ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் வாழ்வது மட்டுமா? சிந்தியுங்கள்!

ஏப்ரல் 7 உலக சுகாதார தினம். இன்றைய நாளை உலக சுகாதாரத் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகின்றோம்.
ஆரோக்கியம் என்பது நோயில்லாமல் வாழ்வது மட்டுமா? சிந்தியுங்கள்!

ஏப்ரல் 7 உலக சுகாதார தினம். இன்றைய நாளை உலக சுகாதாரத் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறோம். உலக நாடுகளை ஒன்றிணைத்து ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட பின், சுகாதாரம் மற்றும் மருத்துவம் குறித்த விசேஷ நோக்கங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே உலக சுகாதார நிறுவனம் ஆகும்.

உலக சுகாதார சபை

1948-ம் ஆண்டு ஜெனீவாவில் முதன்முறையாக உலக சுகாதார தினத்தை ஏப்ரல் 7-ம் தேதி அன்று கொண்டாடத் தீர்மானித்தது உலக சுகாதார சபை. இது 1950-ம் ஆண்டு உலக சுகாதார தினத்தை முதன்முறையாக ‘உங்கள் உடல்நல சேவைகளை அறிந்து கொள்ளுங்கள்’ என்றக் கருப்பொருளோடு உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை தவறாது ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளில் இந்நாள் கொண்டாடப்படுகின்றது.

உலகில் உள்ள அனைவருக்கும் முடிந்த வரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும்.

உலக சுகாதார தினம்

பொது சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பல இடங்களில் பல்வேறு சுகாதார அமைப்புகள் உட்பட அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளால் உலக சுகாதார தினம் உலகளவில் கொண்டாடப்படுகிறது.

பத்திரிக்கை வெளியீடுகள், செய்தி மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் ஊடக அறிக்கைகள் மூலமும் இந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றனர் மற்றும் உலகளாவிய சுகாதார பிரச்சனைகளை ஆதரிப்பதற்காக வெவ்வேறு நாடுகளில் இருந்து சுகாதார அதிகாரிகள் அவர்களின் உறுதிமொழிகளில் பங்கேற்கின்றனர். சுகாதாரத்தை மையப்படுத்திய தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகள், கலை மற்றும் கண்காட்சிகள் மற்றும் விருது வழங்கும் விழாக்கள் என பலதரப்பட்ட நிகழ்வுகளை நடத்தி உலக சுகாதார தினத்திற்கு பெருமை சேர்க்கின்றோம்.

நிலையான வளர்ச்சி இலக்குகளில் மூன்றாவது இலக்காக இடம் பெற்றிருப்பது சுகாதாரத்தைப் பற்றித்தான்: ‘ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும், எல்லா வயதினருக்கும் நலனுக்காகவும் ஊக்குவிக்கவும்’ என்ற இலக்கோடு பயணிக்கிறது. இவை 2030 வாக்கில் தன்னுடைய இலக்கை பூர்த்தி செய்திருக்கவேண்டும் என ஐ.நாவில் உறுப்பினர்களாக உள்ள 196 நாடுகளும் இணைந்து பயணிக்கின்றன. இலக்கை நோக்கி பயணிக்கும் பயணம் இது. ஒவ்வொரு உலக தினமும் அந்த அந்த தினத்திற்கென கருப்பொருளைக் கொண்டு கொண்டாடப்படுவது என்பது நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைய உதவி புரிகின்றன.

உலக சுகாதார தினத்தின் தாக்கம்

உலகையே பயமுறுத்திக்கொண்டிருந்த போலியோ ஒரு பெரிய நோயாக பயமுறுத்தி வந்த நிலையில் 1995 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார தினத்தினை ‘உலகளாவிய போலியோ ஒழிப்பு’ என்ற கருப்பொருளோடு கொண்டாடியது. அப்போது ஆரம்பித்த அந்த விழிப்புணர்வு பெரும்பாலான நாடுகள் இந்த அபாயகரமான நோயிலிருந்து விடுதலையாகிவிட்டன என்றே சொல்லலாம் மற்றும் போலியோ பற்றிய விழிப்புணர்வு பலதரப்பட்ட மக்களிடையே பரவியுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது.

கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது

கடந்த 2017ம் வருடம் இதே நாளில் ‘மன அழுத்தம்: நாம் பேசுவோம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக சுகாதார தினத்தைக் கொண்டாடினோம். பல நிறுவனங்களாலும் பல அமைப்புகளினாலும் இந்தக் கருத்தை உள்வாங்கிக்கொண்டு பல கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து மன அழுத்தத்தைப் பற்றி தீவிரமாக பேசி அசைபோட்டனர். இதனால் அன்றைய தினம் மிகவும் சிறப்பாக பலருக்கு அமைந்திருந்தது. அன்றைய தினம் மட்டுமே… மன அழுத்தத்தைப் பற்றி தொடர்ந்து சிந்திக்க வேண்டிய தருணங்கள் அவ்வளவாக தொடரவில்லை என்றே தோன்றுகிறது.

தெலுங்கு டி.வி. நடிகை ராதிகா ரெட்டி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு 36 வயது ஆகிறது. ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆறு மாதத்திற்கு முன் குடும்பப் பிரச்சனையால் கணவரை விவகாரத்து செய்துவிட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்தவர், தான் தங்கியிருந்த குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். ராதிகா ரெட்டியின் கைப்பையில் ஒரு கடிதம் இருந்தது.  அதில், ‘மன அழுத்தம் காரணமாக என்னை நானே கொலை செய்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது மூளையே எனக்கு எதிரி’ என்று எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார். இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் தினந்தோறும் உலகின் ஏதோவொரு மூலையில் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

மன அழுத்தம் அனைத்து நாடுகளிலும் தொடர்கதையாக, அனைத்து வயதினரையும் பாகுபாடின்றி பாதிக்கின்றது. இது அன்றாடப் பணிகளை முன்னெடுப்பதற்கான மக்களின் திறனை வெகுவாக பாதிக்கின்றது என்றபோதிலும் நம்முடைய அன்றாட இயந்திர வாழ்க்கையில் பிடிபட்டு மீளமுடியாமல் கஷ்டப்பட்டு தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

உலக சுகாதார நிறுவனம் 2018-ம் ஆண்டிற்காக ‘எல்லோருக்கும் ஆரோக்கியம்’ என்ற கருப்பொருளைத் தாங்கி சில வழிமுறைகளை முன்வைத்து கொண்டாட அழைத்துள்ளது. ஆரோக்கியமாக இருப்பது என்பது நோய் இல்லாமல் இருப்பது என்பது. நோய் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல. மாறாக, ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்றால் அவருடைய உடல்நலம், மனநலம் மற்றும் சமூகநலம் மூன்றும் நன்றாக இருந்தல்தான் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 

சுகாதாரத்தைப் பேணிக்காக்க ஒன்பது தினங்கள்

நம்முடைய இயந்திர பயணத்தை சற்று ஓரத்தில் நிறுத்திவிட்டு ஒவ்வொருவரின் உடல்நலத்தைப்  பேணிக்காக்க உலகளாவிய சுகாதார நிறுவனம் ஒன்பது வகையான சுகாதாரம் சார்ந்த தலைப்புகளோடு ஆண்டு முழுவதும் கொண்டாட நம்மை அழைக்கின்றது: உலக வுடீ தினம், 24 மார்ச்; உலக சுகாதார நாள், 7 ஏப்ரல்; உலக மலேரியா தினம், 25 ஏப்ரல்; உலக நோய் எதிர்ப்பு வாரம், 24 முதல் 30 ஏப்ரல் வiர் உலக புகையிலை தினம், 31 மே; உலக இரத்த தானம் நாள், 14 ஜீன்; உலக ஹெபடைடிஸ் நாள், 28 ஜீலை; உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம், 13 முதல் 18 நவம்பர் வiர் உலக எய்ட்ஸ் நாள், 1 டிசம்பர் எனக் கொண்டாடி நம்முடைய சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

விழித்துக் கொள்வோம்

‘2040 ஆம் ஆண்டிற்குள், கிட்டத்தட்ட 600 மில்லியன் குழந்தைகள் போதுமான நீர் இன்றி அதிக தண்ணீர் அழுத்தத்தால் வாழ்வார்கள் அதனால் பல குழந்தைகள் இறக்க நேரிடும் என 2017-ம் ஆண்டு வெளியிட்டுள்ள யுனிசெப் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நோயின்றி நமது உடலைக் காப்போம் என்று சொல்லிக் கொள்ளும் நாம், தண்ணீர் இன்றி தண்ணீருக்காக இறக்கும் தருவாயில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். உலக சுகாதார தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம், எப்பேற்பட்ட சமுதாயத்தை உருவாக்கியுள்ளோம்? எப்படிப்பட்ட சமுதாயத்தை நம்முடைய சந்ததியினருக்காக நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதை ஆழ்ந்து சிந்திப்போம்.

இந்தியாவைப் பொருத்தவரையில் 1000 இந்தியருக்கு 0.64 சதவிகித மருத்துவர்களும், 1.44 சதவிகித செவிலியர்கள் தான் இருக்கிறார்கள். இதனால் பலவித நோய்களுக்கு போதிய மருத்துவம் கிடைக்காமலே பலர் இறக்கும் நிகழ்வுகள் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் நோய்க்கிருமியினால் வரக்கூடிய வியாதிகளை விட நோய்த் தடுப்புக் கிருமிகள் இல்லாமல் வரக்கூடிய வியாதிகள்தான் அதிகம். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய் என்று பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு முக்கியக் காரணம், முறையற்ற உணவுமுறை, உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், அதிக மன உளைச்சல், எதிலும் அவசரம், முறையான உறக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகள் எல்லாம் பல்வேறு வியாதிகளுக்கு வித்திடுகின்றன.

சர்க்கரை நோய் என்பது பணக்காரருடைய நோய் (ரிச் மேன் டிசீஸ்) என்றுதான் பல வருடங்களாக கூறிவந்தோம். முந்திரி பருப்பை காலையில் வறுத்து தின்பவர்களுக்கு, இல்லையென்றால் முட்டில் மட்டுமே பசியெடுப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த நோய் வரும். ஓடி ஆடி விளையாடுபவர்களுக்கு, வயக்காட்டில் அயராது வேலை செய்பவர்களுக்கு இந்த நோயைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றப் போக்கு காலங்காலமாக நம்மில் இருந்தது. ஆனால் இன்று ஓடி ஓடி வேலை செய்கிற அனைத்து தரப்பு மக்களுக்கும்கூட இந்த சக்கரை நோய் தென்படுகின்றது.

இதேபோல், புற்றுநோய். இந்த நோய் பழைய காலத்தை புரட்டிப் பார்த்தோமெனில் புற்றுநோய் பற்றிய தகவல்களை அல்லது புற்றுநோயால் அவதிப்படும் மனிதர்களை திரைப்படத்தில் தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இன்று, பெருவாரியாக, ஆங்காங்கே கேள்விப்படக் கூடிய சாதாரண விஷயாமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இதிலும் குறிப்பாக, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மருத்துவ புள்ளிவிபரப்படி 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் வரும் என்ற ஒரு புள்ளி விபரம் உண்டு. திருமணம் ஆகாத, பாலூட்டாத, கருத்தரிக்காத மகளிருக்குத்தான் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று இருந்தது. ஆனால், 2012-2013-ல் வெளியான அறிக்கையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல மாறாக இன்றைக்கு இந்தியாவில் மிகப் பெரிய அளவில் மார்பக புற்றுநோய் வருவது 30-40 வயது உள்ளவர்களுக்கு என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்படியாக, அனைத்து தரப்பினருக்கும் சர்க்கரை நோய் வருகிறது; இளவயதிலேயே மார்பக புற்றுநோய் மற்றும் மாரடைப்பால் பலர் இறக்கின்றார்கள்; உளவியல் நோய்கள் உலகில் பெருகிக்கொண்டே போகின்றது. இவைகளுக்கு மூன்றேக் காரணங்கள் தான் மிக முக்கியமாக உள்ளது என மருத்துவர் சிவராமன் தெளிவாகச் சொல்கிறார்: ஒன்று:  உணவு, இரண்டாவது மனம் மற்றும் மூன்றாவது சுற்றுச்சூழல். இந்த மூன்று விஷயங்களில் நடக்கக்கூடிய அக்கறையின்மையும் இந்த மூன்று விஷயங்களில் நடத்தப்படக் கூடிய வன்முறைகளும் தான் இந்த மாதிரியான நோய்கள் தங்கியிருப்பதற்கான மிகப் பெரியக் காரணம்.

இதற்கு மூல காரணமே நம்முடைய மனம் நுகர்வோர் கலாச்சாரத்தில் சிக்கி சிரழிந்து கொண்டிருப்பதால்தான். எது நல்லது எது கெட்டது என நமது மனம் உள்வாங்க மறுப்பதே மேலே  குறிப்பிட்ட நோய்களில் சிக்கி சின்னாபின்னமாகி வாழ்க்கையில் சிதறிவிட காரணமாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நம்மைத் தாண்டி பலரின் பங்களிப்பும் இருக்கிறது. சரி, அதை நாம் ஓரந்தள்ளி வைத்துவிட்டு மற்ற இரண்டையும் பற்றி பேசுவோம்.

படுக்கையில் நாட்களை எண்ண வேண்டாம்

நாமே நம்முடைய விருந்தாளி போல வரவேற்று வாழ வைப்பது நாம் உண்ணும் உணவு முறைதான். நாம் ஒரு ஜவுளிக்கடைக்குச் சென்று எவ்வாறு துணியைத் தேடித் தேடி திருப்தி அடையும் வரை கால் வலிக்க நின்று திருப்தியோடு கடைக்கு வெளியில் வருகின்றோமோ அவ்வாறுதானே நாம் உண்ணும் உணவிற்கும் நேரம் ஒதுக்கப்பட வேண்டும்?;. ஒருமுறை தானே. சாப்பிட்டால் உயிரா போகப் போகுது என எண்ணத் தொடங்கிய நாம் அவ்வாறு பல எண்ணங்களை நமக்குள் பாய்ச்சி கடைசியில் நோயாளியின் படுக்கையில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றோம்.

இந்த நிலை மாற வேண்டும், அதற்கு போதிய வழிமுறைகளை நாம் தேட வேண்டும். சுகாதாரத்தைப் பேணிக் காக்க பல உத்திகளைக் கையாள வேண்டிய நிலைக்கு நாம் அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். விழிப்புணர்வு ஒன்றே அதற்கு அடித்தளமாக அமைக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் ஒன்றிணைந்து சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை நகர்புறம் மட்டும் அல்லாது எல்லா குக்கிராமங்களிலும் ஏற்படுத்திட வேண்டும்.

இப்படிப்பட்ட பணிகள் முடக்கிவிடப்பட்டு அனைவரையும் சேரும் தருவாயில் நம்முடைய சுகாதாரம் மிகவும் அற்புதமாகப் பேணிக் காக்கப்படும்.  நம்முடைய மனமும் உணவும் ஒன்றாகப் பயணிக்கும். அப்படிப் பயணிக்கும் தருவாயில் நம்மைச் சுற்றியுள்ள சூழலே பலருக்கு ஏற்ற சூழலாக மாறும்.

நம் உடலுக்கான கால அட்டவணை

நம் உடலுக்கும் ஒரு கால அட்டவணை உள்ளது. இந்தக் கால அட்டவணையை நாம் முறையாகப் பின்பற்றினால் மருத்துவரிடம் போக வேண்டியக் கட்டாயமும் இருக்காது, மருந்து சாப்பிட வேண்டிய அவசியமும் இருக்காது. இதோ அந்தக் கால அட்டவணை:

உடல் உறுப்புகளின் நேரம், நாம் செய்ய வேண்டியவைகளும் பயன்களும்

காலை 3 மணி முதல் 5 மணி வரை   நுரையீரலுக்கான நேரம் - இந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் செய்தல் வேண்டும். ஆயுள் வளமாக இருக்கும்

காலை 5 மணி முதல் 7 மணிவரை பெருங்குடலுக்கான நேரம் - இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாது

காலை 7 மணிமுதல் 9 மணிவரை வயிற்றிற்கான நேரம் - இந்த நேரத்தில் சாப்பிட வேண்டும். நன்கு ஜீரணமாகும்

காலை 9 மணிமுதல் 11 மணிவரை மண்ணீரலுக்கான நேரம் - வயிற்றில் விழும் உணவை செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட குடிக்கக்கூடாது.

காலை 11 மணி முதல் 1 மணிவரை இதயத்தின் நேரம் - இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 மணி முதல் 3 மணிவரை சிறுகுடலுக்கான நேரம் - மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 மணிமுதல் 5 மணிவரை சிறுநீர்ப் பையின் நேரம் - நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 மணிமுதல் 7 மணிவரை சிறு நீரகங்களின் நேரம் - தியானம் மற்றும் இறைவழிபாடு செய்வதற்கு ஏற்ற நேரம்.

இரவு 7 மணிமுதல் 9 மணிவரை பெரிகார்டியத்தின் நேரம் - பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 மணிமுதல் 11 மணிவரை உச்சந்தலை முதல் அடிவயிறு வரையுமான நேரம் - அமைதியாக உறங்க வேண்டிய நேரம்.

இரவு 11 மணிமுதல் 1 மணிவரை பித்தப்பைக்கான நேரம் - அவசியம் உறங்க வேண்டிய நேரம்.

இரவு 1 மணிமுதல் விடியற்காலை 3 மணிவரை கல்லீரலுக்கான நேரம் -ரத்தத்தைக் கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்…!

நம்முடைய சீரிய சிந்தனையாலும், முயற்சியாலும் இந்த வருட உலக சுகாதார தினம் பலருக்கு பயனுள்ள வரவாக அமையட்டும். நம்முடைய வாழ்க்கை ஒருமுறைதான் என்று இல்லாமல் நம்முடைய வாழ்க்கை முறையை பல தலைமுறைகள் பாராட்டட்டும் என்ற நேர்மறையான சிந்தனையோடு பயணிப்போம். பயணம் சிறக்க தாங்கள் அனைவருக்கும் உலக சுகாதார தின நல்வாழ்த்துக்கள்.

- எஸ்.அருள் துரை

ஆசிரியர் குறிப்பு

இவர் ஓர் சமூக ஆர்வலர். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் பொன்னக்கனேரி என்ற சிறியக் கிராமத்தில் 1980-ல் பிறந்தவர். இவர் சமூகப்பணியில் முதுகலைப்பட்டமும், MBA - திட்ட மேலாண்மையும் படித்துள்ளார். தற்பொழுது மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்து வருகின்றார்.

இரண்டு வருடங்கள் பெங்களுரில் உலக வங்கி மூலம் நிதியுதவி வழங்கிய எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி திட்டத்தில் கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களின் திட்ட மேலாளராகப் பணி செய்தவர். கடந்த 2015-ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டிற்கு சென்று இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையையும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் பல்வேறு சேவைகளையும் கற்று வந்தவர்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலாகத் தமிழ் மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் பணிசெய்து, கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை நன்கு கற்றுக்கொண்டு, அவற்றுக்கு ஏற்றார்போல் கிராமப்புற மக்களின் மத்தியில் கிராமப்புற மேம்பாட்டிற்காகப் பணிசெய்பவர்.

இவரின் முதற்படைப்பு ‘தண்ணீர் யாத்திரை’ என்ற நூல் வைகறை பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. இந்த நூலானது தண்ணீரைப் பற்றி வரலாற்றுப் பின்னணியில் தொடங்கி மூன்றாம் உலகப் போர் தண்ணீர் பிரச்சனையினால்தான் வரும் என்பதுவரை தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

இவரின் இரண்டாம் படைப்பு ‘A Journey for Water’ என்ற நூல் ஆங்கிலத்தில் ‘Educreation’ பப்ளிகேஷன் மூலம் தில்லியில் இருந்து வெளிவந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் (2018) 25-ம் தேதி ‘நம்மால் இன்றி வேறு யாரால் முடியும்?’ என்ற தலைப்பில் நாளிதழில் ஒன்றில் கட்டுரையாக வெளிவந்து பலரின் பாராட்டுதலையும் வரவேற்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com