திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி எதைச் சுட்டிக்காட்டுகிறது? 

கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாமல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரிபுராவில் தனது சித்தாந்த எதிரியான பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி எதைச் சுட்டிக்காட்டுகிறது? 

கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாமல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரிபுராவில் தனது சித்தாந்த எதிரியான பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும், ஆட்சிக்கு எதிரான மனப்போக்குடன், பாஜக பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டதும் ஒரு முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர். உண்மை என்ன?

திரிபுரா எனும் குறிஞ்சி நிலப்பகுதியை உருவாக்கியது பிரிட்டிஷ் காலனியாதிக்கம். இதன் சமவெளிப்பகுதி பிரிவினையின் போது இன்றைய வங்கதேசத்தில் அடைக்கலமாகிவிட்டது. மீதமிருந்த மலையகப்பகுதியில் பாரம்பரியமாக வசித்து வந்த பழங்குடியினரே பெரும்பான்மை மக்கள் ஆவர். எனினும் பிழைப்புத் தேடி வங்கத்திலிருந்து புலம் பெயர்ந்த வங்க மொழி பேசும் மக்கள் நாளடைவில் ஆட்சியைப் பிடிக்கும் சக்தியாக மாறினர். கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சுமார் 50% மக்கள் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆவர். எனினும் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு ஒன்று வங்க மொழி பேசும் மக்கள் தொகை சுமார் 70% என்று கூறுகிறது. விடுதலை அடைந்த காலகட்டத்தில் தொல்குடிகளின் எண்ணிக்கை 50% மாக இருந்துள்ளது. பின்னர் 1981 ஆம் ஆண்டில் இது சுமார் 30% மாக குறைந்திருந்தது. மத அடிப்படையில் இந்துக்களே மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். இஸ்லாமியர் சுமார் 9% பேரும், கிறிஸ்துவர்கள் 4.35% பேரும், பௌத்தர்கள் சுமார் 3% பேரும் உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் அசாமிற்கு பிறகு இரண்டாவது அதிக மக்கள் தொகையுள்ள மாநிலமாகும் திரிபுரா.

அரசியல் ரீதியாக கம்யூனிசம் விடுதலைப் போராட்டக்காலத்திலேயே அறிமுகமாகியுள்ளது. நீண்ட காலம் காங்கிரஸ் ஆட்சி செய்தப்பிறகு 1978 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. பத்தாண்டுகள் ஆட்சி செய்த அவர்கள் 1988-93 ஆண்டுகளில் காங்கிரஸ்-இளைஞர் முன்னணி எனும் கூட்டணி ஆட்சியிடம் பதவியை பறிகொடுத்தனர். அதன்பிறகு 1993 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆட்சியில் இருந்து வந்துள்ளனர். அங்கு காங்கிரஸ், இடது சாரிகளுக்கு மாற்றாக மூன்றாவது அரசியல் சக்தி ஏதும் தோன்றவில்லை. பாஜக உட்பட பலக் கட்சிகள் சிறு கட்சிகளாகவே இருந்துள்ளனர். இன்று பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாரம்பரிய மக்கள் முன்னணி கிறிஸ்துவ தனிநாடு கிளர்ச்சியாளர்களின் உதவியுடன் செயல்படும் அமைப்பு என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. எனினும் கடந்த 2013 ஆம் ஆண்டுத் தேர்தலில் பாஜக சுமார் 1.5% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. இன்று தனிநாடு கோரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் இணைந்து ஆட்சியைப் பிடித்து விட்டதாக கூறப்படுவது எப்படி ஏற்கத்தக்கது என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதில் கவனிக்கத்தக்க விஷயம் கிறிஸ்துவ மக்களின் மக்கள் தொகை வெறும் 5% மாக இருக்கும் நிலையில் அம்மதத்தின் பெயரால் இயங்கும் இயக்கம் எப்படித் தேர்தலில் செல்வாக்கு செலுத்த இயலும்? இந்நிலையில் திரிபுரா காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியூட்டும் அளவில் சுமார் 2.0% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சி சுமார் 37% வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல் பிரதேசம் ஆகியவை பாஜகவின் வசமாகி விட்டது. மணிப்பூரில் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது பாஜக. எனவே அதன் தாக்கம் நீண்ட காலமாக மூன்றாவது மாற்றைத் தேடி வந்த திரிபுரா மக்களுக்கு பாஜகவின் மீது இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் அல்லவா? இது தவிர கேரள மாநிலத் தேர்தலில் பாஜக ஒரு பேரவை உறுப்பினரை பெற்றதோடு சுமார் 15% வாக்குகளையும் பெற்றிருந்தது. அதற்கு ஆதரவாக சுமார் 9% வாக்குகள் கூடுதலாக கிடைத்தது. இது காங்கிரஸ் கட்சியை பாதித்தது; மட்டுமின்றி மார்க்சிஸ்ட் கட்சி அங்கு 92 இடங்களை (மொத்தமுள்ள140 இடங்களில்) பெறுவதற்கு உதவியது. அதற்கு முன் நடந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கும் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே வெறும் நான்கு இடங்களே இருந்தன. மார்க்சிஸ்ட் கட்சி பெரியதொரு வெற்றியைப் பெறுவதற்கு பாஜகவின் வளர்ச்சியே காரணமாக இருந்துள்ளது. கேரளத்திலும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் உள்ளனர். ஆகையால் பாஜக தன்னளவில் காங்கிரஸ்சிற்கு மாற்றாக மாறி வருவது பல மாநிலங்களில் நடைபெறும் போக்காக நிலைத்து விட்டது. இதையே திரிபுரா தேர்தலும் நிரூபிக்கிறது. மேலும் அண்டை மாநிலமான நாகாலாந்து, மேகாலயாவிலும் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்திருப்பது ஒட்டுமொத்தமான மன நிலையையே காட்டுகிறது  எனலாம்.  மேகாலயாவில் தனது பெரும்பான்மையைத் தக்க வைக்க காங்கிரஸ் தவறியுள்ளது. மேகாலயா, நாகாலாந்து ஆகியவை கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாகவுள்ள மாநிலங்கள். இங்கும் பாஜக தனது செல்வாக்கை நுழைத்துள்ளது என்பதும் அங்கும் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு அது காரணமாகவுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் 1970 களிலேயே இணைந்தது. நீண்டகாலமாக  சிக்கிம் சங்கராம் பரிஷத் எனும் கட்சி ஆட்சி செய்து வந்த நிலையில் பல்வேறு பழங்குடி இன மக்களின் இணைப்பான சிக்கிம் ஜனநாயக முன்னணி 1994 ஆம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக ஆட்சி செய்து வருகிறது. எனவே மலையக மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்ற கட்சிகளே வடகிழக்கு மாநிலங்களை வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடிவது யதார்த்தமாகும்.

திரிபுராவைப் பொறுத்தவரை அங்குள்ள மலையக மக்களுக்கும் குடியேறிய வங்காள மக்களுக்கும் இடையே பலகாலமாக மோதல்கள் இருந்து வந்தது. பின்னர் அது குறைந்து விட்டாலும் இன்று பாஜக அம்மக்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்திருப்பது அரசியல் ஆட்டத்தின் தந்திரமேத் தவிர வேறொன்றும் இல்லை என்போரும் உண்டு. எனினும் சரிபாதி மக்கள் தொகையுள்ள மலையக, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமைக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதை பாஜக பிரதிபலிக்க வேண்டும் என்பதே தேர்தல் முடிவு காட்டும் யதார்த்தமாகும்.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை வீழ்ச்சி என்றாலும் கடந்த காலத் தவறுகளிலிருந்து அது பாடம் கற்க வேண்டியுள்ளது. திரிபுராவைத் தவிர வேறு வடகிழக்கு மாநிலங்களில் அதன் செல்வாக்கு ஏன் இல்லை என்பதை அது ஆராய்ந்திருந்தால் இத்தோல்வி ஏற்பட்டிருக்காது. ஏன் 25 ஆண்டுக்காலக் கோட்டையான மேற்கு வங்கத்தை மமதாவின் திரிணமுல் காங்கிரஸிடம் இழக்க வேண்டும். அதுவும் தற்போது பாஜகவை இரண்டாவது இடத்திற்கு மேலுயர்த்தும்படியானச் சூழலை சந்திக்க வேண்டும் என்று அக்கட்சி அலசினால் தொடர்ந்து அதன் செல்வாக்கை நிலைநிறுத்தலாம். இல்லையென்றால் காங்கிரஸ் முழுமையாக பாஜகவால் விழுங்கப்படுகிற நிலையை வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான். அத்தோடு தனது செல்வாக்கை மாநில அல்லது ஆம் ஆத்மி போன்ற மாற்று இயக்கங்களிடம் பறி கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகும் சூழலையும் எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஒருபுறம் புதிய இடங்களில் தடம் பதித்தாலும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கு பெற்றுவருவதை பாஜக கவனிக்க வேண்டிய நிலையில் அது காங்கிரஸ்சின் வாக்குகளை பிரிக்க புதிய அரசியல் இயக்கங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் சரிசமமாக மோதும் நிலையில் காங்கிரஸ் இல்லை என்றாலும் அடுத்து வரும் மாதங்களில் என்ன நடக்கும் என்பது தெரியாது. எனவே காங்கிரஸ் கட்சியின் விழ்ச்சியை மார்க்சிஸ்ட் கட்சி எப்படி அணுகுகிறது என்பது அதன் நிலைத்த தன்மைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com