கனவு இன்னும் கனவாகவே நீடிக்கின்ற சோகத்திலும் முடங்கிக் கிடக்கும் இவர்களை மீட்டெடுப்பது எப்படி?

தொன்றுதொட்ட காலம் முதலே அடிமை வர்த்தகமும், கொத்தடிமைத் தொழில்முறையும் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.
கனவு இன்னும் கனவாகவே நீடிக்கின்ற சோகத்திலும் முடங்கிக் கிடக்கும் இவர்களை மீட்டெடுப்பது எப்படி?

மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டாலும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலம், இன்னும் வழங்கப்படாத சோகம் தொடர்கிறது!

தொன்றுதொட்ட காலம் முதலே அடிமை வர்த்தகமும், கொத்தடிமைத் தொழில்முறையும் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன. அதிகாரமும், வசதியும் கொண்ட நபர்கள் சிறுபான்மையினர் மீதும் வசதியற்ற விளிம்புநிலை மக்கள் மீதும், கட்டுப்பாட்டையும், அதிகாரத்தையும் கொண்டிருந்தனர். இந்த நவீன யுகத்தில் அடிமைத்தனம் என்பது, தங்களது சொந்த வாழ்விடங்களையும், பரிச்சயப்பட்ட சூழல்களையும், சொந்த பந்தங்களையும் மற்றும் குடும்பத்தையும் கூட விட்டு விலகி  வேறிடத்திற்கு குடிபெயருமாறு நிர்ப்பந்தித்து வருகிறது. பேரழிவுகளின் காரணமாகவும் கூட தங்களது சொந்த ஊர்களிலிருந்து வாழ்வாதாரம் தேடி வேறு இடத்திற்கு மக்கள் இடம்பெயரும் கண்ணீர்க்கதையும் தொடர்கிறது.

இஸ்ரேல் மக்கள் எகிப்து நாட்டில் அடிமைத்தனத்தில் சிக்கி சீரழிந்தபோது, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களாக அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த பூமியில் மக்கள் கூட்டமாக முதன்முறையாக வேறிடத்திற்கு இடம்பெயர்ந்ததிலிருந்து மிக சமீபத்திய புலம்பெயர்வு வரை, புலம்பெயரும் செயல்பாட்டுக்கான காரணங்களையும் மற்றும் அதன் விளைவுகளையும் காட்டுகின்றன. சமீபத்திய புலம்பெயர்வு நிகழ்வுகள், மாற்றுவழி வாழ்வாதாரம், சார்ந்திருக்கும் பொருளாதாரம், ஒடுக்குமுறை, விளிம்பு நிலைக்கு தள்ளுதல் மற்றும் சமூக அநீதி செயல்பாடுகள் போன்ற பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய காரணிகளுக்கு வழிவகுக்கிறது. இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகின்ற சமூகமாக தமிழ்நாட்டின் இருளர் பழங்குடி சமூகம் இருந்துவருகிறது. குறிப்பாக பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய பழங்குடி குழுக்கள் (PVTGs) இச்சமூகத்தினர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய சூழலில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பது மிகப் பொதுவான, பரவலாக காணப்படும் விஷயமாகும். லட்சக்கணக்கான நபர்கள் கொத்தடிமைத் தொழிலாளர்களாக வாழ்க்கையை நடத்தி வரும்போது, வேண்டுமென்றே, நன்கு அறிந்தே நடத்தப்படும் இந்த குற்றச் செயலை எதிர்த்துப்போராடுவது என்பதே அரசு மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் பொறுப்பாக இருக்கிறது. இந்த சிக்கலான வலைக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கவும், விடுவிக்கவும் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வளிக்கவும் வேண்டுமென்ற குறிக்கோளோடு கொத்தடிமைத்தொழில்முறை (ஒழிப்பு) சட்டம் 1976 (BLA 1976)-ஐ இந்திய அரசு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து, விடுவிக்கப்படும் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் சலுகைகளை திருத்தியமைக்கவும் மற்றும் மேம்படுத்தவும் மத்தியத்துறை உதவித்திட்டம் (CSS) என்பதும் அறிமுகம் செய்யப்பட்டது. கொத்தடிமை முறையிலிருந்து விடுவிக்கப்படும் நேரத்தில் அத்தொழிலாளர்கள் எதிர்கொள்கிற உடல் மற்றும் மனரீதியிலான அழுத்தங்களும், பிரச்னைகளும் மற்றும் சமூக இடைவெளிகளும் சொல்லொண்ணாத் துயரம் விளைவிக்கும் சோக அனுபவமாக, சிரமமான சவாலாக இருக்கிறது.

விடுவிக்கப்படும் ஒவ்வொரு தொழிலாளரையும் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் குறைவான சுயமதிப்பு, பெற்ற அடி உதைகளின் ஆறாத தழும்புகள், ஓய்வே இல்லாத கடுமையான வேலையின் பாதிப்புகள், எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதென்ற அச்சம் மற்றும் கடுமையான மனஅழுத்தம் ஆகியவை சூழ்ந்து கொள்கின்றன. எந்தவொரு பேரிடர் மேலாண்மைத் திட்டத்திலும், மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு (Rescue, Relief & Rehabilitation) என்ற 3 அம்சங்கள் முதன்மையானவை.

கொத்தடிமைத் தொழிலாளர்களை அடையாளம் காண்பதும், கொத்தடிமை முறையிலிருந்து அவர்களை விடுதலை செய்ய சட்டத்தை அமல்படுத்துவதும் மற்றும் இக்குற்றத்தை துணிந்து செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெறச் செய்வதும் மீட்பு மற்றும் விடுதலை செயல்பாட்டில் இடம்பெறும் அம்சங்களாகும். 1976-ம் ஆண்டின் கொத்தடிமைத் தொழில்முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் மீட்புக்குப் பிறகு விடுவிப்பு நிகழ்கிறது. விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத்தொழிலாளர்கள், அரசு அதிகாரிகளிடமிருந்து ஒரு விடுதலை சான்றிதழை பெறுகின்றனர்; இந்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியதவியைக் கொண்டு ஒரு புதிய வாழ்க்கையை தாங்களே தொடங்கவும் மற்றும் ஒரு புதிய இல்லத்தை கட்டமைக்க வகை செய்யும். சலுகைகளையும் பெறுகின்றனர். இதுவரை விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த கிராமத்தில் அல்லது நில உரிமை ஆவணத்தோடு அல்லது ஆவணமில்லாத கிடைக்கக்கூடிய இடத்தில் ஆர்டிஓ துணை ஆட்சியரால் ஒதுக்கீடு செய்யப்படுகிற வீட்டு மனை வழங்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, வெகு சிலரைத் தவிர்த்து, விடுவிக்கப்பட்ட பெரும்பாலான கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த பெயரில் நில உரிமை ஆவணத்தோடு நிலம் கிடைக்கப் பெறுவதில்லை.

காணாமல் போனவை The Missing ‘R’

ஒரு பேரிடரில் மீட்பை தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படுகிறது. விடுவிக்கப்பட்ட ஒரு கொத்தடிமைத் தொழிலாளருக்கு, பல ஆண்டுகளாக குற்றமிழைத்த நபரோடு அவரது கட்டுப்பாட்டின் கீழ் வசித்த பிறகு அந்த இடத்தை விட்டு வெளியே வருவதே விடுதலை. புதிதாக கிடைத்திருக்கிற இந்த விடுதலையும், சுதந்திரமும் பழைய வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதோடு, வெளி உலகில் ஒரு புதிய வாழ்க்கையும், ஒரு புதிய தொடக்கமும் ஆரம்பமாவதையும் குறிக்கிறது. ஒரு அடிமையாக பல ஆண்டுகளைக் கழித்த பிறகு உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் சவால்களை எதிர்கொள்ளும் மனஉறுதியையும், தைரியத்தையும் அவர்கள் கொண்டிருப்பது முக்கியமாகும். ஆனால், விடுவிக்கப்பட்டதற்கு அடுத்த நாளிலிருந்தே ஒரு புதிய சூழலில் இந்த புதிய வாழ்க்கையை தொடங்குமாறு விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களை கேட்டுக் கொள்வதென்பது, துரதிர்ஷ்டவசமானது.

ஒரு புதிய போராட்டமும், புதிய வாழ்க்கை முறையும் ஒரு புதிய பயணத்தை விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடங்குவதற்கு மிகச் சிரமமானது என்பதே யதார்த்தமான உண்மையாகும். விடுவிப்பிலிருந்து மறுவாழ்வுக்கான செயல்முறையை மிக கவனமாக சீராய்வு செய்வது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகும். நிவாரண காலம் என்பதே இங்கு தவறவிடப்பட்டிருக்கிற ‘R’ என்பதாக இருக்கிறது.

விடுவிப்புக்கு பிறகு கொத்தடிமைத் தொழிலாளர்கள் தங்குவதற்கு நிவாரண முகாம் இருக்க வேண்டுமென்பதை அரசும் மற்றும் சமூகத் தொண்டு நிறுவனங்களும் புரிந்து கொள்வது முக்கியமாகும். இத்தொழிலாளர்கள் சமூக ரீதியாகவும் மனநல ரீதியாகவும் புதிய சூழலையும், சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்வதற்கு இது உதவும். தற்போது, ‘விடுதலைப் பயிற்சி’ என்ற ஒரு நல்ல தொடக்க நிலை செயல்திட்டத்தை சில தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. இதனை நிவாரண காலத்தோடு சேர்த்து ஒருங்கிணைப்பது சிறப்பானதாக இருக்கும். நிவாரண முகாமில் இத்தொழிலாளர்கள் தங்கியிருக்கும்போதே அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சட்டரீதியிலான உரிமைகளையும், சலுகைகளையும் விண்ணப்பிப்பதற்கு இது வகை செய்யும். கொத்தடிமையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு சில அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு எளிய வசிப்பிட வசதி அவர்களுக்கு வழங்கப்படுவது அத்தியாவசியமாகும்.

இந்த பரிந்துரை செயல்படுத்தப்படாவிடில், அவர்கள் பெற்ற விடுதலையானது, வாழ்வாதாரத்துக்கான ஒரு கடுமையான போராட்டமாக மாறிவிடக்கூடும். பிறரை சார்ந்து வாழ்ந்த மனநிலையிலிருந்து, சுயமாக செயல்படுகிற சுதந்திர நிலைக்கு மாறுவதென்பது, ஒரு தலைகீழ் மாற்றமாகும். இதற்கு சரியான திட்டமிடலும், தயாரிப்பும் அவசியம். இந்த நிவாரண காலம் என்பதே விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளருக்கு கிடைக்கப்பெறாத ‘R’ என்பதாக இருக்கிறது.

வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலம்

மீட்பு மற்றும் விடுவிப்பு செய்முறைக்கு பிறகு வருவது மறுவாழ்வு. விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளருக்கு இது ஒரு எளிதான காரியமல்ல. விடுவிக்கப்பட்ட பிறகு சிலர் அவர்களது சொந்த கிராமங்களுக்கு திரும்ப செல்கின்றனர். ஆனால் வேறு சிலரோ பல தலைமுறைகளாக கொத்தடிமைத் தொழிலாளர்களாகவே வாழ்ந்து விட்டதால், சொந்த கிராமம்; என்று எதுவும் அவர்களுக்கு இருப்பதில்லை. 2016-ம் ஆண்டின் மத்தியத் துறை உதவித் திட்டத்தின்படி, குடியிருப்பு மனைக்கான பட்டாவும், நிதியுதவியும் அவர்களுக்கு கட்டாயமாக தரப்பட வேண்டும். அநேக நேரங்களில் அவர்களது புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு, ஏதாவது ஒரு இடத்தில் அவர்களுக்கு வீட்டுமனை காட்டப்படுகிறது. இந்நாட்டின் ஒரு சம உரிமையுள்ள குடிமகனாக, அச்சுறுத்தல் எதுவுமின்றி புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு அவர்களது சொந்த பெயரிலேயே நிலம் அவர்களுக்கு கிடைப்பது முக்கியமானதல்லவா?

விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளரது சங்கத்தின்படி (RBLA), தமிழ்நாட்டில் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய குழுவாக இருப்பது, இருளர் என்றழைக்கப்படும் ஒரு பழங்குடி சமூகமாகும். குறிப்பாக, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பழங்குடி குழுக்கள் என (PVTGs) இந்த சமூகம் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சமூக பிரிவினர் பொதுவாகவே கிராமங்களில் அந்நியப்படுத்தப்பட்டிருப்பதால், ஏரிகள் அல்லது பிற நீர்நிலைகளுக்கு அருகே தனியாகவே வசிக்கின்றனர். பல நேரங்களில், தங்களது இந்திய குடிமகன்களுக்கான உரிமைகளை கோரி பெறுவதற்கு எந்தவொரு சட்டரீதியான உரிமை ஆவணம் எதுவுமில்லாமலேயே தங்களது வாழ்நாள் முழுவதையுமே இவர்கள் கழித்துவிடுகின்றனர். சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைத் தகுதிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு, அடிப்படை தேவையாக குடியிருப்பு மற்றும் கதவு எண் இருக்கிறது. எனவே, கொத்தடிமைத் தொழிலாளர்களை கொத்தடிமையிலிருந்து விடுவிப்பதோடு, நின்றுவிடாமல், அவர்கள் வாழ்வதற்கான இடம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்வது முக்கியமானது.

ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் எஸ்சிஃஎஸ்டி பிரிவினரக்காக இத்தகைய நிலங்கள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரிவினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சில நிலங்கள் கிராமங்களில் பிறரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அல்லது தவறாக நிர்வகிக்கப்பட்டதாக இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் பிற சமூகத்தினரோடு, ஒருங்கிணைக்கப்பட வேண்டும். மத்தியத்துறை உதவித்திட்டம் (2016-ல்) பணிக்கப்பட்டவாறு அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலம் / வீட்டுமனை தரப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களில் அநேகர், தாங்கள் பெற்ற சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க இயலாமல், உயிர் பிழைப்புக்காக தினசரி போராடுகின்ற நிலையிலும், தங்களது கனவு இன்னும் கனவாகவே நீடிக்கின்ற சோகத்திலும் முடங்கிக் கிடக்கின்றனர்.

சுற்றி வாழ்கின்ற பிற சமூகத்தினரால் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு, அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வாழ்கின்ற விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கப்படவில்லை என்றால் வாழ்வாதாரமே ஒரு கடும் போராட்டமாக இருக்கும். இருளர் சமூகத்தின் பழங்குடியினர் மரபு மதிக்கப்படுவதும்; முக்கியமாகும். பண்டைக்காலத்தில் இந்த பழங்குடியினருக்கு அவர்களுக்கே சொந்தமான பாரம்பரிய நிலங்கள் இருந்தன. வாழ்வாதாரத்தை தேடி செல்கின்ற பாதி நாடோடி சமூகத்தினராகவும் அவர்கள் இருந்திருக்கின்றனர். இந்த பாரம்பரிய நிலமானது, அவர்களுக்கு மிக புனிதமானது; எனவே, வீட்டுமனைக்கான பட்டாவுடன், இவர்களுக்கு நிலம் வழங்கப்படுவதை உறுதி செய்வது அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் முக்கியமானதே. மீட்பு மற்றும் விடுதலைக்கு பிறகு எப்படியோ தட்டுத் தடுமாறி உயிர் பிழைப்பது மட்டும் போதுமானதல்ல; மனித மாண்புடன் அவர்கள் வாழ்வதும், ‘வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்துடன்’ தங்களது கனவை நிஜமாக்குவதும் முக்கியமானது.

- டாக்டர். B. பிரின்ஸ் சாலமோன் M.A.(SW) Ph.D
உதவி பேராசிரியர், சமூகப்பணித் துறை, மெட்ராஸ் கிறித்தவக் கல்லூரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com