என்றுமே காவல்துறை உங்கள் நண்பன் தான்! அதில் மாற்றமில்லை!!

இரண்டு நாட்களுக்கு முன் போக்குவரத்து காவலர் ஒருவர் நூறு ரூபாய் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ வாட்ஸ் ஆப்-பில் விறுவிறுப்பாக சுழன்று
என்றுமே காவல்துறை உங்கள் நண்பன் தான்! அதில் மாற்றமில்லை!!

இரண்டு நாட்களுக்கு முன் போக்குவரத்து காவலர் ஒருவர் நூறு ரூபாய் லஞ்சம் கேட்பது போன்ற வீடியோ வாட்ஸ் ஆப்-பில் விறுவிறுப்பாக சுழன்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. இது போன்ற வீடியோக்கள், குறிப்பாக காவல் துறைக்கு எதிரான வீடியோக்கள் சமீபகாலமாக ஊடகங்களில் அதிகமாக பரப்பப்படுவதை பார்க்க முடிகிறது.

காவல் துறையில் மட்டும் லஞ்சம் தாண்டவமாடுகிறதா? எல்லா காவலர்களும் இத்தகைய தவறுகளில் ஈடுபடுகிறார்களா? நிச்சயமாக இல்லை. கடமையைச் செய்வதற்கு ஆதாயம் பெருவதும், கடமையை மீறுவதற்கு ஆதாயம் பெருவதும் தவறு. முறைகேடான வழியில் ஆதாயங்களை பெறுவது ஏதோ இன்று, நேற்று தொடங்கிய பழக்கமல்ல. இதை விளக்க வருகிறது மகாபாரதத்தின் இறுதியில் இடம் பெற்றிருக்கும் ஒரு குட்டிக் கதையை படிப்போம்.

மகாபாரதத்தில், அபிமன்யுவின் மகன் பரீக்ஷித். ஒரு சமயம் முனிவர் ஒருவருக்கு செய்த தவறுக்காக சபிக்கப்பட்டான். ‘தட்சகன் என்ற பாம்பினால் தீண்டப்பட்டு ஏழு இரவுகளுக்குள் இறப்பான்', என்பதுதான் அந்த சாபம்.

சாபத்திலிருந்து தப்பிக்க ஒற்றைத் தூணின் மீது ஒரு மாளிகை கட்டினான். அதில் ஏழு நாட்கள் வசிக்க தீர்மானித்தான். காவலாளிகள், வைத்தியர்கள், மூலிகை மருத்துவர்கள், மந்திர சாஸ்திரங்கள் அறிந்த பண்டிதர்கள் ஆகியோரையும் தன்னுடன் தங்க வைத்தான். ஆறு தினங்கள் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை.

அந்த நாட்டில் காசியபர் என்ற பெரிய பண்டிதர் இருந்தார். அவருக்கு, அரசனுக்கு ஏற்படப் போகும் ஆபத்து தெரியவந்தது. அவர் எப்படிப்பட்ட பாம்பு விஷத்தையும் தனது மந்திர சக்தியால் இறக்கிவிடும் ஆற்றல் கொண்டவர். அரசனை காப்பாற்றினால் பரிசுகள் கிடைக்கும், வளமாக வாழலாம் என்ற எண்ணத்தில் அரசனுடைய மாளிகையை நோக்கி வந்தார். அப்போது அரசனை கடிக்க வேண்டிய தட்சகன் மனித உருவில் எதிரில் வந்தான்.

‘ஐயா! இவ்வளவு வேகமாக எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டான் தட்சகன்.

‘பரீக்ஷித் மஹாராஜனை, தட்சகன் கடிக்கப் போகிறான். அந்த விஷத்திலிருந்து அவரை காப்பாற்றவே செல்கிறேன்', என்றார் காசியபர்.

‘நான் தான் அந்த தட்சகன். என் விஷம் அரசனை பொசுக்கப்போகிறது. உன்னால் கடிபட்டவனை பிழைக்க வைக்க முடியாது. ஆகையால், நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்', என்று கூறினான் தட்சகன்.

‘என்னால் முடியும்! விஷமுறிவு சிகிச்சையில் என் வல்லமை அப்படிப்பட்டது', என்று நம்பிக்கையோடு சொன்னார் காசியபர்.

‘அப்படியா! அதையும் சோதித்துப் பார்த்துவிடுவோம்', என்று கூறிய தட்சகன் அருகில் இருந்த பெரிய ஆலமரத்தை காட்டினான். ‘இந்த மரத்தில் என் விஷத்தை ஏற்றுகிறேன். நீங்கள் அதை பிழைக்கச் செய்யுங்கள் பார்க்கலாம்', என்றவாறு ஆலமரத்தை கடித்தான் தட்சகன். அடுத்த நொடி, மரம் முழுவதும் விஷம் பரவி சாம்பலானது.

‘எங்கே உன் திறமையை காட்டு‘ என்று கர்வத்தோடு சொன்னான் தட்சகன்.

காசியபர் மரத்தின் சாம்பலை எடுத்தார். சில மந்திரங்களை ஓதினார். அடுத்த நொடி சாம்பலிலிருந்து மரம் மீண்டும் உண்டானது.

அதிர்ந்து போனான் தட்சகன்.

‘காசியபரே! உமது மந்திரம் மகத்தானது. ஆனால், பரீக்ஷித்தின் ஆயுட்காலம் முடியப் போகிறது. அதனால், உங்களது முயற்சி பலனளிக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. ஆகையால், உமக்கு வேண்டிய சன்மானத்தை நான் தருகிறேன். பெற்றுக் கொண்டு திரும்பிச் சென்றுவிடுங்கள்', என்றான் தட்சகன்.

‘அரசனிடம் செல்வம் கேட்டுப் பெறவே வந்தேன். அந்த செல்வத்தை நீயே கொடுப்பதால் அரசனை சந்திக்காமல் திரும்புகிறேன்', என்றவாறு அரசனை சந்திக்காமல் தட்சகன் கொடுத்த செல்வங்களோடு வந்த வழியே திரும்பினார் காசியபர்.

இது நடந்தது துவபார யுகத்தின் கடைசி நாட்களில். கலியுகத்தின் தொடக்க காலம். காசியபர் பெற்றது கலியுகத்தில் பெறப்பட்ட முதல் லஞ்சம் என்றுகூட சொல்லலாம். அரசனை காப்பாற்ற வேண்டியது குடிமக்களின் கடமை. அந்த கடமையைச் செய்து, அதனால் அரசனிடமிருந்து வெகுமதியை பெற்றிருந்தால், அது பரிசு. கடமையைச் செய்யாமல் இருப்பதற்காக ஆதாயம் பெற்றால் அது லஞ்சம். கடமையைச் செய்ய ஆதாயம் பெற்றாலும், கடமையை செய்யாமலிருக்க ஆதாயம் பெற்றாலும் தவறு. இந்த தவறு கலியுகத்தின் வெறியாட்டத்தில் மேலும் மோசமடைந்து, யாராவது ஒருவர் நேர்மையாளராக இருந்தால், அவரை முட்டாள், டம்மி பீஸ் என்று கிரீடம் சூட்டுமளவுக்கு சென்றிருக்கிறது.
 

இந்தக் கதை நமக்கு சொல்லும் விஷயம், ‘கடமையை செய்யாமல் இருப்பதற்கு ஆதாயம் பெறுவது திடீரென்று இன்று முளைத்த பழக்கமல்ல', என்பதுதான். இது தவறை நியாயப்படுத்த செய்யும் முயற்சியல்ல. காசியபர் ஒருவேளை தேவையான அளவுக்கு வசதி படைத்தவராக இருந்திருந்தால், தட்சகனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கும். அரசன் காப்பாற்றப்பட்டிருப்பான். கடுமையாக உழைப்பது சம்பளத்துக்காகத்தான். நான் உழைப்பைக் கொடுக்கிறேன், நீ சம்பளத்தை கொடு', என்பதுதான் இயற்கை நீதி. உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லையென்றால், அந்த இடத்தில் தவறுகள் நுழையும் வாய்ப்பு அதிகம். அப்படிப்பட்ட வாய்ப்பு தமிழக காவல்துறையில் நுழைந்திருப்பதை பார்க்க முடிகிறது. நம்மைச் சுற்றியுள்ள பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழக காவல்துறையின் சம்பளவிகிதம் மிகக் குறைவு. அதைப் பற்றிய விவரங்களை பார்ப்போம்.

காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) - ஆந்திரா ரூ.40,270 - ரூ.93,780, கர்நாடகா ரூ.28,100 - ரூ.50,100, கேரளா ரூ.45,800 - ரூ.89,000. தமிழகம் ரூ.15,600 - ரூ.39,100.

ஆய்வாளர் - ஆந்திரா ரூ.35,120 - ரூ.87,130, - கர்நாடகா ரூ.21,600 - ரூ.40,050, கேரளா ரூ.39,500 - ரூ.83,000. தமிழகம் ரூ.9,300 - 34,800.

துணை ஆய்வாளர் - ஆந்திரா ரூ.28,940 - ரூ.7,8910, - கர்நாடகா ரூ.20,000 - ரூ.36,300, கேரளா ரூ.32,300 - ரூ.68,700. தமிழகம் ரூ.9,300 - ரூ.34,800.

தலமைக் காவலர் - ஆந்திரா ரூ.21,230 - ரூ.63,010, - கர்நாடகா ரூ.12,250 - ரூ.24,000, கேரளா ரூ.27,800 - ரூ.59,400. தமிழகம் ரூ.5,200 - ரூ.20,200.

புதிதாக உதித்த தெலுங்கானாவிலும் தமிழகத்தைவிட மிக அதிகமாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

பெரும் சம்பளத்திற்கும், நேர்மைக்கும் எந்த சம்பந்தமில்லை என்று வசனங்கள் பேசலாம். ஆனால், குறைந்த சம்பளம் தவறு செய்யத் தூண்டுகிறது என்பது மறுக்க முடியாது.

உதாரணமாக, சென்னையில் பணியில் இருக்கும் சாதாரண காவலரின் வீட்டு வாடகைப் படி ரூ. 840/- இந்த பணத்தில் சென்னையில் நல்ல வீடு எப்படி கிடைக்கும்?

காவல் துறையின் மீது அதிகமாக சுமத்தும் அடுத்த குற்றச்சாட்டு ‘அத்துமீறுகிறது' என்பதுதான். இரண்டு நாட்களுக்கு முன் ஒருவரை காவலர்கள் சூழ்ந்து கொண்டு தாக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் காவலர் உதைத்து ஒரு பெண் உயிரிழந்தார் என்ற குற்றசாட்டும் பரபரப்பாக பேசப்பட்டது. தவறை யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தவறை செய்யும் மனநிலை காவலர்களுக்கு ஏற்பட காரணம் என்ன என்பதையும் ஆராய வேண்டும்.

ஒருவருடைய மனநிலை சீராக இருக்கும் போது மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு ஓய்வு அவசியம். காவலர்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுகிறார்களா? நிச்சயமாக இல்லை. காவலர்கள் எட்டு மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற வேண்டாம் என்று சட்ட ஏட்டில் மட்டுமே இருக்கிறது. பெரும்பாலானவர்கள் கிட்டத்தட்ட இருபது மணி நேரத்திற்கு மேல் பணியாற்றுவதை பார்க்க முடிகிறது. இரவு எத்தனை மணிக்கு வீட்டுக்கு சென்றாலும், காலை ஏழு மணிக்கு காவல் நிலையத்துக்கு ரோல்காலுக்கு சென்றுவிட வேண்டும்.

குடும்பத்தோடு தினமும் தொலைக்காட்சி சீரியல் பார்க்கும் பாக்கியம் எத்தனை காவலர்களுக்கு கிடைக்கிறது? குடும்பத்தோடு பத்து நாட்கள் லீவில் ஊட்டி, கொடைக்கானல் என்று செல்ல முடியுமா? எந்த நேரமும், திருட்டு, கொலை, கொள்ளை, ஊர்வலம், கலவரம் என்று போராட்டங்களுக்கிடையே வாழும் போது கோபமும், வெறுப்பும் அவர்களது அடிப்படை குணமாகவே மாறுகிறது. வீட்டு விசேஷங்கள் மற்றும் பண்டிகைக்கு கூட குடும்பத்துடன் சேர்ந்திருக்க முடியாத நிலையில்தான் இன்றைய காவல்துறை இருக்கிறது.

காவல் துறையில் 19,000 காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் போது, அந்த பணியையும் சேர்த்து தற்போது பணியில் இருக்கும் காவலர்களே செய்தாக வேண்டும். கடந்த மார்ச் மாதத்தில் அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சதீஸ்குமார் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சில நாட்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் காவலர் அருண்ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கெல்லாம் காரணம் வேலைப் பளு, மன அழுத்தம்.

‘ஏன் சார்! உங்க டிபார்ட்மெண்டைப் பற்றி இவ்வளவு விமர்சனங்கள் வருகிறதே! இதைச் சரி செய்ய முடியாதா?' என்று ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். நாங்கள் கடமையை மிகச் சரியாக செய்கிறோம். செய்ய விரும்புகிறோம். ஆனால், எங்களை சுதந்திரமாக பணி செய்ய விடுவதில்லை. எங்கள் பணியில் யாரும் தலையிட முடியாது என்ற ஒரு நிலை வந்தால், நிச்சயமாக தமிழக காவல்துறைதான் உலகின் மிகச் சிறந்த காவல் துறையாக இருக்கும்', என்றார் அந்த ஓய்வு பெற்ற அதிகாரி. தவறு செய்தவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சில நிமிடங்களிலேயே வண்டு முருகன் வந்து நிற்கும்போது என்ன செய்ய முடியும்?

எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் சரி, கலவரமாக இருந்தாலும் சரி, பிரச்னை முடியும்போது காவலர்கள் மீது பழியைச் சொல்லி பிரச்னை முடித்து வைக்கப்படுவதை பார்க்கிறோம். ஒரு எதிர்கட்சி, ‘போலீஸ் அராஜகம் ஒழிக', என்று கோஷமிடுகிறது. ஆளுங்கட்சி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று எதிர்கட்சி ஆளுங்கட்சியாக மாறுகிறது. நேற்றைய ஆளுங்கட்சி தற்போது, ‘போலீஸ் அராஜகம் ஒழிக', என்று கோஷமிடுகிறது. காவல் துறையை எப்படி வேண்டுமானாலும் சாடலாம், நக்கல், நையாண்டி செய்யலாம். அவர்கள் பதில் சொல்ல முடியாது. அவர்களுக்கென்று தொழிற்சங்கம் கிடையாது. காவல்துறைக்கு எதிராக யாராவது ஒரு கருத்தை சோஷியல் மீடியாக்களில் பதிவு செய்தால், அதற்கு மறுப்பு தெரிவிக்கவோ, ஆமோதிக்கவோ காவல்துறைக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இதுவே இன்றைய வாட்ஸ் ஆப் வீடியோ உலவுவதற்கு முக்கிய காரணம்.

“தமிழக காவலர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் தமிழகத்தின் நிலை என்னவாகும்? இருபத்தி நான்கு மணி நேர வேலை, வருடத்தின் 365 நாட்களும் வேலை செய்யும் காவல் துறைக்கு ஓய்வு அவசியம். வேலை பளுவினால், மன அழுத்தத்தினாலும் அவர்கள் வேலையை உதறுகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள்', என்று நீதியரசர் கிருபாகரன் சமீபத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

கழுத்தளவு தண்ணீரில் நிற்கும் போது கால் கட்டை விரல் நுனியில் நிற்கலாம். தண்ணீரே இல்லாத நிலையிலும் அப்படி நில்லுங்கள் என்று சொல்வது சரியல்ல. அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைய காவல்துறை இருக்கிறது. நல்ல சம்பளம், நல்ல பணியாற்றும் சூழல், நசுக்கப்படும்போது குரல் எழுப்பும் உரிமை, சுதந்திரமாக செயல்படும் உரிமை ஆகியவை காவல்துறைக்கு கொடுக்கப்படுமானால், அப்பழுக்கில்லாத துறையை உருவாக்க முடியும். பிறகென்ன, “ காவல்துறை உங்கள் நண்பர்தான்”.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com