நாத்திக சாமியாரா? நாடக அரசரா?

கடந்த வாரம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில் தமிழக அரசியலில் சினிமா நடிகர்கள் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியின் விளைவுகளை பற்றி அடுக்கடுக்காகக் கேள்வி எழுப
நாத்திக சாமியாரா? நாடக அரசரா?

கடந்த வாரம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில் தமிழக அரசியலில் சினிமா நடிகர்கள் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியின் விளைவுகளை பற்றி அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினார்.

இதில் நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களின் அரசியல் பிரவேசத்தை சாடியிருக்கிறார். அதோடு மட்டுமல்ல, இதற்கு முன் சினிமாக்காரர்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கியதால் ஏற்பட்ட விளைவுகளையும், இனியும் அந்த நிலை ஏற்பட அனுமதிக்ககூடாது என்றும், அண்ணாவும், கருணாநிதியும் அப்படியல்ல என்றும் அவர்களை பாராட்டும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு காமெடியான விஷயம் என்ன தெரியுமா? ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, திராவிடர் கழகம் கொடுத்த ஆலோசனையை ஏற்று சட்டம் இயற்றினாராம்.

இப்படியே வளர்ந்துகொண்டே போகிறது அந்தக் கட்டுரை. யாரோ பேச வேண்டிய வசனங்களை, அவரின் சார்பாக தன்னுடைய கருத்தாக வெளியிடுவதில் கெட்டிக்காரர் கி. வீரமணி. அதைத்தான் தற்போதும் செய்திருக்கிறார்.

இந்தக் கட்டுரைக்குப் பதிலடியாக நடிகர் எஸ்.வி. சேகர் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். இது அவர் சார்ந்த கட்சியின் சார்பில் வெளியானதல்ல. அவர் கூறிய கருத்துகளை பார்ப்போம்.

நடிகர்கள் முதலில் மக்களுக்காகப் போராடி சிறை செல்லட்டும் என்கிறார் வீரமணி. இவர் எந்தப் பிரச்னைக்காகப் போராடி சிறைக்குச் சென்றார்?

மறைந்த என் நண்பர் திருவாரூர் தங்கராசு, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் போன்றவர்கள் சிறைக்குச் சென்றதை செய்தித்தாள்களில் படித்திருக்கிறேன். டிவி நியூஸ்களில் கேட்டிருக்கிறேன். வீரமணி சிறைக்குப் போனதாக படித்ததோ, கேட்டதோ இல்லை. கேட்டால் ஏதாவது காகிதத்தை எரித்தேன், சாலை மறியல் செய்தேன் என்பார். காலையில் திருமண மண்டபத்தில் போய் கைது என்ற பெயரில் பஜ்ஜி, போண்டா சாப்பிட்டு மாலையில் திரும்பியிருப்பார்.

இவரது சிறைவாசங்களும், சினிமா சிறை மாதிரி செட்டிங்தானே. சினிமா நடிகர்களைப் பற்றிப் பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

கட்சி அறக்கட்டளை பெயரில் இவர் நடத்தும் கல்லூரிகளில் கொள்ளையாக நன்கொடை பிடுங்கிக்கொண்டுதானே மாணவர்களை சேர்க்கிறார்? இதுதான் சமூக சேவையா?

இப்படியே வளர்ந்துகொண்டு செல்கிறது அவருடைய பேச்சு. கி. வீரமணி பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும், பேசாமல் விட்ட வார்த்தைகளுக்கும் பதிலளித்திருக்கிறார் எஸ்.வி. சேகர்.

இது ஒருபுறமிருக்க, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியவற்றை பார்போம்.

கௌரி லங்கேஷ் கொலையை பிரதமரின் ஆதரவாளர்கள் கொண்டாடிவருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர்களின் செயல்பாடுகள் குறித்து மௌனமாக இருப்பதன் மூலம், தன்னைவிட மிகச் சிறந்த நடிகர் என்பதை பிரதமர் நிரூபித்திருப்பதாகவும், இதுபோன்ற கொடூர சம்பவங்களில் மோடி மௌனமாக இருந்தால், தன்னுடைய தேசிய விருதுகளை அரசிடம் திரும்ப அளிக்கவும் தயங்கமாட்டேன் எனவும் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். சற்று நேரத்துக்குப் பிறகு நான் அப்படிச் சொல்லவில்லை என்று பல்டி அடித்துள்ளார். 

சிறப்பாகக் கருத்துகளைப் பகிரும் பலரின் டிவிட்டர் அக்கவுன்ட்களை பிரபலங்கள் பின்தொடர்வது சாதாரண நிகழ்வு. அப்படித்தான், பிரதமர் மோடியும் பலரின் டிவிட்டர் அக்கவுன்ட்களை பின்தொடர்கிறார். அதற்காக அவர்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி. படுகொலையில் பிரதமரையும், அவர் சார்ந்த கட்சியையும் சம்பந்தப்படுத்தும் முயற்சி. பிரகாஷ் ராஜ் அவர்களே, கர்நாடகம் தண்ணீர் விடாமல் ஏமாற்றிக்கொண்டிருக்கிறதே, அந்தக் கருத்தை வலியுறுத்தி விருதை திருப்பி அளிக்க முன்வந்தீர்களா? பணத்துக்கு தமிழ்நாடு, பாசத்துக்கு கர்நாடகமா?

மேலே படித்த விஷயங்களில் நடிகர்கள் பற்றிய வீரமணியின் பல கருத்துகள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. அதே நேரத்தில், வீரமணியைப் பற்றி எஸ்.வி. சேகரின் பேச்சுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்கிறது.

சமீபகாலமாக தமிழக நடிகர்களுக்கு சினிமா வாழ்க்கை அலுத்துப் போய்விட்டது. அரியணை ஆசை ஏற்பட்டுள்ளது. இது தவறல்ல. ஆனால், அதற்காக தினம் ஒரு அறிக்கையை வெளியிட்டு மக்களைக் குழப்புவது எந்த விதத்தில் நியாயம்? ஏதோ தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மட்டுமே ஊழல் நடப்பதுபோல பேசிவருவது நகைப்புக்குரியது.

திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின், ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் முந்தைய ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், ஆட்சியை பிடிப்பதற்கு ஊழலையே ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதும் நாம் அறிந்ததே. 

இந்தக் கட்டுரை, ஏதோ ஊழலை நியாயப்படுத்துகிறது என்று நினைக்க வேண்டாம். அரசுகளை குறை சொல்லும் சினிமாத் துறை, மக்களுக்கு செய்தது என்ன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இருபது வருடங்களுக்கு முன் இப்படித்தான் திரைப்பட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதா? ஒரே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஒரே படத்தை திரையிட்டு, படம் நன்றாக இருந்தாலும் சரி, நன்றாக இல்லாவிட்டாலும் சரி ஒரே வாரத்தில் வசூலை முடித்துவிடுகிறீர்கள். பின்புலம் இல்லாதவர்களின் திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. 

இது ஒருபுறமிருக்க, திரைப்படங்களுக்கு வரி விதித்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள். எவ்வளவு வரி விதிக்கபடுகிறதோ அதற்கேற்றவாறு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறது. நிலைமையை அனுசரித்து முன்னணி நாயகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொண்டிருக்கிறீர்களா? எல்லா சுமையையும் ரசிகர்கள் மீதுதானே சுமத்துகிறீர்கள். மக்களை மகிழ்விப்பதுதான் எங்கள் நோக்கம் என்று நீங்கள் நினைத்தால், எதற்கு அரசியலுக்கு வர வேண்டும்? முதலில் சினிமாத் துறையில் உள்ள அவலங்களை சரி செய்யுங்கள் பிறகு அரசியலில் குதியுங்கள்.

சினிமா நடிகர்கள் இனி எந்த அரசியல்வாதிகளை விமர்சிப்பதாக இருந்தாலும், முதலில் ஏதாவது ஒரு கட்சியில் இணைத்துக்கொள்ளுங்கள். அல்லது புதிதாக ஒரு கட்சியை தொடங்குங்கள். உங்கள் பேச்சுக்கு அந்தக் கட்சி பொறுப்பேற்கட்டும். அப்படியில்லாமல், வாய்க்கு வந்தபடி பேசித் திரிவது, சம்பந்தப்பட்ட தலைவர்களின் மீது நீங்கள் தொடுக்கும் தனிப்பட்ட தாக்குதல். இதற்கு அரசியல் ரீதியான பதில்கள் மட்டும் கிடைக்கும் என்று தப்பு கணக்குப் போடாதீர்கள்.

இந்தத் தருணத்தில் ஒரு குட்டிக்கதையை பார்ப்போம்.

ஒரு நாடு. அந்த நாட்டு அரசன் திடீரென்று இறந்துபோனான். புதிய அரசரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சாதுவிடம் வழங்கப்பட்டது.

அந்த நாட்டில் ஒரு நாடக நடிகர் இருந்தார். அவர் சாதுவை சந்தித்தார்.
‘சாதுவே! பல நாடகங்களில் அரசர் வேடத்தில் நடித்திருக்கிறேன். ஆகையால், அரசர் பதவிக்கு சிறந்தவன் நான்தான். புதிய அரசராக என்னை நியமியுங்கள்' என்று கேட்டுக் கொண்டார்.

சாது யோசிக்கத் தொடங்கினார். அந்த நாட்டில் நாத்திக சாமியார் ஒருவர் இருந்தார். நாடக அரசரின் கோரிக்கை அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சாதுவை நேரில் சென்று சந்தித்தார்.

‘சாதுவே! நாடகம் முடிந்தவுடன் அரச பதவியும் முடிவுக்கு வரும். அப்படிப்பட்ட ஒருவரை அரசனாக எப்படி தேர்ந்தெடுப்பது? அதுமட்டுமின்றி நடிகர் என்றைக்காவது சொந்தமாக வசனங்களை பேசியிருக்கிறாரா?' என்று பல கருத்துகளை சொன்னார் நாத்திக சாமியார்.

நாத்திக சாமியாரின் பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்தார் சாது. அவரை அழைத்தார்.

‘உங்கள் பேச்சுத் திறமையை மனத்தில் கொண்டு உங்களையே அரசராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன்' என்றார் சாது.

‘சாதுவே! எனக்கு அரசர் பதவி வேண்டாம். ஆனால், என்னை வண்டியில் வைத்து இழுத்துச் செல்லும் எனது வண்டிக்காரனை அரசனாக்குங்கள்' என்றார் நாத்திக சாமியார்.

உடனடியாக ஒரு ஒற்றனை அழைத்தார். நாத்திக சாமியாரையும், வண்டிக்காரனையும் பற்றிய விவரங்களை சேகரித்து வரும்படி அனுப்பினார். சில நாட்களில் ஒற்றன் விவரங்களுடன் திரும்பினான்.

‘ஐயா! நாத்திக சாமியார் அரசர் பணிக்கு ஏற்றவரல்ல. ஏனென்றால், அவருக்கு ‘சமயசந்தர்ப்பமேனியா' என்ற நோய் இருக்கிறது. அதனால் அவருக்கு எல்லா நேரமும் கண் பார்வை தெரியும் என்று சொல்ல முடியாது. எல்லா நேரமும் காது கேட்கும் என்று சொல்ல முடியாது. அதேபோல், எல்லா நேரமும் பேச முடியும் என்றும் சொல்ல முடியாது. ஆனால், இவர் தனக்கு சாதகமானபோது மட்டும் பேசுவார்' என்றான் ஒற்றன்.

‘இப்படியும் ஒரு வியாதியா! சரி, இவர் சொன்னபடி இவருடைய வண்டிகாரரை அரசனாக்கினால் என்ன?' என்று கேட்டார் சாது.

‘அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது' என்றான் ஒற்றன்.

‘அதிலென்னப்பா சிக்கல்' என்றார் சாது.

‘ஐயா! நாத்திக சாமியாருக்கு எல்லா விஷயங்களும் தெரிந்தாலும், அவர் எதுவும் தெரியாதவர்போல இருப்பார். ஆனால், வண்டிக்காரருக்கு எதுவும் தெரியாது. ஆனால் எல்லாம் தெரிந்தவர்போல இருப்பார்' என்றான் ஒற்றன்.

சாதுவுக்குத் தலை சுற்றத் தொடங்கியது. உடனடியாக சபையைக் கூட்டினார்.

‘சபையோர்களே! நம் நாட்டின் அரசர் பதவிக்கு நாத்திக சாமியாரும், நாடக அரசரும் போட்டி போடுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்கிறேன். போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே நமது அரசர்' என்றார் சாது.

என்ன போட்டி என்பதை தெரிந்துகொள்வதற்காக அனைவரும் காத்திருந்தனர்.

சாது பேசினார்.

‘நாத்திக சாமியாரும், நாடக அரசரும் கத்திச் சண்டை போட வேண்டும். இதில் யார் தோற்றுப்போகிறார்களோ அவர்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர். அவர்தான் இந்த நாட்டின் புதிய அரசர். ஒருவேளை இந்தப் போட்டியில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாவிட்டால், புதிய அரசரை தேடுவோம். எவ்வளவு காலமானாலும் சரி, புதிய அரசர் கிடைக்கும் வரை காத்திருப்போம்' என்றார் சாது.

‘நாத்திக சாமியாரும், நாடக அரசரும் எப்படி சண்டையில் தோற்பது என்பது தெரியாமல் திருதிருவென விழிக்கத் தொடங்கினர். நடப்பது எதுவுமே புரியாமல், வண்டிக்காரரும் தலையை பிய்த்துக்கொண்டிருந்தார். விடை தெரியாதவனும் விழிப்பான், கேள்வியே தெரியாதவனும் விழிப்பான். அவர்கள் விழிக்கட்டும் நாம் மேலே படிப்போம். யார் நாத்திக சாமியார், யார் வண்டிகாரர், யார் நாடக அரசர் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

நடிகர்கள் சிறந்தவர்கள் என்று வக்காலத்து வாங்கும் எஸ்.வி. சேகர் அவர்களே! அஇஅதிமுக உங்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்தது. போட்டியிட்டு எம்எல்ஏவாகத் தேர்வானீர்கள். பிறகு என்ன செய்தீர்கள்? திமுகவோடு போய் சேர்ந்துகொண்டீர்கள். திமுகவின் நூறாவது எம்எல்ஏ என்று பெருமையோடு சொன்னீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்? உங்களைத் தேர்ந்தெடுத்த கட்சிக்குச் செய்யும் துரோகம் அல்லவா? உங்களுக்கு அந்தக் கட்சியின் தலைமை பிடிக்கவில்லை என்றால், பதவியை ராஜினாமா செய்திருக்கலாம். அப்படியில்லையென்றால், தனிப்பட்ட முறையில் எதிர்த்து நின்றிருக்கலாம். அப்படிச் செய்யாமல், எதிரணியில் சேர்வது தர்மமா? உங்களைப் போன்றவர்கள் எப்படி நல்ல ஆட்சியைக் கொடுக்க முடியும்? ஆகையால், மற்றவர்களுக்கு வக்காலத்து வாங்க உங்களுக்கு எந்தத் தார்மிக உரிமையும் கிடையாது.

கி. வீரமணி சொன்ன கருத்துகளையும், எஸ்.வி. சேகர் சொன்ன கருத்துகளையும் அலசி ஆராய்ந்து பார்க்கும்போது, இருவரின் கருத்துகளிலும் அசைக்க முடியாத நியாயங்கள் இருப்பதை உணர முடிகிறது. இது தமிழகத்துக்கு சோதனைக்காலம். இந்தச் சோதனையில் வெற்றிபெற வேண்டுமானால், நாம் இரண்டு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். 

ஒன்று, அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத நாத்திக சிந்தனைகளுக்கு விடை கொடுக்க வேண்டும். இரண்டு, சினிமா கவர்ச்சிகளுக்கு மயங்காத நிலையை நம் மனத்தில் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த முடிவுகள் நிச்சயமாக அடுத்த தலைமுறைக்கு நல்ல தலைவர்களை விட்டுச் செல்லும்.

அன்புடன் சாது ஸ்ரீராம்
(saadhusriram@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com