இது அக்னிப் பரீட்சை: ஆட்சிக்கு தகுந்தார்போல காட்சியை மாற்றுகிறதா சிபிஐ?

சமீபகாலமாக நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் எதிர்காலத்தின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
இது அக்னிப் பரீட்சை: ஆட்சிக்கு தகுந்தார்போல காட்சியை மாற்றுகிறதா சிபிஐ?

சமீபகாலமாக நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் எதிர்காலத்தின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் ஏர்செல்-மேக்சிஸ் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தற்போது எழுந்துள்ள ஒரு பிரச்னை. சிபிஐயின் நம்பகத்தன்மைக்கு விடப்பட்ட சவால்.

ஜனவரி 13ம் தேதி மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் டெல்லி வீட்டில் அமலாக்கத்துறை சோதனையிட்டது. அதில் ஏர்செல் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்டில் சிபிஐ 2013ம் ஆண்டு தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கையின் ஒரு பகுதி கைப்பற்றப்பட்டதாகவும், அது சிபிஐ தயாரித்த வரைவு விசாரணை அறிக்கையின் ஒரு பகுதி என்றும் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ரகசிய ஆவணமாக கருதப்பட்ட ஒன்று பிரச்னையில் சம்பந்தப்பட்டவரின் வீட்டில் கைப்பற்றப்பட்டது என்ற செய்தி பெரிய அதிர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயத்தை தொடர்ந்து படிக்கும் முன், மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் மாண்டவ்ய ரிஷியின் கதையை படிப்போம்.

மாண்டவ்யர் என்ற ரிஷி இருந்தார். தன்னுடைய ஆசிரம வாசலில் மெளன விரதத்துடன் கூடிய தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது திருடர்கள் சிலரை காவலர்கள் துரத்திக்கொண்டு வந்தனர். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களோடு மாண்டவ்ய ரிஷியின் ஆசிரமத்தில் ஒளிந்து கொண்டனர். துரத்தி வந்த காவலர்கள் மாண்டவ்ய ரிஷியிடம் திருடர்களைப் பற்றி விசாரித்தனர். மாண்டவ்யர் தவத்தில் இருந்ததால் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து காவலர்கள் ஆசிரமத்தை சோதனையிட்டனர். அங்கு ஒளிந்திருந்த திருடர்களையும், அவர்கள் கொள்ளையடித்த பொருட்களையும் கைப்பற்றினர். அவர்களை அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர். அப்படியே, வாசலில் அமர்ந்திருந்த மாண்டவ்யரையும் உடன் இழுத்துச் சென்றனர்.

திருடர்கள் கைது செய்யப்பட்ட விஷயம் உடனடியாக அரசனிடம் தெரிவிக்கப்பட்டது. எதையும் யோசிக்காமல் பிடிபட்டவர்களை கழுவில் ஏற்றும்படி உத்திரவிட்டான் அரசன். திருடர்களோடு சேர்த்து மாண்டவ்ய ரிஷியும் கழுவில் ஏற்றப்பட்டார்.

அடுத்த நாள் பொழுது விடிந்தது. திருடர்கள் அனைவரும் இறந்து போனார்கள். ஆனால், மாண்டவ்ய ரிஷி உயிருடன் கழுவில் தொங்கிக்கொண்டிருந்தார். பயந்து போன காவலர்கள் விஷயத்தை அரசனிடம் தெரிவித்தனர். ‘தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்த அரசன் மாண்டவ்ய ரிஷியிடம் ஓடோடி வந்தான்.

‘கழுவில் ஏற்றிய பிறகும் மெளனத்தை அனுஷ்டித்துக் கொண்டு தவத்திலேயே ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு பெரிய அநீதி இழைத்துவிட்டேன். தெரியாமல் செய்த தவறுக்கு வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்', என்று வேண்டினான் அரசன்.

மாண்டவ்யர் அரசனிடம் கோபித்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அரசன் ஒரு கருவி. அவனை நொந்துகொள்வதில் பயனில்லை', என்று நினைத்தார். உடனடியாக தர்ம தேவதையை அழைத்தார்.

‘தர்ம தேவதையே! இப்படி ஒரு தண்டனையை அனுபவிக்கும் வகையில் நான் என்ன தீங்கு செய்தேன் என்பதை அறிய விரும்புகிறேன்', என்று கேட்டார் மாண்டவ்யர்.

தர்ம தேவதை பதிலளித்தாள்.

‘தவத்தில் சிறந்தவரே! தட்டான் பூச்சியின் மீது முள்ளைக் குத்தி அவற்றை துன்புறுத்தியதால், அதன் பலனை நீங்கள் அனுபவிக்க நேரிட்டது. ஒருவன் கொஞ்சமாக தானம் செய்தாலும், அதன் பலன் அவனுக்குப் பல மடங்காகப் பெருகும். அதே போல், சிறிய பாவத்தைச் செய்தாலும், அது பெரும் துன்பத்தை கொடுக்கும். இது தர்மத்தின் விதி', என்று கூறினாள்.

‘நான் எப்போது இந்த பாவத்தை செய்தேன்?' என்று கேட்டார் மாண்டவ்யர்.

‘நீங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்த போது செய்தீர்கள்', என்றாள் தர்ம தேவதை.

‘எது தர்மம், எது அதர்மம் என்று அறியாத குழந்தைப் பருவத்தில் செய்த தவறுக்கு நீ கொடுத்த தண்டனை மிகவும் கொடியது. அறியாத குற்றத்திற்குத் தகாத தண்டனையை விதித்ததால், நீ தர்மம் தவறிவிட்டாய். ஆகையால், நீ பூமியில் மனிதனாகப் பிறக்கக் கடவாய்', என்று சாபமிட்டார் மாண்டவ்யர்.

சாபத்தின் பலனாய், திருதிராஷ்டிரனின் தம்பி ‘விதுரராக' அவதரித்தாள் தர்ம தேவதை.

‘செய்த வினையின் பயனை ஒருவன் அனுபவிப்பதற்கு, இன்று முதல் நான் ஒரு விதியை ஏற்படுத்துகிறேன். பதினான்கு வயது அடையும் வரையில் ஒருவன் செய்கிற பாவம் அவனைச் சாராது. அந்த வயதைக் கடந்தவர்கள் செய்யும் பாவம்தான், அதற்கான விளைவுகளைக் கொடுக்கும். இது நான் உலகில் கொண்டு வருகிற விதி', என்று ஒரு புதிய விதியை ஏற்படுத்தினார்.

உலகத்திற்கே ஒரு புதிய விதியை ஏற்படுத்தும் ஞானமும், தவ பலமும் கொண்ட ஒருவரால் தண்டனையிலிருந்து தப்ப முடியவில்லை. செய்தது தவறாக இருந்தால், அது தர்ம தேவதையாக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை இந்த நிகழ்வு நமக்கு புரிய வைக்கிறது. அதுமட்டுமல்ல, தண்டனை என்பது அதிகாரத்தைப் பொறுத்தோ, தண்டிக்கப்பட வேண்டியவரின் ஞானத்தைப் பொறுத்தோ மாறுவதில்லை. ஆனால், இன்று இந்த நிலையிலா நம் நாடு இருக்கிறது?

இந்தக் கதையில் வரும் காவலர்கள் செய்த தவறு தர்ம தேவதைக்கே தண்டனை பெற்றுத் தந்தது. அதுமட்டுமல்ல எந்த தவறும் செய்யாத மாண்டவ்ய ரிஷிக்கும் தண்டனை பெற்றுத்தந்தது. அதாவது, எந்த குற்றமாக இருந்தாலும், அதை முதலில் அணுகுபவர்கள் காவலர்கள். காவலர்கள் என்பவர்கள் தவறுக்கு உருவம் கொடுத்து, பிறகு அதற்கு உயிர் கொடுக்கும் பிரம்மாக்கள். ஒரு காவலர் செய்யும் தவறு ஒரு வழக்கின் போக்கை திசை திருப்பிவிடும் சக்தி படைத்தது.

சிபிஐ என்பது உயர்ந்தபட்ச விசாரணை ஆணையம். எந்த சிக்கல்களையும் உடைத்து உண்மையை கண்டறியும் ஆற்றலும், கடந்த கால வரலாறும் அதற்கு உண்டு. இன்று நாம் காணும் பத்திரிக்கை செய்திகள் அதன் நம்பகத் தன்மையை அசைத்துப் பார்க்கிறது. இந்த செய்திகள் பொய்யாக இருக்குமானால் நாம் மட்டுமல்ல நீதியின் மீதும் நியாயத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள்.

அதே நேரத்தில் பத்திரிக்கை செய்தி உண்மையாக இருக்குமானால், நம் நாட்டின் எதிர்காலம் கவலைக்குறியதுதான். நீதியிலும், நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட நாம் பின்வரும் சில கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பெண் சம்பந்தப்பட்ட குற்றத்தில் தமிழக காவல்துறையினர் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால், வழக்கை தமிழக போலிஸ் விசாரிப்பது சரியாக இருக்காது என்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிஐ தவறு செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை சிபிஐயே விசாரிப்பது சரியாக இருக்குமா?

எதற்கெடுத்தாலும் எங்களுக்கு தமிழ் நாட்டு காவல்துறை மீது நம்பிக்கையில்லை, சிபிஐ விசாரணை வேண்டும்', என்று கேட்கும் நம்ம ஊர் தலைவர்கள் இனி என்ன சொல்லப்போகிறார்கள்?

சிபிஐ தரம்புரண்டது இதுதான் முதல்முறையா? இந்த சந்தேகம் எல்லோர் மனத்திலும் இருக்கிறது. மக்கள் மனத்தில் நம்பிக்கையை விதைக்க அரசு என்ன செய்யப்போகிறது?

கொள்கைகளிலும், அரசியல் சிந்தனைகளிலும் வேறுபட்டு நிற்கும் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் போல சிபிஐ-யும் பிரிந்து நிற்கிறதா? ஆட்சிக்கு தகுந்தார்போல காட்சியை மாற்றுகிறதா?

தவறு செய்யும் சிபிஐயை மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் அரசை நாம் நம்புவதா வேண்டாமா?

தவறு நடந்தது உண்மையானால், தவறு இந்த வழக்கில் மட்டும் நடந்ததா? என்ற சந்தேகம் மக்கள் மனத்தில் எழத்தானே செய்யும்? சிபிஐக்கு இது அக்னி பரீட்சை. இந்த பரீட்சையில் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை சிபிஐ நழுவவிடக்கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஏதோ பரபரப்பிற்காக செய்திகளை வெளியிட்டு பிறகு உறங்கச் சென்றுவிடும் பல வழக்குகளைப் போல இந்த வழக்கும் இருந்துவிடக்கூடாது.

நேற்றைய இரவில் நிம்மதியாக தூங்கினோம் என்றால் நாளைய பொழுது விடியும் என்ற நம்பிக்கையில் மட்டுமே. இயற்கையின் மீது நாம் கொண்ட நம்பிக்கையே இத்தகைய பயமில்லா நிலையை நம் மனத்தில் ஏற்படுத்துகிறது. இயற்கையின் மீது எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறோமோ அதே அளவிற்கு சிபிஐயை போன்ற காவல்துறையின் மீதும் நாம் வைத்திருக்கிறோம். இந்த நம்பிக்கைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் போது நம்முடைய அனைத்து செயல்களும் முடங்கிப்போகும். அப்படிப்பட்ட முடங்கிபோகும் நிலையை இயற்கையும், காவல்துறையும் நமக்குத் தராது என்று நம்புவோம். எந்தத் தவறையும் சிபிஐ செய்திருக்காது என்று நம்புவோம்.

கதையில் படித்தபடி, அரசனை மன்னிப்பதற்கோ, தர்ம தேவனை தண்டிப்பதற்கோ நாம் மாண்டவ்ய ரிஷி அல்ல. நாம் சாமானியர்கள். செய்தித்தாள்களில் வரும் செய்திகள் நமக்கு எதைக் காட்டுகிறதோ, அதை மட்டுமே நம்பும் நிலையில் இருக்கிறோம். அதைத் தாண்டி என்ன நடந்திருக்கும் என்பதை நாம் அனுமானிக்கலாம், ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய அனுமானம், நம்மைத் தவிர வேறு யாரையும் கட்டுப்படுத்தாது. ஆகையால் நம்முடைய வேண்டுதல்கள் எல்லாம் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது என்பதுதான். எது எப்படியோ உண்மை நிலையை மக்கள் உணரும் வகையில் இந்த வழக்கில் புதைந்திருக்கும் உண்மைகள், அதை கையாளும் நிலையில் இருப்பவர்களின் உண்மைத் தன்மை ஆகியவற்றை மக்கள் அறிந்துகொள்வது அவசியம்.

‘ஊரெல்லாம் கவுளி சொல்லுமாம் பல்லி, அது விழுமாம் கழனிப் பானையிலே துள்ளி', என்று ஒரு கிராமத்து பழமொழி நினைவிற்கு வருகிறது. அடுத்தவன் தவறுகளை கண்டுபிடிக்கும் நாட்டின் உயர்ந்த விசாரணை ஆணையம் கழனிப் பானையில் விழுந்துவிட்டது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. நல்லதே நடக்கும்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com