அரசியல்வாதிகளுக்கும் அடிமைகளுக்கும் வ.உ.சியின் தியாகம் புரியாது; இதைப் படித்தால் நமக்குப் புரியும்!

இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம்பிள்ளையின் நினைவு நாள். காங்கிரஸின் முழு ஆசி பெறாத காரணத்தால் கால வெள்ளத்தால் கரைந்தும் கரையாமலும் மக்கள் மனத்தில் நிழலாக மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.
அரசியல்வாதிகளுக்கும் அடிமைகளுக்கும் வ.உ.சியின் தியாகம் புரியாது; இதைப் படித்தால் நமக்குப் புரியும்!

இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம்பிள்ளையின் நினைவு நாள். காங்கிரஸின் முழு ஆசி பெறாத காரணத்தால் கால வெள்ளத்தால் கரைந்தும் கரையாமலும் மக்கள் மனத்தில் நிழலாக மட்டுமே இடம் பெற்றிருக்கிறார் வ.உசி, அதுவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புண்ணியத்தில். அந்தக் காலத்தில்.

நாடு முழுவதும் சுதேசி இயக்கம் நலிந்து வந்த வேளையில் தூத்துக்குடியில் மட்டும் வலிமையோடு வலம் வந்தது. அதற்கு காரணம் வ.உ.சிதம்பரம் பிள்ளை. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் காங்கிரஸின் தீவிரவாத பிரிவை சேர்ந்தவர். பாலகங்காதர திலகரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்.

வ.உ.சி பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவர். மிகச்சிறந்த தொழிற்சங்கவாதி. ஏழை பங்காளன். அந்தக் காலத்திலேயே முறைகேடுகளில் ஈடுபட்ட மூன்று துணை நீதிபதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தார். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட குலசேகரநல்லூர் ஆசாரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்பாவியை நிரபராதி என்று நிரூபித்தார். இந்த இரண்டு வழக்குகளும் வழக்கறிஞர் தொழிலில் அவரை உச்சாணிக் கிளையில் உட்கார வைத்தது.

தூத்துக்குடி முக்கியமான துறைமுகம். நெசவுக்கும், பவழங்களுக்கும் புகழ் பெற்றது. ஐரோப்பாவைச் சேர்ந்த ஏ அன்ட்எஃப் ஹார்வி என்ற நிறுவனம் இந்த துறைகளை தன் வசம் வைத்திருந்தது. இதே நிறுவனம்தான் ‘பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி', என்ற நிறுவனத்தின் ஏஜெண்டாகவும் செயல்பட்டு வந்தது. தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் கப்பல் வர்த்தகங்களை கவனித்து வந்தது. இந்த தொழிலில் இவர்களை எதிர்க்கவோ, போட்டியிடவோ யாரும் இல்லை. இதை உடைத்தெறிய வ.உ.சி 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். பிறகு "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுத்தார். உடனடியாக அந்த நிறுவனத்தை பிரிட்டிஷ் அரசு மிரட்டி வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்யவைத்தது. மனம்தளராத வ.உ.சி உடனடியாக கொழும்பு சென்று ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்தார். சொந்தக் கப்பல் இல்லாமல் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்பதை உணர்ந்தார். அதற்காக நிதி திரட்ட மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு புறப்பட்டார். "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்", என்ற சூளுரையோடு கிளம்பினார். தூத்துக்குடி வணிகர்களும் உதவினர். "எஸ்.எஸ். காலியோ" மற்றும் "எஸ். எஸ். லாவோ" என்ற இரண்டு கப்பல்களை சொந்தமாக்கி 1906 நவம்பர் 12ஆம் தேதி ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத்' துவக்கினார்

அந்த நாளில் தூத்துக்குடியிலிருந்து இலங்கைச் செல்ல ஆங்கிலேயர் கப்பல்களில் பயணக் கட்டணம் 16 அணா. சுதேசி இயக்கத்தை வளர்க்க வ.உ.சி தனது கப்பல்களில் இதே பயணத்திற்கு எட்டணா மட்டுமே வசூலித்தார். மக்கள் ஆர்வத்துடன் சுதேசிக் கப்பல்களில் பயணம் செய்தனர். வ.உ.சியின் இந்த செயல் கலெக்டர் ஆஷிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சுதேசி இயக்கத்தின் முதுகெலும்பை உடைத்தெறிவது என்று முடிவெடுத்தான். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாக வ.உ.சிக்கு ஆசை காட்டப்பட்டது. அவர் மறுத்துவிட்டார். ‘இனி ஆங்கிலேய கப்பல்களில் கட்டணமே இல்லாமல் ஓசிப் பயணம் செய்யலாம்', என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டான். அதோடு மட்டுமல்ல பயணிப்பவர்களுக்கு ஒரு குடையையும் இலவசமாக வழங்கினான். ஓசிப் பயணத்திற்கு இலவசம் ஒரு குடை. இலவசங்களும், விலையில்லா பொருட்களும் தன்னையும், தன் நாட்டையும் சேர்த்து அழிக்கவல்லது என்பதை அன்றே நமக்கு உணர்த்தியது இந்த சம்பவம். தன்மானத்தையும், சுதேசி இயக்கங்களையும் புறக்கணித்த மக்கள் ஆங்கிலேய கப்பலில் பயணிக்கத் தொடங்கினர். சுதேசி கப்பல் பயணிக்க ஆளில்லாமல் கரை ஒதுங்கியது. மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார் வ.உ.சி.

இந்த தருணத்தில், பிப்ரவரி, 27, 1908ம் நாள் தூத்துக்குடியில் ‘கோரல் மில்ஸ்' தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தி வெற்றி கண்டதால், வ.உ.சியை ஒழித்துக்கட்ட நினைத்தான் கலெக்டர் ஆஷ். அப்போது பிபின் சந்திர பால் அவர்களின் விடுதலை நாளை ‘சுதந்திர நாளாக' கொண்டாடினார் வ.உ.சி. மார்ச் 12, 1908 அன்று வ.உ.சி, பத்மநாப ஐயங்கார், சுப்ரமணியம் சிவா ஆகியோரை கைது செய்தது பிரிட்டிஷ் அரசு. இதைக் கண்டித்து பெரிய ஊர்வலம் நடந்தது. இதைக் கலைக்க துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டான் ஆஷ். அதில் நான்கு பேர்கள் இறந்தார்கள். கைது செய்யப்பட்டவர்களை புரட்சிக்காரர்கள் என்று முத்திரை குத்தினான். பின் வழக்கு நடந்தது. வ.உ.சிக்கு நாற்பதாண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

சிறையில் வ.உ.சி பட்ட கஷ்டங்களை பட்டியலிட அவசியமில்லை. அவர் சிறையிலிருந்த போது மற்றவர்களால் நிறுவனத்தை நடத்த முடியவில்லை. அவர்கள் கப்பலை விற்றுவிட்டனர். அதுவும் "எஸ்.எஸ்.காலியோ" என்ற கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டார்கள். அது வ.உ.சி.யை மிகவும் பாதித்தது. பல சட்ட போராட்டங்களுக்குப் பிறகு, 1912-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி. விடுதலை அடைந்தார். சிறை வாசலை பார்த்த வ.உ.சி அதிர்ந்து போனார். சிறைக்கு போகும் போது மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றவர், இன்று அவரை வரவேற்க யாருமில்லை. சற்று தொலைவில் ஒரு இருமல் சத்தம். அந்த இருமலுக்குச் சொந்தமானவர் சுப்ரமணியம் சிவா. தொழு நோயால் பாதிக்கப்பட்டு விரல்களை இழந்து கூனிக் குறுகி போர்வைக்குள் தன்னை மறைத்து நின்றிருந்தார். சுப்ரமணியம் சிவாவிற்கு சிறை அளித்த பரிசு தொழு நோய்.

மக்கள் செல்வாக்கும், பணமும் மிக்க ஒருவரை உச்சாணிக் கிளையிலிருந்து தெருவில் இறக்கிவிட்டது போலானது வ.உ.சியின் நிலை. வெளி உலகம் முற்றிலும் மாறியிருந்தது. சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவை வலுப்பெற்றிருந்தது. அதை வ.உ.சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் கொண்ட கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தனிக்கட்சி தொடங்கினால், அது சுதந்திரப் போராட்டத்திற்கு இடையூறாகிவிடும் என்று நினைத்தார். அதனால் அமைதியாக இருப்பது உத்தமம் என்று நினைத்தார். ஆங்கிலேயர்களை மட்டுமல்ல தன்னுடைய வருமையையும் எதிர்த்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதற்காக சென்னை, கோயம்பத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் வசித்தார். சில வியாபாரங்களையும் செய்து பர்த்தார். எதுவுமே அவருக்கு கை கொடுக்கவில்லை.

பெரும் செல்வந்தராய் மிடுக்கோடு வாழ்ந்த வ.உ.சி, மகாத்மா காந்தியிடமிருந்து 347 ரூபாய் 12 பைசா பெருவதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் போராடினார்', என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

காந்தி 1915ம் ஆண்டு சென்னைக்கு வந்திருந்தார். தம்புசெட்டி தெருவில் தங்கியிருந்தார். அவருக்கு ஒரு கடிதம் எழுதினார் வ.உ.சி.

‘டியர் பிரதர்' என்று தொடங்கியிருந்தது அந்தக் கடிதம். நலம் விசாரிப்புக்கு பிறகு, ‘தங்களை தனியே சந்திக்க விரும்புகிறேன். ஆகையால், உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் சந்திக்க விரும்புகிறேன்', என்று கடிதம் அனுப்பினார். 

உடனடியாக காந்தி அதற்கு பதில் எழுதினார். அது ஒற்றை வரிக்கடிதம். 20 ஏப்ரல், 1915 என்று தேதியிடப்பட்டிருந்தது. ‘அடுத்த வெள்ளிக்கிழமை வருவீர்களேயானால், உங்களுக்காக சில நிமிடங்கள் ஒதுக்குகிறேன்', என்று எழுதியிருந்தார் காந்தி.

வ.உ.சி பதில் கடிதம் எழுதினார். இம்முறை ‘டியர் சார்', என்று தொடங்கியிருந்தார். காந்தி எழுதியிருந்த ‘சில நிமிடங்கள்', என்ற வார்த்தையை அடிக்கோடிட்டு ‘நீங்கள் சொன்ன சில நிமிடங்களில் என்னுடைய பேச்சை முடிக்க முடியுமா என்ற பயம் எனக்கு ஏற்படுகிறது. உங்களுக்கு தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. உங்கள் நேரத்தை வீணாக்கியதற்கு மன்னிக்கவும்', என்று பதில் எழுதினார் வ.உ.சி.

‘நீங்கள் என்னை பார்ப்பது அவசியமில்லை என்று கருதினால், நான் உங்களை சந்திக்கிறேன். வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிக்கு தங்களை சந்திக்க வரலாமா? எனக்கு சில நிமிடங்கள் ஒதுக்குவீர்களா?', என்று எழுதினார் காந்தி. இதோடு நின்றுவிடவில்லை. ‘3 மணியிலிருந்து, 4 மணிக்குள் எல்லா நாட்களிலும் என்னை சந்திக்கலாம். ஆனால், என்னை தனிமையில் சந்திக்க விரும்புவதால், வெள்ளிக்கிழமை காலையில் என்னை சந்தியுங்கள்', என்று பதில் எழுதினார்.

அதை ஏற்றுக் கொண்டார் வ.உ.சி. ஆனால், காலை 6.30 மணிக்கு சந்திப்பது கடினம். காரணம் காலை 5.30 மணிக்கு மயிலாப்பூரிலிருந்து புறப்படும் டிராம் வண்டியில் பிரயாணித்துதான் காந்தியை சந்திக்க முடியும். அதனால் தாமதமாகும் என்றார் வ.உ.சி.

இரண்டு கப்பல்களை சொந்தமாக வாங்கி, இயக்கி, விடுதலை போரில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய வ.உசி, காரில் பயணிக்க பணமில்லாமல், டிராம் வண்டிக்கு காத்திருக்கும் நிலை சரித்திரத்தின் வருத்தமான பக்கங்கள். அதன் பிறகு காந்தி, வ.உ.சி சந்திப்பு நடைபெற்றது. அதைப் பற்றிய தகவல்கள் அதிகம் இல்லை.

21 ஏப்ரல், 1915 அன்று வ.உ.சிக்கு ஒரு கடிதம் எழுதினார் காந்தி. அதில், ‘உங்களின் சார்பாக சில வருடங்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் நான் பெற்ற பணத்தை உங்களுக்கு அனுப்பியிருந்தேன். அதை பெற்றுக் கொண்டீர்களா?' என்று கேட்டிருந்தார். வ.உ.சி 22 ஏப்ரல், 1915 பதில் அனுப்பினார். ‘நானோ அல்லது என் மனைவியோ அந்தப் பணத்தை பெறவில்லை', என்று சொல்லிவிட்டு ‘நான் இப்படி சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். இதற்காக நீங்கள் உங்களை வருத்திக் கொள்ளத் தேவையில்லை. நிச்சயமாக அந்தப் பணம் நல்ல நோக்கத்திற்காகத்தான் சென்றிருக்கும்', என்று பதில் எழுதியிருந்தார்.

‘யார் அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தார்கள் என்பது என் நினைவில் இல்லை. அந்தப் பணம் உங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்ற நினைத்துக் கொண்டிருந்தேன்', என்று பதில் அனுப்பினார் காந்தி. ‘என்னுடை இன்றைய நிலையில் அந்த பணம் எனக்கு கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். தங்களை சந்தித்த வேளையில் நான் சொன்னது போல தற்போது என்னுடைய குடும்பத்துக்கு தென்னாப்பிரிக்க இந்தியர்கள்தான் உதவுகிறார்கள். அப்படியிருக்கையில், எனக்காக அனுப்பப்பட்ட அந்தப் பணம் ‘எனக்குத் தேவையில்லை', என்று எப்படி சொல்வேன்? இந்த தருணத்தில் அந்த பணத்தை வேண்டாம் என்று நான் சொன்னால், என் குடும்பத்திற்கு தவறிழைத்தவனாகி விடுவேன்', என்று பதில் எழுதினார் வ.உ.சி.

அதன் பிறகு பல நீண்ட கடிதங்களை எழுதினார் வ.உ.சி. அதற்கெல்லாம் காந்தியின் பதில் ஒருவரிக் கடிதமாகவே இருந்தது. ‘என்னிடம் கொடுக்கப்பட்ட தொகையோ, அனுப்பியவர் பெயரோ எனக்கு சரியாகத் தெரியவில்லை. அது விரைவில் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்', என்று 28 மே, 1915 அன்று காந்தி எழுதியிருந்தார். ‘சரியான தொகை தெரியாவிட்டாலும் பரவாயில்லை. தோராயமாக எவ்வளவு கொடுத்தார்கள் என்பதாவது நினைவிருக்கிறதா? அப்படித் தெரிந்தால், முழுமையாக இல்லாவிட்டாலும், ஒரு பெரும் பகுதியையாவது அனுப்பிவையுங்கள். அது என்னுடைய இன்றைய மோசமான சூழலுக்கு உதவும். மீதமிருக்கிற தொகையை முழுவிவரம் தெரிந்த பிறகு அனுப்புங்கள்', என்று கெஞ்சும் விதமாக ஒரு பதிலை 31 மே, 1915 அன்று அனுப்பினார் வ.உ.சி.

‘கொஞ்சம் பொறுங்கள். பணமும், அனுப்பியவர் விவரங்களும் கிடைக்கும். ஜோஹனஸ்பெர்க்கில் வசிக்கும் மிஸ்டர் பாதக் அவர்களுக்கு கடிதம் எழுதி விவரங்களை பெறுங்கள்', என்றார் காந்தி. இதைத் தொடர்ந்து, ‘ஏதாவது தகவல் வந்தாதா?' என்று ஒரு கடிதம் எழுதினார் வ.உ.சி. ‘இன்னமும் இல்லை', என்று ஒற்றை வரி பதில் 23 ஜுலை 1915 அன்று தேதியிட்டு வந்தது.

சிறிது நாட்கள் கழித்து மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் எழுதினார் வ.உ.சி. இம்முறை காந்தி தன் கைப்பட தமிழில் எழுதி பதில் அனுப்பியிருந்தார். இதைப் படித்த வ.உ.சி மகிழ்ந்து போனார். ‘தமிழில் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. எந்த பிழையும் இல்லாமல் தமிழில் எழுதியது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களால் தமிழ் படிக்க முடியுமென்றால் என்னுடைய புத்தகங்களை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்', என்று 28 செப்டம்பர், 1915 அன்று பதில் எழுதினார்.

கடைசியாக 20 ஜனவரி, 1916 காந்தி அகமதாபாத்திலிருந்து ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘தற்போதுதான் தகவல் வந்தது. ரூபாய் 347.12 வை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்', என்று எழுதியிருந்தார்.

ஒரு வழியாக அந்தப் பணம் வந்து சேர்ந்தது. 4 பிப்ரவரி, 1916 அன்று தனது நண்பருக்கு வ.உசி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ரூ. 347.12 காந்தியிடமிருந்து வந்தது. அதில் ரூ. 100 ஐ அச்சிடுபவருக்கு கொடுத்தேன். மீதமிருந்த பணத்தில் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய ரூ. 50 தவிர மற்ற எல்லா கடன்களையும் அடைத்துவிட்டேன். இனிமேல் எனக்கு காகிதங்கள் வாங்குவதற்கு மட்டுமே பணம் தேவை', என்று எழுதியிருந்தார்.
 

கடித பறிமாற்றம் முடிவுக்கு வந்தது.

‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?' என்ற பாடலை கேட்டபடி வ.உ.சி தன் உயிரை விடுவதாக ‘கப்பலோட்டிய தமிழன்' படத்தில் காட்சி அமைந்திருக்கும். அமைதியான சூழலில் இன்றும் அந்த பாடல் நம் மனத்தில் கனத்தை ஏற்படுத்தும்.

ஆனால், தமிழகத்தின் இன்றைய நிலையை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. புதிதாக கட்சி தொடங்குகிறேன் அதற்கு முப்பது கோடி வேண்டும் என்று தொண்டர்களிடம் கேட்கும் இன்றைய டிவிட்டர் அரசியல்வாதிகளுக்கும், சுரண்டல், ஊழல் ஆகியவற்றால் பணம் சம்பாதித்து சொகுசு காரில் ஒய்யாரமாக வலம் வரும் அரசியல்வாதிகளுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் வ.உ.சியின் தியாகம் புரியாது. ஆனால் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளும் திறன் நமக்கிருக்கிறது. ஆகையால், சுதந்திர போராட்ட தலைவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிப்போம்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com