தமிழக நாத்திகமும் அநாகரீக பேச்சும்

நாத்திகரா? அவர் கொண்டிருப்பது நாத்திகமா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் முன் உலக நாத்திகத்திற்கும், தமிழ்நாட்டு நாத்திகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வது அவசியம். 
தமிழக நாத்திகமும் அநாகரீக பேச்சும்

சில நாட்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சி நெறியாளர் இந்துப் பெண் தெய்வங்களைப் பற்றி ஒரு கேள்வியை எழுப்பினார். ‘மாதவிடாய் காலங்களில் இந்துப் பெண் தெய்வங்கள் எங்கு இருக்கும்?' என்பதுதான் அந்தக் கேள்வி. இது நாத்திக கருத்து என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். உண்மையான நாத்திக சிந்தனை உள்ள யாரும் இப்படி பேசமாட்டார்கள். இப்படி எதையாவது பேசிவிடுவது பிறகு “யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன்', என்று சொல்வது. இவையெல்லாம் தன் கருத்துக்களை பிரபலப்படுத்தும் நவீனகால யுக்தி. இந்துக்களை பொறுத்தவரை, பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது. தவறு செய்தவனை கடவுளோ, சட்டமோ தண்டிக்கும் அவ்வளவுதான்.

இந்தக் கேள்வியை கேட்டவர் ஒரு நாத்திகரா? அவர் கொண்டிருப்பது நாத்திகமா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் முன் உலக நாத்திகத்திற்கும், தமிழ்நாட்டு நாத்திகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வது அவசியம். ‘கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது' உலக நாத்திகம். ‘இந்துக் கடவுள்களுக்கு மட்டும் எதிரானது' “தமிழக நாத்திகம்”. தமிழக நாத்திகத்தைப் பொறுத்தவரை மற்ற மத நம்பிக்கைகளுக்கு மரியாதை அளிக்கப்படும். சொல்லப்போனால், இந்துக்களை வெறுப்பேற்றும் வகையில் கொஞ்சம் அதிகப்படியான முக்கியத்துவமும், மரியாதையும் மற்ற மத உணர்வுகளுக்கு அளிக்கப்படுகிறது. அதுவும் இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி. இதைத்தான் ‘மதச்சார்பின்மை' என்று சொல்லிக்கொண்டு திரிகிறது ஒரு கூட்டம்.

‘இந்து உணர்வுகளை கொச்சைப்படுத்திவிட்டு பிறகு எங்கள் மதத்தை ஆதரியுங்கள்', என்று எந்த மதத்தலைவர்களாவது சொல்கிறார்களா? பிறகு எதற்காக இத்தனை துவேஷங்களை அமைதியான சமுதாயத்தில் விதைக்கிறீர்கள்? இது தான் மதச்சார்பின்மையா? இவர்களின் செயலால், இந்துகள் வேறு வழியின்றி “தமிழக நாத்திகர்களையும்”, அவர்கள் விமர்சிக்கத் தவறிய மற்ற மதத்தவர்களின் பழக்கங்களையும், உணர்வுகளையும் விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதுவும் தவறுதான். ஒரு தவறுக்கு மற்றொரு தவறு நியாயமாகிவிடாது.

“தமிழக நாத்திகர்கள்” இந்துக்களை விமர்சனம் செய்வதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் ஒரு கவிஞர் பேசினார். சில வாரங்களுக்கு முன் மய்யத்து தலைவர் ‘பூணூல்' பற்றி பேசினார். பூணூல் அணிந்தவர்கள் இந்துக்கள் என்பதை அவர் மறந்துவிட்டார். இதைத் தவிர தங்களை எழுச்சித் தலைவர்களாக சித்தரித்துக் கொண்ட சிலரும், சினிமாவில் வளர்ந்த சிலரும் இந்துக்களை தொடர்ந்து கொச்சைப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. இத்தகைய பேச்சுக்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. இத்தகைய கருத்துக்களை பேசி குழப்பத்தையும் ஏற்படுத்தவும், அதன் மூலம் தன்னுடைய இருப்பிடத்தை உலகறிய செய்வதையுமே இவர்களின் நோக்கமாக இருப்பதை உணர முடிகிறது.

‘இத்தகையவர்களுக்கு என்ன பதில் சொல்வது?' இதைப் பற்றி யோசிக்கும் முன் ஒரு குட்டிக்கதையை படிப்போம்.

ஒரு பசு மாடுகள் கூட்டம். தினமும் மேய்ச்சலை முடித்துவிட்டு அமைதியாக வீட்டுக்கு திரும்பும். வழியில் ஒரு பாலம். அதன் அடியில் எந்த நேரமும் பன்றி ஒன்று சேற்றில் புரண்டு கொண்டிருக்கும். பசுக்களைப் பார்த்து அது கேளிசெய்யும். ஆனால், பசுக்கள் ஒரு முறைகூட பன்றிக்கு பதில் கூறியதே இல்லை.

பசுக்கூட்டத்தில் ஒரு கன்று இருந்தது. இளம் வயதல்லவா! பன்றியின் பேச்சு அதற்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதற்கு தக்க பாடம் புகட்ட நினைத்தது. அதற்கான தருணத்திற்காக காத்திருந்தது.

ஒரு நாள் மாலை பசுக்கள் கூட்டமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தன. வழக்கம் போல் பசுக்கூட்டத்தைப் பார்த்து கேளி செய்தது பன்றி.

“தைரியமிருந்தால் ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா! என்னை ஜெயிச்சிட்டு பிறகு போங்கடா', என்று முழங்கியது பன்றி.

கன்றுக்கு கோபம் வந்தது. பசுக்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல் சட்டென்று பன்றியின் மேல் பாய்ந்தது. அரை மணி நேர கடும் சண்டை. பன்றி சோர்ந்துபோனது. கன்று வென்றது. ஆனால், கன்று சண்டையிடுவதை பற்றி கவலைப்படாமல் பசுக்கள் வீடு திரும்பின.

கன்றுக்கு மகிழ்ச்சி. பன்றியை வென்றுவிட்டதல்லவா! வீரத்துடன் தன் கூட்டத்தை நோக்கி ஓடியது.

‘நண்பர்களே! பன்றி இனி நம் வம்புக்கு வராது. அதன் கொட்டத்தை அடக்கிவிட்டேன்', என்று பெருமையோடு சொல்லியது கன்று.

எந்த பதிலையும் சொல்லாமல் பசுக்கள் அமைதியாக இருந்தன.

‘என்ன அமைதியாக இருக்கிறீர்கள்? ஏதாவது பதில் சொல்லுங்கள்', என்று கேட்டது கன்று. அப்போதும் அங்கு அமைதி நிலவியது. அப்போது ஏதோ துர்நாற்றம் வீசியது.

‘ஏதோ துர் நாற்றம் வீசுகிறதே!' என்று மூக்கை பிடித்துக் கொண்டது கன்று.

அங்கிருந்த பசுக்கள் கன்றைப்பார்த்து சிரித்தன.

‘நாற்றம் உன் உடம்பிலிருந்து தான் வீசுகிறது. பன்றியுடன் சகதியில் சண்டையிட்டதால் உன் உடலில் ஒட்டியிருக்கும் சகதியிலிருந்து துர் நாற்றம் வீசுகிறது. சண்டையிடும் போதும், பிறகு ‘வெற்றி. வெற்றி, .வெற்றி', என்று முழங்கியபோதும் நாற்றத்தை உன்னால் உணர முடியவில்லை. இப்படி நடக்கும் என்று தெரிந்ததால்தான் நாங்கள் அமைதியாக இருந்தோம்', என்று சொல்லிய பசுக்கள் சற்று விலகி நின்றன.

‘நீங்கள் என்னை வெறுத்தாலும் பரவாயில்லை! உங்களின் சார்பாகத்தான் பன்றியுடன் சண்டையிட்டேன். பன்றியை வென்றேன். பன்றியின் கர்வத்தை அடக்கினேன்', என்று பெருமையோடு சொன்னது கன்று.

பசுக்கள் மீண்டும் சிரித்தன.

‘நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை போலிருக்கிறது. என்னுடன் வாருங்கள். தோற்றுப்போன பன்றியிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன். தனது தோல்வியை அது உங்களிடம் சொல்லும்', என்றவாறு பன்றி இருக்கும் இடத்திற்கு பசுக்களை அழைத்துச்சென்றது கன்று.

சேறும் சகதியுமாய் காட்சியளித்த இடத்தில் சோகமாக படுத்திருந்தது பன்றி.

‘பன்றியே! சண்டையில் நீ தோற்றுப்போனது உண்மைதானே? அதை இவர்களிடம் சொல்', என்றது கன்று.

‘என்னது சண்டையா? நான் தோற்றேனா? யார் சொன்னது? உன்னுடன் சேர்ந்து சகதியில் புரண்டது எவ்வளவு அருமையாக இருந்தது தெரியுமா', என்றது பன்றி!

பன்றி நமக்குச் சொல்லிய நீதி இதுதான். “சகதியில் இறங்கி சண்டை போட்டு ஜெயித்தால், அந்த வெற்றி நமக்கு மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால், ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சகதியில் இறக்கிய அடுத்த கணமே நாம் தோற்கடிக்கப்பட்டுவிட்டோம்.

“தமிழக நாத்திகர்களுக்கு” பதிலளிக்கும் போது இந்தக் கதையை நினைவில் கொள்ளுங்கள். அதே போல, எங்காவது சேற்றையும் சகதியையும் பார்க்க நேர்ந்தால், அடுத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் தமிழக நாத்திகம் உங்கள் நினைவில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றியவர் பால் ஹென்றி. இவருக்கும் முன்னால் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தனது நிகழ்ச்சியில், திருமதி ஷீலா தீட்சித்தின் பெயரை தவறாக உச்சரித்து, நக்கலும் நையாண்டியுமாய் சிரித்தார் பால் ஹென்றி. பலரின் கண்டனத்திற்கு ஆளானார். இதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து விலகினார். அவரை விலக வைத்தது அந்த நிறுவனம். இந்த தொழில் தர்மத்தையெல்லாம் நம்ம ஊரில் எதிர்பார்க்க முடியாது.

தமிழக மக்களின் எண்ணிக்கையில் அரை சதவீதம் அளவுக்குக்கூட நாத்திகர்களின் எண்ணிக்கை இருக்காது. அந்த அரை சதவீத நாத்திகர்களின் குடும்ப உறுப்பினர்கள் திருப்பதிக்கும், திருவல்லிக்கேணிக்கும் அடிக்கடி வட்டமடித்துக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். தன்னுடைய சித்தாந்தம் தன் சொந்த வீட்டிலேயே எடுபடவில்லையே?

“தமிழக நாத்திகர்கள்” வெறும் அரை சதவீதத்தினருக்கும் குறைவானவர்கள். ஆனால், அவர்கள் அனைவரும் பேசுகின்றனர். தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், 99.5 சதவீத ஆத்திகர்கள் அமைதியாக இருக்கிறார்கள். பிரச்னைக்கு இதுவே காரணம். சிங்கத்தின் குட்டித் தூக்கம், எலியை அதன் மீது ஏறி விளையாடத் தூண்டுகிறது. வன்முறை தேவையில்லை. அமைதியான முறையில் இந்துக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதில் தவறில்லையே?

நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். ஆனால், உங்கள் தலைமை உங்களுடைய ஆத்திக சித்தாந்தத்திற்கு மதிப்பளிக்கிறதா என்று சிந்தியுங்கள். அப்படி மதிப்பளிக்கவில்லை என்றால், அதை உங்கள் தலைமையிடம் சொல்லி புரிய வைக்க வேண்டியது உங்கள் கடமை. உங்களுக்கு பிடித்த தலைவருக்காக “தமிழக நத்திகம்” சிறப்பாக செயல்படும் வகையில் இத்தனை காலம் அமைதியாக வேடிக்கை பார்த்தீர்கள். இனி உங்களுக்காக போலி “தமிழக நாத்திக” வேடத்தை விட்டொழிக்கும்படி நீங்கள் சார்ந்த கட்சித் தலைமைக்கு உணர்த்துங்கள்.

ஒருவேளை இதே நிலை தொடருமானால், அரசியலையும், மதத்தையும் இணைத்துப் பார்க்கும் நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்படுவார்கள். ஆத்திகர்கள் தாங்கள் சார்ந்த கட்சி தலைமையின் மீது கொண்ட பிடிப்பின் காரணமாக அமைதியுடன் இருக்கிறார்கள். இதையே நிரந்தரம் என்று யாராவது கணக்குப்போட்டால் ஏமாளிகளின் வரிசையில் அவர்கள் முதலில் நிற்கிறார்கள் என்று அர்த்தம்.

அரசியல் கட்சிகளே! இத்தகைய ‘தமிழக நாத்திகர்களை' உடன் வைத்துக் கொண்டு உங்கள் ஓட்டுக்களை இழக்காதீர்கள்.

இந்துக்களே! அமைதியை கலையுங்கள். அநாகரீக ‘தமிழக நாத்திகத்தை' 
அஹிம்சை வழியில் கண்டியுங்கள். நீங்கள்சார்ந்த கட்சி தலைமைக்கு இந்துக்களின் உணர்வுகளை புரியவையுங்கள். இத்தகைய பேச்சுக்களை கண்டிக்காத கட்சிகள் மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள் என்பதையும் புரிய வையுங்கள்.

தமிழக நாத்திகர்களே! மதத்தின் மீது எங்களுக்கு ஒரு பிடிப்பு உண்டு. அதை வெறியாக மாற்றிவிடாதீர்கள். அடுத்த தலைமுறைக்கு அமைதியான தமிழகத்தை விட்டுச் செல்லுங்கள்.

பன்றிக்கும் பசுக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பசுக்கள் தெரிந்து வைத்திருக்கின்றன. ஆனால், கன்றுகளுக்கு தெரியவில்லையே! எது எப்படி இருந்தாலும், சுத்தம் செய்ய வேண்டுமென்றால், சகதியில் இறங்கித்தானே ஆக வேண்டும்!

அன்புடன் சாது ஸ்ரீராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com