், நானாவது என் குழந்தைகளைப் புரிந்து நடந்து கொள்கிறேன் என்ற நினைப்பு துளிர்விடத் தொடங்கிய காலகட்டம் அது. பிள்ளைகளுக்கு சில விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்க ஒருசில வாய்ப்புக்களை தரத் தொடங்கினர். இப்படித் தான் செய்ய வேண்டும் என்பது சற்று மாற்றத்துக்குள்ளாகி இதைச் செய் முடியவில்லை என்றால் இதையாவது செய் என்று என்று சில விஷயங்களில் சலுகை தரத் தொடங்கினார்கள். ஆனால் லகான் தங்கள் கையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்.

இறுக்கமாக கட்டமைக்கப்பட்ட சமூகம் சற்றுத் தளரத் தொடங்கியது அப்போது தான். ஆனால் பெற்றவர்களுக்கான அதிகாரம் மற்றும் தங்கள் குழந்தைகளின் படிப்பு, வாழ்க்கை போன்றவற்றை நிர்ணயிப்பவர்கள் அவர்களாகத் தான் இருந்து வந்தார்கள். ஒரு குடும்பத்தில் மூன்று அல்லது ஐந்து குழந்தைகள் இருந்த காலகட்டம் அது. அம்மா செல்லம் அப்பா செல்லம் என்ற பிரிவினை எல்லாம் உள்ள காலகட்டம் அதுதான்.

இன்னொரு தலைமுறை உருவானது. அது படிப்பறிவு பரவலாகத் தொடங்கிய காலகட்டம். பெண்களுக்கு கல்வியறிவு அவசியம், பெண்கள் வேலைக்குச் சென்றால் தனி மனித மற்றும் சமூகப் பொருளாதாரம் உயர்வடையும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்ட சமயம்.

இத்தகைய குடும்பங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கத் தொடங்கினர். பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்ற பின் குழந்தைகளை பொறுப்பான குடும்பத்தினர் பார்த்துக் கொள்வார்கள். கூட்டுக் குடும்பத்தின் இறுதியான காலகட்டம் அது அதான்.

வேலைக்குச் சென்றாலும் குழந்தைகளின் பாதுகாப்புக்கும் அவர்களின் மற்ற வசதிக்கும் பிரச்னை இல்லாமல் இருந்த காலம் அது. ஓரளவு அக்குழந்தைகள் தன்னிச்சையாக வளரத் தொடங்கின. தங்களுக்குத் தேவையானவற்றை பெற்றோரிடம் விவாதித்து அதன் நியாயங்களை எடுத்துச் சொல்லி ஓரளவு சாதித்து வந்தனர். அரசாங்கத்தின் கெடுபிடிகள் காரணமாக இந்த காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தனர். 

தற்போதுள்ள சமகாலம் இந்த பின்னணியில் தான் வளர்ந்தது. இப்போது ஆண் பெண் இருவரும் ஒரு குடும்பத்தில் வேலை பார்க்கும் சூழலில் இருந்தால் பெற்றோர்களின் அவசர வாழ்க்கையில் குழந்தைகளிடம் அதிக உரையாடல்கள் இல்லாமல் போகிறது. அதனால் குழந்தைகளின் சுதந்திர வெளி அதிகரித்து விடுகிறது. எனக்கு இந்த ட்ரெஸ் தான் வேண்டும் என்று இரண்டு வயது குழந்தை கேட்டால் மறுக்காமல் வாங்கித் தரும் பெற்றோர் தான் அனேகம். கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து ந்யூக்ளியர் குடும்பங்களாக சுருங்கிப் போனபின், குழந்தைகள் தங்கள் குழந்தைத்தன்மைகளை இழக்கத் தொடங்கிவிட்ட காலகட்டம் இதுதான். ஸ்மார்ட் ஃபோன்களை வைத்துக் கொள்ளும் ஸ்மார்ட் குழந்தைகள் இவர்கள். இவர்களிடம் யாரும் பேசி ஜெயிக்க முடியாது. 

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில குழந்தைகள் பேசுவதைப் பார்த்தால் வாயடைத்துப் போய்விடுவோம். ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் அவர்களின் திறமையை வியக்காமல் இருப்பவர்கள் குறைவு. இதற்கு முக்கிய காரணம் ஒரு குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களில் பெற்றோர்களின் ஒட்டுமொத்த கவனமும் அந்தக் குழந்தை மீதே குவிகிறது.

எல்லாவற்றிலும் அந்தக் குழந்தை சிறந்து விளங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் அதிக பிரயத்தனம் எடுப்பதால் இந்தத் தலைமுறையில் திறமைகள் அதிகம் வெளிப்படுகிறது. தன்னுடைய படிப்பை, வாழ்க்கை துணையை, வேலையை என எல்லாவற்றையும் தாமாகவே முடிவெடுத்துக் கொள்ளக் கூடிய சமூகம் மெள்ள உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஆடினால் காலை ஒடித்துவிடுவேன் என்ற கூறிய நமது முப்பாட்டனர்கள் இன்று தொலைக்காட்சிகளில் ஆடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்தால் என்ன சொல்வார்கள் என்று நினைத்தால் சிரிக்காமல் இருக்க முடியாது. அன்று சமூகத்தின் தேவை வேறு மாதிரியாக இருந்தது. வெளி உலகம் அச்சுறுத்தலாக இருந்தது. நமக்குப் பின்னால் பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்று சொத்து முதல் பல விஷயங்களை அவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் சேகரித்து வைத்த மனிதர்கள் இருந்தார்கள்.

இன்றைய நிலை வேறு. இது 2017. சில தலைமுறை மாற்றங்களுக்குப் பின்னால் மகன் அல்லது மகள் எனக்கு திருமண வாழ்க்கை வேண்டாம், என்று வெளிப்படையாக சொல்ல முடிகிறது. என்னுடைய சுயம் சார்ந்த முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியும் போது அதன் சரி தவறுகளுக்கு நான் மட்டுமே பொறுப்பாவேன் என்று துணிவாகச் சொல்லக் கூடியவர்கள் அதிகமானோர் நிறைந்துவிட்டனர். ஒரு மனிதனின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு சுதந்திரம் உள்ளதோ அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையிலும் சரி வேலையிலும் சரி சந்தோஷம் இருக்கும். அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் விடுபடும் போது நிலை தடுமாறும். ஆனால் சீராக வளர்க்கப்படும் போது அது தன்னிறைவுடன் இருக்கும். 

வருங்காலத்தில் அடுத்தடுத்த தலைமுறைகளை நினைத்துப் பார்த்தால் நமக்கே சற்று அச்சமாகத் தான் இருக்கும். அதீத சுதந்திரம் என்பது குற்றங்கள் மலிந்துவிடக் காரணியாக அமைந்துவிடலாம். ஒவ்வொரு குழந்தையும் தன்னை மேதாவியாக நினைத்து வாழக் கூடிய சமூகம் ஒன்று உருவாகிவரும் போது அதில் நிகழக் கூடிய முதல் பிரச்னை நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ மோதல்கள் தான். ஒரு குழந்தை என்று இருந்த நிலை மாறி, திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் அதன் பின் குழந்தைகள் எப்படி பிறப்பார்கள்?

சில்ட்ரன் ஆஃப் மென் எனும் திரைப்படத்தில் இது போல ஒரு பிரச்னையை மையமாக வைத்து படம் எடுத்திருப்பார்கள். அடுத்த தலைமுறையினரை உருவாக்க இயலாமல் 18 வருடமாக உலகில் குழந்தைகள் பிறக்காமல் இருக்கிறது. தற்போது உயிருடன் இருக்கும் சிலரும் பலவிதமான பிரச்னையில் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டும் இருக்கின்றனர், அந்நிலையில் கறுப்பினத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது அதை அபகரிக்க ஒரு கூட்டம் அலைவதாக அக்கதை செல்லும். புனைவாகவே இருந்தாலும் அதிலுள்ள பயங்கரத்தை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். கூடி வாழும் இயல்புடைய நம் தமிழ் சமூகம் தற்போது தனித் தனி குழுக்களாக சிதறிவிட்டது. எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்ற பின் இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பது புரியாத புதிர்தான். 

எது சரி எது தவறு என்பது கடிகாரத்தின் பெண்டுலம் போன்றது. காலம்தோறும் அது மாறிக் கொண்டேதான் இருக்கும். அது இடம், பொருள், சூழல், கலாச்சாரம், சமூக கட்டமைப்பு போன்ற விஷயங்களைச் சார்ந்துள்ள ஒன்று. காலம் மாறிப் போச்சு என்று ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனிதர்கள் கூறுவது இதனை தான். எந்த வகையில் காலம் மாறினாலும் நம்முடைய வேர்களைப் பற்றிய புரிதலையும் மனித நேயத்தின் முக்கியத்துவத்தையும் குழந்தைகள் உணரும் வகையில் வளர்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com