உழவன் செயலியை அறிமுகப்படுத்தும் முன் ஒரு நிமிடம் கவனிக்குமா தமிழக அரசு?

புதிய வரிகள் இல்லாத, 3 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தது தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்.
உழவன் செயலியை அறிமுகப்படுத்தும் முன் ஒரு நிமிடம் கவனிக்குமா தமிழக அரசு?

புதிய வரிகள் இல்லாத, 3 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தது தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்.

பள்ளிக் கல்வித் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை என அனைத்துத் துறைகளுக்கும் தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் தனிக்கவனம் செலுத்தியிருந்தது.

அதே போல, கரும்பு கொள்முதல் விலை நிர்ணய முறையில் மாற்றம், விவசாயம் மற்றும் இதரப் பயன்பாட்டு மின் மானியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு போன்றவை இடம்பெற்றிருந்தாலும், தமிழக பட்ஜெட்டில் விவசாயம் தொடர்பாக பல எதிர்பார்ப்புகள் புறந்தள்ளப்பட்டுள்ளதோ என்று விவசாயிகள் கருதும் வகையில் அமைந்துவிட்டது துரதிருஷ்டம்.

விவசாயிகளுக்கு உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதன் மூலம், விவசாயிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று தமிழக அரசு சிந்தித்திருப்பது தெரிய வருகிறது. இது வரவேற்கத்தக்க விஷயம்.

ஆனால், கிராமம்  தோறும் தகவல் மற்றும் விவசாய செயல் மேலாண்மை மையம் அமைத்து விவசாயிகளுக்கான ஒட்டுமொத்த தீர்வை கிராம அளவில் வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 'உழவன்' என்கிற செயலி அறிமுகப்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு மட்டும் பட்ஜெட்டில் வந்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

விவசாயிகளை ஒன்றிணைக்கும் திட்டத்துக்கு செயலி முறை எந்த வகையில் பலனளிக்கும் என்பது குறித்து, விவசாயம் தொடர்பாக பல ஆண்டு காலமாக ஆய்வு செய்து வரும் தொழில்நுட்ப நிபுணர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் அளித்த தகவல்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.

செயலி என்றாலே அது செல்போனில் பயன்படுத்துவது என்பது தெரிந்ததே. விவசாய மேலாண்மையில் மொபைல் போன்களின் பங்களிப்பு என்ன என்பதற்கான எங்கள் ஆய்வின் தொகுப்பை இங்கே பதிவு செய்கின்றோம்:

* கிராமப்புறங்களில் மொபைல் போன்களின் உபயோகம் மிக அதிகமாக உள்ளது. மேலும் அதிகரிக்கிறது என்பது உண்மை. மக்கள் இந்த தொழில்நுட்ப பயன்பாட்டை எளிதில் ஏற்றுக்கொள்வதற்கான  காரணம், தகவல் தொடர்பு தேவை என்பதை விட அதனை உபயோகப்படுத்த தேவைப்படும் திறமை/ அறிவு பேசுவதற்கு பச்சை பட்டனையும் நிறுத்துவதற்கு சிகப்பு பட்டனையும் அமுக்கினாள் போதுமானது என்பதுதான், இன்னமும் கிராமங்களில் பலர் புது தொடர்புகளை பதியவோ, பதிந்திருக்கும் தொடர்பை தெரிவுசெய்யவோ தெரிந்தவர்களின் உதவியை நாடுவதை பார்க்கலாம்.

* கிராமங்களில் குறைந்த மக்கள் தொகையே இருப்பதால் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் நிதிச்சுமைகளினால்  தங்கள் கட்டமைப்பை பலப்படுத்தி, சிக்னல் அளவை கூட்டுவதில் சிக்கலை சந்திக்கின்றன. இதனால் கிராமப்புறங்களில் செல்போன் உபயோகிப்பவர்கள் பேசுவதற்கு கூட வீட்டை விட்டு வெளியே வந்து பேசும் நிலை உள்ளது. இந்நிலையில், பயிர் மேலாண்மைக்கு தேவைப்படும் வீடியோக்கள் பார்ப்பது/ பதிவிறக்கம் செய்து கொள்வது என்பது மிக்க கடினமான செயல்.

* நல்ல விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில்  மட்டுமே செயலிகளை சிறப்பாக உபயோகப்படுத்த முடியும். விவசாயிகள் அதற்கு நிறைய செலவு செய்ய நேரிடும்

* செல்போன்களின் திரை அளவு சிறிதாக இருப்பதால் கண்பார்வை நன்றாக இருப்பவர்களுக்கே தகவலை படிப்பது, வீடியோ பார்ப்பது கடினமாக உள்ளது. விவசாயிகள் பெரும்பாலோனோர் வயதானவர்கள். அவர்கள் மொபைல் போனில் தகவலை பெறுவது மற்றும் தெரிவிப்பது என்பது சிரமமான ஒன்று. இன்னும் பலர் எழுத்தறிவு இல்லாமல் இருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

* அடிப்படையான சேவைகளையே பயன்படுத்த திணறும் மக்கள் பெரும்பாலோனோர் உள்ள நிலையில், பேசுவதை தாண்டி செயலி மூலம்  பயிர்களில் ஏதும் பிரச்னை இருந்தால் அதை போட்டோ எடுத்து விவசாய தொடர்பு மையங்களுக்கு அனுப்புவது, வரும் பதிலை படிப்பது, விலை நிலவரங்களை தெரிந்து கொள்வது, விலைபொருளை வாங்க விரும்பும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வது போன்ற செயல்களை விவசாயிகள் மேற்கொள்வது அல்லது அவர்களை பயிற்றுவிப்பது மிக்க கடினமான விஷயம். 

* ஒவ்வொரு விளைநிலமும் தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு விவசாயியும் வெவ்வேறு விதமாக செயல்படும் தன்மையுள்ளவர்கள். எனவே ஒரு விளைநிலத்தின் மகசூலை தரத்தை கூட்டவேண்டுமெனில் அது அந்த நிலம் சார்ந்த காரணிகளைக்கொண்டு அணுகப்படவேண்டும் (SITE SPECIFIC ). அது செயலி மாதிரி மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையைக்கொண்டு செய்ய இயலாது. பொதுவான தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதால் எந்த பெரிய மாற்றமும் வராது.

* விவசாய விளைபொருள்கள் தொட்டு, முகர்ந்து, உண்டு, மதிப்பீடு செய்து விலை நிர்ணயம் செய்யப்படும் தன்மையை சார்ந்தவை, மேலும், ஒரு விளைநிலத்திலேயே விளைபொருள்கள் தரம் வேறுபடக்கூடியது. இந்த தன்மைகளால்தான் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளால் தங்கள் விளைபொருள்களை விற்க முடிவதில்லை. எனவே, விளைபொருளை போட்டோ எடுத்து செயலி மூலம் அனுப்புவதன் மூலம் வாங்குபவர்களின் நம்பிக்கையை பெற முடியாது. விலைநிர்ணயம் செய்துகொள்வது கடினம்.

* பெரும்பாலோனோர் சிறு குறு விவசாயிகளாக உள்ள நிலையில் அவர்களின் சிறிய அளவிலான விளைபொருளை வாங்குவதற்கு ஆட்கள் இருந்தாலும் போக்குவரத்து ஏற்பாடு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த விளைபொருள்களை ஒன்றுசேர்க்கும் வழிமுறை அவசியம். தற்போது அது இல்லை.

* சந்தை நிலவரங்களை விவசாயிகளுக்கு தெரிவிப்பது மட்டும் முழு தீர்வாக அமையாது. பெரும்பாலான நேரங்களில் சந்தைக்கு வரும் விளைபொருளைகளின் அளவை வைத்தே அன்றைய விலை தீர்மானிக்கப்படுகிறது. மேலும், திண்டுக்கல் அருகில் உள்ள விவசாயி ஓட்டன்சத்திரம் சந்தைக்கு தன் விளைபொருளை கொண்டுபோக திட்டமிட்டிருப்பார். ஆனால் மதுரை சந்தையில் முதல் நாள் விலை அதிகமாக இருப்பது தெரியவரின், அந்த விவசாயி  ஓட்டன்சத்திரத்தை விடுத்து மதுரை செல்ல முற்படலாம். எத்தனை பேர் இப்படி மாறி முடிவெடுத்திருக்கின்றனர் என்பது தெரியாது. நிறைய பேர் அப்படி மாறியிருந்தால் மதுரை சந்தையில், அதிகப்படியான வரத்து காரணமாக விலை குறையும். இது பிற விவசாயிகளுக்கு குழப்பத்தை விளைவிக்கலாம். இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் தான் விவசாயிகளை அலைக்கழிக்கிறது. நட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே தகவலை கொண்டு சேர்ப்பது முக்கியம். அதைவிட முக்கியம் கடத்தப்பட்ட தகவல் கட்டுப்படுத்தப்படும்  தன்மையை கொண்டிருத்தல். அதற்கு அடிப்படை தற்போது விளையும் பயிர்களின் நேரடி புள்ளிவிபரம் (Live Crop Variety Production Data)

தமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு 15 வருட முயற்சியின் மூலம்  தகவல் தொழில்நுட்பத்தின்   அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தி தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல்  மற்றும் விவசாயம் செய்வதில்  உள்ள  கடின  தன்மையை இலகுவாக்கும்,  ஒரு புது  இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கி, மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி, சிறப்பான மதிப்பீடுகளை பெற்றிருக்கின்றோம்..  திட்டமிடுதலில் தொடங்கி விதை முதல்  விற்பனை வரையிலான சேவைகளை, கிராம அளவில் செயல்படும் விவசாய  மேலாண்மை மையத்தில் குறு, சிறு விவசாயிகளும் பெற்று பலன் பெற முடியும். இந்தத்தீர்வை பெரிய அளவில் அரசாங்கத்துடன் சேர்ந்து விரிவாக்கம் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம்.

இந்தத் திட்டப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை  மையம் செயல்படும். இதில், இன்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர், அதை ஆபரேட் செய்ய ஒரு பட்டதாரி, மற்றும் பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட டீம் இருக்கும். விவசாயிகள் இவர்களின் துணையோடு, வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள், தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருக்கிறது என்கிற விபரம்,  தனது குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான வழிகள், நோய் மற்றும் பூச்சி தடுப்பு பரிந்துரைகள் என்ற     தவல்களைப்  பெறலாம். விதை, உரம் போன்ற  இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும் தான் தேர்வு செய்த பொருளை அதற்கான பணத்தை மையத்தில் செலுத்தி குறிப்பிட நாளில் சொந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வசதி, தனது ஊரில், வேலை ஆட்கள் மற்றும் எந்திரங்கள் கிடைக்காத பட்சத்தில்  அருகில் இருக்கும் இடங்களில் இருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதி மற்றும் முக்கியமாக, அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களை அறிதல், நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தல் போன்ற முக்கிய செயல் மேலாண்மை தேவைகளை   செய்துகொள்ள  முடியும். குறு சிறு விவசாயிகளுக்கான மிகச்சிறந்த தீர்வாக இது அமையும்.

விவசாயத்தில் செல்போன் பயன்பாடு என்பது தொழில்நுட்ப ரீதியில், விவசாயிகள் பயன்படுத்தும் ரீதியில் என பல்வேறு எல்லைகளை, தடைகளை கொண்டுள்ளது. எனவே, செயலி, இணையத்தளம்  என்ற அளவோடு இல்லாமல் தகவல் தொழில்நுட்பத்துறையின் முழுப்பயன்பாட்டை விவசாயிகள் பெற்று பயன்படும் விதமான தீர்வை அரசு செயல்படுத்த வேண்டுகின்றோம்.

இதனை பரிசீலித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமானால், இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தில் மிகக் குறைந்த காலத்திலேயே தமிழகம் அளப்பரிய சாதனைகள் படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com