மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த புள்ளி விவரம் சொல்வது என்ன?

நடப்பாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் படித்த 5 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்திருக்கிறது என்ற பகீர் தகவல் வெளியாகி நீட்டுக்கு எதிராக போராடி வருவோருக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த புள்ளி விவரம் சொல்வது என்ன?


சென்னை: நடப்பாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளியில் படித்த 5 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்திருக்கிறது என்ற பகீர் தகவல் வெளியாகி நீட்டுக்கு எதிராக போராடி வருவோருக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளியில் படித்த 5 பேருக்கு மட்டுமே இடம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், அது ஒன்று மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் அல்ல.. இன்னும் பல இருக்கின்றன.

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளியில் +2 படித்து நீட் தேர்வு எழுதிய 5 பேர் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டும் இந்த எண்ணிக்கை அவ்வளவு ஒன்றும் பெரிதாக இருந்திருக்கவில்லை. 2016ம் ஆண்டு அரசுப் பள்ளியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 30 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்றிருந்தனர்.

இதன் மூலம், ஏழை மற்றும் ஊரகப் பகுதி மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவு, கானல் நீராகியிருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. 

ஆனால், ஒட்டுமொத்தமாக மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகள் என்று இதை எடுத்துக் கொள்ளாமல், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் நாம் இழந்தது என்னென்ன? எப்படி? என்பதை அனைத்து புள்ளி விவரங்களையும் கொண்டுதான் முடிவு செய்ய வேண்டும், இந்த ஒரே ஒரு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவது சரியானதல்ல.

அதாவது, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எத்தனை பேர் மருத்துவ சேர்க்கையில் இடம்பிடித்தனர் என்ற புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. ஏன் என்றால், அரசு உதவிபெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என்ற பட்டியலில் வைக்கப்படுகிறது. 

உண்மையில் அரசுப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை.

அதாவது கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர், 11ம் வகுப்பில் ரூ.125ம், 12ம் வகுப்பில் ரூ.200ம் ஆண்டுக் கட்டணமாக செலுத்தி படித்துள்ளார். அவர் தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளார். எனவே, இதையும் புறந்தள்ளிவிடக் கூடாது.

மேலும், ஆதி திராவிடர் நல வாரியம், ஆண்டு தோறும் மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுக்கும் 10 மாணவர்களை தேர்வு செய்து நிதி வழங்கி தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறது. இவர்களும் தனியார் பள்ளி மாணவர்கள் என்ற கணக்கில்தான் வருகிறார்கள் என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் எத்தனை பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்கள் என்றால் அதற்குதான் 5 பேர் என்ற பதிலை இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கை புள்ளிவிவரத்தில் மற்ற பல விஷயங்களையும் நாம் கவனித்தே ஆக வேண்டும். அதாவது, வழக்கத்தை விட, சென்னையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகளவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 113 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 471 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர். இது எதைக் காட்டுகிறது என்பது பலருக்கும் புரிந்திருக்கும்.

அதோடு, மிகவும் பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் அதிகளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதாவது, கடந்த ஆண்டு வெறும் 4 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் இடம்பிடித்திருந்த அரியலூரில் இருந்து இந்த ஆண்டு 21 மாணவர்களாக அதிகரித்துள்ளது.

டாப்பர்ஸ் ஃபேக்டரி என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 957 மாணவ, மாணவிகள் மருத்துவம் படிப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு அது 109 ஆகக் குறைந்துள்ளது. இது நிச்சயம் பலரால் வரவேற்கப்பட வேண்டியதாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளின் பெயர்கள் அறிவிக்கப்படாது என்ற அறிவிப்பினால் நாமக்கல் தனியார் பள்ளிகளுக்கு பெரிய இழப்பு. இதனால், வெறும் முட்டை இடும் கோழிகளாக மாணவர்களை மாற்றும் பள்ளிகள் இனி அந்த வேலையை சற்று சுமாராகவே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

அதாவது, மொத்தமுள்ள மருத்துவ மாணவ சேர்க்கை இடங்களான 3,534ல் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 2,314 மாணவர்கள்  இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள 1,220 சேர்க்கை இடங்களில் சிபிஎஸ்இ உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.  ஆனால், கடந்த ஆண்டு இதர பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் வெறும் 26 இடங்களில் மட்டுமே சேர்க்கை  பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, நீட் தகுதித் தேர்வை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட மாணவர் சேர்க்கையில் 3ல் 2 பங்கை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பிடித்தாலும் நிச்சயம் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு என்பதை இந்த இடத்தில் மறுக்கவே முடியாது.

இதில், கடந்த ஆண்டு +2 முடித்து, நீட் தேர்வுக்காக ஓராண்டு முழுவதும் படித்து மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கிடைக்கப்பெறவில்லை.

சென்னை, கோவை, மதுரை, வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

அதே சமயம் ஈரோடு,  கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம் பிடித்திருப்பது கணிசமாகக் குறைந்துள்ளது. 

எனவே, வெள்ளம் வந்த பிறகு ஜான் போனதே, முழம் போனதே என்றுதான் இங்கு நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீட் தேர்வுக்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருப்பது காலதாமதமான ஒன்று என்பதே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஏன் எனில், வெகு காலம் முன்பே, நமது மாநிலப் பாடத்திட்டத்தின் மேம்பாட்டுக்காக நாம் போராடியிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு எதிராகவும், தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு எதிராகவும் போராடியிருக்க வேண்டும். மறைமுகமாக அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் மூடுவிழாக் கண்டுவிட்டு இன்று அதன் தரம் குறித்து புலம்புவதில் அர்த்தமே இல்லை. 

அரசுப் பள்ளிகளையும், கல்வித் தரத்தையும் மேம்படுத்தாத அரசுகளுக்கு எதிராக அன்று நாம் இதே அளவுக்குக் குரல் கொடுத்திருந்தால் நீட் இன்று நமக்கு சாபமாக ஆகியிருக்காது. நிச்சயம் அகில இந்திய அளவில் நமக்கு மருத்துவக் கல்விக்கான வாசலைத் திறந்துவிட்ட வரமாக மாறியிருக்கும்.

அரசியல்வாதிகளும், அரசுப் பள்ளிகளைக் கண்டுகொள்ளாத அரசுகளும் செய்த தவறுகளை கண்டும் மௌனியாகஇருந்த நாம் இன்று அதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தோடு, அரசுப் பள்ளிகளின் தரம், கல்வி மேம்பாட்டுக்கு ஆதரவான குரலையும் சற்று உயர்த்தியே முழங்க வேண்டும் என்பதுதான் அடிப்படை உண்மை என்கிறார்கள் விஷயம் தெரிந்த பாமரர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com