கூகுள் டூடுலில் இருக்கும் அந்த பச்சைப் பெண் யார் என்று தெரியுமா?

பச்சை நிறத்திலான இந்த டூடுல் எழுத்துக்கள் அறிவியலில் வேதியியல் ஃபார்முலாக்களை எழுதும் பாணியில் வடிவமைக்கப்பட்டு அதற்கு மத்தியில் மூக்குக் கண்ணாடி அணிந்த ஒரு பெண் கண்களை மூடியபடி சிரிக்கிறாள்.
கூகுள் டூடுலில் இருக்கும் அந்த பச்சைப் பெண் யார் என்று தெரியுமா?

அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணியான முனைவர். அசீமா சாட்டர்ஜி அவர்களின் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

பச்சை நிறத்திலான இந்த டூடுல் எழுத்துக்கள் அறிவியலில் வேதியியல் ஃபார்முலாக்களை எழுதும் பாணியில் வடிவமைக்கப்பட்டு அதற்கு மத்தியில் மூக்குக் கண்ணாடி அணிந்த ஒரு பெண் கண்களை மூடியபடி சிரித்த முகத்துடன் இருப்பது போல் உள்ளது. அந்தப் பெண் வேறு யாரும் இல்லை இந்தியாவில் இருக்கும் கொல்கத்தாவில் பிறந்து வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.  அறிவியல் துறையில் இந்தியாவின் சார்பாக பல சாதனைகளை படைத்தது மட்டுமின்றி எண்ணற்ற பெண்களுக்கு முன்னோடியாகவும் விளங்கியவர்.

செப்டம்பர் 23, 1917-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொல்கத்தாவில் பிறந்து 1944-ம் ஆண்டிலேயே வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அந்த காலத்தில் இந்தியப் பெண்கள் அறிவியல் சார்ந்த படிப்புகளைப் படிப்பதே மிகவும் அரிது, அதிலும் மருத்துவப் படிப்பை தாண்டி வேதியியல் போன்ற துறைகளைத் தேர்வு செய்வது அதைவிட அரிதான ஒன்று. வேதியியல் துறையில் இயற்கைப் பொருட்கள் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட இவர் வலிப்பு நோய், மலேரியா மற்றும் கீமோதெரபி போன்ற பிரச்னைகளுக்கு மருந்துகளைக் கண்டுபிடித்தார்.    

அறிவியல் துறையில் இவர் செய்த சாதனைகளுக்காகப் பல உயரிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.பாட்நகர் விருது, சி.வி.ராமன் விருது, பி.சி.ரே விருது உட்பட இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதையும் இவர் பெற்றுள்ளார். பேராசிரியராக கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார். 

400-க்கும் மேற்பட்ட அறிவியல் சார்ந்த பத்திரிகைகளை நாடு முழுவதும் இவர் வெளியிட்டார், இவருடைய மதிப்பாய்வு கட்டுரைகள் அனைத்தும் பல தொகுதிகளாகப் புத்தக வடிவுப் பெற்றன. மேலும் அவற்றில் பெரும்பாலானவை பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டன. 

1975-ம் ஆண்டு அசீமா இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்கிற பெருமையையும் பெற்றார். அந்தச் சங்கத்தின் 62-வது அமர்வில் ஜனாதிபதி முன்னிலையில் “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தற்போதைய நிலையும், எதிர்காலமும்” என்கிற தலைப்பில் அவர் பேசிய அந்த ஆற்றல் மிக்க பேச்சை கேட்டவர்கள் எவராலும் அதை எளிதில் மறக்க முடியாது. 1975-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னீட்டு பெங்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆண்டின் தலைசிறந்த பெண்மணி என்கிற விருதை இவருக்கு வழங்கியது. 

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற அடுத்த ஆண்டே பேராசிரியர் பாரதநந்த சாட்டர்ஜியை திருமணம் செய்து கொண்டார். இவரும் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, ஹவுராவில் உள்ள பெங்கால் பொறியியல் கல்லூரியில் புவியியல் மற்றும் உலோகத் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ஜூலி எனப் பெயர் சூட்டினர். தனது கணவனின் துணையின்றி தன்னால் வாழ்வில் இவ்வளவு உயரங்களை எட்டியிருக்க முடியாது என்று அசீமாவே கூறியுள்ளார். அதே சமயம் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஒரு நல்ல மனைவியாக, தாயாக, மருமகளாக, சகோதரியாகத் தனது பணிகளைச் சரியாக செய்வார். காலையில் எழுந்து சமையல் உட்பட வீட்டில் உள்ள முக்கிய வேலைகளை செய்துவிட்டுதான் கல்லூரிக்குச் செல்வராம், அதே போல் இரவு தாமதமாக வந்தாலும் ஓய்வின்றி மீண்டும் வீட்டு வேலைகளில் ஈடுபடுவாராம்.

தனது பெற்றோர்களைப் போல ஜூலியும் வேதியியல் துறையிலேயே தனது முனைவர் பட்டத்தை பெற்று அதே கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் தலைவரானார். ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்று இந்தச் சமூகம் பெண்ணைக் கல்லாமை என்கிற சிறையில் அடைத்து வைத்திருந்த காலகட்டத்திலேயே பெரும்பாலான பெண்கள் தேர்வு செய்யாத வேதியியல் துறையை தேர்வு செய்து அந்தத் துறையில் பல சாதனைகளையும் படைத்து பிற்காலத்தில் எண்ணற்ற பெண்களுக்கு முன் மாதிரியாக விளங்கிய அசீமா சாட்டர்ஜீயை அவருடைய நூறாவது பிறந்த நாளான இன்று நினைவு கூர்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com