ராஜன் மகள்

ஆறு வருடங்கள் முன் ‘ராஜன் மகள்’ ( பா.வெங்கடேசன்) என்னும் புத்தகத்தை அதன்
ராஜன் மகள்

ஆறு வருடங்கள் முன் ‘ராஜன் மகள்’ ( பா.வெங்கடேசன்) என்னும் புத்தகத்தை அதன் அட்டைப் படம் வசீகரித்ததால் வாங்கிவிட்டேன். ஆனால் அது வாசிக்கப்படாமல் என் அலமாரியில் அழகான ஒரு அலங்காரப் பொருளாக மட்டும் இருந்துவந்தது. தோழி ஒருத்தியின் பிறந்த நாளிற்கு அப்புத்தகத்தை பரிசாக கொடுத்துவிட்டேன். அத்துடன் மறந்துவிட்டேன். பின்னொரு நாள் புத்தகக் கடையொன்றில் மீண்டும் ‘ராஜன் மகள்’ புத்தகத்தைப் பார்த்தவுடன் அட்டையினால் கவரப்பட்டு வாங்கிவிட்டேன். ஆனால் பழைய கதைதான் – வாசிக்கவில்லை. நேரமின்மையை காரணம் சொல்ல முடியாது, நான் வாசிப்பதற்காக நேரத்தை எப்படியாவது தயாரித்துக் கொள்ளுபவள். இப்புத்தகத்தை நான் ஒதுக்கிவைத்தது எவ்வளவு பெரிய குற்றம் என்று வாசித்த பின்புதான் தெரிந்தது. எவ்வளவு பெரிய அபத்தம் இது என்று என்னை நானே திட்டிக் கொண்டேன். இவ்வளவு நுட்பமான புனைவை எழுதியவர் எங்கோ புகழ் வெளிச்சங்கள் படாத இடத்தில் பதுங்கியிருப்பது பேரதிசயம்.

முதல் பக்கத்தை கடக்க எனக்கு பொறுமை தேவையிருந்தது. யாருடா அந்தப் பரமசிவம் பிள்ளை அய்யோ அவரைப் பற்றியா இந்தக் கதை என்று நினைத்தேன்...அடுத்த பக்கம் என்னை அதனுள் புதைக்க ஆரம்பித்தது. வாசிக்க வாசிக்க வசியப்பட்டுப் போனேன். மழை வீட்டைப் பற்றிய நுண்ணிய குறிப்புகளும், அதன் வர்ணனைகளும் இதுவரை நான் படித்திறாதது. என்னை முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்கும் தளத்திற்கும் எடுத்துச் சென்று விட்டது. மழைக்குள் நின்று கொண்டு படித்த மாதிரியே இருந்தது மழையின் வர்ணனைகள். மழையில் கண்டெடுத்த குழந்தை சாரங்கன் மனிதனா புனைவின் நாயகனா யார் யார் என்று மேலும் மேலும் படிக்க ஆவல் எழுந்தது. வயதான ஒரு ஜமீன்தாரரின் அந்தரங்க ஆசை, அவரின் யவன மனைவியின் மறைமுக தூண்டுதல், காதலை நிலைநிறுத்த மனிதனின் போராட்டங்களை வெகு நுட்பமாக அழகியலுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளது. பரமசிவம் பிள்ளையின் பிடிவாதம், அவர் மனைவியின் புலம்பல்கள், அமானுஷ்யமான அந்தக் கட்டடம் என்று கதையும் புனைவும் சேர்ந்து இழை இழையாக மனதினுள் சொல்லொண்ணா ஆர்வத்தையும் வாசித்தலின் இன்பத்தையும் அள்ளி அள்ளித் தந்தது. அவர்களின் வளர்ப்பு மகனான சாரங்கனூடே வளர்ந்த கதை அவன் இளம் பிராயத்தை வாழ்வின் தேடலுடனே அமைத்து, விசித்திரமான இடங்களை அவன் கண்டடைந்து மகிழ்ந்து பெருமிதம் கொள்ளும் போது ஏனைய சிறுவர்கள் போல வாசிப்பவர்க்கும் ஏக்கம் வருகிறது, நம்மால் பெற முடியாத ஏதோ ஒன்றை அடுத்தவர் அடைந்துவிட்டால் அதுவும் வெகு சுலபமாக அடைந்துவிட்டால் நம்க்கு ஆற்றாமை எழுவது நிஜம் தானே? சாரங்கனின் சாகஸங்கள், அவனின் அதீத அழகு, அவனுடைய தெளிவு, திறமை என்று ஆச்சரியங்களின் மொத்த உருவம் அவன். அவனின் அத்தனை விஷயங்களும் மண்டியிட்டு விடுவது ஒரு பெண்ணால்...அழகும் யெளவனமும் வனப்பும் நிறைந்த ஒரு அழகியால் அவன் நிலை குலைந்து போகிறான்.வளர்ப்பு மகனின் துயரைத் தாங்காத தகப்பனே மகனின் தேவையறிந்து கமலத்திடம் கூச்சத்துடன் சொல்கிறார் (கதையில் பிடித்த இன்னொரு விதயம் எவ்விடத்திலும் கமலத்தை தரம் குறைத்து சொல்லப்படவில்லை, தாசியென்றோ விலைமகளென்றோ சொல்லாமல் நித்ய சுமங்கலி என்று ஊர்ப்பெண்கள் வாயாலேயே குறிப்பிட்டிருப்பது மிகச் சிறப்பு)

அதீத அழகும் இளமையும் உடம்பின் தினவும் இவ்வளவு நுட்பமாக வேறு எந்தக் கதையிலும் சொல்லப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. கதையின் முக்கியமானவை கடைசி ஐந்துப் பக்கங்கள். நோயில் கிடந்த சாரங்கனை கமலம் முதலில் பரிவுடன் தான் அணுகுகிறாள், சிலரால் பெண்ணை அடைந்துதான் அவளை முழுவதும் உணர்ந்து தான் காமத்தைக் கடக்க முடியும், வெகு சிலரால் தான் பெண்ணுடல் சேராமலேயே பெண்ணைக் கடக்க முடியும். சாரங்கன் என்னும் பேரழகன் பெண்ணாசையை ஒரு நொடித் தெளிவில் கடந்து திரும்பிப் பார்க்காமல் செல்கிறான்.

ஆண்டாண்டுகள் கழித்து கமலத்தின் பருவ மகள் சிந்தாமணி கமலம் இட்ட ப்ரியமான கட்டளையை ஏற்று சாரங்கனைத் தேடி மழை வீட்டிற்கு வந்து உடனே திரும்பிப் போய் தாயிடம் தான் கண்ட காட்சியைச் சொல்வது ரசனைகளின் செறிவு. அவள் கண்டதும் பேரழகன் ஒருவனைத்தான். ரகசியங்களும் மாந்திரீகமும் நிறைந்த சாரங்கன் தானோ அது இன்னும் மாறா இளமையுடன் வலம் வருவது? அல்லது அவனும் கால சந்தர்ப்பங்களினால் வேறொரு பெண்ணிடம் மண்டியிட்டுப் பிள்ளைப் பெற்று அதே திண்மையுடன் தன் உருவ வாரிசை உலகில் உலவவிட்டு வெகு தூரம் எங்கோ சென்றுவிட்டானோ? எது நிஜம்? எது புனைவு? வாசிப்பவர்க்கு எந்த முடிவு பிடிக்கிறதோ அதை அவரிடமே ஒப்ப்டைக்கிறார் கதாசிரியர். எனக்குப் பிடித்த முடிவு அவன் சாரங்கன் தான்...அவனின் அதீத வசீகரத்துடன் தான் எழுப்பிய மாளிகையில் பெண்ணை பெண்ணுடலை வென்று, இளமையை தக்க வைத்துக் கொண்டு தன் மழையுடனும் தனிமையுடனும் என்றும் இருப்பான்.



வெகு நாள் கழித்து மீண்டும் கைக்கு வந்த இக்கதையை நான் வாசிக்க கிடைத்த அனுபவமும் வெகு அழகு. மின்சாரம் துண்டிக்கப்பட்ட இரவில், விளக்கின் ஒளியில் மழையைப் பற்றிய விவரிப்பை மழை முடிந்த ஒரு நாளில் வாசிப்பது என்பது எவ்வள்வு பொருத்தம்? மொழித் துல்லியம், வார்த்தை பிசகாத வர்ணனைகள் என்று பிரமிப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது இக்கதை. ஓசூர் என்ற ஊருக்குள் ஒரு ஜமீன் மாளிகைக்கு சென்று விட்டு இருவரின் காதலை அறிந்துவிட்டு வந்தது போன்ற உணர்வினைத் தந்துவிட்டது இது. வரிக்கு வரி ஆழ்ந்த வாசிப்பானுபவம் கிட்டிய கதை இதுவென்பது வெகு நிச்சயம். என் தேடலின் பயனாக ‘ராஜன் மகளை நான் கண்டடைந்தேன். சில சமயம் நம்மிடம் இருக்கும் பொக்கிஷங்கள் நம் கண்ணுக்கே புலப்படாது போய்விடும் தானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com