மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்!

உலக புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்சின் எ கிறிஸ்துமஸ்
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்!

உலக புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்சின் எ கிறிஸ்துமஸ் கரோல் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் ராபர்ட் செமெக்ஸ்  இயக்கிய அனிமேஷன் படத்தை தொலைக்காட்சியில் சமீபத்தில் பார்த்தேன்.  ராபர்ட் செமெக்ஸ் தனது ஃபாரஸ்ட் கம்ப் மற்றும் காஸ்ட் அவே போன்ற அற்புதமான திரைப்படங்களின் மூலம் உலக புகழ்பெற்ற அமெரிக்க இயக்குனர் ஆவார். 1994 ஆம் ஆண்டு வெளியான அவரது ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தை இன்றளவும் சிலாகித்து பேசும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் அத்திரைப்படம் பிடித்த படங்களின் பட்டியலில் எப்போதும் உள்ளது.

காஸ்ட் அவே திரைப்படம், தீவொன்றில் தனியாக சிக்கிக்கொள்ளும் ஒருவன் அங்கிருந்து தப்பிக்க மேற்கொள்ளும் போராட்டங்களை பற்றியதாகும். 

வாழ்நாள் முழுவதிலும் பணம் சேர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயந்திரத்தனமாக உழன்றுக்கொண்டிருக்கும் முதியவன் ஒருவனை மூன்று ஆவிகள் சேர்ந்து இன்பமும், குறும்புத்தனமும் நிறைந்த அவனது கடந்தகால வாழ்க்கைக்கு திருப்புவதே இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

நீண்ட மூக்கும், நரித்தனம் உறுமும் கண்களும் கொண்ட முதியவன், இறந்துபோன தனது நண்பனின் இறுதி சடங்குக்கு பணம் கொடுக்க மறுக்கும் காட்சியிலிருந்து இத்திரைப்படம் தொடங்குகிறது. அது கிறிஸ்துமஸ் நெருங்கும் காலகட்டம் என்பதால் வீதியெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை கடந்து செல்லும் முதியவன் இவை அனைத்தும் வீண் வேலைகள் என்கிறான். பணம் சேர்க்க உழைப்பதை விடுத்து இவர்கள் இப்படி முட்டாள்தனமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்களே என உள்ளுக்குள் புழுங்குகிறான். அவன் வாழும் இயந்திரத்தனமான வாழ்க்கையே பொருள் ஈட்ட சிறந்த வாழ்க்கைமுறை என்பதில் பெருமிதம் கொள்கிறான். கேமரா அவனிலிருந்து மேலே உயர்ந்து அந்த நகரத்தையே ஒரு முழு சுற்று சுற்றிவருகிறது. ஏழு ஆண்டுகள் அந்த சுழலில் கரைந்து போகின்றன.

அப்போதும் அந்த முதியவன் இயந்திரத்தனமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான். மறுநாள் கிருஸ்துமஸ் பண்டிகை என்பதால் ஏழை பிள்ளைகளுக்கு உதவ அவனிடம் நிதி கேட்டு சிலர் வருகிறார்கள். உங்கள் சொந்த பணத்தின் மூலம் சேவை செய்து கொள்ளுங்கள், என்று அவர்களை அங்கிருந்து விரட்டுகிறான். விருந்துக்கு அழைக்கும் உறவினனையும் தான் சோற்றுக்கு இல்லாமல் இல்லை என்று கூறி அவமானப்படுத்தி அனுப்புகிறான். கிருஸ்துமஸ்க்கு விடுமுறை கேட்கும் அலுவலக பணியாளிடம் சில நிபந்தனைகள் விதித்துவிட்டு விடுமுறை வழங்குகிறான். விடுமுறை கிடைத்துவிட்ட மகிழ்வில் அந்த பணியாள் தரையில் கிடக்கும் பனியில் விழுந்து துள்ளி குதிக்கிறான்.  

முதியவனின் வாழ்வை போலவே இருளுக்குள் மூழ்கி கிடக்கும் அவனது வீட்டில் அவனுக்காக சில ஆவிகள் காத்திருக்கின்றன. அவை அவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அவனது கடந்தகால, நிகழ்கால, வருங்கால வாழ்க்கையை காட்டுகின்றன.

தனது இளமை காலத்தில் அந்த முதியவன் ஏழ்மையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதனை அவன் மகிழ்ச்சியாகவே உணருகிறான். தங்கையின் மீது பாசத்தை பொழிகிறான். அப்போது அவனுக்கு ஒரு காதலுக்கும் வருகிறது. காதலியையே கரம் பிடிக்கிறான். பின் சிறுகச் சிறுக பணம் அவனது வாழ்க்கையை விழுங்க துவங்கியதும், அந்த மண வாழ்க்கை முறிந்துவிடுகிறது. முதியவன் தனிமையில் வாழ துவங்கிறான்.

அந்த தனிமை அவனது மனதை இறுகச் செய்கிறது. கடந்த கால காட்சிகளை கண்முன்னால் பார்க்கும் முதியவன் தான் இழந்தவற்றை எண்ணி கண் கலங்கி நிற்கிறான். நிகழ்காலத்தில் அவனால் பாதிக்கப்பட்ட பலரும் அவனை கரித்துக் கொட்டுவதைப் பார்த்து தலைகுனிந்து நிற்கிறான்.

எதிர்காலத்தில் அவன் இறந்த பின் அந்த ஊர் மக்கள் அவனை பழிப்பதையும், அந்த நகரம் அவனது கல்லறையின் மீது எச்சில் உமிழ்வதையும் பார்த்து அதிர்ச்சியடைகிறான். தனது முக்காலத்தையும் பார்த்துவிட்ட பின்பு வாழ்க்கை மீது அவனுக்கு பிடிப்பு ஏற்படுகிறது. வாழ்க்கை என்பது மகிழ்ச்சியால் நிரப்பப்பட்டுள்ளது, அங்கு பணமும் பொருளும் அர்த்தமற்றதாகிவிடுகிறது என்பதை உணருகிறான். இவை அனைத்தும் கிறிஸ்துமஸ்க்கு முன்தினம் நடந்து முடிகின்றன.

மறுநாள் காலை விடிந்ததும் வழக்கத்துக்கு மாறாக அவன் தன் வீட்டிலிருந்து வெளியே வந்து நகர வீதியில் மகிழ்ச்சியாக துள்ளி குதிக்கிறான். தன்னிடம் நிதி கேட்டு முன்தினம் வந்தவர்களிடம் தானாக வலிந்து சென்று பணம் கொடுக்கிறான். தனது பணியாளின் வீட்டிற்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு வான்கோழியை வாங்கி பரிசாக அனுப்பி வைக்கிறான். நகர மக்களுடன் இணைந்து கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறான். தனது மகிழ்ச்சியை கடந்து செல்லும் ஒவ்வொருவரிடமும் பகிர்ந்து கொள்கிறான். தனது பணியாளின் ஊதியத்தை உயர்த்துகிறான். அவனது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறிவிடுகிறது. அந்த ஊரிலேயே மிகச் சிறந்த மனிதனாக தனது மிச்ச காலத்தை முதியவன் வாழ்ந்தான் என்பதாக படம் நிறைவடைகிறது. 

அனிமேஷன் திரைப்படம்தான் என்றாலும், அந்த வாழ்க்கை நம்மை வந்தடைகிறது. அது சொல்லும் செய்தி மனதில் பட்டாம்பூச்சியை போல அழகாக வந்தமர்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com